நூறு சதவீத ஓட்டு பதிவு சாத்தியமா? எஸ்.ராமசுப்ரமணியன்| Dinamalar

நூறு சதவீத ஓட்டு பதிவு சாத்தியமா? எஸ்.ராமசுப்ரமணியன்

Updated : ஏப் 01, 2014 | Added : மார் 29, 2014 | கருத்துகள் (2)
Share
நம் நாட்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 86 கோடி. பொதுவாக, அது பொதுத் தேர்தலானாலும், இடைத் தேர்தலானாலும், 60 சதவீத ஓட்டுகள் பதிவானாலே பெரிய விஷயம். அதற்கு மேல் பதிவாவதை, ஆட்சியில் இருப்பவர்களும் விரும்புவதில்லை. காரணம், ஓட்டுப் பதிவு கூடுதலானால் அது, ஆள்வோர் மீதுள்ள வெறுப்பை பதிவு செய்வது போன்று, அரசு நினைப்பதும் நிஜம்.திருமங்கலம், ஏற்காடு போன்ற ஒரு
நூறு சதவீத ஓட்டு பதிவு சாத்தியமா? எஸ்.ராமசுப்ரமணியன்

நம் நாட்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 86 கோடி. பொதுவாக, அது பொதுத் தேர்தலானாலும், இடைத் தேர்தலானாலும், 60 சதவீத ஓட்டுகள் பதிவானாலே பெரிய விஷயம். அதற்கு மேல் பதிவாவதை, ஆட்சியில் இருப்பவர்களும் விரும்புவதில்லை. காரணம், ஓட்டுப் பதிவு கூடுதலானால் அது, ஆள்வோர் மீதுள்ள வெறுப்பை பதிவு செய்வது போன்று, அரசு நினைப்பதும் நிஜம்.

திருமங்கலம், ஏற்காடு போன்ற ஒரு சில தொகுதிகளில், இடைத் தேர்தல்களின் போது, 80 முதல், 90 சதவீதம் வரை ஓட்டுகள் பதிவாகி இருக்கலாம். அவ்வாறு அத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போது கூடுதலாக ஓட்டுப்பதிவு நடந்ததற்கான காரணம் வெள்ளிடைமலை.ஓட்டுப் பதிவு, 100 சதவீதம் வேண்டும் என்று பேட்டிகளின் போதும், அறிக்கைகளின் மூலமும், விளம்பரங்களின் மூலமும் பிரசாரம் செய்யும் தேர்தல் கமிஷன், அதற்காக என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது என்று ஆராய்ந்தால், அதிர்ச்சியாக இருக்கும். ஒரு துரும்பைக் கிள்ளிப் போடக் கூட, தேர்தல் கமிஷன் முயற்சித்ததில்லை என்பது தான் உண்மை.
ஓட்டுப் பதிவு நாளன்று, ஓட்டுச் சாவடிக்குச் சென்று, வரிசையில் காத்திருந்து ஓட்டளிக்க விரும்பாமல், 40 சதவீதம் பேர், விடுமுறையை வீட்டில் உறங்கியோ, தொலைக்காட்சி சேனல்களில் மூழ்கியோ, கடமையாற்ற முன்வராமல் தவிர்ப்பதாக, ஒரு அபிப்பிராயம் உண்டு.இப்படி கடமையாற்ற முன்வராமல் ஓய்வெடுத்துக் கொண்டு உறங்குபவர்களின் சதவீதம், 5 முதல், 10 தான் இருக்கும்.
அப்படியானால் மீதி, 30௦ முதல், 35 சதவீதம் பேர் யார் யார்?
*தேர்தல் பணிபுரிவோர், இவர்களுக்கு தபால் ஓட்டு உண்டே என்று அவசரப்பட்டு கோபிக்க வேண்டாம்; அந்த தபால் ஓட்டு குறித்து விளக்கம் பின்னால்
வருகிறது.
*காவல் துறையினர், தபால் ஓட்டு பட்டியலில் இவர்களும் உண்டு.
*ராணுவத்தினர்.
*குற்றவாளிகளுக்குத் தான் ஓட்டுரிமை கிடையாது. விசாரணைக் கைதிகள் என்ன பாவம் செய்தனர்?
*பேருந்து, கப்பல், விமானம் மற்றும் ரயில்களில் பயணம் செய்து கொண்டிருக்கும் பயணிகள்.
*மருத்துவமனைகளில் உள்நோயாளி களாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள்.
*லாரி, பேருந்து, டாக்சி ஓட்டுனர்கள்.
*அன்றாடம் ஒரு ஊர் வீதம் சுற்றிக் கொண்டிருக்கும் விற்பனை பிரதிநிதிகள்.

