பயங்கரவாதிகளுடன் நேருக்கு நேர் மோதல்| Dinamalar

பயங்கரவாதிகளுடன் நேருக்கு நேர் மோதல்

Added : மே 05, 2014 | கருத்துகள் (1)
Advertisement
பயங்கரவாதிகளுடன் நேருக்கு நேர் மோதல்


மருத்துவமனைக்கு பின்புறம்:

65. காமா மருத்துவமனையில் நர்சாகப் பணியாற்றுபவர் அஞ்சலி விஜேகுலாதே (பி.டபிள்யூ 101). 208 நவம்பர் 26ம் தேதி அவர் இரவு 8.00 மணிக்கு வந்தார். அவருக்குப் புதிய கட்டிடத்தில் முதல் மாடியில் வேலை. இரவு சுமார் 10.30 மணிக்கு அவர் மருத்துவமனையின் பின்பக்கத்தில் வெடிச்சத்தத்தைக் கேட்டார். பின்னால் உள்ள சாளரத்தின் வழியாக அவர் பார்த்தபோது பின் வாசல் இரும்புக் கதவுகளின் மீது இரண்டு பேர் ஏறி வருவதைப் பார்த்தார். இருவரில் ஒருவன் நெட்டையன், மற்றவன் குள்ளன். தெருவிளக்க வெளிச்சத்தில் அவர்கள் வருவது தெளிவாகத் தெரிந்தது. அவர் பார்த்த ஜன்னலில் இருந்து, அவர்கள் ஊடுரு வந்த இரும்பு கேட் 10-15 அடி தூரத்தில் இருந்தது.66. இருவரும் காமா மருத்துவமனைக்குள் தாவிக் குதித்து இறங்கினார்கள். நர்ஸ் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஜன்னலை நோக்கி நெட்டையன் சுட்டான். அவனுடைய ஒரு புல்லட் மருத்துவமனை ஊழியர் ஹிரா ஜாதவ் மீது, அவரது வலது மணிக்கட்டில் பாய்ந்தது. அந்தப் பெண் ஊழியர் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்க எடுத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனைக்குள் இரண்டு பயங்கரவாதிகள் புகுந்துவிட்ட செய்தியை நர்ஸ் குலாதே, தலைவர் மருத்துவ அதிகாரி டாக்டர் அர்ச்சனாவுக்கு உடன் தெரியப்படுத்தினார். உடனடியாகத் தன்னுடைய வார்டுக்குள் விரைந்து கதவுகளை உள்ளே தாளிட்டார். மேலும் அந்த வார்டில் இருந்த இழு கதவை - கொலாப்சிபிள் கேட் - இழுத்து மூடினார். அந்த வார்டில் பல ஜன்னல்கள் எல்லாத் திசைகளிலும் இருந்ததால், அங்கிருந்த 20 நோயாளிகளையும், பாதுகாப்புக் கருதி, சமையல் அறைக்கு மாற்றினார்.


சமையலறையில் பதுங்கிய நோயாளிகள்:

67. துப்பாக்கி மற்றும் வெடிச் சத்தங்கள் சுமார் இரண்டு மணி நேரம் தொடர்ந்ததாக நர்ஸ் குலாதே நீதி மன்றத்தில் கூறியுள்ளார். அவரும் அங்கிருந்த நோயாளிகளும் இந்த வெடிச் சத்தங்களால் மிகவும் பயந்து விட்டனர். மறுநாள் காலை 4.00 மணிவரை அவரும் நோயாளிகளும் உணவு தயாரிப்பு அறையில் அடைந்து கிடந்தனர். காலையில் மூத்த அதிகாரிகள் வந்து அவர்களை வெளியில் கொண்டு வந்தார்கள்.
68. மருத்துவமனையின் (காமா மருத்துவமனை) பின்வாசல் கதவுகள் மீது ஏறிக்குதித்து உள்ளே நுழைந்த நெட்டைக் கூட்டாளியுடன் வந்த குள்ளனை அவர் அடையாளம் காட்டினார். உயரமானவனைப் புகைப்படத்திலிருந்து (அவனது அடையாள அட்டையில் இருந்தது) அடையாளம் காட்டினார். 2008 டிசம்பர் 28ம் தேதி நடந்த அடையாள அணிவகுப்பிலும் மனுதாரரை (கஸாப்) அவர் அடையாளம் காட்டியதாக அவர் நீதி மன்ற சாட்சியத்தில் தெரிவித்தார். இந்த அணி வகுப்பை அன்று நடத்தியவர் நீதிபதி ஷரத்விசாரே. அவர் கஸாபை அடையாளம் காட்டியபோது அவனும் தானே கஸாப் என்று, அவர் அடையாளம் காட்டியது சரியே என்றும் கூறினான்.


