நாமக்கல்: நாமக்கல் பிஸ்கட் பேக்கரி நிறுவனத்தினர், நேர்மையற்ற வணிக முறையை பின்பற்றியதற்காக, 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம், அதிரடி தீர்ப்பு வழங்கியது.
தமிழ்நாடு பயனீட்டாளர் சங்கத்தின் சார்பில், நாமக்கல் நகர் பகுதியில் உள்ள பிஸ்கட் பேக்கரி மற்றும் உணவு பொருள் விற்பனையாளர்களுக்கு, பொட்டலப் பொருட்களுக்கு தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, விலை உள்ளிட்ட விபரங்கள் அச்சிடப்பட்டு வினியோகிக்க வேண்டும் என, துண்டறிக்கை வினியோகம் செய்யப்பட்டது. அதில், உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை பின்பற்றாத, நாமக்கல் நகரில் செயல்படும், "மஹாலட்சுமி ஐயங்கார்' கேக் ஷாப் நிறுவனத்திடம் இருந்து, 20 ரூபாய்க்கு, தமிழ்நாடு பயனீட்டாளர் சங்கத்தின் செயலாளர் சுப்பராயன், இரண்டு, "பிரட்' பாக்கெட், கடந்த, 2013ம் ஆண்டு விலைக்கு வாங்கினார்.
அவற்றில், பொட்டலப் பொருட்கள் லேபிள்கள் இல்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக, நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் முறையிட்டார். அவர்கள், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில், வழக்கு தொடர்ந்தார். குறைதீர் மன்ற தலைவர் கிருஷ்ணராஜா, உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், மலர்கொடி முன்பு, கடந்த, 22ம் தேதி, விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் புகார் உறுதி செய்யப்பட்டதால், மஹாலட்சுமி ஐயங்கார் கேக் ஷாப் நிறுவனத்தினர், இரண்டு, "பிரட்' விலையான, 20 ரூபாயை திரும்ப வழங்க வேண்டும்.
மேலும், வழக்கு செலவுக்கு, 2,000 ரூபாய், இழப்பீடாக, 5,000 ரூபாய், நேர்மையற்ற வணிக முறையை கடைபிடித்தற்காக, 10,000 ரூபாயை, தமிழ்நாடு நுகர்வோர் நலநிதிக்கு, ஒரு மாத காலத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE