காங்கிரசின் தோல்வி நாட்டின் வெற்றி| Dinamalar

காங்கிரசின் தோல்வி நாட்டின் வெற்றி

Added : மே 17, 2014 | கருத்துகள் (6)
காங்கிரசின் தோல்வி நாட்டின் வெற்றி

சமீப காலமாக, அமைச்சர்கள் மட்டுமே வெற்றி பெற்று வந்த லோக்சபா தேர்தலில், இப்போது தான் மக்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். எப்படிப் பார்த்தாலும், இது தான் உண்மை.
ஐ.மு.கூ., ஆட்சி என்று சொல்லப்பட்ட, சோனியாவின் சர்வாதிகார ஆட்சியில் ஊழல், விலைவாசி உயர்வு, ஒட்டாத தலைவர்கள் என்று நொந்து போயிருந்தனர் மக்கள்.உழைப்பு, எளிமை, தன்னலமின்மை, ஊழலற்ற ஆட்சி என்ற தகுதிகளுக்காகவே, மோடி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கட்சி எல்லைகளைத் தாண்டி விஸ்வரூபம் எடுத்திருந்தது, இவரது ஆளுமை. அதனால்தான், மக்கள் இவருக்குத் தனிப் பெரும்பான்மை அந்தஸ்தைத் தந்திருக்கின்றனர்.

கூட்டணி என்றால், இவரும் தவித்துப் போவார். நாடும் தடுமாறும்.தேர்தல் பிரசாரத்தின் போது, மோடியை, 'மதவாதி' என்று கூறினர் எதிர்க்கட்சித் தலைவர்கள். 'பெண்டாட்டியுடன் வாழத் தெரியாதவர், நாட்டைக் காப்பாற்றுவாரா?' என்று கேட்டனர் காங்கிரசார். வேதனை என்னவெனில், அந்தக் கட்சியைச் சேர்ந்த, 67 வயதுத் தலைவர் விரைவில் விவாகரத்தாக இருக்கும் ஒரு நடிகையை மணக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். தவறான தொடர்பினால், தான் பெற்ற மகன் வழக்காடி வென்ற பின், அந்த மகனைப் பெற்றுதந்த பெண்மணியை இரண்டு நாட்களுக்கு முன் மணந்தார். அதே கட்சியின், 89 வயதுத் தலைவர்.நாற்பது ஆண்டு காலமாக, கல்யாணம் செய்தும் பிரம்மசாரியாக இருந்தபடி அரசியல், சமூக பணியைத் தன்னலமில்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையில் இடம் கொடாமல் செய்துவந்துள்ள நரேந்திர மோடியை, இவர்கள் என்னென்னவெல்லாமோ சொன்னார்கள். மோடி எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, புயலென நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து, கட்சி வெற்றி பெறப் பாடுபட்டார். சொந்த மாநிலத்தில் வதோதரா தொகுதியில், 5.70 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். சுதந்திர இந்தியாவில், இதுவரை இல்லாத சாதனை இது.தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னதாகவே, வெற்றி பற்றி பா.ஜ.,வினர், மிகுந்த நம்பிக்கையுடன் இருந்து வந்தனர். அத்துடன் தங்கள் ஆசான் போன்ற நிலையில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களைச் சந்தித்தனர். அதே நேரம் தோல்வி பயம் வந்துவிட்ட காங்கிரசுக்கு, ஓட்டு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே, தேர்தல் தோல்விக்கு ராகுலை குறைசொல்லக்கூடாது என்று கட்சியினருக்கு அறிவித்தது.

இதற்கிடையே நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., சொல்வதுபடி ஆட்சி செய்வார் என்று, ஆருடம் சொல்லியிருக்கிறார் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான, தமிழகத்தில் டி.ராஜா. கம்யூனிஸ்டுகள், சீனாவிடமிருந்தும், ரஷ்யாவிடமிருந்தும் உத்தரவுக் பெற்றதில்லை, பெறுவதில்லை என்பதை நம்புவோம். எளிமை, தொண்டு, தேச பக்தி என்ற கொள்கை களுடன் இயங்கும், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் அரவணைப்பில் வளர்ந்துள்ள மோடி, ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனைகளைக் கேட்டால் நாடு கெட்டுப் போய்விடுமா என்ன? ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., தொடர்பை நேரடியாக வெளிக்காட்டும் நேரம் வந்துவிட்டது. அது பொய்மை மதச்சார்பின்மையின் முகத் திரையைக் கிழிக்கும்.தன் வெற்றிக்குப் பின், வதோதராவில் மக்கள் முன்னிலையில் நன்றியுரையாற்றிய நரேந்திர மோடி, 'தேர்தலுடன் போட்டிகள் எல்லாம் முடிந்து விட்டன. எனக்கு எதிராக இருந்தவர்களுடன் சேர்ந்து, நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவேன்' என்றார். அது வெறும் சம்பிரதாய வாசகம் அல்ல, சொன்னதை நிறைவேற்றுவார் மோடி என்று எதிர்க்கட்சிக்காரர்களும் நம்பலாம். எனவே, ஆர்.எஸ்.எஸ்., ராமர் கோவில் போன்ற விஷயங்கள் பற்றி, இப்போதைக்கு யாரும் சிறிதும் கவலைப்பட வேண்டாம். அதை தேர்தல், 'அஜெண்டா'வாக பா.ஜ., சொல்லவில்லை. பா.ஜ., பெற்ற ஓட்டுக்களும் ராமர் கோவிலுக்கு ஆதரவான ஓட்டுகள் அல்ல.

டில்லி, குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், பா.ஜ., முழுமையாக எல்லா இடங்களிலும் வென்றிருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தில், தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி .?காண்டது. கடைசி நேரத்தில், கூட்டணி முறிந்துவிடுமோ என்ற இக்கட்டு எழுந்தபோது, பிரச்னையை சாமர்த்தியமாகத் தீர்த்தது பா.ஜ., தலைமை. இதனால், தெலுங்குதேசமும், பா.ஜ.,வும் நன்மையடைந்துள்ளன.மோடியின் வரலாறு காணாத வெற்றிக்கு, தமிழகத்தின் பங்கு ஒரே ஒரு எம்.பி., என்று வெறும் அடையாளபூர்வமாகி விட்டது. இந்த நிலைமை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும், தமிழகத்தில் பா.ஜ., அதிக இடங்களை வென்றிருக்க முடியாது. இந்த நிலையில், தமிழகத்தில் கூட்டணி என்பது பா.ஜ.,வுக்கு தேவையில்லாத சுமை. ஒரு தொகுதியில் வெல்வதற்கா பல மாதங்களாக கூட்டணி பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தியது?பா.ஜ., தமிழகத்தில் சமுதாய வாழ்வுடன் கலக்காமல், தண்ணீர் மீது மிதக்கும் எண்ணெய்ப் படலமாகவே இருக்கிறது. மோடிக்கு ஆதரவாக சென்னையிலும், பிற நகரங்களிலும் வெவ்வேறு வகைகளில் பிரசாரம் செய்த அனுதாபிகளை, மாநிலக்கட்சி நிர்வாகிகள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அவர்களை மாநில பா.ஜ., பயன்படுத்திக் கொள்ளவில்லை. தமிழகத்தில் பா.ஜ.,வை வளர்ப்பது பற்றி, மோடி இனிமேலாவது உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

