கடந்த, 201?ல், தமிழகத்தின், குழந்தைகள் பார்லிமென்டின் சார்பாக, ஐ.நா., சபையில் 'பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள்' என்ற தலைப்பில் பேசுவதற்கான வாய்ப்பு, 12 வயது சுவர்ணலட்சுமிக்கும் கிடைத்தது. அவர் பேசிய பல்வேறு விஷயங்களை கேட்டு, உலக அறிஞர்கள் பாராட்டினர். பின்லாந்து வெளியுறவு துறை அமைச்சர், மீண்டும், அழைப்பு விடுத்தார். தமிழக பாரம்பரிய உடையில், மீண்டும் ஐ.நா.,வுக்கு சென்று, கிடைத்த ஒரு நிமிடத்தில், தன் திறமையான பேச்சால் அனைவரையும் கவர்ந்தார். ஆனால் இதுவரை தமிழக அரசிடம் இருந்து எந்தவித எதிர்விளைவும் இல்லை. இது, செய்தி.
கேள்வி ஞானம்: சரி... யார் அந்த சுவர்ண லட்சுமி? அப்படி என்ன பேசினார்?
சென்னை பெருங்களத்தூரில் வசிக்கும், ரவிதுரைக்கண்ணு - லட்சுமி தேவி தம்பதியின் அன்பு மகள் சுவர்ணலட்சுமி.அவர் தாய், லட்சுமி தேவி சொல்கிறார்: அவளுக்கு பிறந்தப்பவே பார்க்கிற சக்தி இல்ல. ஆனா, மத்த எல்லா அறிவையும் ஆண்டவன் கொடுத்திருந்தான். அதனால, நான் பக்கத்திலேயே இருந்து பேசிக்கிட்டே இருப்பேன். அவளும் கேட்டுக்கிட்டே இருப்பா. அவளை பரிசோதிச்ச மருத்துவர்கள், அவளுக்கு பார்வையை கொடுக்கற விஞ்ஞானத்தை இன்னும் கண்டுபிடிக்கலைன்னாங்க. பிளாஸ்டிக் எழுத்துகளைக் காட்டி, இதுதான், 'அ, ஆ'ன்னு, சொல்லி கொடுத்தேன்.அவளை, 'லிட்டில் பிளவர் மாற்றுத்திறனாளிகள் கான்வென்டில' சேர்த்தேன். ஆனா, அவளுக்கு இப்படிப்பட்ட குறைபாடு இருக்குங்கறதையே நாங்க சொல்லலை. அதனால, எல்லாருமே நம்மளை மாதிரிதான்னு நினைச்சுக்கிட்டா.ஒருநாள், பள்ளி மூலமா தெரிஞ்சுக்கிட்டு, 'நான் ப்ளைண்டாம்மா? அப்படின்னா என்னம்மா?'ன்னு கேட்டா. என்னோட மனசு சுக்கு நூறா உடைஞ்சிடுச்சு. அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா அவளுக்கு உலகத்தை பத்தி புரியவைச்சேன். நான், தினமும் காலையில சிவபுராணம் பாடுவேன். ஒருநாள், இடையில கொஞ்சம் தடுமாறிட்டேன். ஆனா, அவ கொஞ்சம் கூட திக்காம திணறாம, முழு பாடலையும் பாடிக்கிட்டே இருந்தா. அப்புறம், கேரம், செஸ், இசை, நீச்சல், பாட்டுன்னு நிறைய கத்து கொடுத்தோம். எதையும் உடனே கிரகிச்சுக்குவா. யார் மனசையும் காயப்படுத்த மாட்டா. நிறைய உதவி செய்யணும்னு நினைப்பா. லட்சுமிதேவி, தன் மகளை பற்றி பெருமிதமாக கூறுகிறார்.