இப்பட்டியலில் உள்ளவர்கள் எல்லாம், தவறாமல் தங்கள் ஓட்டு களைப் பதிவு செய்ய, தேர்தல் கமிஷன், இதுவரை என்ன நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது?
ஒரு ஓட்டுச்சாவடிக்கு, 1,500 வாக்காளர்கள். 86 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க, 5 லட்சத்து 45 ஆயிரம் ஓட்டுச் சாவடிகளை கமிஷன் அமைக்க வேண்டும்.
'மை' வைப்பவர் முதல், 'ஓட்டிங் மிஷினை' இயக்குபவர் வரை, ஒரு ஓட்டுச் சாவடியில் அதிகாரியையும் சேர்த்து, ஆறு அலுவலர்கள் பணிபுரிவர்.ஆக, ஒரு ஓட்டுச் சாவடிக்கு ஆறு பேர் வீதம், 5 லட்சத்து 75 ஆயிரம் ஓட்டுச் சாவடிகளுக்கு நியமனம் செய்யப்படவிருக்கும் அலுவலர்களின் எண்ணிக்கை மட்டும், 35 லட்சம் தேறும்.ஆறு பேர் என்பது ஓட்டுச் சாவடிக்கு உள்ளே பணிபுரிபவர்கள். தவிர பாதுகாப்புப் பணியினர், பறக்கும் படையினர், தேர்தல் கமிஷனின் பணியாளர்கள், ஓட்டிங் மிஷினை சேகரித்துச் செல்வோர், அதை பாதுகாப்போர் என்று, எப்படி யும் மொத்தம், ஒரு கோடி பேர்களாவது தேறுவர்.இவர்கள் ஓட்டளித்து, தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற தேர்தல் கமிஷன் என்ன ஏற்பாடு செய்து உள்ளது; செய்யப் போகிறது?

தேர்தல் முடிவுகளை பத்திரிகைகளில் படிக்கும்போது, மொத்த ஓட்டுகள், பதிவான ஓட்டுகள், தபால் ஓட்டுகள் என்று வரிசையாக குறிப்பிட்டு இருப்பர்.எந்த தேர்தல் முடிவுகளிலாவது, ஒவ்வொரு தொகுதியிலும், 200௦ எண்ணிக்கைக்கு மேல் தபால் ஓட்டுகள் பதிவானதாக பார்த்து இருக்கிறீர்களா?சராசரியாக, 200௦௦ என்று கணக்கிட்டால் கூட, 543 தொகுதிகளுக்கும் சேர்த்து, ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 600௦௦ தபால் ஓட்டுகள் தான் கணக்கில் வரும். ஒரு கோடி தேர்தல் பணியாளர்களில் ஒரு லட்சம் தபால் ஓட்டுகள் பதிவானால், மீதி, ௯௯ லட்சம் பேரின் ஓட்டுகள் எங்கே போனது? எப்படி மாயமானது.நான் தேர்தல் பணிபுரிய நியமிக்கப்பட்டபோது, பயிற்சி நாளில் நாம் கேட்ட முதல் கேள்வி, 'நான் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டுமே! அதை எப்படி ஆற்றுவது?' என்பது தான்.

என்னை பார்வையாலேயே பொசுக்க முயன்று பயிற்சியாளர், 'அதெல்லாம் நீங்க தபால் ஓட்டு போட்டு, உங்க ஜனநாயகக் கடமையை ஆற்றலாம்' என்றார்.
'அதைத் தான் எப்பூடி ஆத்துறது? எங்கே ஆத்துறது? அதைச் சொல்லுங்க சார் முதல்ல' என்றோம்.'சென்னை நகரத்துக்கான, 'கமிஷன் கேம்ப் ஆபீஸ்' சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் செயல்படுது. அங்கே போய் உங்க அப்பாயின்ட்மென்ட் ஆர்டரையும், உங்க வாக்காளர் அடையாள அட்டையையும் காட்டுனீங்கன்னா, உங்க தொகுதிக்கான வேட்பாளர்கள் பேர் அச்சிட்ட ஓட்டு சீட்டு தருவாங்க. அதுல நீங்க முத்திரை குத்தி, கவர்ல வெச்சு ஒட்டி அங்கேயே கொடுத்தீங்கன்னா, அவுங்க அதை சீல் வெச்சு, உங்க தொகுதியோட ஓட்டு எண்ணிக்கை நடக்குற இடத்துக்கு அனுப்பிடுவாங்க. ஓட்டு எண்ணும்போது உங்க ஓட்டும், 'கவுன்ட்' ஆயிடும்' என்று விளக்கினார்.
நானும் தபால் ஓட்டு போடும் ஆவலோடு, பனகல் மாளிகை சென்றேன். அங்கே மகாமகக் கூட்டத்திற்கு இணையாக, கூட்டம் பிதுங்கி வழிந்து கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்திற்குள் முண்டியடித்து முன்னேற முடியாது என்று தீர்மானித்து, தபால் ஓட்டுப் போடும் ஆசைக்கு விடை கொடுத்து வெளியேறினேன். ஆனால், நம் அலுவலக சகாவோ தபால் ஓட்டு போடாமல் வரமாட்டேன் என்று, அங்கேயே பிடிவாதமாகக் காத்திருந்தார்.

