பவானி: பிரதோஷ வழிபாட்டின் போது உற்சவர் சிலை திடீரென கீழே விழுந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம், பவானியில் புகழ்பெற்ற வேதநாயகி உடனுறை சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. வெளி மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு தினமும் வருகின்றனர். கோவிலில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் என அனைத்துமே சிறப்பு பெற்றது.
திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம். சூரியன் வழிபட்டதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறும். சனிப்பிரதோஷம் என்பது சிவ பக்தர்களிடையே மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சனிப்பிரதோஷமான நேற்று ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர். பிரதோஷ வழிபாடு முடிந்த பின், உற்சவர் கோவில் பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்து பின்னர், நிலைக்கு வருவார். அப்போது மூலவரை விடவும் உற்சவருக்கு சக்தி அதிகம் என்பது ஐதீகம். இதனால் உற்சவருடனே பக்தர்கள் மூன்று முறை பிரகாரத்தில் வலம் வந்து சுவாமி நிலை பெற்ற பின், கோவிலில் இருந்து வீடு செல்வர்.
நேற்று மாலை, 6 மணியளவில் ஐம்பொன்னால் ஆன உற்சவர் சிலைக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்து முடிந்தன. மரத்தினால் ஆன நந்தி சிலை மீது உற்சவரை வைத்து, 6.30 மணியளவில் தூக்க முற்பட்ட போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் உற்சவர் சிலை கீழே விழுந்தது.
இதை பார்த்த அங்கிருந்த சிவ பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை அபசகுணமாக கருதி வழிபாடு நிறுத்தப்பட்டது. கோவில் வரலாற்றில் இதுபோன்று ஒரு முறை கூட நடந்தது இல்லை என்று பக்தர்கள் வருத்தம் தெரிவித்தனர். சனிப்பிரதோஷத்தன்று ஒரு முறை கூட பிரகாரத்தை சுற்றாமல் இருந்தது பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.
கோவிலில் வழிபாடு திடீரென நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். அதன் பின் இரவு, 8 மணியளவில் கோவிலில் பரிகார பூஜை நடத்தப்பட்டு சுவாமி சிலை மீண்டும் உள்ளே கொண்டு செல்லப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE