ஜெயலலிதாவுக்கு மிரட்டல்: சி.பி.ஐ., விசாரணைக்கு அரசு பரிந்துரை| | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதாவுக்கு மிரட்டல்: சி.பி.ஐ., விசாரணைக்கு அரசு பரிந்துரை

Updated : செப் 30, 2010 | Added : செப் 28, 2010 | கருத்துகள் (17)
Share
சென்னை : மதுரையில் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கவுள்ள அ.தி.மு.க., கண்டன பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா பங்கேற்றால், அவர் குண்டு வைத்து கொல்லப்படுவார் என்ற மிரட்டல் கடிதங்கள் ஜெயா "டிவி' அலுவலகத்திற்கு வந்துள்ளன. இந்த மிரட்டல் கடிதங்கள் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ., விசாரணைக்கு தமிழக அரசு மாற்றம் செய்து, அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. மத்திய,

சென்னை : மதுரையில் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கவுள்ள அ.தி.மு.க., கண்டன பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா பங்கேற்றால், அவர் குண்டு வைத்து கொல்லப்படுவார் என்ற மிரட்டல் கடிதங்கள் ஜெயா "டிவி' அலுவலகத்திற்கு வந்துள்ளன. இந்த மிரட்டல் கடிதங்கள் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ., விசாரணைக்கு தமிழக அரசு மாற்றம் செய்து, அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் மதுரையில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 28ம் தேதி ஜெயா "டிவி' அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம் வந்தது. அக்கடிதத்தில், கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கலந்து கொண்டால் அவரை கொல்லப் போவதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்த புகார் மனுவை பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம், அ.தி.மு.க., எம்.பி.,க்கள் நேரில் சந்தித்து அளித்தனர். பின், மதுரை மாநாடு தேதி மாற்றப்பட்டு, அடுத்த மாதம் 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி மீண்டும் ஜெயா "டிவி' அலுவலகத்திற்கு இரண்டு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. இவற்றை ஏற்கனவே மிரட்டல் கடிதம் எழுதிய வடகரையைச் சேர்ந்த வைகைப்புயல் பாலு மற்றும் மதுரை, காளவாசல் பாண்டியன் நகரைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் என்பவரும் எழுதியுள்ளனர். கடிதத்தில், ஜெயலலிதா மதுரை கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், மீறி கலந்து கொண்டால் அவர் கொல்லப்படுவார் என்றும், போயஸ் கார்டன் வீடு, ஜெயா "டிவி' அலுவலகம், வக்கீல் பசும்பொன் பாண்டியன் வீடு மற்றும் கோடநாடு பங்களா ஆகியவை குண்டு வைத்து தகர்க்கப்படும் என்று எழுதப்பட்டிருந்தது.


இது குறித்த புகாரை உள்துறை செயலர் ஞானதேசிகனிடம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஜெயா "டிவி' நிர்வாகிகள் கடந்த 18ம் தேதி புகார் மனு அளித்தனர். தொடர்ந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு குழுவினர் தலைமைச் செயலர், உள்துறை செயலரை சந்தித்து கொலை மிரட்டல் விடுத்த கடிதங்கள் குறித்தும், அது தொடர்பான வழக்குகள் குறித்தும் சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்ற மனுவை அளித்தனர். அந்த மனுவின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்த கடிதங்கள் தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு தமிழக அரசு மாற்றம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.


இது குறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பு: எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக ஜெயா "டிவி' நிறுவனம் மூலம் பெறப்பட்ட ஏழு கடிதங்களின் அடிப்படையில், சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி., ஆகியோரிடம், ஜெயா "டிவி' நிறுவனத்தின் துணைத் தலைவர்கள் ரங்கநாதன், கே.பி.சுனில் ஆகியோர் பல்வேறு தேதிகளில் கொடுத்த புகார்களை அடுத்து, சென்னை மாநகர் கிண்டி போலீஸ் ஸ்டேஷனில் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஐந்து வழக்குகளிலும் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர புலன் விசாரணை நடந்து வருகிறது. சிறப்பு தனிப்படைகள் மதுரை, தஞ்சை ஆகிய இடங்களுக்குச் சென்று தபால் நிலைய அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் உள்ளிட்ட 113 பேரிடம் இதுவரை விசாரித்துள்ளன.


இக்கடிதங்கள் அனைத்தும் தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. புலன் விசாரணை உயரதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் நடந்து வருகிறது. இருப்பினும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர், தலைமைச் செயலர் மற்றும் உள்துறைச் செயலரை சந்தித்து, கொலை மிரட்டல் விடுத்து மேலும் மூன்று கடிதங்கள் வந்துள்ளதாகவும், இதுவரை கொடுத்த புகார்களின் மீது போலீஸ் துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து உடனே தெரிவிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளனர். மேலும், அனைத்து வழக்குகளையும் மத்திய குற்றப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.,) விசாரணைக்கு மாற்ற வேண்டுமென்றும் மனு அளித்துள்ளனர். தமிழக காவல்துறை இப்புகார்கள் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ள போதிலும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தலைமையில் வந்த குழுவினர் அளித்த கோரிக்கையை ஏற்று, இவ்வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ.,க்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X