சிறப்பு பகுதிகள்

நாட்டை வளமாக்கும் நதி நீர் இணைப்பு

அனைத்து மாநிலங்களும் வளம் பெற தேசிய அதி திறன் நீர்வழிச்சாலை வேண்டும்

Updated : மே 07, 2014 | Added : மே 06, 2014 | கருத்துகள் (28)
Share
Advertisement
ஐந்தாண்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக, பல்வேறு பாதைகள் பின்பற்றப்பட்டன. அவற்றில் வேளாண்மைக்கும், நீர் மேலாண்மைக்கும் இரண்டு அடிப்படையான பாதைகள் பின்பற்றப்பட்டன. அவற்றில், முதலாவது பாதையில், சுதந்திர இந்தியாவின் முதல் 30 ஆண்டுகளில் நாம் பயணித்தோம். அதன்படி மிகப் பெரிய அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள் ஆகியவை
அனைத்து மாநிலங்களும் வளம் பெற  தேசிய அதி திறன் நீர்வழிச்சாலை வேண்டும்

ஐந்தாண்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக, பல்வேறு பாதைகள் பின்பற்றப்பட்டன. அவற்றில் வேளாண்மைக்கும், நீர் மேலாண்மைக்கும் இரண்டு அடிப்படையான பாதைகள் பின்பற்றப்பட்டன.

அவற்றில், முதலாவது பாதையில், சுதந்திர இந்தியாவின் முதல் 30 ஆண்டுகளில் நாம் பயணித்தோம். அதன்படி மிகப் பெரிய அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள் ஆகியவை உருவாக்கப்பட்டன. 84 பெரிய அணைகளும், நீர்த்தேக்கங்களும் கட்டப்பட்டன. நீர் மேலாண்மையும், நீர்மின்சக்தி வசதிகளும் உருவாக்கப்பட்டன. ஆனால், அவற்றின் மூலம், ஆண்டுக்கு, 45 ஆயிரம் கோடி கன அடி தண்ணீரையே தேக்க முடிந்தது.

இரண்டாவது பாதையானது, டாக்டர் கே.வி.எல். ராவ், கேப்டன் டி.ஜே.தஸ்தூர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட, முறையான நதிகளை இணைப்பதும், கரை வாய்க்கால்களை (Contour Canal) அமைப்பதும் ஆகும். இரண்டாம் பாதை குறித்து, தேசிய அளவிலான விவாதங்கள், பல எழுந்தன. பல ஆய்வுகள் மேற்கொண்ட பின், இம்முறையில், தொழில்நுட்ப, சுற்றுச்சூழல், நிதி, அரசியல் தலைமை ஆகியவை தொடர்பான சவால்களை, எதிர்கொள்ள நேரிடும் என்பது தெரியவந்தது. தேசத்துக்கு இது முக்கிமானது, ஜீவாதாரமானது என்றாலும், மேற்கண்ட காரணங்களால், அரசின் முயற்சிகள் தடைபட்டன; இந்தப் பாதையில் நாம் முன்னேற முடியவில்லை.


வீணாகும் நீர் :


இந்தியாவின் நீர் மேலாண்மை பிரச்னையை, தற்போதுள்ள நீர் கொள்ளளவு மற்றும் நீர் சமநிலை ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்ந்தோம்.இந்தியா, தன் எல்லா இயற்கை ஆதாரங்களின் வழியிலுமாக, ஓராண்டுக்கு மொத்தமாக, 12 லட்சம் கோடி கன அடி நீரை பெறுகிறது. இதில், 2.10 லட்சம் கோடி கன அடி நீர், ஆவியாகி விடுகிறது. மேலும், 2.10 லட்சம் கோடி கன அடி நீர், நிலவழியில் செல்லும்போது வீணாகிறது. ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய அளவில், 4.5 லட்சம் கோடி கன அடி நீர், வெள்ளம் காரணமாக, கடலில் சென்று கலந்து விடுகிறது.இவ்வாறாக, நமக்கு மீதம் கிடைப்பது, 3.3 லட்சம் கோடி கன அடி நீரே. இதிலும், 1.29 லட்சம் கோடி கன அடி நீர், புவியடி நீர் மறுவூட்டத்துக்கு போய்விட, நிலத்தின் மேற்பரப்பில் தற்போது பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும் நீரின் அளவு, வெறும், 1.11 லட்சம் கோடி கன அடி. ஆக, இவை போக, மீதம் பயன்படுத்திக் கொள்ள சாத்தியமான அளவுக்கு, மேலும், 90 ஆயிரம் கோடி கன அடி நீர் இருக்கிறது.

இந்தியா முழுவதும் நதி நீர் இணைப்பு திட்டம் நிறைவேறினாலும், இந்தியா முழுமையிலும் உள்ள, 84 பெரிய அணைகளில், இரண்டு முறை வெள்ள நீரை தேக்கினாலும், 90 ஆயிரம் கோடி கன அடி தண்ணீருக்கு மேல் சேமிக்க முடியாது. இந்தியாவில், மழைப்பொழிவில் பாதியளவு, இரண்டு வாரங்களுக்கே நீடிக்கிறது. கிட்டத்தட்ட, 90 சதவீத நதி வெள்ளம் பெருக்கெடுத்தோடும் காலம், 3 முதல் 4 மாத காலங்களுக்கே நீடிக்கிறது. அதுவும், வெவ்வேறு கால கட்டங்களில் வரும் வெள்ளத்தால், இது சாத்தியப்படாமலேயே போனாலும் போகலாம். அப்படி என்றால், கடலில் கலக்கும், 4.5 லட்சம் கோடி கன அடிநீரை, எப்படி பயன்படுத்துவது? அதற்கு, 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் சாத்தியப்படக் கூடிய திட்டம் என்ன?

இந்தியாவில், ஒரு புதிய சிந்தனை எழுந்திருக்கிறது. அந்த மூன்றாவது தீர்வை, 'தேசிய அதி-திறன் நீர்வழிச்சாலை' என்று கூறலாம். இது தொடர்பான ஆராய்ச்சிகள் அனைத்தையும் மேற்கொண்ட பின், 'இந்தியாவுக்கான சரியான தீர்வு, தேசிய அதி-திறன் நீர்வழிச் சாலை திட்ட இயக்கம்' ஒன்றை துவங்குவதே' என, நாங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்.இந்த அமைப்பு, நதிகள், அணைகள், நீர்த்தேக்கங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இணைத்து, வெள்ளம் வரும்போது, நீரை அதில் ஏற்றி, பாய வைக்கும், வறட்சி காலங்களில், தேவையான மாநிலங்களுக்கு, அதிலிருந்து கொடுக்கும். நாட்டின் எந்த பகுதியில் நீர் பற்றாக்குறை இருந்தாலும், அவ்விடத்துக்கு இது செல்லும். இந்தியாவுக்கான அதி-திறன் நீர்வழிகள் குறித்த இந்த ஆய்வுக் கட்டுரை, இந்தியாவின் நீர் மேலாண்மை விவகாரத்தில், பல தலைமுறைகளுக்கு, எல்லா சூழல்களுக்கும், சாத்தியமான தீர்வு ஒன்றை முன்வைக்கிறது.

இந்தியாவுக்கான தேசிய அதி -திறன் நீர்வழி திட்டத்தின் தன்மைகள்:
ஏ.சி.காமராஜ் தலைமையிலான ஒரு குழு ஆராய்ந்து, முன்மொழிந்த திட்டமே, தேசிய அதி- திறன் நீர்வழி திட்டம். சரிவற்ற, நேரான (zero&slope)அமைப்புடன், ஒரு நீர்வழிச்சாலை முன்மாதிரி திட்டத்தை இந்த குழு, ஏற்கனவே உருவாக்கியுள்ளது.

தேசிய அதி- திறன் நீர்வழிச்சாலை பின்வரும் தன்மைகளை உடையது:
*கடல் மட்டத்திலிருந்து, 750 அடி உயரத்தில், ஒரே மட்டத்தில், சரிவற்ற நிலையில் நாடெங்கும், இந்த வழிச் சாலை கட்டப்படும்.
*இந்த நீர்வழிச் சாலை, நாடெங்கும் உள்ள ஆறுகள், அணைகள், நீர்ப்பிடிப்புப் பகுதிகள் ஆகியவற்றை, ஒற்றைத் தளத்தில், கிடை மட்டத்தில் இணைக்கிறது. இதற்குள் பாயும் நீர், அழுத்த வேறுபாடுகளின் காரணமாகவே பரவுகிறது.
*தேசிய அளவிலான இந்த நீர்வழிச் சாலை, போதுமான ஆழ, அகலங்களுடன் கட்டப்பட்டு, எந்த சமயத்திலும், 90 ஆயிரம் கோடி முதல் 1.80 லட்சம் கோடி கன அடி வரையிலான நீரை தேக்கி வைக்கும்படி, உறுதி செய்யப்படும்.
*நதிகளின் தலைப்பகுதிகளில் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஏற்படும் வெள்ளம், அணையில் நிரம்பும் வெள்ளம் ஆகியவை, இந்த தேசிய நீர்த் தேக்க அமைப்புக்கு, நீரைக் கொண்டு வரும்.
*இந்த நீர்வழிச்சாலை, 'தேவையான இடத்திற்கு, தேவையான அளவு' என்ற இணைப்பு அமைப்பை ஒத்திருப்பதால், பற்றாக்குறை இடத்திற்கு, நீர் கொண்டு செல்லப்படுவதும், வெள்ள காலத்தில், நீர் ஏற்றப்படுவதும் சாத்தியமே.
*வளைவுகள், கொடுவிளிம்புகள் அற்றவையாகவும், குறைந்த தளத் தடிமன் உடையவையாகவும், நீர்வழிச்சாலை இருக்கும். 24 மணி நேரமும், இதில் நீர்ப் போக்குவரத்து சாத்தியம்.
*இதில் சரக்கேற்றம், சரக்கிறக்கம் ஆகியவற்றை திறம்பட செய்யும் வசதிகளை வைக்க முடியும். நவீன நீர் போக்குவரத்து முறைகளையும், இங்கே பொருத்த முடியும்.இதன் மூலம் நீர்வழிப் போக்குவரத்து, நீர்ப் பாசனம், வேளாண் உற்பத்தித் திறன், நீர் மின்சக்தி, பல்துறை வேலை வாய்ப்புகள் பெருகும்.ரயில் போக்குவரத்தை விட, இரு மடங்கு செயல்திறனும்; சாலைப் போக்குவரத்தைவிட எட்டு மடங்கு செயல் திறனுமுள்ள நீர்வழி போக்குவரத்து, ஆற்றல் வளங்களை பாதுகாப்பதில், மிகப் பெரிய அளவு அரசுக்கு உதவும். சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு மீளும் செயல்பாடுகளுக்கும் வழிவகுக்கும்.
எனவே இதை, அரசு- - தனியார் கூட்டு முயற்சியாக மேற்கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாதது. இதில், மத்திய - -மாநில அரசுகள், கூட்டாக இறங்க வேண்டும்.

நதிநீர் இணைப்புத் திட்டத்தோடு ஒப்பிடுகையில், இந்தத் திட்டத்தில் நில ஆர்ஜிதம், மறுகுடியேற்ற சிக்கல் போன்ற பிரச்னைகள் உருவாவதற்கான வாய்ப்புகள், மிக மிக குறைவே. ஏனென்றால், இந்த நீர் வழிச்சாலை பெரும்பாலும் உயரமான மலைப்பகுதியில் அமைவதால், ஒரு ரோடு போடும் அளவு தான் நிலம் தேவைப்படும். எனவே, மக்கள் மறு குடியேற்றம் போன்ற பிரச்னைகள், பெரும்பாலும் இருக்காது. அகற்றப்படும் மரங்களை விட, இரண்டு மடங்கு மரங்களை உருவாக்கவும் வாய்ப்பு உருவாகும்.