பாதுகாவலர் வயிற்றில் கண்டு பாய்ந்தது:

69. ராங்சாஹேப் சங்க் தேவ் ஃபண்டே முன்னாள் ராணுவ வீரர். இவர் ஆயுதங்கள் ஏதுமின்றிக் காமா மருத்துவமனையில் செக்யூரிடியாகப் பணியாற்றியவர். 2008 நவம்பர் 26ல் அவரது பணி இரவு 10.00 மணிக்கு முடிந்து விட்டது. சிஎஸ்டி ஸ்டேஷனில் நடந்த சம்பவங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, வீடு திரும்ப வேண்டாமென்று முடிவு செய்து, இரவு மருத்துவமனையிலேயே தங்கிவிட முடிவு செய்தார். சிஎஸ்.டி சம்பவங்களைப் பற்றி அறிந்ததும், காமா மருத்துவ மனையில் கொலாப்சிபின் கதவுக்கு அருகிலிருக்கும் முன் வாசலுக்கு வந்ததாக நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளார். அங்கே இன்னொரு செக்யூரிடி பாபான் உகாதேவும் இருந்தார். இங்கிருந்த கொலாப்சியின் கதவுக்கு அருகே ஃபண்டே, மற்றும் உகாதே இருவரும் நின்று கொண்டிருந்தபோது அவர்களை நோக்கி மனுதாரர் (கசாப்) மற்றும் இன்னொருவரும் வருவதைக் கண்டனர். உகாதேவை நோக்கி கஸாப் தனது துப்பாக்கியால் சுட்டான். அது உகாதேயின் வயிற்றில் பாய்ந்ததால் அவர் விழுந்து விட்டார். பயந்துபோன ஃபண்டே, படிகள் வழியாக 5வது தளத்துக்கு ஓடினார். ஒரு வார்டில் நுழைந்து மறைந்து கொண்டார். அவர் மறைந்து கொண்ட இடம் துணிகள் காயப்போடும் பகுதி. ஆனாலும் கஸாப் அவரைத் தொடர்ந்து பிடித்து, அவரது தலையில் துப்பாக்கியை வைத்து, எழுந்திரு என்று கட்டளையிட்டான். பின்னர் குளியலறைக்குச் செல்லுமாறு கூறினான். அங்கே ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் அருகில் ஒரு நெட்டையன் நின்று கொண்டிருப்பதையும் பார்த்தார். அவரை குளியலறைக்குள் செல்லுமாறு கஸாப் தள்ளினான். அதற்குள் ஏற்கனவே மூன்று பேர் அடைபட்டிருந்தனர். பின்னர் வெளியில் இருந்து பாத்ரூம் தாளிடப்பட்டது. சுமார் 2 - 3 மணி நேரத்துக்குப் பிறகு, போலீஸ் வந்து கதவைத் திறந்தனர். நடந்த சமயங்களை ஃபண்டே போலீசாரிடம் கூறினான்.
70. பின்னர் ஃபண்டே மனுதாரர் கஸாபை நீதிமன்றத்திலும் அடையாளம் காட்டினார். அவனது கூட்டளியையும் அவனது அடையாள அட்டைப் புகைப்படத்திலிருந்து அடையாளம் காட்டினார். மேலும் 2008 டிசம்பர் 27ல் நடைபெற்ற அடையாள அணிவகுப்பிலும் கஸாபைக் காட்டியுள்ளார். ஜே.ஜே. மருத்துவமனை சவக் கிடங்கிலிருந்த அவனது கூட்டாளி பிணத்தையும் அடையாளம் காட்டினார்.


பயங்கரவாதிகளுடன் போராட்டம்:

71. பாத்ரூம் அருகே ரத்த வெள்ளத்தில் கிடந்தவர் ஹரீஷ் சந்திர சோனு ஸ்ரீவர்த்தங்கர் (பி.டபிள்யூ 106) ஃபண்டே அங்கு பார்த்தது இவரையே. இரண்டு பயங்கரவாதிகளையும் இவர் எதிர்த்து நின்றது ஆச்சர்யமான விஷயம். ஒவ்வொரு தாக்குதலிலும் இவர் தீவிரமாகப் போராடியுள்ளார். தனது மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் இவர் வீரமாகப் போராடியுள்ளார். சண்டையில் சளைக்கவில்லை. அவரது இரண்டு எதிரிகளையும் விட அவர் இரண்டரை மடங்கு வயதில் மூத்தவர். அவரிடம் ஆயுதம் ஏதும் இல்லை. சண்டை போட்டுப் பழக்கமும் இல்லை. என்றாலும் கடுமையாகப் போராடியுள்ளார். என்றாலும், ஆயுத பாணிகளாக, போர்ப்பயிற்சியும் பெற்ற எதிரிகளை துரதிர்ஷ்ட வசமாக அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவரைக் கத்தியால் குத்தி, சுட்டுவிட்டு, அவர் இறந்து விட்டார் அல்லது விரைவில் இறந்து விடுவார் என்று நினைத்துப் பயங்கரவாதிகள் போய் விட்டனர். ஆனால் ஸ்ரீவர்த்தங்கர் இந்தக் கதையை நீதிமன்றத்தில் கூறவும், கொலையாளியை அடையாளம் காட்டவும் உயிர் பிழைத்து வந்து விட்டார்.


வெறிச்சோடிய மருத்துவமனை:

72. ஸ்ரீவர்த்தங்கர் அப்போது மந்திராலயாவில் (மகாராஷ்டிர மாநிலத் தலைமைச் செயலகம்) மூத்த நிலை குமாஸ்தாவாகப் பணியாற்றி வந்தார். இஸ்லாமிய மகான் அஸ்ரத் செய்யத் ஷா பாபாவின் பக்தர். 2008 நவம்பர் 26ம் தேதி மாலை 6.00 மணிக்கு அலுவலக நேரம் முடிந்த பின்னர் இந்த மகானின் தர்காவில் உள்ள உர்ஸ்-க்கு ஸ்ரீவர்த்தங்கர் சென்றார். இந்த இடம் மெட்ரோ சினிமா அருகில் உள்ளது. இரவு சுமார் 10.30 மணிக்கு வீடு திரும்ப டிரெயினைப் பிடிக்க சி.எஸ்.டி. ஸ்டேஷனுக்கு மெட்ரோ சுரங்கப் பாதை (சப்வே) மற்றும் செயின்ட் சேவியர் கல்லூரி வழியாகச் சென்றார். மகாபாரிகா சாலையில் காமா மருத்துவமனையை நெருங்கும் போது பலர் பீதியில் அங்குமிங்கும் ஓடுவதைக் கண்டார். சி.எஸ்.டி.யில் நடந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டை பற்றி அறிந்தார். இந்தத் துப்பாக்கிச் சூடு அபாயத்தில் இருந்து தப்பிக்க காமா மருத்துவமனைக்குள் தஞ்சம் புகுந்தார். வாசலை நெருங்கியவுடன் உகாதேயின் இறந்த உடலைக் கண்டார். பயந்து விட்டார். மருத்துவமனையில் இந்தப் பயங்கரங்கள் நடந்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில், கொலாப்சிபின் கேட் வழியாக மருத்துவமனையின் பிரதானக் கட்டிடத்தில் பிரவேசித்தார். கட்டிடம் முழுவதும் அமைதி நிலவியது. எல்லாக் கதவுகளும் மூடப்பட்டிருந்தது. நான்காவது தளத்துக்குச் சென்றார். எல்லாத் தளங்கமும் வெறிச்சோடிக் கிடந்தது. வார்டுகள் தாழிடப்பட்டு இருந்தது.


நேருக்கு நேர் மோதல்:

73. அவர் 5வது தளத்தை அடைந்தபோது அவரது விதி அங்கே பயங்கரவாதியின் நேர் எதிரிலேயே கொண்டுவிட்டது. அவருக்கு எதிரில் அவன் நின்று கொண்டிருந்தான். கையில் துப்பாக்கியும் கத்தியும் இருந்தது. தோளில் பை தொங்கியது. உயரம் சுமார் 5 அடி 6 அங்குலம். குட்டையான தலைமுடி. ஒரு ஜாக்கெட் அணிந்திருந்தான். ஸ்ரீவர்தங்கரா கழுத்தில் கத்தியை வைத்தான். அவன் தன்னைக் கொல்லப் போகிறான் என்பதை உணர்ந்து கொண்டார். என்றாலும் போராடுவது என்று முடிவு செய்தார். தனது முழங்காலால் அவன் வயிற்றில் தாக்க முயன்றார். அத்துடன் தனது கையில் இருந்த பையைக் கொண்டும் தாக்க முயன்றார். ஆனால் ஸ்ரீவர்த்தங்கரா பை நழுவி விட்டது. பயங்காரவாதி இரண்டு முறை கத்தியால் குத்தினான். ரத்தம் வழிந்தது. அவருடைய காலரைப் பிடித்துக் கீழே தள்ளினான். மூன்றாவது முறையாக அவரது முதுகில் குத்தி, துப்பாக்கியால் சுட்டான். அதற்குமேல் போராட இயலாது ஸ்ரீவர்தங்கரா நினைவிழந்து விழுந்துவிட்டார். பின்னர் ஜே.ஜே. மருத்துவமனை 3 - 4 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவருக்கு நினைவு திரும்பியது. சுமார் 3 மாதம் உள் நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்றார்.


காணாமல் போன காலணி:

74. பயங்கரவாதி ஒருவனுடன் தான் போராடியதை ஸ்ரீவர்தங்கர் தெளிவாக நினைவு கூர்ந்தார். அவனுடன் போராடியதில் தனது கண்ணாடி விழுந்து விட்டதென்றும் கூறினார். தான் அப்போது ப்ரவுன் நிறச் செருப்பு அணிந்திருந்ததாகக் கூறினார். அவரது கண்ணாடியும் செருப்பும் கிடைக்கவில்லை, தொலைந்து விட்டதையும் ஜே.ஜே. மருத்துவமனையில் நினைவு திரும்பியபோது தெரிந்து கொண்டதாகவும் கூறினார்.
75. காமா மருத்துவமனையில் அவரைத் தாக்கியவனை அவனது அடையாள அட்டைப் புகைப்படத்திலிருந்து அடையாளம் காட்டினார். (ஆர்டிகிள் 61). பிற புகைப்படங்களிலிருந்தும் அடையாளம் காட்டினார். (ஈஎக்ஸ்டி.எண்.410ஏ மற்றும் ஜிஎம்பி. ஈஎக்ஸ்டி.எண். 410பி (பார்ட் ஆப் எக்ஸ்டி எண் 410 - ஒன்றிணைந்தவை - கலக்டிவிடி)
76. அவரது கண்ணாடியை ஆர்டிகிள் 310 - ஸ்ரீவர்தங்கர் அடையாளம் காட்டினார். (காமா மருத்துவமனையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுக் கோர்ட்டில் ஆதாரமாகக் கொள்ளப்பட்டது) ஆனால் காலணிகள் தன்னுடையதல்ல என்று கோர்ட்டில் கூறினார்.
77. சந்திரகாந்த் த்யான் தேவ் டிகே (பி.டபிள்யூ 109) காமா மருத்துவமனையில் லிப்ட் ஆபரேட்டராகப் பணியாற்றியவர். 26.11.2008 அன்று அவர் இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை 7.00 மணி வரை ஜெனரேடர் ஆபரேடர் பணியில் இருந்தார். ஜெனரேடர் அறை கட்டிடத்தின் கூரைமேல் - டெரஸ் - இருந்தது. சுமார் 10.00 மணியளவில் அவர் டெரஸ் பகுதியில் இருந்தபோது, தரை தளத்தில் குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டது. துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டவுடன், டிகே கூண்டுக்குள் (என்குளோசர்) நுழைந்து கொண்டார். அதில்தான் சோலார் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கூண்டின் கொலாப்சிபின் கதவுகளையும் மூடிவிட்டர். 11.00 (இரவு) மணி வரை கூண்டுக்குள் இருந்தார். இரண்டு பயங்கரவாதிகளும் டெரசுக்கு வந்தனர். அங்கிருந்த 200 வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில் டிகே அவரகளைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. வந்தவர்களில் ஒருவர் உயரமானவன். ஒருவன் குள்ளமானவன். டிகேயை நோக்கித் துப்பாக்கியை நீட்டிய குள்ளன், அவரை வெளியே வருமாறும், இல்லாவிட்டால், சுக்கு நூறாகப் பிளந்து விடப்போவதாகவும் மிரட்டினான். டிகே கேட்டைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். உயரமானவன் கையிலும் துப்பாக்கி இருந்தது. தன்னை நோக்கித் துப்பாக்கியை நீட்டிய பயங்கரவாதியை (கஸாப்) டிகே அடையாளம் காட்டினார்.வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mmms - kuwait,குவைத்
07-மே-201400:11:45 IST Report Abuse
mmms அப்போ விடுதலைபுலி,உல்ல்பா, மாவோயிஸ்ட் , போடோ ,நக்சல் இந்த இயக்கம் எந்த மதம். இவங்க நாட்டுக்கு என்ன நல்லது பண்ணுணாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X