கோலி சோடா என் அடையாளம்: வெற்றியுடன் விஜய் மில்ட்டன்| Dinamalar

'கோலி சோடா' என் அடையாளம்: வெற்றியுடன் விஜய் மில்ட்டன்

Updated : மே 25, 2014 | Added : மே 25, 2014 | |
சினிமாவின் 'மூன்றாவது கண் கேமரா', அதை 'பிரியமுடன்' அரவணைத்து, தன் திரை பயணத்தை தொடங்கி, காட்சிகளை கவிதைகளாய் ரசிகர்களின் 'நெஞ்சிலே' நிறுத்தி, மதுரையின் முக்கிய இடங்களில் தன் 'காதல்' தடம் பதித்தவர். இவர் ஒளிப்படத்தில் வெளிவந்த திரைப்படங்களை பார்த்தாலே தினம் தினம் 'தீபாவளி' தான். 'வழக்கு எண் 18 ல்', அழுத்தமாக தன் 'ஆட்டோகிராப்'பை பதிவு செய்த, 'ஆட்டநாயகன்'.
'கோலி சோடா' என் அடையாளம்: வெற்றியுடன் விஜய் மில்ட்டன்

சினிமாவின் 'மூன்றாவது கண் கேமரா', அதை 'பிரியமுடன்' அரவணைத்து, தன் திரை பயணத்தை தொடங்கி, காட்சிகளை கவிதைகளாய் ரசிகர்களின் 'நெஞ்சிலே' நிறுத்தி, மதுரையின் முக்கிய இடங்களில் தன் 'காதல்' தடம் பதித்தவர். இவர் ஒளிப்படத்தில் வெளிவந்த திரைப்படங்களை பார்த்தாலே தினம் தினம் 'தீபாவளி' தான். 'வழக்கு எண் 18 ல்', அழுத்தமாக தன் 'ஆட்டோகிராப்'பை பதிவு செய்த, 'ஆட்டநாயகன்'. 'அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது' என காதலர்களை சொல்ல வைத்து, 'கோலி சோடா'வில் திறமையானஇயக்குனராக தன்னை அடையாளப்படுத்திய விஜய் மில்ட்டன்மதுரையில் 'தினமலர்' வாசகர்களுக்காக அளித்த சிறப்பு பேட்டி...
இயக்குனரானது எப்படி

என் தந்தை விஜய்ராஜ் இயக்குனர். அதனால் எனக்கும் சிறு வயதிலேயே இயக்குனராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. பின், ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, இயக்குனரானேன்.
முதல் கேமரா அனுபவம்

கேமராமேனாக நான் பணியாற்றிய முதல் படம் 'பிரியமுடன்'. அந்த படத்தில் வரும் 'பூஜா வா, பூஜா வா' பாடல் காட்சியில் 'ஸ்டேண்டி கேம்' என்று சொல்லக்கூடிய கேமராவை முதுகில் சுமந்து கொண்டு ஓட வேண்டும். அந்த கேமராவை பயன்படுத்தியது எனக்கு சவாலாக இருந்தது. என் உழைப்பிற்கு ரசிகர்களிடம் நல்ல பாராட்டை பெற்று தந்த இந்த பாடலை மறக்கவே முடியாது.

உங்கள் பார்வையில் மதுரை...

4 நாட்கள் கேமராவுடன் மதுரையை சுற்றி வந்து, பாலாஜி சக்திவேலின் 'காதல்' படத்தில் இதுவரை பார்க்காத மதுரையை புதிய கோணத்தில் காட்டியிருக்கிறேன். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. அதே போல் மதுரைக்கும் ஒரு அடையாளம் உள்ளது. அதை என் கேமராவும் படம் பிடித்திருக்கிறது என்று, நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
அதென்ன 'கோலி சோடா'

பாட்டிலுக்குள் இருக்கும் வரை சாந்தமாக இருக்கும் 'சோடா', வெளியே வரும் போது பயங்கரமாய் பொங்கும். அதே போல் ஒவ்வொரு தனி மனிதனும் சமூகத்தில் தான் சந்திக்கும் கொடுமைகளை கண்டு, பொறுத்தது போதும் என ஆக்ரோஷமாய் பொங்குவான். அப்படி பொங்கும் சோடாவின் வேகத்தை என் கதாபாத்திரங்களுக்குள் நான் கொண்டு வந்தேன். அதற்கு நான் தேர்வு செய்த இடம் தான் கோயம்பேடு 'பஸ் ஸ்டாண்ட்'. இங்கு நிறைய மனிதர்கள் அடையாளம் இல்லாமல் ஏனோ, தானோ என காலத்தை கழித்து வருகின்றனர். அப்படி தன்னை அடையாளப்படுத்த போராடும் சிறுவர்களின் மனநிலையை பிரதிபலிப்பதே 'கோலி சோடா'.

பெரிய 'ஹீரோ'க்களை வைத்து எடுத்திருக்கலாமே

கதைக்கு சின்ன வயது பையன்கள் தேவைப்பட்டனர், அவர்கள் 'பசங்க' படத்தில் நடித்து, தன் நடிப்பு திறமையை நிரூபித்தவர்கள். இயக்குனர் பாண்டிராஜிடம் கதை விவாதம் செய்த போது, அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். இமான் அண்ணாச்சி, சுஜாதா, சாந்தினி, சீத்தாவின் 'ஜாலி'யான நடிப்பில், யதார்த்தமான இசையும், சண்டை காட்சியும் படத்திற்கு பெரிய பக்கபலம்.
எதிர்கால சினிமா எப்படி இருக்கும்

அட ஏங்க நீங்க வேற... எதிர்கால சினிமாவ பற்றி சொல்லும் அளவிற்கு நான் சாதிக்கவில்லை. பல தடைகளை தாண்டி இப்போது தான் வெற்றி படம் கொடுத்து, என்னை இயக்குனராக அடையாளப்படுத்தியிருக்கிறேன். இன்னும் திரையுலகில் பயணிக்க வேண்டிய துாரம் எவ்வளவோ இருக்கிறது.
- ஸ்ரீநிவாசன்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X