இந்தியாவில் நீர் பிரச்னை, தொடர்ந்து மோசமாகி வருகிறது. 1951ல் இந்தியாவின் தனிநபர் நீர் கிடைப்பு அளவு, 15,531 கன அடியாக இருந்தது. இதுவே, 2011ல், 4,635 கன அடியாக, அதலபாதாளத்துக்கு சரிந்தது. இது, 2025ல், 4,020 கன அடியாகவும், 2050ல், 2,850 கன அடியாகவும் குறையும் என, புள்ளி விவரங்கள் கூறுகின்றன.ஆனால், மழைக் காலத்துக்குப் பிந்தைய நீர்த் தேவைக்காக, நீரை சேமிப்பது தொடர்பாக, இந்தியா இதுவரை, எதையுமே பெரிதாக செய்து விடவில்லை. அமெரிக்காவில் தனிநபர் ஒருவருக்கென கட்டி வைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க வசதியின் அளவு, 15 ஆயிரம் கன அடி. நடுத்தர வருவாய் நாடுகளான சீனா, மெக்சிகோ போன்ற நாடுகளில், 3,000 கன அடி.இப்படிப்பட்ட சூழல்களில், இந்தியாவின் நீர் தேக்க கொள்ளளவு திறனோ, தனி நபருக்கு, வெறும், 600 கன அடியாக உள்ளது.

தனிநபர் தேவைக்கான கொள்ளளவை, 2025ல், 7,500 கன அடியாகவும், 2050ல், 15 ஆயிரம் கன அடியாகவும் உயர்த்துவது எப்படி என்பது, சவாலாக இருக்கிறது.தமிழகத்தில், 17 பெரிய ஆற்று பாசனங்களும், 61 பெரிய மற்றும் சிறிய நீர் பாசன அணைகளும், 41,948 கண்மாய்கள், ஏரிகள் மற்றும் குளங்களும் உள்ளன. ஆண்டுதோறும், 13,962 கோடி கன அடி அளவு தண்ணீர் நிரம்பக்கூடிய வாய்ப்பு இருந்தாலும், அதில் பாதி கூட நிரம்புவதில்லை.

பெரும்பாலான மழையினால் கிடைக்கும் தண்ணீர் இருப்பை, முழுவதுமாக நாம் விவசாய தேவைக்கு ஏற்ப உபயோகப்படுத்தும் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு விட்டது. கிட்டத்தட்ட, 24 லட்சம் ஹெக்டேர் பாசன நிலம் பெரிய மற்றும் சிறிய நீர் அணைகளால் பாசன வசதி பெறுகிறது. 90 சதவீதம் நீர் விவசாயத்திற்கென்று உபயோகிக்கப்படுகிறது.ஆண்டுதோறும் உபயோகப்படக் கூடிய நீர், 67 ஆயிரம் கோடி கன அடி ஆக இருக்கிறது. அதில், 60 சதவீத நிலத்தடி நீர், மறு சுழற்சிக்கு சென்று விடுகிறது. 40 சதவீதம் நீர் மட்டும் நமது உபயோகத்திற்கு கிடைக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டு காலங்களில், பாதுகாப்பான நிலத்தடி நீர் இருப்பு என்று சொல்லக்கூடிய பகுதிகளில், 35.6 சதவீதத்தில் இருந்து, 25.2 சதவீதமாக, நீர் குறைந்து விட்டது. அதே போல் பாதியளவு நிலத்தடி நீர் இருப்பு பகுதிகளில், மொத்தத்தில், 35.8 சதவீத நிலங்களில், அளவுக்கு அதிகமாக, நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விட்டது. 2 சதவீத நிலம், உப்புத் தன்மையானதாக மாறிவிட்டது.

