பதிவு செய்த நாள் :
கருத்துகள் (48)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி: நாடே வியக்கும் வகையில், லோக்சபா தேர்தலில், பாரதிய ஜனதா கட்சிக்கு, அமோக வெற்றியைப் பெற்றுத் தந்த, நரேந்திர மோடி, 'சிறிய அரசு, நிறைந்த நிர்வாகம்' என்ற கோஷத்துடன், நாட்டின், 15வது பிரதமராக நேற்று பதவியேற்றார். அவருடன் அமைச்சர்கள், 45 பேரும் பதவியேற்றனர். இவர்களில், 23 பேர் கேபினட் அமைச்சர்கள்; 10 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள்; 12 பேர் இணை அமைச்சர்கள். தமிழகத்தைச் சேர்ந்த, பொன். ராதாகிருஷ்ணனுக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

லோக்சபா தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை அடுத்து, அந்தக் கட்சி சார்பில், 16வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களின் கூட்டம், சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பா.ஜ., பார்லிமென்ட் கட்சித் தலைவராக, நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். அதன்பின், கடந்த சில நாட்களாக, மத்தியில் ஆட்சி அமைப்பது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்றன. இந்த ஆலோசனைகளின் இறுதியாக, மத்திய அமைச்சரவையில் இடம் பெற உள்ள அமைச்சர்களின் பட்டியல், நேற்று மதியம், ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, ஜனாதிபதி மாளிகையில் உள்ள வளாகத்தில் நேற்று மாலை, 6:00 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நாட்டின், 15வது பிரதமராக, நரேந்திர மோடி பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து, பா.ஜ., தலைவர், ராஜ்நாத் சிங், அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களான, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

அத்துடன், கர்நாடக பா.ஜ., மூத்த தலைவர்களான சதானந்த கவுடா, அனந்தகுமார், பீகாரைச் சேர்ந்த ராதா மோகன் சிங், டில்லி மாநில பா.ஜ., தலைவரான, ஹர்ஷ வர்த்தன், ஒடிசாவைச் சேர்ந்த, ஜுயல் ஓரம், ம.பி.,யின் தாவர்சந்த் ஹெலாட், உ.பி.,யைச் சேர்ந்த கல்ராஜ் மிஸ்ரா ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். பெண் அமைச்சர்களாக, சுஷ்மாவை தவிர, ம.பி., முன்னாள் முதல்வர் உமா பாரதி, ராஜ்யசபா முன்னாள் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா, நேரு குடும்பத்தைச் சேர்ந்த மேனகா, பா.ஜ., மகளிர் அணி முன்னாள் செயலரும், உ.பி., மாநிலம் அமேதி லோக்சபா தொகுதியில், காங்., துணைத் தலைவர் ராகுலை எதிர்த்துப் போட்டியிட்டவருமான, ஸ்மிருதி இரானி, பஞ்சாபின் சிரோன்மணி அகாலிதளத்தைச் சேர்ந்த, ஹர்சிம்ரத் கவுர் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். பா.ஜ., கூட்டணி கட்சிகள் சார்பில், பீகாரின் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர், ராம்விலாஸ் பஸ்வான், மகாராஷ்டிராவின் சிவசேனா கட்சியைச் சேர்ந்த, ஆனந்த் கீதே, ஆந்திரா தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த, அசோக் கஜபதி ராஜு ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இதையடுத்து, தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக, முன்னாள் ராணுவ தளபதி, வி.கே.சிங், சந்தோஷ் கேங்வார் (ம.பி.,), ஸ்ரீபத் நாயக் (கோவா), தர்மேந்திர பிரதான் (ஒடிசா), சர்பானந்த சோனேவால் (அசாம்), பிரகாஷ் ஜாவடேகர் (மகாராஷ்டிரா), பியூஷ் கோயல் (மகாராஷ்டிரா), ஜிதேந்திர சிங் (ம.பி.,), நிர்மலா சீதாராமன் (தமிழகம்), ராவ் இந்தர்ஜித் (அரியானா) ஆகியோர் பதவியேற்றனர். இதன்பின், இணை அமைச்சர்கள் பதவியேற்பு நடந்தது. அதில், 12 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
சித்தேஸ்வாரா (கர்நாடகா), மனோஜ் சிங் (உ.பி.,), நிகல்சந்த் (ஜார்க்கண்ட்), உபேந்திர குஷ்வா (பீகார்), பொன்.ராதாகிருஷ்ணன் (தமிழகம்), கிரண் ரிஜ்ஜு (அருணாச்சல பிரதேசம்), கிரிஷன் பால் குஜ்ஜார் (அரியானா), சஞ்சீவ் குமார் பாலியான் (உ.பி.,), மன்சுக்பாய் வாசவா (குஜராத்), ராவ்சாகேப் தாதாராவ் (மகாராஷ்டிரா), விஷ்ணுதேவ் சகாப் (சத்தீஸ்கர்), சுதர்ஷன் பகத் (ஜார்க்கண்ட்) ஆகியோர் இணை அமைச்சர்களாக பதவியேற்றவர்கள். பதவியேற்பு விழாவில், பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்?ஷே உட்பட, 'சார்க்' நாடுகளின் தலைவர்களும், காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட, ஏராளமானோர் கலந்து கொண்டனர். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 77 பேர் அமைச்சர்களாக பதவி வகித்தனர். ஆனால், நேற்று பதவியேற்ற, மோடி தலைமையிலான அமைச்சரவையில், அவரை தவிர்த்து, 45 பேர் மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்றுஉள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பதவியேற்ற, 45 அமைச்சர்களில், ஏழு பேர் பெண் அமைச்சர்கள். அவர்களில், ஆறு பேர் கேபினட் அமைச்சர்கள். இணை அமைச்சர்களில், நிர்மலா சீதாராமன் ஒருவர் மட்டுமே பெண் அமைச்சர். இவரும், லோக்சபா மற்றும் ராஜ்யசபா என, எந்த சபையிலும் உறுப்பினராக இல்லை. பா.ஜ., தகவல் தொடர்பாளராக பணியாற்றி வந்தார்.

திருச்சியில் பிறந்த இவர், தற்போது டில்லியில் வசிக்கிறார். தற்போது வெளியாகியுள்ளது உத்தேச இலாகா பட்டியல் தான். இதில், மாற்றமும், விரிவாக்கமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உ.பி.,க்கு முக்கியத்துவம்: மே.வங்கம், கேரளாவுக்கு 'நோ':
மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில், உ.பி.,க்கும், மகாராஷ்டிராவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உ.பி.,யில், 71 தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பேர், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், உமா பாரதி, கல்ராஜ் மிஸ்ரா, மேனகா, வி.கே.சிங், சந்தோஷ் கன்வார், சஞ்சீவ் குமார், மனோஜ் சின்கா ஆகியோர் உ.பி., மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள். உ.பி.,க்கு அடுத்தபடியாக, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆறு பேர், அமைச்சர் களாகியுள்ளனர்.

நிதின் கட்காரி, கோபிநாத் முண்டே, ஆனந்த் கீதே, பிரகாஷ் ஜாவடேகர், பியூஷ் கோயல், ராவ் சாகேப் தன்வே ஆகியோர், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். இதற்கு அடுத்தபடியாக, பீகார், மத்திய பிரதேசம், கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த, தலா நான்கு பேருக்கும், குஜராத்தில், மூன்று பேருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பஞ்சாப், ஒடிசா, ராஜஸ்தான், டில்லி, ஜம்மு - காஷ்மீர், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், கோவா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், தலா, ஒருவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம், கேரளா, நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், இமாச்சல், உத்தர கண்ட், சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில், ஒருவருக்கு கூட அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.

4,000 பேர் பங்கேற்பு


* டில்லியில் ஜனாதிபதி மாளிகையில், மோடி பிரதமராக பதவியேற்ற நிகழ்ச்சி ஒரு திருவிழா போலவே நடைபெற்றது. நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், மத தலைவர்கள் என, பல தரப்பினரும் பங்கேற்றனர்.
* ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே உள்ள வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காத வகையில், 4,000 பேர் பங்கேற்றனர்.
* பதவியேற்பு விழா நடந்த பகுதியில், சில மின்விசிறிகளே வைக்கப்பட்டிருந்தன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தும், மோடியின் மீது பாசம் கொண்டவர்களுக்கு அது பெரிதாக தெரியவில்லை. விழாவுக்கு வந்திருந்த பலர், அழைப்பிதழ்களையே
விசிறிகளாக பயன்படுத்தினர்.
* பதவியேற்பு விழா துவங்கும் முன், மோடி வந்த போது, 'மோடி, மோடி' என்ற கோஷம் கடுமையாக ஒலித்தது. அந்த கோஷங்கள், கடந்த சில மாதங்களாக, மோடி பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் எழுப்பப்பட்ட, கோஷங்களைப் போன்றே அமைந்திருந்தன.
* மோடி வருவதற்கு முன், விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த, பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக் ஷே உட்பட, 'சார்க்' நாடுகளின் தலைவர்கள் பலரும் வந்து விட்டனர்.
* காங்கிரஸ் தலைவர் சோனியா வந்ததை, விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்த போது, பலத்த கைதட்டல் எழுந்தது. சோனியாவுடன் அவரின் மகன் ராகுலும் வந்தார்.
* மோடிக்கு சாதகமாக செயல்படுவதாக, தேர்தல் பிரசாரத்தின் போது, ராகுலால் விமர்சிக்கப்பட்ட, தொழிலதிபர்களான, முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அடானி ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
* மோடிக்கு தனக்கு பிடித்தமான ஸ்கார்பியோ காரில்தான் பதவியேற்பு விழாவுக்கு வந்தார். அவரை, பா.ஜ., தலைவர்கள் வரவேற்றனர்.
* விழாவில், பா.ஜ., மூத்த தலைவரும், முன்னர் பிரதமர் பதவியைப் பெற நினைத்தவருமான, அத்வானி மற்றும் மத்திய அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெறாத மற்றொரு மூத்த தலைவரான, முரளி மனோகர் ஜோஷியும் கலந்து கொண்டனர்.
* பத்து ஆண்டுகள் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், தன் மனைவியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

'ஸ்கார்பியோ'வில் வந்த மோடி


* மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், இரு டாக்டர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஹர்ஷவர்தன், ஜிதேந்திரா.


* பதவி ஏற்ற அனைவரும் தேசிய கொடியுடன் கூடிய சிறிய பேட்ஜ் அணிந்திருந்தனர்.
* அமைச்சராக பதவிப் பிரமாணம் ஏற்ற அசோக் கஜபதி ராஜு, பெயர் குறிப்பிட மறந்தார். ஜனாதிபதி சுட்டிக் காட்டியதும், பெயரை குறிப்பிட்டு உறுதிமொழி ஏற்றார்.
* பதவி ஏற்றவர்கள் யாரும் யார் காலில் விழுவது போன்ற கலாசாரங்கள் இல்லை.

Advertisement

* ராகுல், வருண், அகிலேஷ் என அரசியல் கட்சி தலைவர்களின் வாரிசுகளும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றனர்.
* கோடை வெயில் உஷ்ணம் தாங்க முடியாத வி.ஐ.பி.,க்கள், கையிலிருந்த கர்ச்சீப், பேப்பர் போன்ற பொருட்களை பயன்படுத்தி, வெப்பத்தை தணித்துக் கொண்டனர்.
* தர்மேந்திரா, ஹேமமாலினி, வினோத் கன்னா, சல்மான், பப்பி லகரி என நடிகர் பட்டாளமே பங்கேற்றது.
* ஏழு அமைச்சர்கள், ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணம் ஏற்றனர்.
* மாலை, 5:56க்கு, நிகழ்ச்சி இடத்திற்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே, மன்மோகன் சிங்கிடம் சிறிது நேரம் பேசிய பின், தன் இருக்கைக்கு சென்றார்.
* தன்னை பார்த்து வணங்கிய காங்., தலைவி சோனியாவை, பிறருக்கு ஒதுக்குவதை போல், ஒரு நொடி வணக்கத்துடன் முடித்துக்கொண்ட ராஜபக்சே, தன் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
* முக்கியத் தலைவர்கள், விலை உயர்ந்த காரில் வந்திறங்க, வழக்கம் போல தான் பயணிக்கும், 'ஸ்கார்பியோ' காரில் தான் வந்திறங்கினார் மோடி.
* தேர்தல் சமயங்களில் தன் ஆடையில், 'தாமரை சின்ன' கிளிப் அணிந்திருந்த மோடி, நேற்று இந்திய கொடி பொறித்த, 'கிளிப்' அணிந்திருந்தார்.

பிரதமர் மோடி: மக்கள் கருத்து


மோடி பிரதமராக தேர்வானதில் இருந்தே, பங்கு வர்த்தகம் ஏறுமுகமாக உள்ளது. தங்கம் விலையும் குறைந்து வருகிறது. தவிர, முதல்முறையாக, 'சார்க்' தலைவர்களும் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மோடி பிரதமராவது இந்தியாவில் மட்டுமல்லாது, உலகளவில் பல நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் என, நம்புகிறேன்.

பூபாலன், 34 , தண்டையார்பேட்டை

இன்னும் மூன்று மாதம் பொறுத்து இருங்கள்; அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கையின் வாலாட்டம் நின்றுவிடும். அதன் ஆரம்ப கட்டம் தான், பிரதமர் பதவியேற்பு விழாவில், 'சார்க்' நாட்டு தலைவர்களை அழைத்தது. மோடியை போன்று ஒரு ஆள், தமிழகத்திலும் வர வேண்டும்.

சிவநேசன், எம்.கே.பி.நகர்

மோடி பிரதமரானது வரவேற்கத்தக்கது. இனி விலைவாசி குறையும் என, நம்புகிறேன். எந்த அரசு வந்தாலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை குறைவாகவும், உரியவர்களுக்கு போய் சேராமலும் உள்ளது. மின்தூக்கி மற்றும் தொலைபேசி இயக்குதல் உள்ளிட்ட அரசு பணிகளுக்கு மாற்றுத்திறனாளிகளை மட்டுமே நியமித்தால், நாங்களும் உயர்வோம்.

சதீஷ்குமார், மாற்றுத்திறனாளி

பதவியேற்பு விழாவே அசத்தலாக துவங்கியுள்ளது. இனி வரும் காலங்களில் விலைவாசி குறையும் என, நம்புகிறோம். அண்டை மாநிலங்களில் தண்ணீர் பிரச்னையில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்வது போல், தேசிய அளவிலான
பிரச்னையில், இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து பாடுபட்டால், இந்தியா நிச்சயம் வல்லரசாகும். அதற்கு மோடி வழிவகுப்பார்.

செந்தில்குமார், 39, கொத்தவால்சாவடி

இலங்கை அதிபர் மற்றும் பாக்., பிரதமர் வருகை, நம் நட்புறவை வலுப்படுத்தும். இது ஒரு நல்ல துவக்கம். நட்பால் தான் எதையும் சாதிக்க முடியும். மோடியின் அணுகுமுறை, மற்ற கட்சிகளுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

சதீஷ்குமார், மதுரவாயல்

மோடி பிரதமராக இன்று (நேற்று) பதவி ஏற்றுள்ளார். தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமலாக்க அவர் முயற்சி செய்வார்.மேலும் தற்போது அனைவரது மனதில் வேதனை தரும் விஷயம், இலங்கை கடல்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதுதான். அதற்கு நல்ல முடிவை மோடியின் அரசு ஏற்படுத்தும் என்பதில் துளி அளவும் சந்தேகமில்லை.

தினேஷ், 22, மாணவர், ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (48)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
28-மே-201401:31:52 IST Report Abuse
Ab Cd P .M சையத் க்கு மந்திரி பதவி கொடுத்த போது, தேர்தலில் தோற்றவருக்கு மந்திரி பதவியா? என அதை எதிர்த்து போராட்டம் செய்த பிஜேபி, இப்போது அதயே தான் பின்பற்றியிருக்கிறது. இவர்கள் ஆட்சியும் காங்கிரசை போலதான் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Ad Appavi - Periyakulam,இந்தியா
28-மே-201400:28:59 IST Report Abuse
Ad Appavi 'சிறிய அரசு, நிறைந்த நிர்வாகம்' என்ற கோஷத்துடன், நாட்டின், 15வது பிரதமராக நேற்று பதவியேற்றார். எங்க அம்மா மூன்று ஆண்டுகளாக ஒரே ஆளா கவும் தனி ஆளாகவும் பாதி நாட்கள் தலை நகரில் இல்லாமலேயும் ஆச்சி செய்யும் போது புதுசா சொல்றது போல் எங்க cm புகழை மறைக்க கூடாது
Rate this:
Share this comment
Cancel
vaasahan - singapore,சிங்கப்பூர்
27-மே-201416:50:59 IST Report Abuse
vaasahan யாருமே காலில் விழவில்லை என ஏன் எழுதுகிறீர்கள். அது நேரடி ஒளிபரப்பு. அமைச்சர்கள் காலில் விழும் காட்சியை நாங்கள் பார்த்தோம். தினமலர் நிருபர் வேறே எங்கேயோ பார்த்து கொண்டிருந்தார் போலும்.
Rate this:
Share this comment
Cancel
vaasahan - singapore,சிங்கப்பூர்
27-மே-201415:44:42 IST Report Abuse
vaasahan பிரதமர் மோடி அவர்கள், மத சார்பில்லாமல் இந்தியாவை வளர்ச்சி பாதையில் எடுத்து செல்வார் எனவும், தினமலரும் தேவையில்லாமல் ஆளுங்கட்சிக்கும் பாஜகவிற்கும் சோப்பு அடிக்காமல் நடுநிலையுடன் உரைகல்லாக இருக்கும் எனவும், எதிர்பார்கிறேன்.( யாரும் யார் காலிலும் விழவில்லை என குறிப்பிடுவது ஏனோ? நாங்களும் நிகழ்ச்சியை பார்த்து கொண்டுதான் இருந்தோம். இது போன்ற சோப்புகளை தவிர்க்கவும் )
Rate this:
Share this comment
Cancel
Louis Mohan - Trichy,இந்தியா
27-மே-201414:40:20 IST Report Abuse
Louis Mohan மோடிஜி க்கு வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Sam - Chennai,இந்தியா
27-மே-201414:14:08 IST Report Abuse
Sam ஒரே ஜால்ரா வாசம். வருத்தபடாத வாலிபர் சங்கம் 'ல வர்ற காதல் தண்டபாணி யவே மிஞ்சிட்டீங்கப்பா..
Rate this:
Share this comment
Cancel
IBRAHAM - RIYADH,சவுதி அரேபியா
27-மே-201413:18:10 IST Report Abuse
IBRAHAM இப்பத்தான் பதவியை ஏற்று இருக்கிறார், பொறுத்து இருந்து பார்ப்போம்.
Rate this:
Share this comment
Cancel
Indiya Tamilan - Madurai,இந்தியா
27-மே-201413:16:28 IST Report Abuse
Indiya Tamilan நல்ல நிர்வாகத்தை,மாற்றத்தை பிரதமர் மோடி கொண்டு வருவார் என்ற நம்பிக்கையில் வாழ்த்துகின்றோம்.
Rate this:
Share this comment
Cancel
Chakarapani Narasimhan - chennai,இந்தியா
27-மே-201412:41:34 IST Report Abuse
Chakarapani Narasimhan நான் தங்களை விட வயதில் சிறியவன், வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். மக்களின் நல்ல தீர்ப்பிற்கு கடவுள் நீண்ட ஆயுளை கொடுத்து இந்தியாவை வழி நடத்துமாறு வேண்டிகொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Venkataraman Subramanian - Chennai,இந்தியா
27-மே-201412:29:12 IST Report Abuse
Venkataraman Subramanian தேசத்தை நல்வழியில் நடத்தி செல்லவும் ஊழல் அற்ற நேர்மையான நிர்வாகம் நடைபெற்று வளர்ச்சி பாதையில் தேசம் வீறு கொண்டு நடைபோட இறைவன் உங்களுக்கு அருளட்டும் வாழ்த்துக்கள் திரு மோடி அவர்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X