உண்மையில் அக்கறை உண்டா?| Dinamalar

உண்மையில் அக்கறை உண்டா?

Added : மே 10, 2014 | கருத்துகள் (3) | |
தேர்தல் கமிஷன், பல கெடுபிடிகள் காட்டிய போதும், வேறு மாநிலங்களிலிருந்து பார்வையாளர் களை வரவழைத்து இருந்தும், பறக்கும் படைகள் முதல், தகவல் சொல்பவர்கள் வரை நியமித்து இருந்த போதும், அவை எல்லாவற்றிற்கும் கடுக்காய் கொடுத்து, அரசியல் கட்சி கள், வாக்காளர்களுக்கு, பணப்பட்டு வாடா செய்யும் காரியத்தை செவ்வனே செய்து முடித்தது நிதர்சனம்.இதில் வேடிக்கையான விஷயம் என்னவெனில்,
 உண்மையில் அக்கறை உண்டா?

தேர்தல் கமிஷன், பல கெடுபிடிகள் காட்டிய போதும், வேறு மாநிலங்களிலிருந்து பார்வையாளர் களை வரவழைத்து இருந்தும், பறக்கும் படைகள் முதல், தகவல் சொல்பவர்கள் வரை நியமித்து இருந்த போதும், அவை எல்லாவற்றிற்கும் கடுக்காய் கொடுத்து, அரசியல் கட்சி கள், வாக்காளர்களுக்கு, பணப்பட்டு வாடா செய்யும் காரியத்தை செவ்வனே செய்து முடித்தது நிதர்சனம்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவெனில், எப்படி லஞ்சம் கொடுப்பதும் குற்றம், லஞ்சம் வாங்குவதும் குற்றம் என்று சட்டமிருந்தாலும், அவை இரண்டும் எந்தவிதமான இடையூறுமின்றி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அது போல, தேர்தல் கமிஷன், ஓட்டுக்கு பணம் கொடுப்பது மட்டும் குற்றமல்ல; வாங்குவதும் குற்றமே. ஓட்டுக்கு பணம் வாங்குபவர்களுக்கு, ஓராண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படும் என, மிரட்டிப் பார்த்ததும் மக்கள் மசியவில்லை.'அட! போங்கய்யா! நீங்களும் உங்க சட்டமும்' என்று, அலட்சியப்படுத்தியதோடு, கட்சிகளைக் கட்டாயப் படுத்தி, 'துட்டு கொடுத்தாதான்யா ஓட்டு' என, தில்லாக பேரம் பேசி வாங்கிய கேவலமும் நடந்தது.அதிபுத்திசாலிகளாகத் தங்களைக் கருதிக் கொண்டிருக்கும் சில அரசியல்வாதிகள், மக்களுக்கு வழங்கிய அறிவுரை உச்சகட்ட காமெடி. அதாவது, அவர்களின் கட்சி ஓட்டுக்குப் பணம் தராதாம். வேறு கட்சிகள் கொடுத்தால் வாங்கிக் கொள்ள வேண்டுமாம். தேர்தல் நாளன்று, பணம் கொடுத்த கட்சி வேட்பாளருக்கு, 'பெப்பே' காட்டி விட்டு, அறிவுரை சொன்ன கட்சி வேட்பாளருக்கு ஓட்டுப் போட வேண்டுமாம். இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது?

இதில் இன்னுமொரு வேடிக்கை என்னவெனில், வேறு கட்சிகள் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்; எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்னவர்களே, வேறு கட்சிகள் பணத்தோடு பட்டுவாடா செய்ய வீதி வீதியாக வந்தபோது, 'ஐயய்யோ! வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கிறார்களே!' என்று தேர்தல் பார்வையாளர்களுக்கும், பறக்கும் படைக்கும் தகவல் கொடுத்த அவலமும் நடந்தது.பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்தியவர்கள், வினியோகிக்க வரும்போது மட்டும் ஏன் கூப்பாடு போட வேண்டும்? அனைவருக்கும் முறையாக வினியோகிக்க விட்டு இருக்கலாம் அல்லவா?கொடுத்தால் குற்றம், வாங்கினால் ஓராண்டு வரை சிறை தண்டனை என்று, வாய் கிழிய முழக்கமிட்ட கமிஷன், தமிழகத்தில், எத்தனை அரசியல் கட்சிகள் மீது, பணம் கொடுத்ததாக வழக்கு பதிவு செய்துள்ளது? பணம் வாங்கிய வாக்காளர்களில் எத்தனை பேரை சிறைக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இன்னும் எத்தனை தேர்தல்களுக்கு, கமிஷன் இப்படி பூச்சி காட்டிக் கொண்டிருக்கும்?புகைப்படத்துடன் கூடிய ஓட்டு சீட்டு, தேர்தல் அலுவலர்களாலேயே வீடு வீடாக வினியோகிக்கப்படும் என்று, அசத்தலாக அறிவிப்புச் செய்தது தேர்தல் கமிஷன்.

ஒரு ஓட்டுச் சாவடிக்கு, அதிகபட்சம், 1,500 வாக்காளர்கள் என்றும் விளம்பரப்படுத்தியது. அந்த, 1,500 வாக்காளர்களுக்கும், ஓட்டு சீட்டை, வீடு வீடாக வினியோகிக்க, அதிக பட்சம் இரண்டு நாட்கள் ஆகலாம். அவ்வளவுதான். ஏனெனில் அந்த, 1,500 வாக்காளர்களுக்கும், 10 முதல், 15 தெருக்களுக்குள் பக்கத்து பக்கத்து வீடுகளில் தான் வசித்துக் கொண்டு இருக்கப் போகின்றனர். பஸ் ஏறியோ, ரயில் ஏறியோ யாரையும் தேடிப்போக வேண்டிய தேவை இருக்காது. இப்படி இருக்கும் போதே, தேர்தல் அலுவலர்கள் ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும், 100 முதல், 200 ஓட்டுச் சீட்டுக்களைத் தான் வழங்கினர். 'ஓட்டுச் சாவடிக்குள் கேமரா அல்லது அலைபேசி எதையும் கொண்டு வராதீர்கள்' என்று, ஓட்டுச்சீட்டின் பின்புறம் அச்சிடப்பட்டுள்ளது.இந்த விதி வாக்காளர்களுக்கு மட்டும்தான். ஓட்டுச்சாவடிக்குள், 'பூத் ஏஜன்டுகள்' என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு உலவும் கட்சிகளின் அடிப்பொடிகள், மொபைல் போனையும், கேமரா போனையும் வைத்து செய்த அலப்பறை களை, கவுண்டமணி பாஷையில் கூற வேண்டுமானால், 'தாங்க முடியலடா சாமி!' என்று தான் புலம்ப வேண்டும்.இந்த பூத் ஏஜன்டுகளின் கொடுமை, இதோடு முடிந்து விடவில்லை. ஓட்டுகள் எண்ணும் நாளன்று இன்னும் கொஞ்சம், 'பாக்கி' உள்ளது.

இம்முறை தேர்தல் கமிஷன், உருப்படாத, வேலைக்காகாத பல விஷயங்களை அறிமுகப்படுத்தியது. 'இ.பி.ஐ.சி., என்று டைப் செய்து, கொஞ்சம் இடைவெளி விட்டு, உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., செய்தால், உங்கள் ஓட்டுச் சாவடி எண்ணும், இடமும் அதே எஸ்.எம்.எஸ்., மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்' என்று அறிவித்திருந்தது.பத்திரிகையிலும்; நீயா - நானாவிலும் கூட விளம்பரம் செய்தது. நானும், என் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை, ஏப்., 17, 2014 அன்று அனுப்பி வைத்தேன்.ஓட்டுச் சாவடி எண்ணும் வரவில்லை. ஓட்டுச் சாவடி இடமும் வரவில்லை. எஸ்.எம்.எஸ்., கட்டணம் ஒரு ரூபாய் நஷ்டம் ஆனதுதான் மிச்சம். நாட்டில், இன்னும் இது போல எத்தனை பேர் ஏமாந்தனரோ?லோக்சபா தேர்தலுக்காக, சென்னை யில் அமைக்கப்பட்டிருந்த, 3,337 ஓட்டுச் சாவடிகளில், 1,920 ஓட்டுச் சாவடிகளில், 'வெப்கேமரா' மூலம் ஓட்டுப்பதிவை பதிவு செய்யவும், அதில், 1,280 ஓட்டுச் சாவடி களில் நிகழும் ஓட்டுப்பதிவை, இணையம் மூலம் கண்காணிக்கவும் தேர்தல் கமிஷன் திட்டமிட்டிருந்தது.

ஆனால், வெறும், 150 ஓட்டுச் சாவடிகளில் மட்டுமே இந்த, 'வெப்கேமரா' திட்டம் வேலை செய்தது. 'நெட்ஒர்க்' பிரச்னையால், இந்த 'வெப்கேமரா' திட்டம் வேலைக்காகவில்லையாம்.
தேர்தல் கமிஷன், எவ்வளவு அலட்சியமாக தேர்தலை நடத்துகிறது என்பதற்கு, இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, 'நோட்டா'வை விட வேறு சிறந்த உதாரணம் கிடையவே கிடையாது.
அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். ஓட்டுப்பதிவு சதவீதம் கூடுதலாக வேண்டும். போட்டியிடும் கட்சி வேட்பாளர்களில் யாரையுமே, உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால், அதையும் இந்த, 'நோட்டா' பொத்தானை அமுக்கி, உங்கள் ஓட்டை பதிவு செய்து, ஜனநாயகக் கடமை ஆற்றலாம் என்று, விழிப்புணர்வு பிரசாரம் செய்து வேடிக்கை காட்டியது, தேர்தல் கமிஷன்.

'ஜனநாயகம்' என்றால் என்ன? மெஜாரிட்டி தீர்ப்புக்கு தலைவணங்குவது தானே.ஒரு தொகுதியில் பதிவான ஓட்டுகளில், கூடுதலான ஓட்டுகளை, 'நோட்டா' பொத்தான் பெற்றிருந்தாலும் அந்தத் தொகுதியில், 'நோட்டா' வெற்றி பெற்றதாக (அதாவது தேர்தலைரத்து செய்வதாக) அறிவிக்க மாட்டார்களாம். எந்த வேட்பாளர் கூடுதல் ஓட்டுகளை பெற்றிருக்கிறாரோ, அவரே
வெற்றியாளராக தேர்தல் கமிஷன் அறிவிக்குமாம்.ஜனநாயகத்தை, இதை விட கேவலமாக வேறு யாராவது கேலிக்கூத்தாக்க முடியுமா? பின் எதற்காக அந்த, 'நோட்டா' பொத்தானை கமிஷன் அறிமுகப்படுத்தியது?கன்னியாகுமரியிலிருந்து, காஷ்மீர் வரை பரந்து விரிந்துள்ள நம் நாட்டின், லோக்சபாவுக்கு, 543 உறுப்பினர்களை தேர்வு செய்ய, தேர்தல் கமிஷன், எந்த அளவுக்கு தலையால் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறது.முதல் பிரச்னை, கமிஷனால் நாடு முழுவதும், ஒரே நாளில் தேர்தலை நடத்தி முடிக்க முடிவதில்லை. இம்முறை ஒன்பது கட்டங்களாக நடத்திக் கொண்டு இருக்கிறது.எவ்வளவு ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருக்கிறது. இது எதுவுமே இல்லாமல், சுலபமாக தேர்தல் நடந்து, ஓட்டுப்பதிவும் முடிந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். முடியுமா? ஏன் முடியாது... தாராளமாக முடியும். ஆனால், அதற்கு மனம் வேண்டும்.உள்ளங்கையில் அடங்கக்கூடிய, டெபிட் அல்லது கிரடிட் கார்டு மூலம் உலகையே சுற்றிவர முடியும் போது, ஒரு தேர்தலை நடத்திட முடியாதா என்ன?

நாட்டின் எந்த மூலையில் இருந்து, எந்த மூலைக்கும், எந்த ரயிலிலும் பயணிக்க, நாட்டின் எந்த ரயில்வே ஸ்டேஷனில் இருந்தும், டிக்கெட் புக் செய்ய முடியும்.'விரலில் இருக்கிறது விவரம்' என்ற வாக்கியத்துக்கு பொருத்தமான உதாரணமாகத் திகழ்ந்து கொண்டுஇருப்பது இந்திய ரயில்வே தான்.அதே போல, டெபிட் அல்லது கிரடிட் கார்டு மூலம் நாட்டின் எந்த மூலையிலும், எந்த நேரத்திலும், ஏ.டி.எம்., மூலம் பணம்பெற இயலும்.இதே போல ஓட்டுப்பதிவை செய்ய முடியாதா?ஓட்டுச்சீட்டு, வாக்காளர் பட்டியல், ஓட்டுச்சாவடி, ஓட்டுப்பதிவு இயந்திரம், தேர்தல் பணியாளர்கள், பாதுகாவலர்கள், பார்வையாளர்கள், ஏஜன்டுகள், போன்ற எல்லா விஷயங்களையும் மூட்டை கட்டி பரண் மீது துாக்கிப் போட்டு விடலாம்.இது எதுவுமே இல்லாமல் ஓட்டுப்பதிவை எப்படி, எவ்வாறு நடத்துவது?நாடு முழுவதிலும் உள்ள ஏ.டி.எம்., இயந்திரங்கள் தான் ஓட்டு சாவடிகள் அவைகளின் மூலமே ஓட்டுப்பதிவை, துல்லியமாக கச்சிதமாக நடத்திவிடலாம்.

*ஓட்டுப்பதிவு 10 மணி நேரம் மட்டுமல்ல. ஒரு நாள் முழுவதும், 24 மணி நேரமும் ஓட்டுப்பதிவு செய்யலாம்.
*ஓட்டுப்பதிவு நாளன்று, ஏ.டி.எம்., இயந்திரங்கள் ஓட்டுப்பதிவு செய்ய மட்டுமே பயன்படும். மற்ற பணபரிவர்த்தனைகளுக்கு அன்று மட்டும் தடா.
*கையில் கார்டில் உள்ள கைரேகை தான் 'பின்நம்பர்!' நாட்டில் எழுதப் படிக்க தெரியாதவர்கள் அதிகமாக உள்ளதால், விரல் ரேகையை பின்நம்பராக பதிவு செய்து விடவேண்டும்.
*ஏ.டி.எம்., இயந்திரத்தில் கார்டை நுழைத்ததும், இயந்திரம் கைரேகையை வைக்கச் சொல்லும். வைத்ததும், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள தொகுதி யில் வேட்பாளராக போட்டியிடுபவர்களின் பெயரும், சின்னமும், 'நோட்டா'வும் திரையில் ஒளிரும். வாக்காளர் அவருக்கு பிடித்த சின்னத்தை அழுத்தியதும் ஓட்டு பதிவாகிவிடும். மையும் தேவைஇல்லை. ஒரு மண்ணாங்கட்டியும் தேவையில்லை.தேர்தல் பணியாளர்களும் தேவைஇல்லை. பாதுகாப்பும் தேவைஇல்லை. தேவைப்பட்டால் தேர்தல் கமிஷன் கூடுதல் ஏ.டி.எம்., இயந்திரங் களை நிறுவிக் கொள்ளலாம்.
*ஒரேயொரு முறை, முறையான, ஒழுங்கான கைரேகையுடன் கூடிய டெபிட், கிரடிட் கார்டு வடிவிலான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டையை வழங்கி விட்டால் போதும். நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும், தன் ஓட்டை தவறாமல் பதிவு செய்து விடமுடியும்.
*அதற்கு தேர்தல் கமிஷன், வாக்காளர் பட்டியலையும், அடையாள அட்டை எண்ணையும் ஒழுங்காக, தெளிவாக இணையதளம் மூலம் பதிவு செய்து வைக்க வேண்டும் .தேர்தல் கமிஷனுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமாயின், நாம், மேலே விவரித்திருக்கும் முறைப்படி தேர்தலை நடத்த முயலலாம்.யோசனை ஏற்கப்படுமா அல்லது நாங்கள் தான் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் என்று, நிராகரிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
மொபைல் எண்: 98407 19043

- எஸ்.ராமசுப்ரமணியன் -எழுத்தாளர்/ சிந்தனையாளர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X