தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூட ஐகோர்ட் உத்தரவு

Updated : செப் 30, 2010 | Added : செப் 28, 2010 | கருத்துகள் (55) | |
Advertisement
  சென்னை : தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை உடனடியாக மூட, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. தூத்துக்குடி அருகே மீளவிட்டான் கிராமத்தில் அமைந்துள்ள சிப்காட் தொழில் வளாகத்தில், தாமிர உருக்காலை துவங்க ஸ்டெர்லைட்

 

சென்னை : தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை உடனடியாக மூட, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.


தூத்துக்குடி அருகே மீளவிட்டான் கிராமத்தில் அமைந்துள்ள சிப்காட் தொழில் வளாகத்தில், தாமிர உருக்காலை துவங்க ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது. முதல்கட்டமாக, தினசரி 234 டன் தாமிரம், 638 டன் சல்ப்யூரிக் ஆசிட் தயாரிக்கும் திறனில் இந்த ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 1995ம் ஆண்டு முதலில் ஒப்புதல் வழங்கியது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, 1995ம் ஆண்டு மே மாதம் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, 1995ம் ஆண்டு மே மாதம் மாசு கட்டுப்பாடு வாரியம் ஒப்புதல் வழங்கியது. தாமிர உருக்காலை துவங்குவதற்கு அப்போது பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் வழங்கிய ஒப்புதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூடக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, சுற்றுச்சூழலுக்கான தேசிய அறக்கட்டளை, தூத்துக்குடி சி.ஐ.டி.யு., மாவட்ட குழுவின் செயலர் கனகராஜ், இந்திய கம்யூ., மாவட்டச் செயலர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.


மனுக்களில் கூறியிருப்பதாவது: இந்த தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் மாசு, உடல் நலத்துக்கு தீங்கு விளையும் என்பதை பற்றி பொருட்படுத்தாமல், மத்திய மற்றும் மாநில அரசுகள் இதற்கு அனுமதி வழங்கியுள்ளன. முதலில் குஜராத், கோவா மாநிலங்களில் துவங்குவதாக இருந்தது. இம்மாநில மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரிக்கு மாற்றப்பட்டது. ஆலை துவங்க அம்மாநில அரசு முதலில் அனுமதி வழங்கியது. அதன்பின், ரத்தினகிரி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, இந்த ஆலைக்கான கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு, 200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டும், வழங்கப்பட்ட உரிமத்தை மகாராஷ்டிரா அரசு ரத்து செய்தது. தூத்துக்குடி ஒரு கடலோரப் பகுதி. மன்னார் வளைகுடா பகுதியில் வருகிறது. கடல் தாவரங்கள் இங்கு அதிகம் காணப்படுகிறது. இதன் அருகில் 21 தீவுகள் உள்ளன. தேசிய கடல் பூங்காவாக இப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள பெரிய தொழிற்சாலைகள் வெளியேற்றும் சல்பர் டை ஆக்சைடு மூலம், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களில் இந்த தொழிற்சாலை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என தெரிந்தும், மத்திய, மாநில அரசுகள் அவசரகதியில் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளன. இதை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.


மத்திய, மாநில அரசுகள் சார்பில், "சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலையின் நடவடிக்கைகளை அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறோம்' என கூறப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் தர்மாராவ், என்.பால்வசந்தகுமார் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் சீனியர் வக்கீல் வி.பிரகாஷ், வக்கீல்கள் எஸ்.கிருஷ்ணசாமி, பி.வி.எஸ்.கிரிதர் ஆஜராகினர்.


"டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், 25 கி.மீ., தூரத்துக்கு அப்பால் தொழிற்சாலை அமைய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (நீரி) அறிக்கையின்படி, மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள நான்கு தீவுகளின் அருகில் இத்தொழிற்சாலை அமைந்துள்ளது. தொழிற்சாலைக்கும், நான்கு தீவுகளுக்கும் இடையே ஆறு, ஏழு, 15 கி.மீ., தூரம் தான் உள்ளது. எனவே, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் தான் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், விதிகள் மீறப்பட்டுள்ளன. இதற்கு அனுமதி வழங்குவதற்கு முன், மத்திய அரசு இதை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வு அறிக்கை போதுமானதாக இல்லை. ஒரு மாத அளவிலான புள்ளி விவரங்கள் தான் உள்ளன. இந்த அறிக்கையின்படி, மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் வழங்கியுள்ளன. இதில் இருந்து, மத்திய அரசு அதிகாரிகள் தங்கள் மனதை செலுத்தவில்லை என்பது தெளிவாகிறது. தடை செய்யப்பட்ட பகுதிக்குள் ஆலையை நிறுவியதன் மூலம், இதை மத்திய அரசு நிராகரிக்க இந்தக் காரணமே போதும். இந்த ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டதில் அதிகாரிகள் அவசரம் காட்டியிருப்பது, "நீரி'யின் அறிக்கையில் இருந்து தெரிகிறது.


தாமிர உருக்காலைக்கு மற்ற மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் போது, பொதுமக்களை காப்பதில் மத்திய, மாநில அரசுகள் அதிக கவனத்துடன், எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பொதுமக்கள் கருத்து கேட்பு எதையும் அதிகாரிகள் நடத்தவில்லை. பொதுமக்களின் எதிர்ப்பை தவிர்ப்பதற்காக, சட்டப்படி நடத்த வேண்டிய கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்தாமல் அதிகாரிகள் விட்டு விட்டனர். இதை எங்களால் பாராட்ட முடியவில்லை. இந்த தொழிற்சாலை வெளியேற்றும் கழிவுகளில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆர்சனிக், புளோரைடு அடங்கியுள்ளது என, "நீரி'யின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொழிற்சாலை அமைந்துள்ள இடமே, கடுமையாக மாசுபட்டுள்ளது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மாதிரியிலும் புளோரைடு, ஆர்சனிக், காப்பர், குரோம் உள்ளது. சட்ட விதிமுறைகளை புறக்கணித்து இத்தொழிற்சாலை துவங்கப்பட்டதை காட்டுவதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருந்தும், அதை மறுக்கும் விதத்தில் சரியான ஆதாரங்களை தொழிற்சாலை தரப்பில் தாக்கல் செய்யவில்லை.


தரமான வாழ்க்கையை வாழ ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அதற்கு இடையூறு ஏற்படும் விதத்திலோ, ஆபத்தை விளைக்கும் வகையிலோ, சட்டத்தை மீறி யாரும் செயல்பட்டால், அதை கடுமையாக கருதி, அந்த மனிதனின் உரிமையை பாதுகாக்க வேண்டும். குடிமக்களின் சுகாதாரம், உடல் நலத்தை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் அரசுக்கு பொறுப்பு உள்ளது. தண்ணீர், காற்றில் மாசு ஏற்படுத்துவதை கோர்ட்டுகள் எளிதில் எடுத்துக் கொள்ளாது. ஆறுகள், ஓடைகள், மற்றும் நீர் நிலைகளில் விஷக் கழிவுகளை வெளியேற்றி, பொதுமக்களின் சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிப்பவர்களை கடுமையாக அணுக வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை, காற்றில் விஷத்தன்மை வாய்ந்த கழிவை ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியேற்றுவதன் மூலம், அந்தப் பகுதியைச் சுற்றி வாழ்பவர்களுக்கு கடும் விளைவை ஏற்படுத்துவதற்கான ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ளன. எனவே, மாசு விளைவிக்கும் இந்த தொழிற்சாலையை இப்போதாவது நிறுத்த வேண்டும்.


ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் நடவடிக்கையால், அந்தப் பகுதியில் மாசு ஏற்படுவது மட்டுமல்லாமல், தொழிலாளர்களின் உடல்நலம், பாதுகாப்பிலும் விளைவை ஏற்படுத்தும். இதற்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்வதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும், இந்த தொழிற்சாலை இயங்கினால், எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன என்பதால், இந்த முடிவை எடுக்கிறோம். தொழிலாளர்களை நிர்கதியில் விட நாங்கள் விரும்பவில்லை. எனவே, வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அமைப்புகளில் தொழிலாளர்களின் கல்வித் தகுதி, அனுபவத்தை கருத்தில் கொண்டு வேலை கிடைக்க மாவட்ட கலெக்டர், அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை உடனடியாக மூடும்படி உத்தரவிடப்படுகிறது. தொழில் தகராறு சட்டப்படி, ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து நஷ்டஈடு பெற தொழிலாளர்களுக்கு உரிமை உள்ளது. இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.


நீதி நிலைத்து விட்டது: வைகோ: ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி நகரிலும், சுற்று வட்டாரங்களிலும் நாசம் விளைவித்துக் கொண்டிருந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்று, 15 ஆண்டுகளாக ம.தி.மு.க., போராடி வந்தது. தொடர் போராட்டங்கள் பலவற்றில் கைது செய்யப்பட்டோம். உலகின் பல நாடுகளில், இப்படிப்பட்ட ஆலைகள் மூடப்பட்டு விட்டன. மராட்டிய மாநிலத்தில் ஆலையை அமைக்க அனுமதிக்காமல் அந்த அரசு விரட்டியபின், தமிழகத்திற்கு இந்த ஆலை வந்தது. விவசாயிகள், மீனவர்கள், அந்தப் பகுதியில் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும், பெருங்கேடு விளைவித்து வந்தது இந்த ஸ்டெர்லைட் ஆலை. விளை நிலங்கள் பாழாகும்; கடல்வாழ் உயிர் இனங்கள் அழியும்; மக்களின் உடல் நலத்துக்கு பெருங்கேடு நேரும் என்பதால், இந்த ஆலை மூடப்பட வேண்டும் என, ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்து நானே வாதாடினேன். துளியும் சமரசத்துக்கு இடமின்றி, ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நாங்கள் போராடி வந்தோம். இந்த ஆலையை மூட வேண்டும் என்று தேர்தல் பிரகடனத்திலும் தெரிவித்தோம். இப்போது ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. உண்மை ஒருநாள் வெல்லும்; நீதி நிலைக்கும் என்பதற்கு உதாரணமாகி விட்டது. எங்கெல்லாம் பாதிக்கப்படுகின்றனரோ, அவர்கள், அநீதியை எதிர்த்துப் போராடி வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை, இந்த தீர்ப்பு வழங்கி உள்ளது. இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramakrishnan - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
02-அக்-201008:01:31 IST Report Abuse
Ramakrishnan தொழிற்சாலை கட்டுவதற்கு முன்னரே தடை வங்கி இருந்தால் கட்டும் செலவாவது மிஞ்சியிருக்கும். முற்பகல் செய்யின் பிற்பகல் நன்று.
Rate this:
Cancel
மணி - எரோடே,இந்தியா
01-அக்-201022:20:12 IST Report Abuse
மணி இது ஒரு நல்ல தீர்ப்பு கிடையாது. இந்த தொழிற்சாலைய நம்பி 800 நேரடி தொழிலாளர்கள் மற்றும் அல்லாமல் மறைமுக தொழிலாளர்கள் 5000 பேர்களாவது இருப்பார்கள். அவர்களின் கதி என்ன? இதனால் நம் நாட்டுக்கு பெரும் இழப்பு. அனைத்து வரிகளும் நின்றுவிடும்.
Rate this:
Cancel
ECO LOVER - PEALCITY,இந்தியா
30-செப்-201021:27:40 IST Report Abuse
ECO LOVER பொதுவான கருத்து என்னவென்றால் வல்லநாடு வரை பொழியும் மழை ஐ கூட இது தடை படுத்தியது என்பதுதான். இந்த மண்ணில் தொடர்ந்து மழை பொழியும் பொழுது நம் மக்களுக்கு இது தெளிவாக விளங்கும் என்று நாம் நம்புவோம். எங்கள் மண் காப்பாற்றப்பட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X