ஜோத்பூர்:இந்திய விமானப்படை விமானம், மத்திய பிரதேசத்தின் குவாலியர் அருகே, விழுந்து நொறுங்கியதில், ஐந்து அதிகாரிகள் பலியாயினர்.இந்திய விமானப் படைக்கு சொந்தமான, 'சி - 130 ஜே சூப்பர் ஹெர்குலஸ்' ரக விமானம், வழக்கமான பயிற்சிக்காக, உ.பி.,யின் ஆக்ராவில் உள்ள விமானப் படை தளத்தில் இருந்து, நேற்று காலை, 10:00 மணிக்கு புறப்பட்டது.வானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென பழுதான அந்த விமானம், ம.பி., மாநிலம், குவாலியர் அருகே, விழுந்து நொறுங்கியது.
இதில், அந்த விமானத்தில் இருந்த பைலட் உட்பட ஐந்து அதிகாரிகளும் பலியாயினர். விபத்துக்கான காரணம் குறித்து, விசாரணைக்கு விமானப்படை உத்தரவிட்டுள்ளது.நம் இந்திய ராணுவத்துக்காக, 'சி - 130 ஜே' ரகத்தை சேர்ந்த, ஆறு விமானங்கள், தலா, 1,000 கோடி ரூபாய் விலையில், அமெரிக்காவிலிருந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்டன. அதில் ஒரு விமானம் தான், நேற்று விபத்துக்குள்ளானது. இந்த ரக விமானம், 20 டன் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது; குறுகிய ஓடுபாதையில் தரையிறங்கவும், புறப்படவும் முடியும்.
விபத்துக்குள்ளான விமானம்:சி-130ஜே 'சூப்பர்' ஹெர்குலஸ் பொதுப்பண்புகள்
ஹெர்குலஸ் வகை போர்விமானம் அமெரிக்காவின் ராணுவ பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டது. 2008ல் இந்திய விமானப்படை, ஹெர்குலஸ் விமானத்தை வாங்க ஒப்பந்தம் போட்டு, ஆறு விமானங்களை வாங்கியது.இதை, குறைந்தது மூன்று பேர் கொண்ட 'பைலட்' குழுவால் மட்டுமே இயக்க முடியும். மேலும், 92 ராணுவ வீரர்களை, ஆயுதங்களுடன் ஏற்றிக்கொண்டு பறக்கும் ஆற்றல் உடையது. விமானத்தின் சாதாரண எடை, 34,274 கிலோ. 33 ஆயிரம் கிலோ போர் தளவாடங்களை ஏற்றலாம். மொத்தம் 79,378 கிலோ எடையுடன் விண்ணில் பறக்கும். ஹெர்குலஸ் வகை விமானம் விண்ணிலேயே எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் திறன் பெற்றது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 5,250 கி.மீ., பயணிக்கும். விமானம் மேலெழும்ப, 953 மீட்டர் ஓடுபாதை தேவை.* வேகம்: மணிக்கு 671 கி.மீ.,* பறக்கும் அதிகபட்ச உயரம்: 40,386 அடி* விமானத்தின் நீளம்: 97 அடி 9 'இன்ச்'* இறக்கையின் நீளம்: 132 அடி 7 'இன்ச்'* இறக்கை பரப்பளவு: 1,745 சதுர அடி* உயரம்: 38 அடி 10 'இன்ச்'
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE