கிர்ணி பழம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிர்ணி பழம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

Added : ஏப் 18, 2014

கச்சிராயபாளையம்: நல்லாத்தூர் கிராமத்தில் கோடை கால கனியான கிர்ணி பழம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கச்சிராயபாளையம் பகுதியில் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. கோடைகாலத்திற்கு ஏற்ற பழங்களான வெள்ளரி, தற்பூசனி போன்ற பயிர்களை பயிர் செய்தனர். தற்போது நல்லாத்தூர் உட்பட பல பகுதிகளில் கிர்ணி பழம் சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிர்ணி சாகுபடி செய்ய ஏக்கருக்கு 200 கிராம் விதையே போதுமானது. ஒரு கிலோ கிர்ணி பழ விதைகள் ரூ 13,500 ஆகும். 11 நாளான நாற்றுகளை 4 அடி அகலத்தில், 2 அடி இடைவெளியில் நடவு செய்யப் படுகிறது. நடவு செய்த 14ம் நாள் டி.ஏ.பி., யூரியா, பொட்டாஷ் ஆகியவை கலந்து உரமிட வேண்டும். 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்டும் போது சிறிதளவு உரமிட்டால் செடிகள் நன்கு வளரும். சாதாரண முறையிலும், சொட்டு நீர் பாசன முறையிலும் தண்ணீர் செலுத்தலாம். செடிகள் பூக்கும் சமயத்தில் பூச்சிகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்த பூச்சி மருந்துகளை தெளிக்க வேண்டும். 30 நாட்களில் காய்க்க துவங்கி 45 நாட்களில் பழங்கள் அறுவடைக்கு தயாராகின்றன. தற்போது ஒரு கிலோ பழம் சில்லரை விற்பனையில் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு டன் கிர்ணி பழம் 13,000 ரூபாய் ஆகும். ஒரு ஏக்கரில் 15 டன் கிர்ணி பழங்கள் கிடைக்கும், இதன் மூலம் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X