நேருவின் மறைக்கப்பட்ட நிர்வாக குளறுபடி:ஆர்.நடராஜன்| Dinamalar

நேருவின் மறைக்கப்பட்ட நிர்வாக குளறுபடி:ஆர்.நடராஜன்

Added : மார் 22, 2014 | கருத்துகள் (4)
நேருவின் மறைக்கப்பட்ட நிர்வாக குளறுபடி:ஆர்.நடராஜன்

ஆட்சிக்கு வந்தால், இன்னது செய்வோம் என்று கொள்கையைச் சொல்வதற்கு பதிலாக, அரசியல்வாதி கள் ஒருவரை ஒருவர் வசைபாடிக் கொண்டிருக்கும் இந்தத் தேர்தல் காலத்தில், 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு, கட்சியை இப்படிப் புரட்டிப்போடும் என்று காங்கிரசார் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எப்படிப்பட்ட அவமானகரமான விவகாரம் என்றாலும், அலட்டிக் கொள்ளாமல் ஏதேதோ சொல்லி சமாளித்துக் கொள்ளும் காங்கிரசாருக்கு, நேரு பற்றிய மாய பிம்பம் இப்போது, திடீரென்று உடைந்து போவது சற்றே நெருடலான விஷயம்தான்.

துவக்கப்பள்ளிப் பாட புத்தகங்கள் காந்திஜியை, 'காந்தி தாத்தா' என்றும் நேருவை, 'நேரு மாமா' என்றும் உறவு முறையிலேயே அடையாளப்படுத்தின. திட்டமிட்டுச் சிறுவர் சிறுமியிடம் உருவாக்கப்பட்ட பிரமை சார்ந்த இந்த பிம்பம் அதே மாயையுடன், பொதுமக்களிட மும் கொண்டு செல்லப்பட்டது. காந்திஜியையும், நேருவையும் மக்களுக்கு உறவுக்காரர்களாகவே அறிமுகப்படுத்தப்பட்ட போது படேல், நேதாஜி போன்ற தலைவர்களுக்கு அந்த கொடுப்பினை இல்லை. ஏனெனில் நாட்டின் வரலாற்றை எழுதுவதில், காங்கிரசாருக்கே அப்போது அதிக செல்வாக்கு இருந்தது.அந்த நிலையிலும், சமகாலத் தலைவர்களுக்கு காந்திஜியும், நேருவும் செய்த தவறுகள் நன்றாகத் தெரியும். நேருவைப் பிரதமராக்கியது காந்திஜி செய்த தவறு என்று, அப்போது சிலர் மெலிதாக முணு முணுத்ததையும், நேருவின் பொருளாதார அயலுறவுக்குறைபாடுகளும், இப்போது பேசப்படுகின்றன. நாடு சுதந்திரம் பெற்ற புதிதில், சில சிறிய விஷயங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம். கடுமையான விமர்சனம் வேண்டாம் என்று, அப்போதைய மூத்த தலைவர்கள் கண்ணியம் காத்தனர்.
நேருவின் பிம்பம் சரியவில்லை.

இருந்தாலும், ஊழல் பெருச்சாளிகள் சிலரை நேரு காப்பாற்றுகிறார் என்று, நேருவின் மாப்பிள்ளையும், இந்திரா கணவருமான பெரோஸ் உட்பட, நாடாளுமன்றத்தில் சிலர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர். அதனால் முந்திரா விவகாரத்தில், அப்போதைய நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியின் தலை உருண்டது.மறு தலைமுறையில் மாப்பிள்ளையைக் காப்பாற்றினார் மாமியார். அதுதான் ராபர்ட் வாத்ரா நிலபேர வழக்கு. இதில் கண்டிக்கப்பட்டவர்; தண்டிக்கப்பட்டவர் ஊழலைத் தடுத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி. அந்த அளவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் துணிவு குறைந்தது. நேரு குடும்பத்தினரிடம் அதிகார வர்க்கத்தின் அடிமைத்தனம் அதிகமானது.ஆனாலும், 1962ம் ஆண்டு இந்திய - சீனப்போரில், இந்தியாவின் தோல்விக்கும், சீனாவின் வெற்றிக்கும் இந்திய ராணுவத்தின், மாட்சிமை குறைவுக்கும் நேருவே காரணம் என்ற தகவல், இப்போது ஆதாரப் பூர்வமாக ெவளியாகியிருக்கிறது.சீனப் போருக்குப் பின், ராணுவ தளபதியாகப் பொறுப்பேற்ற ஜே.என்.சவுத்ரி என்பவர், சீனப்போரில்இந்திய ராணுவத்தின் செயல்பாட்டைப் பற்றி, ஒரு அறிக்கை தயார் செய்யும் பொறுப்பை, ஹெண்டர்ஸன் ப்ருக்ஸ் மற்றும் பி.எஸ். பகஷி என்ற, இரு துணைத் தளபதிகளிடம் ஒப்படைத்திருந்தார்.

