புதுடில்லி: அன்னா ஹசாரேயிடம் இருந்து பிரிந்து ஆம்ஆத்மி என்ற கட்சியை துவக்கி தனக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாக நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்ட கெஜ்ரிவால், பல கட்சிகளுடன் கூட்டணி வைத்த தி.மு.க., தேசிய அளவில் இடதுசாரிகள், மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ்கட்சி, முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சி என பல்வேறு அரசியல் கட்சிகள் மோடி என்னும் சுனாமியில் காணாமல் போயிருக்கிறது. கங்கையில் குளித்து நெற்றியில் திருநீறு பூசி மக்களிடம் பிரசாரம் மேற்கொண்ட கெஜ்ரிவாலுக்கு ஒரு இடம் கூட கொடுக்காமல் மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்த வரை இங்கு பெரும் கூட்டணி இல்லாமலே அ.தி.மு.,க அமோக வெற்றி பெற்றுள்ளது. இது அந்த கட்சிக்கான உள்ள ஓட்டு மொத்தமாக விழுந்துள்ளதால் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க, வெற்றியை கிட்டியுள்ளது. ஆனால் பெரும் கூட்டணியாக இருப்பதாக காட்டிய தி.மு.க., பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. பா.ஜ., கட்சி காங்., உள்ளிட்ட மற்ற கூட்டணியில் உள்ள தே.மு.தி.க., ம.தி.மு.க., உள்பட எந்த ஒரு கட்சியும் ஒரு தொகுதி கூட பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மோடி அலையில் காணாமல் போன கட்சிகள் : வட மாநிலங்களில் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை பெரும் செல்வாக்கு உள்ள நபராக காட்டிக்கொள்ளத்தான் முடிந்ததே தவிர ஓட்டுக்கள் பெற முடியவில்லை. டில்லியில் மக்கள் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை கொடுத்து தக்க பாடம் புகட்டியுள்ளனர். இதுபோல் கருணாநிதி (தி.முக., ), மாயாவதி (பகுஜன்சமாஜ் கட்சி) , முலாயம்சிங் (சமாஜ்வாடி) , நிதீஷ்குமார், (ஐக்கிய ஜனதா தளம் ) , லாலுபிரசாத் ( ராஷ்டிரிய ஜனதா ) தருண்கோகை , உள்ளிட்ட பெயர் சொல்லும் முக்கிய தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். மேற்கண்ட அனைத்து கட்சிகளும் மோடியின் சுனாமியில் காணாமல் போய் விட்டது. இவை அனைத்திற்கும் மோடியின் தாரக மந்திரமே உதவியிருக்கிறது. இந்த நாட்டை 60 மாதங்களில் மாற்றிக்காட்டுகிறேன், எனக்கு தேசமே முதல் என்ற நாடு தழுவிய பிரசாரம் மக்கள் உள்ளத்தை தொட்டுள்ளது.
ஊழல் மற்றும் வாரிசு அரசியல் ஆகியவற்றுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர் என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி இன்று கூறியிருப்பது சரியே ! ஊழல் புகாரில் சிக்கிய தி.மு.க.,வை சேர்ந்த ராசா ஒரு லட்சத்திற்கும் மேலான ஓட்டுக்கள் வித்தியாத்தில் தோல்வியுற்றுள்ளார். இந்த தொகுதியில் மக்கள் ஓட்டுப்போட வெறுத்துள்ளனர் என்பதை காட்டும் வகையில் நாட்டிலேயே அதிக நோட்டா (ஓட்டுப்போட விருப்பமின்மை) என்பதை உணர்த்தும் விதமாக இந்த தொகுதி மக்கள் சுமார் 40 ஆயிரம் பேர் இந்த பொத்தானை அழுத்தியுள்ளனர். ஊழல் புரிந்தோருக்கும், நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லாதோருக்கும், இந்திய மக்கள் அரசியல்வாதிகளுக்கு ஒரு சிறப்பான பாடத்தை இந்த தேர்தலில் கற்று கொடுத்துள்ளனர்.