ரூ.30 ஆயிரம் நன்கொடை:
இப்போது, சுவர்ணலட்சுமி பேச துவங்கினார்: எனக்கு எல்லாமே, அம்மாதான். அவங்க, எனக்கு எல்லா திறமையும் கொடுத்திருக்காங்க. சின்ன வயசுல, சிறுவர்மலர், வாரமலர் எல்லாம், ஏற்ற இறக்கத்தோட, சத்தம் போட்டு படிப்பாங்க. பல சாதனையாளர்களோட வரலாறுகளை கேட்கும் போது, நானும், அந்த சாதனையாளரா மாறிடுவேன். ஒரு தடவை ஹெலன் கெல்லரை பத்தி படிச்சாங்க. நானே ஹெலனா மாறிட்டேன். அவங்களோட சாதனைகளை படிச்சப்போ, நாமும் சாதிக்கணும்னு நினைச்சேன். எல்லாத்துக்கும் காரணம், எங்க அம்மாதான் நான், 2011ல, என் பள்ளி மூலமா, குழந்தைகள் பார்லிமென்டில சேர்ந்தேன். குழந்தைகளால தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள், அவங்களோட உரிமையை பத்தி பேசி, விவாதிக்கறதுதான், குழந்தைகள் பார்லி மென்ட். இதுல, கிராமம், நகரம், மாவட்டம், மாநிலம்னு நிறைய தேர்தல்களை சந்திக்க வேண்டி இருக்கும். குழந்தைகள் பார்லிமென்டில, நிதி அமைச்சரானேன். அப்போ ஏற்பட்ட 'தானே' புயலுக்கு, எங்க சார்புல, 30 ஆயிரம் ரூபாய் திரட்டி, கடலூர் மாவட்ட குழந்தைகளுக்கு, நோட்டு, புத்தகங்கள் வாங்கி கொடுத்தோம். அடுத்த ஆண்டு, அக்டோபர் முதல் வாரத்தை, 'ஈத்துவக்கும் வாரவிழா'வா கொண்டாடினோம். அதுல, ஆளுக்கு ஒரு ரூபாய்ங்கற அளவுல, 7,000 பேர்கிட்டே நிதி வசூலிச்சு, எங்க பள்ளியில கஷ்டப்படுற மாணவியருக்கு உதவி செஞ்சோம். அப்புறம், பிரதமரா தேர்ந்தெடுக்கப்பட்டேன். பன்னிரண்டாவது ஐந்தாண்டு திட்டத்துல, குழந்தைகளோட கருத்துகளை கேட்கணும்னு வலியுறுத்தி, திட்டக்குழு துணை கமிஷனரை சந்திச்சோம்.
காந்தி பேத்தி பாராட்டு:
கற்றலில் கணினிவழி பயிற்சி வேணும்; கல்வி, வெறும் ஏட்டு கல்வியா, மனப்பாடப் பகுதியா இல்லாம, அனுபவ கல்வியா மாத்தப்படணும்; எல்லா கல்விக்கூடங்கள்லயும், மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு கொடுக்கணும்; அப்படி கொடுக்காதவங்க மேல, கடுமையான நடவடிக்கை எடுக்கணும்; விபத்துக்கள்லே இருந்து மாற்றுத்திறனாளிகள் தப்பிக்க, அவங்களுக்கு, தனியான பாதை வேணும்; அந்த பாதையை ஆக்கிரமிக்கிறவங்க மேல நடவடிக்கை எடுக்கணும்... இப்படி நிறைய கோரிக்கைகளை வைச்சோம். அப்புறம், ஐ.நா., சபையில், குழந்தைகளுக்கான ஆரோக்கியத்துக்காக, 9 சதவீத நிதியை ஒதுக்கணும்னு பேசினேன். குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை, தைரியமா, எதையும் மறைக்காம, பாதிக்கப்பட்ட குழந்தைகள் வெளி உலகத்துக்கு சொல்லி, அதன் மூலமா தீர்வு கிடைக்கணும்னு வலியுறுத்தினேன். இப்படி எல்லாம் பேசிய பிறகு, காந்தியோட பேத்தி, என்னை வெகுவா பாராட்டினாங்க. நம்ம நாட்டுல, அப்போ, மத்திய அமைச்சரா இருந்த நாராயணசாமிக்கிட்ட, குழந்தைகளோட நலவாழ்வு பத்தி பேசினேன். பார்லிமென்டில பேசுறேன்னு சொன்னார்.
தமிழை மதிக்கணும்:
நான் பார்த்த வரைக்கும், நம்ம நாடு, அதிலேயும் தமிழகம் மாதிரி எந்த நாடும் இல்லை. நமக்கு நிறைய பாரம்பரியம் இருக்கு. நம்ம முன்னோர்கள் ஞானிகள். அவங்க சாப்பிட்ட சாப்பாட்டுலே இருந்து, அவங்களோட ஒவ்வொரு செயல்லேயும் அறிவியல் இருந்திருக்கு. ஆனா, அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துட்டு போகாம மறைச்சிட்டாங்க. தமிழை மதிக்கணும். ஆனாலும், நம்மளோட கருத்துகளை உலக அரங்குல எடுத்துக் கூற மத்த மொழிகளையும் தெரிஞ்சிருக்கணும். நல்ல கருத்துகளை, தமிழ்ல புகுத்தணும். எங்கே போனாலும், நம்மளோட பண்பாடு மூலமா தலை நிமிர்ந்து நிக்கணும். நான், பத்தாம் வகுப்புல, 458 மதிப்பெண் வாங்கி இருக்கேன். இன்னும் நிறைய எதிர்பார்த்தேன். கிடைக்கலேன்னதும் வருத்தமா இருந்துச்சு. கொஞ்சநேரம், 'கீபோர்ட்' வாசிச்சேன். அடுத்து என்ன செய்யணுங்கற தெளிவுக்கு, மனசு வந்திடுச்சு. வரலாற்று துறையில பட்டம் படிச்சு, ஆட்சிப் பணி தேர்வு எழுதி, ஒரு கலெக்டரா பணிபுரியணும். என்னால முடிஞ்ச உதவிகளை, ஏழைகளுக்கும், குழந்தைகளுக்கும் செஞ்சுக்கிட்டே இருக்கணும். பெருமிதமாய் சிரிக்கிறார் சுவர்ணலட்சுமி.