மறுநாள் தேர்தல் பணிக்கு வந்தவரிடம், 'ஓட்டு போட்டுட்டியா?' என்றேன். அவரோ, 'என் கையெழுத்தை மட்டும் வாங்கிகினாங்கோ. ஓட்டு சீட்டுல அவுங்களே முத்திரை குத்தி கவர்ல வெச்சி ஒட்டி அனுப்பிட்டாங்க' என்றார். தபால் ஓட்டுகள் அனைத்தும், ஆளும் கட்சிக்குசாதகமாகவே இருப்பதன் சூட்சுமம், நமக்கு அப்போது தான் புரிந்தது.
இதுவா சுதந்திரமான தேர்தல்? உங்கள் ஓட்டு ரகசியமானது என்பது இது தானா?நுாறு சதவீதம் ஓட்டுகள் பதிவாகாமல் இருப்பதற்கானக் காரண காரியம் தெரிய வந்ததா!
சரி... பிரச்னைக்கு தீர்வு தான் என்ன?தேர்தல் பணிபுரிவோர் அனைவருமே, இந்நாட்டின் பிரஜைகள் தானே! அயல் நாட்டவர் அல்லவே!அவரவர்கள் பணிபுரியும் ஓட்டுச் சாவடிகளிலேயே, முதலிலேயோ, கடைசியாகவோ அவர்களது ஓட்டுகளையும் பதிவு செய்ய உரிய நடவடிக்கையை, கமிஷன் மேற்கொள்ள வேண்டும்.அதேபோல, விமான நிலையம், துறைமுகம், ரயில் நிலையம், பஸ் டிப்போகள், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் ஆகிய இடங்களிலும் ஓட்டுப் பதிவு துவங்கி, முடியும் நேரம் வரை ஒரு சிறப்பு ஓட்டுச் சாவடி அமைத்து, நாம் முன்னர் பட்டியலில் குறிப்பிட்டு இருப்போர் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யலாம்ஓட்டுச் சாவடியில் பணிபுரிவோர் தவிர, அது தொடர்பாக அங்கு பணியிலிருக்கும் அனைவரின் ஓட்டு களையும், மேலே குறிப்பிட்டுள்ள ஆலோசனைப்படி பதிவு செய்யலாம்.

இதில் 'சிக்கல்' என்று குறிப்பிடக்கூடிய ஒரு அம்சம் என்னவெனில், உங்களுக்கு (தேர்தல் பணியாளர்கள் மற்றும் பட்டியலில் இருப்போர்) ஓட்டுரிமை உள்ள தொகுதியில், ஒரு கட்சிக்கு ஓட்டளிக்க நீங்கள் யோசித்து வைத்திருப்பீர்கள். ஆனால், நீங்கள் ஓட்டளிக்கும் தொகுதியில் அந்த கட்சி நின்றிருக்காது. அதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் ஓட்டளிக்க தீர்மானித்துள்ள கட்சியோடு இணைந்துள்ள கூட்டணிக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ ஓட்டளிக்கலாம். அப்படி யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பமில்லையென்றால் இருக்கவேஇருக்கிறது, 'நோட்டா' பொத்தான்.நாம் முன்வைத்துள்ள ஆலோசனை ஏற்கப்பட்டாலும் கூட, அதிகபட்சம், 90௦ முதல், 95 சதவீதம் ஓட்டுகள் தான் பதிவாகுமேயன்றி, 100 சதவீத ஓட்டுப் பதிவு என்பதுசாத்தியமாகாத ஒன்று. ஏழை சொல் அம்பலம் ஏறுமா?
மொபைல்: 98407 19043

எஸ்.ராமசுப்ரமணியன், எழுத்தாளர் / சிந்தனையாளர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X