நமது தினமலர் இணையதள வாசகர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமில்லை,நிஜமாகவே உதவி தேவைப்படும்போது, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கைநீட்டி உதவுவார்கள் என்பதற்கான அடையாளம்தான் கோகுல கண்ணன்.
முழுக்க,முழுக்க தினமலர் இணையதள வாசகர்களின் உதவியால் என்ஜீரிங் படித்துவரும் கோகுலகண்ணன் பற்றி தெரியாதவர்களுக்காக ஒரு சின்ன நினைவூட்டல்.
கோகுல கண்ணனின் தாயார் பெயர் கே.பிருந்தாதேவி,வீட்டு வேலை செய்பவர்,இவரது கணவர் ஒட்டல் தொழிலாளி.மொத்தம் மூன்று குழந்தைகள் இதில் மூத்தவன் கோகுல கண்ணன்.இந்த குடும்பத்தின் மொத்த மாத ஊதியமும் சொற்பமானதே.உணவுக்கும் உடைக்குமே போதாதது என்பதே நிஜம்.
அன்றாடம் வயிற்றுப்பாட்டிற்கே அல்லல்பட்டாலும், தான் பெற்ற பிள்ளைகளை படிக்கவைத்து ஆளாக்க நினைக்கும் கனவுகளுடன் வளம்வரும் ஆயிரக்கணக்கான ஏழை குடும்பத்து தாய்மார்களின் பிரதிநிதிதான் பிருந்தாதேவி.
சென்னை திநகர்,முத்துரங்கன் சாலை,வரதராஜன் தெரு,கதவிலக்கம் 26ல் உள்ள ஒட்டு வீட்டில் வாடகைக்கு குடியிருக்கின்றனர்.
தனது குழந்தைகளை நன்கு படிக்கவைக்கவேண்டும் என்பதுதான் பிருந்தா தேவியில் ஒரே ஆசை.பெற்றவளின் சிரமம்பார்த்து பிள்ளைகளும் நன்கு படித்துவருகின்றனர்.
இதில் மூத்தவன் கோகுல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிளஸ் டூவில் 938 மார்க்குகள் வாங்கியிருந்தான்,கவுன்சிலிங்கில் இவன் கேட்ட சென்னை குன்றத்துார் ஸ்ரீமுத்துக்குமரன் என்ஜீனியரிங் கல்லுாரியில் பி.இ.,(மெக்கானிக்கல்) சீட் கிடைத்துவிட்டது.
எல்லா சலுகையும் போக வருடத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்ற நிலை. அவ்வளவு பணத்தை மொத்தமாக பார்த்தேயிராத பிருந்தாவிற்கு என்னசெய்வது என்பது புரியவில்லை. பாங்க கடனும் கிடைக்கவில்லை. தான் வேலை பார்த்துவரும் வீடுகளில் கடன் கேட்டார். காலை 4 மணிக்கு எழுந்து இரவு 10 மணிவரை இடுப்பொடிய வேலை செய்பவர். 'இன்னும் இரவெல்லாம் கூட வேலை செய்கிறேன்' என் புள்ளை படிச்சா போதும் கொஞ்சம் பணம் கொடுங்க என்று கண்கலங்கிய நிலையில்தான் என் வீட்டு கதவையும் தட்டினார்.
அந்த தாயின் கனவை நிறைவேற்ற நான் என்னால் முடிந்த தொகையை கொடுத்ததுடன் என் கடமை முடிந்ததாக நினைத்துவிடாமல், அவரது நிலமையை நிஜக்கதை பகுதியில் பிரசுரித்து வாசகர்களிடம் முடிந்த உதவியை கேட்டிருந்தேன்.
வாசகர்கள் பலரும் படித்துவிட்டு நல்ல மனதுடன் உதவினார்கள், தங்கள் வியர்வை சிந்தி சம்பாதித்த அனுப்பிய பணத்தின் மதிப்பை அறிந்து கோகுலும் முதல் மற்றும் இரண்டாவது வருடத்தை நன்றாக படித்து முடித்துள்ளான், பணம் பெறச்செய்ததுடன் எனது பொறுப்பு முடிந்ததாக கருதிவிடாமல் அவ்வப்போது அவனது படிப்பு பற்றி கேட்டு அறிந்துவரும் நிலையில் பொறுப்பு உணர்ந்து அவனும் நன்கு படித்து வருகிறான்.அவனது மதிப்பெண்களும் முதல் தரத்திலேயே உள்ளது. இப்படி இரண்டு வருடத்தை முடித்த நிலையில் மூன்றாவது வருடமாக படிப்பை தொடர இருக்கிறான்.(மொத்தம் நான்கு வருடங்கள்)
மூன்றாம் வருட படிப்பிற்கான கட்டணம் ரூபாய் ஐம்பத்து இரண்டாயிரத்து ஐநுாறு ரூபாயாகும்.வழக்கம் போல இந்த வருடத்திற்காக நான் எனது பங்கை முடிந்த அளவு கொடுத்து கணக்கை துவங்கியுள்ளேன். வாசகர்கள் தங்களால் முடிந்ததை வழங்கலாம்.மாணவன் கோகுல கண்ணனின் தாயார் கே.பிருந்தாதேவியின் வங்கி கணக்கிற்கே தங்களால் இயன்ற பணத்தை அனுப்பலாம்.கே.பிருந்தாதேவி,கணக்கு எண்:1278 155 0000 94707,கரூர் வைஸ்யா பாங்க்,அசோக்நகர் கிளை,சென்னை--83.வங்கியின் ஐஎப்எஸ்சி கோட் எண்:கேவிபிஎல்0001278.
இது தொடர்பாக பேசுவதற்கான போன் எண்:9444073157.உங்களால் ஒரு ஏழை மாணவன் தானும் படித்து தன் தம்பிகளையும் படிக்கவைப்பான் என்ற நம்பிக்கை வந்துள்ளது மேலும் ,ஒரு ஏழை,எளிய தாயின் கனவும் உங்களால் நனவாகிக்கொண்டு இருக்கிறது.,நன்றி வாசகர்களே.,நன்றி!
-எல்.முருகராஜ்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE