சிறப்பு பகுதிகள்

நாட்டை வளமாக்கும் நதி நீர் இணைப்பு

நீர்வழி திட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்போம்!

Updated : மே 08, 2014 | Added : மே 08, 2014 | கருத்துகள் (20)
Share
Advertisement
கடந்த இரு நாட்களாக, இந்தியாவின் நீர் பயன்பாடு மற்றும் தமிழக ஆறுகளை எவ்வாறு இணைக்கலாம் என்பது குறித்து பார்த்தோம்.இனி, தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களையும் உள்ளடக்கக் கூடிய தென்னக இணைப்பை, எப்படி உருவாக்குவது எனப் பார்ப்போம்.இந்த மாநிலங்கள் அனைத்தும், கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, தாமிரபரணி, முல்லைப் பெரியாறு, வைகை, பாலாறு ஆகிய ஆறுகளையே,
நீர்வழி திட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்போம்!

கடந்த இரு நாட்களாக, இந்தியாவின் நீர் பயன்பாடு மற்றும் தமிழக ஆறுகளை எவ்வாறு இணைக்கலாம் என்பது குறித்து பார்த்தோம்.இனி, தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களையும் உள்ளடக்கக் கூடிய தென்னக இணைப்பை, எப்படி உருவாக்குவது எனப் பார்ப்போம்.

இந்த மாநிலங்கள் அனைத்தும், கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, தாமிரபரணி, முல்லைப் பெரியாறு, வைகை, பாலாறு ஆகிய ஆறுகளையே, நீர்பாசனத்துக்கு பெரிதும் சார்ந்திருக்கின்றன. வெள்ளம் ஏற்படும்போது, இம்மாநிலங்களில், நீருக்கு பிரச்னை இருப்பதில்லை. 30, ஜனவரி 2013 அன்றைய மத்திய நீர் ஆணையத்தின் தரவுகளின்படி, தென்னிந்திய ஆறுகளின் மொத்த நீர் கொள்திறன், 15 ஆயிரத்து 300 கோடி கன அடி தான். அவற்றில், தற்போதுள்ள நீர் சேகரிப்பு இடங்கள் அனைத்தும் சேர்ந்து, 4,800 கோடி கன அடி நீரை மட்டுமே, தேக்கக் கூடிய வசதிகளைக் கொண்டிருக்கின்றன.


மாநிலங்களின் நீர்த்தேக்க அளவு


ஆனால், வெள்ளப் பெருக்கின்போது, கோதாவரி, கிருஷ்ணா நதிகளில் மட்டும், 2,000 - -3,000 டி.எம்.சி., நீர் ஆந்திராவின் அணைகள், நீர்த் தேக்கங்கள், ஏரிகள் ஆகியவற்றை நிரப்பிய பிறகும், கடலில் சென்று கலக்கிறது. அதே நேரத்தில், தெலுங்கானாவில் பல பகுதிகளில், நீர்ப்பற்றாக்குறை நிலவுகிறது.வறட்சி பருவங்களில், தென் மாநிலங்கள் அனைத்துமே வறண்டு விடுகின்றன. இந்தப் பிரச்னை, மாநிலங்களில் அரசியல் மயமாகிறது. அரசுகளும், கட்சிகளும், கடுமையான நிலைப்பாடுகளை எடுத்து, மாநிலங்களுக்கிடையில் பதற்றத்தை உருவாக்குகின்றன. முன் முடிவுடன் இந்தப் பிரச்னையை அணுகினால், பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பம் அமையாமல் போய் விடும்.நீதிமன்ற வழக்குகள், தீர்ப்பாய முடிவுகள், கோரல்கள், எதிர்கோரல்கள் என, இந்தப் பிரச்னைகள் நீள்வதால், நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் போகும் நிலை ஏற்படுகிறது. நீதிமன்ற உத்தரவை நிராகரிக்கும் முடிவுகள், சட்டமன்ற தீர்மானங்கள் மூலம் எடுக்கப்படுகின்றன.மோசமான நீர் மேலாண்மை காரணமாக ஏற்படும் இந்தநிலை, குழப்பத்துக்கு காரணமாகி, யாருக்கும் எந்த மாநிலத்துக்கும், நன்மை உருவாக்கக் கூடிய வாய்ப்பையும் கெடுக்கிறது. இறுதியாக, எல்லா மாநிலங்களிலும் உள்ள விவசாயிகளும், மக்களுமே பாதிக்கப்படுகின்றனர்.இந்த நிலையை தவிர்க்க, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக மாநிலங்களில் உருவாகும் வெள்ளப் பெருக்கை, அதி -திறன் நீர்வழிகளில் செலுத்தி, சேகரித்து, வறட்சி ஏற்படும் போதெல்லாம் பகிர்ந்து கொள்ளலாம். ஆந்திர பிரதேச அதி -திறன் நீர்வழிகளும், தமிழக அதி -திறன் நீர்வழிகளும் ஒரே மட்டத்தில் இணையக் கூடியவையாகவும், தமிழக - -ஆந்திர எல்லையில், வேலுார் அருகே இணையக் கூடியதாகவும் இருக்கின்றன. கட்டுக்கடங்காத வெள்ளப் பெருக்கையும், இந்த இணைப்பு தவிர்க்கும். வெள்ள காலத்தில், 3,000 முதல் 4,000 டி.எம்.சி., நீரை, தென்னக நீர்வழி இணைப்பு பெற முடியும். இது, எல்லா பருவ காலங்களிலும், எல்லா மாநிலங்களுக்குமான தேவையைப் பூர்த்தி செய்யும்.


ஆந்திரா


ஆந்திராவில், வெள்ளப் பெருக்கு காலத்தில், 2,500 டி.எம்.சி., நீரையும், வழக்கமான மழைக் காலத்தில், 750 டி.எம்.சி., நீரையும், கோதாவரி ஆறு கடலுக்கு அனுப்புகிறது. இந்த நீரைச் சேமிக்க, நீர்ப் பாசன வாய்க்கால்களும் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்த்தேக்க நிலைகளையும் உருவாக்க வேண்டும். இதன் மூலம், கோதாவரி படுகையில், வேளாண் நிலங்களின் பரப்பு, 30 சதவீதம் அதிகரிக்கும்.மின் இணைப்பு போல, நீர் வழிகளிலும் இரண்டு திசைகளிலும், நீர் செல்லும். கோதாவரியிலிருந்து காவிரிக்கும், காவிரியிலிருந்து கோதாவரிக்கும், நீர் பரிமாற்றம் சாத்தியமாகும். அதே சமயத்தில், தற்போதுள்ள எந்த நீர்த் திட்டத்தையும் இது பாதிக்காது. எந்த இடத்திலும், 'பம்ப்பிங்' மூலம் நீரை ஏற்றுவது கிடையாது. இதை, பொதுத்துறை- - தனியார் துறை கூட்டு முயற்சியாக செய்தால், அரசு செலவிடத் தேவையில்லை. 5 முதல் 7 ஆண்டுகளில், இந்தத் திட்டத்தை முடித்து விடலாம். இந்தத் திட்டத்தால், 10 கோடி பேருக்கு, தடையற்ற நீர் வழங்கல் சாத்தியமாகும். இது, ஆந்திராவில், 3.1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கும். அந்த மாநிலத்தில், 1.75 கோடி ஏக்கர் நிலம், கூடுதலாக நீர்ப்பாசன வசதி பெறும். இதன் மூலம் ஆண்டுக்கு, 5,000 மெகாவாட் மின்சாரம், சுற்றுச்சூழல் மாசுபாடு இன்றி கிடைப்பதுடன், நிலத்தடி நீர் மேலேற்றம் காரணமாக, 2,850 மெகாவாட் மின்சாரம் மிச்சமும் ஆகும்.எனவே, மொத்தமாக, 7,290 மெகாவாட் நீர் மின்சக்தி நமக்கு கிடைக்கிறது. கூடுதல் மீன் வளர்ப்பு, சுற்றுலா, நீர் விளையாட்டு வசதிகளும் கிடைக்கின்றன.ஆந்திராவையும் தமிழகத்தையும் இணைத்து பார்க்கையில், 2,000 கி.மீ., நீள, நீர் வழி அமைகிறது. எனவே, இந்த நீர் வழி, இரு மாநிலங்களுக்கும், சம அளவில் ஆதாயமாகும். குடிநீர், மின்சாரம், நீர்ப்பாசனம், போக்குவரத்து என, எல்லாவற்றுக்கும், இரு மாநிலங்களுக்கும், இந்தத் திட்டம் பயனளிக்கும்.


கேரளா, கர்நாடகா


இந்த முறையிலேயே, கேரளாவும், கர்நாடகமும், அதி -திறன் நீர்வழிகளை உருவாக்கலாம். புதுவை உட்பட, தென்னகம் முழுவதிலும், 4,000 டி.எம்.சி., நீரை, இவ்விதமாக பகிர்ந்து கொள்ளலாம். எல்லா மாநிலங்களிலும், நீர்த் தேக்கங்களில் நீர் நிரம்பியிருக்க, இரண்டு போகம் விவசாயம் செய்ய முடியும்.


எல்லா மாநிலங்களுக்கும் வெற்றியே


பேராசிரியர் ஏ.சி.காமராஜும் அவரது அணியினரும், இத்திட்டம் பற்றி, எல்லா மாநில அரசுகளுக்கும் எடுத்துரைத்திருக்கின்றனர். தங்களுடைய நலன் பாதிக்கப்படாமல், அதே சமயம் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கிறது என்பதாலும், தங்களுடைய இருப்பு நீரை இழக்காமல், கடலில் வீணாக கலக்கும் வெள்ள நீரையே கூடுதலாக பெறப் போகின்றனர் என்பதாலும், இம்மாநிலங்கள், இதில் ஆர்வம் காட்டின.


சாத்தியமுள்ள தீர்வு: தேசிய அதிதிறன் நீர்வழிகள் கிரிடு


இந்த நீர் இணைப்பு, 15 ஆயிரம் கி.மீ., நீள, தேசிய நீர்த் தேக்க அமைப்பாக மாறும். 60 கோடி பேருக்கு, குடிநீரை வழங்கும்; 15 கோடி ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசனத்தை வழங்கும்; 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். நிலத்தடி நீர் மட்டத்தை, 'ரீசார்ஜ்' செய்வதால், 4,000 மெகாவாட் மின்சாரத்தை மிச்சப்படுத்தவும் முடியும்.சாலைப் போக்குவரத்துடன் ஒப்பிடுகையில், 10 முதல் 20 சதவீத அளவே செலவாகும், நீர்வழிப் போக்குவரத்து, இதன் மூலம் சாத்தியமாகி, அனைத்து மாநில அளவில், ஓராண்டுக்கு, 1.5 லட்சம் கோடி எண்ணெய் உற்பத்தி குறையும்.இத்திட்டத்தை நிறைவேற்ற, ஒவ்வொரு மாநிலமும், 6 - 7 ஆண்டுகளுக்கு, ஒட்டுமொத்தமாக, 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.ஏற்கனவே, சொன்னது போல், BOOT முறையில் இதை அமல்படுத்தினால், பத்தாண்டுகளுக்குள் இதை முடித்து விடலாம். மத்தியில், தீர்க்க தரிசனம் மிக்க தலைமை இருந்ததால், தங்க நாற்கரம் என்ற மிகப் பெரிய, நல்ல திட்டம் எப்படி சாத்தியமாயிற்றோ, அந்த வகையில், இதுவும் சாத்தியமாகும். அதற்கான லட்சிய நோக்கம், நமக்கு வேண்டும்.


அதிதிறன் நீர்வழி திட்டம் பொருளாதாரத்தைப் பெருக்கும்


கடந்த, 2010, செப்டம்பரில், நாங்கள் கனடா நாட்டிற்கு சென்றிருந்தபோது, இரு நாடுகளின் பிரதான செய்திறன்களின் அடிப்படையில், குறைந்த பட்சம், இரண்டு மாநிலங்களிலாவது (தமிழகம், பீகார்) பொதுத் துறை- - தனியார் துறை நிதி முதலீட்டுடன், இத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து விவாதித்தோம். கனடா அரசும், அதன் தொழிற்துறையும், தம் ஆர்வத்தை வெளிப்படுத்தின.இந்த பயணத்துக்கு பின், இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், மத்திய - மாநில அரசுகளின் நிபுணர் குழு ஒன்று அமைக்கும்படி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினேன். இத்திட்டம் தொடர்பாக, இதன் பிரதான கர்த்தாவான, ஏ.சி.காமராஜுடன் இணைந்து, கனடாவிலிருந்து வந்த பிரதிநிதிகள் குழு ஒன்று, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் செயலர்களையும் அதிகாரிகளையும், மத்திய அரசையும் சந்தித்தன.மேலும், கனடா - இந்தியா பவுண்டேஷனும், இது பற்றி விவாதித்து வந்தது. அவர்கள் என்னிடம் வைத்த வேண்டுகோளுக்கு இணங்க, பொன்ராஜும் கூடுதல் விவாதத்துக்காக நியமிக்கப்பட்டார். தமிழக அரசுக்கும் உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்துக்கும், இத்திட்டம் பற்றி ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தோம். தங்கள் மாநிலங்களில், இத்திட்டம் குறித்த சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு பீகார், ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகியவற்றுக்கும் வலியுறுத்தியிருந்தோம்.மத்திய அரசு, உள்நாட்டு நீர்வழி ஆணையம் ஆகியவை, தேசிய அதி- திறன் நீர்வழிச் சாலை இணைப்பை உருவாக்க தேவையான ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும். இந்த திட்டமானது, இந்திய தொழில்துறை, கல்வித்துறை ஆகியவற்றுக்கு வலுசேர்க்கும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மேலாண்மையியல், மனிதவியல் துறைகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு, நல்ல மதிப்புடனான வேலையை உருவாக்கும். பல்வேறு நாடுகளுடன் இந்தியா, இதன் மூலம் மேற்கொள்ளும் உறவு, இரு தரப்பினருக்குமே பலன் தரும்.


பொருளாதாரத்தை வலுப்படுத்தும் தேசிய அதிதிறன் நீர்வழிகள்


நம் விவசாயிகள், இப்போது, 25 கோடி டன் உணவை உற்பத்தி செய்கின்றனர். ஆனால் அவற்றை சேமிக்க, வினியோகிக்க, பெரிய வசதிகள் இல்லை. வேளாண்மைக்கான நீர்ப்பாசன வசதிகளும், பின் தங்கியவையாகவே இருக்கின்றன. எனவே வேளாண்- உணவுப் பதன கூட்டுத் திட்டத்தை உருவாக்கி, சம்பந்தப்பட்ட, தொழில்துறை, சேவைத்துறை இணைப்புகளை ஏற்படுத்தி, விவசாயத்தை இந்தியாவின் பிரதான செய்திறன் கொண்ட துறையாக
உருவாக்க வேண்டும்.உணவுப் பாதுகாப்பு பிரச்னையும், பொருளாதார நெருக்கடிகளும், கடந்த சில ஆண்டுகளாக நிலை பெறு வேளாண்மைக்கான, உடனடி அத்தியாவசியத் தேவையை வலியுறுத்தியிருப்பதாக, உலக பொருளாதார அமைப்பு அறிக்கை ஒன்று கூறுகிறது. உலகிலுள்ள, 600 கோடி மக்களில், 100 கோடி மக்கள், தேவையான உணவும், ஊட்டச்சத்துமின்றி உழல்கின்றனர்.வரும் 2050ல், உலக மக்கள் தொகை, 900 கோடியாக இருக்கும். வேளாண் பொருட்களுக்கானத் தேவை, இரு மடங்காக ஆகும். ஆனால், வேளாண் துறையோ, நீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றம், உற்பத்தி வீழ்ச்சி ஆகிய பெரும் பிரச்னைகளுக்குள் சிக்கியிருக்கும்.இந்தியா தன் பிரதான செய்திறன் சார்ந்து, உலகின் வேளாண் மையமாக உருவாவது மிக அவசியம். இதற்குத் தீர்வு, இந்திய தேசிய அதி- திறன் நீர்வழி இணைப்பு திட்டமே!


முடிவுரை


நம் நாட்டில், மகத்தான இயற்கைச் செல்வங்களும் பேரளவுக்கான நீர் ஆதாரங்களும், எல்லையற்ற சூரிய வெளிச்சமும் கிடைக்கின்றன. இவற்றை, நாம், ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதில்லை. எனவே, பாதுகாப்பான குடிநீருக்காகவும் நிலக்கரிக்காகவும், பெட்ரோலிய பொருட்களுக்காகவும், இரும்பு தாதுக்காகவும், சூரிய ஒளி பேனல்களுக்காகவும், நாம் அன்னிய நாடுகளைச் சார்ந்திருக்கிறோம்.நாம் நம் இயற்கை வளங்களான, கிரானைட்களையும் கனிமங்களையும் ஏற்றுமதி செய்து, அவற்றுக்கு வெளிநாட்டில் வைத்து மதிப்பு கூட்டி, பின் இந்தியாவுக்கு இறக்குமதி செய்து கொள்கிறோம். அந்த மதிப்புக் கூட்டுப் பணியை, இந்தியாவிலேயே செய்வதற்காக, இந்திய தொழில் துறைக்கு, நாம் ஊக்கமளிப்பதில்லை. அதற்கான முன்முயற்சி சார்ந்த, உள்ளடக்குகிற கொள்கைகள் நம்மிடமில்லை. பிரிட்டிஷ்காரர்கள், இந்தியாவை ஆக்கிரமித்தபோது, என்ன நடந்ததோ, அதுவே இப்போதும் நடக்கிறது.வளர்ச்சிக்கு தேவையான உள்ளடங்கு கொள்கைகளை முன்முனைந்து அமல்படுத்தாமல், இந்திய நிறுவனங்களுக்கு, சம மட்டத்திலான செயல்திறனை உறுதிப்படுத்தாமல், நாம் இந்தியாவின் உற்பத்தி சார்ந்த முக்கிய துறைகளை, பாதுகாப்பற்ற நிலையில் வைத்தபடியே, அத்துறைகளை தாராளமயமாக்கி விட்டோம்.எனவே, உலகளாவியப் போட்டிக்கு முன்னால், புதிய தொழில்நுட்பங்கள் இல்லாத, நிதி ஆதார பலம் இல்லாத, திறன் தொழிலாளர்கள் இல்லாத, நம் உள்நாட்டு நிறுவனங்கள், முதலில் வீழ்ச்சி அடைந்தன; பின், இழுத்து மூடப்பட்டு விட்டன.நம் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, பிரதான செய்திறன் துறைகளை, நாம் உள்ளடங்கு கொள்கைகளோடு மேம்படுத்தியிருந்தால், உலகப் போட்டியை சமாளிக்கும் திறனை, நம் தொழில் துறையினருக்கு அளித்திருக்க முடியும். நிலைபெறு நீர், மின்சாரம், உள்கட்டமைப்பு, வேளாண்மை இல்லையேல், நிலைபெறு செல்வமும் செழிப்பும்
இல்லை. எனவே, முதலில் நீர் மீது கவனம் குவிப்போம்.'நாம், நிலைபெறு வளர்ச்சிக்காகவே நிற்கிறோம்; எனவே இதை முதலில் நடைமுறைப்படுத்துவோம்' என, மக்களிடம் நாம் உறுதி கொடுக்க வேண்டும். தனி மனிதர்களை விட, நாடு முக்கியம் என்பதை சூளுரையாக ஏற்க, தேசத்தின், மாநிலங்களின், புதுமை நாடும் தலைவர்களை வலியுறுத்துவோம். தேசிய மற்றும் மாநில அளவிலான அதி- திறன் நீர்வழித் திட்டத்தை அமல்படுத்த, முன்னுரிமை கொடுக்கச் சொல்வோம். தேசிய அதி- திறன் நீர்வழி இணைப்புத் திட்டத்தின் வளர்ச்சியே, நாட்டின் நிலைபெறு வளர்ச்சிக்கு நம்மை அழைத்துச் செல்லும்!

டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
(apj@abdulkalam.com)
வெ.பொன்ராஜ்
(vponraj@gmail.com)

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pillai Rm - nagapattinam,இந்தியா
13-நவ-201517:59:56 IST Report Abuse
Pillai Rm ரெண்டு மாநிலத்துலயும் புர்சிகரமான தலைவர்கள் சண்ட ஒன்னும் இல்ல தூரம் ரொம்போ இல்ல அப்படி இருக்க சொல்லவே கிருஷ்ணாவ கொண்டார எம்மாம் வருஷம் ஆச்சு . இத அல்லாரும் மனசுல வெச்சுகினு பிலான போடுங்க அய்யாமாரே
Rate this:
Cancel
MAHA - Trichy,இந்தியா
24-அக்-201509:07:46 IST Report Abuse
MAHA தமிழகத்துக்கு மட்டுமல்ல - இந்தியாவுக்கு மட்டுமல்ல. உலகம் முழுமைக்குமே விவசாயம் தான் பிரதானம். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விவசாயம் - ஒவ்வொரு நாட்டிலும் அதனதன் நதி நீர் இணைப்பு மூலமே செழிப்புற முடியும். அதற்கு மக்கள் ஒவ்வொருவரின் சார்பாக ஊடகங்கள் குரல் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
Rate this:
Cancel
MAHA - Trichy,இந்தியா
24-அக்-201508:50:30 IST Report Abuse
MAHA தினமலர் பத்திரிகை நிர்வாகத்தினருக்கு : இது மாதிரி விஷயங்களை அடிக்கடி வெளியிடுங்கள். மக்கள் மத்தியில் இந்த விஷயத்தின் முக்கியத்துவம் புரியவேண்டும். அணைத்து மக்களின் ஆதரவுடன் தான் இவைகளை செயல்படுத்தமுடியும். மற்ற பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கும் ஒரு வேண்டுகோள். இந்த விஷயத்தில் அனைவரும் ஒன்று சேர குரல் எழுப்ப வேண்டும் . அப்பொழுதுதான் நல்லது நடக்கும். எழில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X