அவர்கள் தயாரித்த அறிக்கை, ராணுவ ரகசியம் சார்ந்தது என்பதனால், அரசிடம் பத்திரமாக இருந்து வந்திருக்கிறது. அதை முழுமையாகப் படித்தால் நேரு எப்படிக் குட்டையைக் குழப்பினார் என்பது தெரியவரும். அதனால் தான் அந்த அறிக்கையை, நாட்டின் ஆதிரகசியம் என்ற போர்வையில் ெவளிவராமல், அரசு பாதுகாத்து வருகிறது. அந்த அறிக்கை தான் இப்போது குழியிலிருந்து எழுந்த பிசாசாக, காங்கிரஸ் கட்சியை, அதாவது நேரு குடும்பத்தை பயமுறுத்துகிறது. உண்மை கள் ெவளியாகி அவை விமர்சிக்கப்படுவது நாட்டுக்கு நல்லது. உண்மைகள் ெவளிவராமலேயேஇருப்பது நேரு குடும்பத்திற்கு நல்லது.அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த கிருஷ்ண மேனன் ராணுவத்திற்கு ஜீப்கள் வாங்கிய வகையில் ஊழல் செய்தார் என்ற பேச்சு எழுந்த போது, நேரு அதை அமுக்கிவிட்டார். நகர்வாலா என்பவர் மூலம் ஸ்டேட் பேங்க் பணம், 64 லட்சம் ரூபாயை, இந்திரா எடுத்துவரச் செய்தார் என்ற பேச்சு எழுந்ததும், நகர்வாலா ஒரு சாலை விபத்தில் அடிபட்டு இறந்துபோனார். கூடவே சேர்ந்து ஊழல் புகாரும் இறந்து போனது.

போபர்ஸ் பீரங்கி பேர ஊழல், அன்றைய தினத்தில் மிகப்பெரிய ஊழல். நாடாளுமன்ற விசாரணைக் கமிட்டி போடப்பட்டது. ஒரு விஷயத்தை அமுக்க வேண்டுமானால் அதன் மீது கமிட்டி போட வேண்டும் அல்லது கல்லைப் போட வேண்டும் என்ற, ராஜாஜியின் குத்தல் வாசகம் இதில் உண்மையாகிப் போயிற்று.இப்போது, '2ஜி' அலைக்கற்றை விவகாரம். யார் யார் பெயரோ இழுக்கப்பட்டன. சோனியா. ராகுல் பெயர்கள்? ஊஹும். அவர்கள் பரிசுத்தமானவர்கள். ஆக, நேரு குடும்ப மகிமை இப்படி கவனமாகக் காப்பாற்றப்பட்டு வரும் நேரத்தில், இந்திய - சீனப்போர் என்ற தலைப்பில், சில ஆண்டுகளுக்கு முன் ஒரு புத்தகத்தை எழுதிய ஆஸ்திரேலியப்பத்திரிகையாளர், நெவில் மேக்ஸ்வெல், ஒரு தகவல் வெடிகுண்டை வீசி இருக்கிறார்.அதாவது சீனப்போரில் இந்திய ராணுவமும், அரசும் நடந்து கொண்ட, விதம் பற்றி, 50 ஆண்டு களுக்கு முன் நிபுணர்கள் தயாரித்த அறிக்கை ெவளியிடப்படாமல் இருப்பதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம் என்கிறார். அரசியல், வம்சாவளி ஆட்சி, குடும்பநலன் பார்க்கப்போனால் இந்த மூன்றுமே ஒன்று தான்!'ராணுவ ரகசியங்கள் ெவளியிடக்கூடாது' என்பதனால் இந்த அறிக்கை ெவளியிடப்படவில்லை என்று, நான்கு ஆண்டுகளுக்கு முன் சொன்னார் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி. இந்த அறிக்கையின் இரண்டு பிரதிகள் (கம்ப்யூட்டர் இல்லாத காலத்தில் டைப்ரைட்டரில் அடிக்கப்பட்டது) மத்திய அரசின் வசம் பத்திரமாக இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், தனக்குக் கிடைத்த பிரதியில் இருந்த விஷயங்களை, தன் வலைத்தளத்தில் சென்ற மாதம் ெவளியிட்டார் நெவில் மேக்ஸ்வெல்.

