கோல்கட்டா:மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள, 42 லோக்சபா தொகுதிகளில், முதல்வர் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ், 34 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், பா.ஜ.,வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தலா இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 2009 லோக்சபா தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமையிலான, இடதுசாரி கட்சிகள், 15 தொகுதிகளிலும், திரிணமுல் காங்கிரஸ், 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன. இம்முறை, கூடுதலாக, 15 தொகுதிகளை மம்தா கட்சி பிடித்துள்ளது. கடந்த, தேர்தலில் ஆறு இடங்களைப் பிடித்த காங்கிரஸ், இந்தத் தேர்தலில், நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில், பா.ஜ., கட்சிக்கு பெரிய அளவிலான செல்வாக்கு இல்லை என்றாலும், மோடி அலையால், இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது. அந்தக் கட்சியின் ஓட்டு சதவீதமும், 11.14 சதவீதமாக உயர்ந்துள்ளது.அதேநேரத்தில், பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் கட்சி, படுதோல்வியை சந்தித்துள்ளது.
அம்மாநிலத்தில், மொத்தமுள்ள, 40 லோக்சபா தொகுதிகளில், மோடி அலையால், யாரும் எதிர்பாராத வகையில், பா.ஜ., 22 இடங்களைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் 2, ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி 6, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 4, ராஷ்டிரிய லோக் சமதா கட்சி 3, ஐக்கிய ஜனதா தளம் 2, தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்தையும் பிடித்துள்ளன. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க, நிதிஷ்குமார் மறுத்த நிலையில், அந்த மாநிலத்தில், ஆளும் கட்சியின் செல்வாக்கை மீறி, பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, நிதிஷ்குமார் கட்சியினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், மொத்தமுள்ள, 48 தொகுதிகளில், 23 தொகுதிகளை பா.ஜ.,வும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 18, தேசியவாத காங்கிரஸ் 4, காங்கிரஸ் 2, சுவாபிமானி பக்சா என்ற கட்சி ஒரு இடத்தையும் பிடித்துள்ளன.பஞ்சாப் மாநிலத்தில், பா.ஜ., சிரோன்மணி அகாலிதளம் கூட்டணி ஆட்சியில் இருந்தாலும், அந்த மாநிலத்தில், பா.ஜ., குறிப்பிடத்தக்க வெற்றி பெறவில்லை. இங்கு, மொத்தமுள்ள, 13 தொகுதிகளில், இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், இங்குள்ள அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்ட, கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி தோல்வி அடைந்தார். கூட்டணி கட்சியான சிரோன்மணி அகாலிதளம், கடந்த 2009 தேர்தலைப் போலவே, நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி கட்சி, வேறு எங்கும் வெற்றி பெறாத நிலையில், இங்கு நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள மூன்று தொகுதிகளை காங்கிரஸ் பிடித்துள்ளது.
மோடியின் 6வது சாதனை
2014 தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி பெற்றார். (லோக்சபா வரலாற்றில் அதிகபட்ச ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை மேற்கு வங்கத்தை சேர்ந்த அனில் பாசு தக்க வைத்துள்ளார்).
முதல்வர் -- பிரதமர் : முதல்வராக இருந்து பிரதமர் பதவியை பிடிக்கும் ஆறாவது தலைவராகிறார் மோடி (குஜராத்தில், 2001-2014, நான்கு முறை). இதற்குமுன் மொரார்ஜி தேசாய் (1952---57)
அப்போதைய மும்பை மாநிலம்); சரண் சிங் (உ.பி., 1967-68, 1970); நரசிம்மராவ் (ஆந்திரா, 1971-73); வி.பி.சிங் (உ.பி., 1980-82); தேவ கவுடா (கர்நாடகா, 1994-96) ஆகியோர் இப்பெருமை பெற்றனர்.