ஏனென்றால் கடல் நீர் உள்ளே புகுந்ததாலும், ஆறு மற்றும் நிலத்தடி நீர் மாசு பட்டதாலும், ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படாததாலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததாலும். மழைநீர் தண்ணீர் சேமிப்பு சரிவர செயல் படாததாலும், வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுகளால் மூடப்பட்டதாலும், இந்த நிலைமை ஏற்பட்டு விட்டது.

துறைவாரியாக தண்ணீர் தேவையும், பற்றாக்குறையும்
விவசாயத் துறை தான், தமிழகத்தின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் மிக முக்கிய துறையாகும். உணவு தேவையை சமாளிப்பதோடு மட்டுமல்லாமல், பெரும்பாலான மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் துறையாக விளங்குகிறது. விதைக்கப்படும் மொத்தப் பரப்பளவில், 46 சதவீதத்திற்குத்தான் நீர்பாசனம் உள்ளது. மீதம் உள்ள பரப்பளவு மானாவாரிதான். தண்ணீர் பற்றாக்குறையாலும், விவசாயத்திற்கு ஏற்ற விலையில்லாததாலும், விவசாய பொருட்களுக்கு ஏற்ற விலை கிடைக்காததாலும், விவசாயக் கூலி கட்டுபடியாகாததாலும், விவசாய உற்பத்திக்கு ஏற்ற இடங்கள், தொடர்ந்து நகரமயமாதலுக்கும், வீட்டு மனைகளுக்காகவும், தொழிற்சாலைகளுக்காகவும் பலியாகிவிட்டது.

உணவுப்பாதுகாப்புக்கு முக்கிய காரணியாக விளங்குவது தண்ணீர் இருப்புதான். தண்ணீர் ஒரு அரிதான பொருளாகிவிட்டது. மற்ற துறைகளான தொழில் துறை, நீர் மின்சார உற்பத்தி, வீட்டு தேவைகள், விலங்குகளுக்கும் மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்திற்கும் தண்ணீர் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தமிழ் நாடு அரசின் தண்ணீர் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின்படி, பல்வேறு துறைகளுக்கு தேவையான தண்ணீர் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.மேற்கொண்ட துறைகளில் கூடுதல் தேவையாக (2012ம் ஆண்டைய கணக்கு) - 27 டி.எம்.சி / வருடம். ஆக மொத்தம் 1,921 டி.எம்.சி / வருடம் தேவைப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் மொத்த நிலத்தடி நீர் மற்றும் தரையில் இருக்கும் தண்ணீர் அளவு 1,643 டி.எம்.சி / வருடம். 2012 ம் ஆண்டு தேவையான கிட்டத்தட்ட 1,921 டி.எம்.சி என்பது, 2020ல், 2072 டி.எம்.சி.,யாக உயரும். அதாவது வருடா வருடம் 53 டி.எம்.சி பற்றாக்குறை ஏற்பட்டால், 2020ல், 429 டி.எம்.சி பற்றாக்குறை ஏற்படும்.
இதற்கு என்ன செய்யலாம்?

டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
வெ.பொன்ராஜ்


(தொடரும்)

Advertisement


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malayam Annamalai - Tirutani,இந்தியா
06-மே-201422:40:14 IST Report Abuse
Malayam Annamalai மிக அருமையான கட்டுரை நம்ம ஊர் அரசியல் வாதிகளுக்கு இது தெரியாதா ?இலவசங்களுக்கும் விளம்பரங்களுக்கும் பேனர்களுக்கும் அலங்கார வளைவுகளுக்கும் சுவற்றில் எழுதுவதற்கும் செலவு செய்யும் பணத்தை உபயோகித்தும் 100 நாள் வேலை திட்டத்தை இதில் இணைத்தால் மக்களுக்கு வேலையும் கிடைக்கும் வாழ்வாதாரம் உறுதியாகும் .விவாசாயுற்பத்தியும் பெருகும்.நாம ஊர் அரசியல் வாதிகள் .செய்வார்களா? செய்யத்தான் விடுவார்களா ? நாடுவளம் பெற்றால் ம க்கள்அறிவாளிகளாகிவிடுவார்கல் பின் இவர்களால் ஏமாற்ற முடியாதல்லவா?
Rate this:
SUDESH KUMAR - Tiruchirappalli,இந்தியா
02-ஜூன்-201412:50:39 IST Report Abuse
SUDESH KUMAR100 நாள் வேலை திட்டத்தில் இதனை சேர்த்தல் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்தது போல irukkum...
Rate this:
Cancel
manobalan - madurai,இந்தியா
06-மே-201421:05:02 IST Report Abuse
manobalan அறிஞர்கள் மனதால் நினைத்ததை வாயால் சொல்லி, அதை கையால் எழுதி, எழுதியதை செயல்படுத்த ஒட்டு வங்கி அரசியல் கலப்பில்லாத, பரிசுத்தமான தொலைநோக்கு திட்டத்தோடு நம் வருங்கால சந்ததியர்கள் நலமுடன் வாழ துணிந்து இத்திட்டத்தை செயல்படுவதற்கு தேசபற்று மிகுந்த அரசியல்வாதிகள் முன் வந்தால் நாடும் வீடும் நலம் பெறும். தங்களுடைய வாரீசுகளுக்கு பதவியும், சொத்தும் சுகமும் பல தலைமுறைகளுக்கு சேர்த்து வைப்பதில் அக்கறை காட்டும் சந்தர்ப்பவாத அரசியல்வியாதிகள், அதில் 100ல் ஒரு பங்கு கூட பொதுவான மக்கள் நலன் சார்ந்த தொலை நோக்கு திட்டங்ககளை செயல்படுத்த முன்வருவதில்லை. அதனால் வரக்கூடிய நன்மைகள் தங்கள் வாரீசுகளையும் சேரும் என்பது தெரியாமல் போவது விந்தையே. வாழ்க பாரதம் வளர்க தமிழகம்
Rate this:
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
05-நவ-201513:20:21 IST Report Abuse
Mohan Sundarrajaraoநதிகளை இணைப்பது சாதாரண விஷயம் கிடையாது. ஆனால், "மூன்றாவது உலக போர் தண்ணீரால்தான் வரும் " என்ற உண்மையை புரிந்துகொண்டால், இந்த மாமலையும் ஒரு கடுகாகும். அப்பழுக்கற்ற, சுயநலமில்லாத, அரசியல்வாதிகளால் தான் இது முடியும். இதற்கு வேண்டிய டெக்னாலஜி, பொறியாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். சிந்தையில் தெளிவும் உறுதியும் பிறந்து விட்டால், பணத்திற்கு கவலைப்பட வேண்டாம். உலக நிதியகங்களிடமிருந்து கடன் பெற்றுக்கொள்ளலாம். Domestic savings, donations, etc கிடைக்கும். வெவ்வேறு மாநிலங்களும் அவற்றின் அரசியல்வாதிகளும் ஒத்துழைப்பது மட்டும் தான் வேண்டும். அதுதான் மில்லியன் டாலர் கேள்வி. இப்போது ஆரம்பித்தால், இன்னும் 20 வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் செய்துதான் ஆகவேண்டும். வேறு வழி இல்லை. இன்னும் தாமதம் செய்துகொண்டே போனால் இன்னும் செலவு அதிகமாகி விடும்,. The only requirement is the will power of politicians. A political leader and a statesman like Lee Quan Yew is badly required in India today. நம்புவோம், நம்பிக்கைதானே வாழ்க்கை....
Rate this:
Cancel
A Muthu - Chennai ,இந்தியா
06-மே-201421:04:21 IST Report Abuse
A Muthu எதுவும் சாத்தியம் Sir .சிறந்த திட்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X