சில நாட்களில் அவரது வலைத்தளம் முடக்கப்பட்டு விட்டது. யார் செய்திருக்க கூடும்? காங்கிரஸ் கட்சி அல்லது நேரு குடும்பம். இரண்டும் ஒன்று தானே. மத்திய அரசு செய்திருக்காதா என்பது தேவையில்லாத கேள்வி. மத்திய அரசும், நேரு குடும்பமும் வேறு வேறா? நேருவுக்கு ஏற்படும் அவமானத்தை அனுமதிக்க முடியுமா? அரசின் அவமானம் வேறு விஷயம். அது மக்கள் சம்பந்தப்பட்டது. மக்கள் எக்கேடு கெட்டால், நேரு குடும்பத்திற்கு என்ன கவலை? இன்று எப்படியோ, அன்றும் அப்படியே தான் இருந்தனர் ஆட்சியாளர்கள் என்பது, நெவில் மேக்ஸ்வெல் மூலம் தெரிய வருகிறது. அன்று நேரு, அடுத்து அவரது மகள் இந்திரா. இப்போது மூன்றாம் தலைமுறையில் சோனியா நேரடி, மறைமுக ஆட்சியிலும், ராணுவம் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப் படுவதாக தெரியவில்லை.நாட்டின் முதல் பிரதமர் என்ற முறையில் நேரு, காஷ்மீர் மீதான உரிமையை முழுமையாக நிலைநாட்டியிருக்க வேண்டும். ஆனால், சொதப்பி விட்டார். பிரிட்டிஷ்காரர்கள் நம்மை விட்டு போன போதே, காஷ்மீர் முழுமையாக இந்தியாவில் தான் இருக்கிறதா என்பது, ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை. அது தவிர, சீன - இந்திய எல்லையை வரையறுப்பதில் தாவா இருந்தது. அதை ராணுவ வழியிலோ, ராஜீய உறவு முறையிலோ சீர் செய்திருக்க வேண்டிய நேரு, இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொண்டார்.

இந்திய ராணுவம், சீன போரில், தோல்வியை சந்தித்ததற்கு காரணம், போர் உத்தியை வகுத்தவர்கள் அல்லது அதற்கு உத்தரவிட்டவர்கள் என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை. தோல்விக்கு பொறுப்பேற்று, நேரு அன்றே பதவி விலகியிருக்கலாம். அவர் அப்படிச் செய்ய வில்லை. இந்திய ராணுவத்தை வலுவாக்கியிருக்க வேண்டிய பிரதமர் நேரு, தன் கடமையிலிருந்து தவறினார். அதை இப்போது எடுத்துச் சொன்னால் நேரு குடும்பத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. காரணம், உண்மை சுடுகிறது. இந்திய தேசிய காங்கிரசில் தன் தந்தை தன்னை, தலைவராக நுழைத்தது போலவே நேருவும், தன் மகள் இந்திராவின் அரசியல் நுழைவை விரும்பினார். இந்திரா காலத்திலும் ராணுவம் வலுவாக இருந்ததாக சொல்ல முடியாது. ஆனாலும், வங்கதேசம் உருவாகஇந்திய ராணுவம் துணை நின்றது.அது இந்திராவின் வெற்றியாக பேசப்பட்டது. அதற்காக இந்தியா கொடுத்த விலை அதிகம். அதைப்பற்றி அப்போது யாரும் அதிகம் பேசவில்லை. கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசமானது. இந்திராவின்அரசியல் வெற்றியாகத்தான்விளம்பரப்படுத்தப்பட்டது. அவர் மறுமுறை பதவிக்கு வர உதவியது. இந்திய ராணுவத்தின் மாட்சிமையாக கருதப்படவில்லை.தவறு செய்யாமல் இருந்திருந்தால், நேருவை பாராட்டலாம். செய்த தவறை ஒப்புக் கொண்டிருந்தால் மன்னிக்கலாம். இதுவும் இல்லை. அதுவும் இல்லை என்றால் நேருவை கண்டிப்பதை தவிர, மக்களுக்கு வேறு வழியில்லை. பா.ஜ., போன்ற எதிர்க் கட்சிகள் இந்த விவகாரத்தை தீவிர மாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக இருக்கலாம். இருந்தாலும் இந்த விவகாரம் எதிர்க்கட்சிகளின் பிரசார உத்தியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்பதில், இரு வேறு அபிப்ராயங்கள் இருக்க முடியாது.முதலில், செய்த தவறுகள் என்ன என்பது சரியாக அலசப்பட்டிருந்தால், அடுத்து தொடர்ந்த சில தவறுகளை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ராணுவம் என்ற ஒன்று இருப்பதே, தளவாடங்கள் வாங்குவதில் கமிஷன் அடிப்பதற்கு தான் என்றிருந்தால், அந்த நாட்டு ராணுவத்தை பலவீனமான அண்டை நாடுகள் கூட மதிக்காது. ஐம்பது ஆண்டுகளாக இந்திய ராணுவத்தின் கதி இதுதான். இது நம்மை விட ,மற்றவர்களுக்கு நன்றாக புரிந்திருக்கிறது என்பது அவர்களின் வெற்றி, நம் தோல்வி.

Email: hindunatarajan@hotmail.com.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X