தமிழகம், ஒப்புக்காக ஒரே ஒரு பா.ஜ., - எம்.பி.,யைத் தேர்ந்தெடுத்துள்ளது என்றாலும், தமிழகத்தை பொறுத்தவரையில், காங்கிரஸ் ஆட்சியைப் போல பா.ஜ., மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளாது. எனவே, தமிழகம் பாதிக்கப்படாது. அதற்கு காரணம், மோடியின் பண்பு.தமிழகத்தின் பிற கட்சிகளைப் பற்றி சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை. ஊழல் செய்தவர்களையே களத்தில் இறக்கியது தி.மு.க., இவர்கள் வெற்றி பெற்றால், ஒரு குடும்பம் தான் நன்மை பெறும், தாமல்ல என்ற எண்ணம் தி.மு.க., தொண்டர்களிடம் ஆழப்பதிந்துவிட்டது. அதனால், தி.மு.க., ஒரு இடம்கூடப் பெறமுடியவில்லை.காணாமல் போன தி.மு.க.,வைப் போல, தே.மு.தி.க., ஓரிரு இடங்களில் வெற்றி பெறுவது கூடக்கடினம் என்று, மாநில பா.ஜ.,வுக்கு முன்பே தெரியும். தேசியத் தலைமையிடம், அதைப் பக்குவமாக எடுத்துச் சொல்லி, தனியாகவே தேர்தலைச் சந்திக்க யோசனை சொல்லியிருக்கலாம். பா.ஜ., தமிழகத்தில், அப்படி கவுரவம் காக்கவில்லை.கூட்டணி அமைவதற்கும், கூட்டணி அமைந்த பின் என்னென்னவோ ஆட்டங்கள் ஆடினாரே தே.மு.தி.க.,வின் விஜயகாந்த். மோடி தன்னை கேட்டுக்கொண்டுதான், ரஜினிகாந்தைச் சந்தித்திருக்க வேண்டும் என்று பொருமினாரே, அவருக்குப் புரியாத விஷயம் பண்ருட்டி ராமச்சந்திரன் என்று விலகினாரோ, அன்றே அந்தக்கட்சியில் இருந்த பெருங்காய வாசனையும், காற்றில் கரைந்து விட்டது. இன்று, தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க.,வின் பலம் என்ன என்பதை, இந்தத் தேர்தல் உணர்த்தி விட்டது.

குடும்பக்கட்சி என்ற நிலையிலிருந்து தி.மு.க.,வும், குழப்பவாதிகள் கட்சி என்ற நிலையிலிருந்து, தே.மு.தி.க.,வும், சில ஜாதிகளுக்கு எதிரானது, அரசியல் தோழமையில் அடிக்கடி நிறம் மாறுகிறது என்ற நிலைமையிலிருந்து பா.ம.க.,வும், மாறுமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்பதையும், நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் உறுதிப்படுத்தியிருக்கிறது.'யாருக்கு நன்மை கிடைத்தால் என்ன, தலைவி சொன்னதையெல்லாம் செய்வோம்' என்று எதைப் பற்றியும் யோசித்துப் பார்க்காத, அ.தி.மு.க., தொண்டர்களே ஜெ.,யின் பலம். அவர்களின் உழைப்பும், ஜெ.,யின் பிரசாரமும் கட்சி மகத்தான வெற்றிக்கு காரணம். பணம் விளையாடுவது என்கின்றனர். ஆனால், இதற்காக எந்த ஒரு கட்சியை மட்டும் தனியாகக் குறை சொல்லிவிட முடியாது.'நீங்களே பிரதமராவீர்கள்' என்று கட்சிக்காரர்களும், பிறரும் ஜெ.,வை உசுப்பி விட்டதனால், தேர்தலுக்கு முன் அவர் கணக்கு போட்டார். யாருக்கும் மெஜாரிட்டி இல்லையென்றால், அதிர்ஷ்டக்காற்று தன் பக்கம் வீசும், தான் பிரதமராகலாம் என்று நினைத்து தனியே நின்றார். அமோக வெற்றி பெற்றார். மோடியா, லேடியா என்று தேர்தல் கூட்டங்களில் உரக்கக்குரல் கொடுத்துக் கேட்டார் ஜெ., இங்கே லேடி அங்கே மோடி என்று சொல்லிவிட்டனர் மக்கள். இனி, இந்த லேடியின் தயவு இல்லாமலேயே, மோடியின் ஆட்சி நடைபெறும். அது லேடிக்கு நல்லதோ இல்லையோ, மோடிக்கு நல்லது. 'அம்மா தாயே' என்று வாஜ்பாய் போல அடிக்கடிக் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே, காங்கிரஸ் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது, டிபாசிட் தேறுவதே கடினம் என்று பேசப்பட்டது அது கட்சித் தலைவர்களுக்கும் தெரியும். இருந்தும் தேர்தலில் நின்றனர். பூஜ்யத்திற்கு மதிப்புக் கொடுப்பதற்காக! நாடளாவிய நிலையிலே, 10 சதவீத தொகுதிகளில் கூட, காங்கிரஸ் வெல்ல முடியவில்லை என்கிற போது தமிழகத்தில், அந்தக் கட்சியின் தோல்வி பற்றிப் பெரிதாக பேசவேண்டிய அவசியமில்லை.மாநிலக்கட்சிகள், குறிப்பிட்ட அளவு வெற்றி பெற்றும், உத்தரப் பிரதேசத்தில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், பூஜ்யத்தைப் பெற்றிருக்கிறது. இருந்தாலும் நாடு நெடுகப் படுகேவலமான தோல்வியை கண்டது காங்கிரஸ் தான். இவ்வளவு மோசமான நிலையை, காங்கிரஸ் இதுவரை சந்தித்ததில்லை. இந்த அடி வாங்கிய பின், சோனியா, ராகுல் என்றபடி நேரு வம்சத்தினர், இனி ஆட்சிக்கு வரமுடியுமா என்பது சந்தேகமே.இந்தத் தேர்தல், காங்கிரசுக்கு முடிவு கட்டிவிட்டது என்று சொல்லிவிட முடியாது. ஆனால், நேரு குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டது. நேரு குடும்பமே கட்சிக்குத் தொடர்ந்து தலைமை தாங்கினால், ஆட்சி கைநழுவியது போல, கட்சியும் கரைந்து விடும் ஆபத்து இருக்கிறது. காங்கிரஸ் மீது, இப்போதைக்கு யாருக்கும் அனுதாபம் வரவில்லை. காந்திஜி கட்சியைக் கலைக்க சொன்னாரே, அதைத்தான் சோனியா செய்கிறாரோ என்ற சந்தேகம் வந்துவிட்டது.

பெரும்பான்மை பலம் கொண்ட பா.ஜ., ஆட்சியில், நரேந்திர மோடி அடுத்த ஐந்து ஆண்டுகள் ஊழலற்ற ஆட்சி தருவார் என்பதனால், அடுத்தடுத்து ஆட்சிக்கு வரக்கூடும். தங்கள் ஆட்சியின் தோல்விக்குத் தலைமையே காரணம் என்பதைத் தாமதமாகாவாவது புரிந்து கொண்டால் அடுத்த தேர்தலில் பலிவாங்க எதிர்க்கட்சியாக தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்குக் காங்கிரஸ் வளர முடியும். இப்போதைக்கு, அது சோனியாவின் குடும்பக் கட்சிதான். ஆட்சியை சோனியாவிடமிருந்து மீட்டு, மோடியிடம் கொடுத்துவிட்டனர் மக்கள். ஆனால் கட்சியை சோனியாவிடம் இருந்து மீட்டு தலைமை தாங்கி நடத்தும் தகுதியுள்ளவர்கள் தாங்கள் என்று, இதுவரை அந்தக் கட்சியில் யாரும் தம்மை அடையாளம் காட்டிக் கொள்ளவில்லை இனி எப்படியோ?அது சரி... மோசமான ஆட்சியைத் தந்துள்ள அந்தக்கட்சி எப்படியாவது உருப்படவேண்டும் என்று ஏன் சிலர் நினைக்கின்றனர். காரணம் உண்டு. ஒரு காலத்தில், அதாவது முன்னொரு காலத்தில் நல்லவர்கள் இருந்த கட்சி. இப்போது, அதைப் பற்றி அரசியல் விமர்சகர்கள் கவலைப்படுவதற்குக் காரணம், தேசிய ஆளும் கட்சிக்கு, ஒரு தேசிய எதிர்க்கட்சி இருக்க வேண்டும் என்பதனால் தான்.
'இ-மெயில்': hindunatarajan@hotmail.com

- ஆர்.நடராஜன் --
கட்டுரையாளர், அமெரிக்க தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X