புதிய அமைச்சர்கள்: ஒரு பார்வை| Team Modi: A look | Dinamalar

புதிய அமைச்சர்கள்: ஒரு பார்வை

Updated : மே 27, 2014 | Added : மே 27, 2014 | கருத்துகள் (15) | |
புதுடில்லி: டில்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள வளாகத்தில் நேற்று மாலை, 6:00 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நாட்டின், 15வது பிரதமராக, நரேந்திர மோடி பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து, பா.ஜ., தலைவர், ராஜ்நாத் சிங், அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களான, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, வெங்கையா
Team Modi, look, புதிய அமைச்சர்கள், ஒரு பார்வை

புதுடில்லி: டில்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள வளாகத்தில் நேற்று மாலை, 6:00 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நாட்டின், 15வது பிரதமராக, நரேந்திர மோடி பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து, பா.ஜ., தலைவர், ராஜ்நாத் சிங், அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களான, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே உள்ளிட்டோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

மோடி அமைச்சரவை சகாக்கள் குறித்த ஒரு பார்வை (இலாக்காக்கள் உத்தேசத்தில்)


ராஜ்நாத் சிங்: உள்துறை: வயது, 62. உ.பி.,யைச் சேர்ந்தவர். 1999ல் வாஜ்பாய் ஆட்சியில் விவசாயத்துறை அமைச்சராகவும், 2000ல், உ.பி., முதல்வராகவும் பதவி வகித்தார். 2005ல், பா.ஜ., தேசிய தலைவராக போட்டியின்றி


தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013ல், மீண்டும் கட்சித் தலைவரானார். லோக்சபா தேர்தலில், உ.பி., லக்னோ தொகுதியில், காங்., வேட்பாளர் ரீடா பகுகுணாவை. 2,72,749 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


சுஷ்மா சுவராஜ்: வெளியுறவு: வயது, 62. அரியானாவைச் சேர்ந்தவர். 25 வயதில், டில்லி மாநில அமைச்சரானார். 1996ல், வாஜ்பாய் அமைச்சரவையில், மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஆனார். 1998ல், டில்லி முதல் பெண் முதல்வர். 1980, 1984, 1989 தேர்தல்களில் மீண்டும் எம்.பி., ஆனார். 2009,- 2014ல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். லோக்சபா தேர்தலில், ம.பி.,யின் விதிஷா தொகுதியில், காங்., வேட்பாளரை 4,10,698 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


வெங்கையா நாயுடு: பார்லி., விவகாரம்: வயது, 65. ஆந்திராவைச் சேர்ந்தவர். 1973ல், ஆந்திர எம்.எல்.ஏ.,வானார். 1998ல், கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 மற்றும் 2010ல், மீண்டும் ராஜ்யசபா எம்.பி., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999ல், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். 2002ல், பா.ஜ., தேசிய தலைவராக, மூன்றாண்டுகள் பதவி வகித்தார்.


நிதின் கட்காரி: சாலை போக்குவரத்து: வயது, 57. மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். 1995ல், மாநில பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்தார். 2010 முதல் 2013 வரை, பா.ஜ., தலைவராக பணியாற்றினார். இம்முறை நாக்பூர் தொகுதியில் காங்., வேட்பாளர் விலாஸ் முடேம்வரை 2,84,828 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.


அருண் ஜெட்லி: நிதி மற்றும் பாதுகாப்பு: வயது, 61. டில்லியைச் சேர்ந்தவர். 1999ல், மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்துள்ளார். 2009, 2014ல் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். தற்போதைய தேர்தலில், அமிர்தசரஸ் தொகுதியில், 1,02,770 ஓட்டுகள் வித்தியாசத்தில், காங்., வேட்பாளர் அம்ரிந்தர் சிங்கிடம் தோல்வியுற்றார். எனினும், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.


சதானந்தா கவுடா: ரயில்வே: வயது, 61. கர்நாடகாவைச் சேர்ந்தவர். 2011ல், மாநில முதல்வராக பதவி வகித்தார். இம்முறை வடக்கு பெங்களூரு தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இவர், காங்., வேட்பாளர் நாராயணசாமியை, 2,29,764 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.


உமா பாரதி: நீர்வளத்துறை மற்றும் கங்கையை தூய்மைப்படுத்துதல்: வயது, 55. ம.பி.,யை சேர்ந்தவர். 1988ல் மாநில பா.ஜ., துணைத் தலைவரானார். 1989, 91, 96, 98, 99ம் ஆண்டுகளில், தொடர்ந்து, எம்.பி.,யாக தேர்வானார். 2003-04ல் ம.பி., முதல்வராக இருந்தார். இத்தேர்தலில் உ.பி.,யில், ஜான்சி தொகுதியில், சமாஜ்வாதியின் சந்திரபால் சிங்கை, 1,90,467 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.


நஜ்மா ஹெப்துல்லா: சிறுபான்மையினர் விவகாரம்: வயது, 74. ம.பி.,யைச் சேர்ந்தவர். 1980, 1986, 1992, 1998 என, தொடர்ந்து நான்குமுறை, ராஜ்ய சபா உறுப்பினராக, மகாராஷ்டிரா காங்., கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். ராஜ்ய சபா துணைத் தலைவராக, 1985 - 86, 1988 - 2004 வரை பணியாற்றினார். 2004ல் பா.ஜ.,வில் இணைந்தார். 2012 முதல் மத்திய பிரதேச பா.ஜ., ராஜ்ய சபா உறுப்பினராக உள்ளார்.


கோபிநாத் முண்டே: கிராமப்புற மேம்பாடு: வயது 64. மகாராஷ்டிரா சட்டசபைக்கு, ஐந்து முறை தேர்வாகியுள்ளார். அம்மாநிலத்தின் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். 2009ல் லோக்சாபாவுக்கு தேர்வானார். இத்தேர்தலில் மகாராஷ்டிரா, பீட் தொகுதியில், தேசியவாத காங்., கட்சியின் தாஸ் சுரேஷ் ராமச்சந்திராவை, 1,36,454 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.


ராம்விலாஸ் பஸ்வான்: உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரம்: வயது 67. பீகாரைச் சேர்ந்தவர். லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர். லோக்சபா, ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தவர். மத்திய அரசில், பல்வேறு அமைச்சர் பதவி வகித்தார். இத்தேர்தலில், பீகார், ஹாஜிபூர் தொகுதியில், காங்., கட்சியின் சஞ்சீவ் பிரசாத் டோனியை, 2,25,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.


மேனகா: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு: வயது, 58. புதுடில்லியில் பிறந்தார். முன்னாள் பிரதமர் இந்திராவின் இரண்டாவது மகன், சஞ்சயின் மனைவி. சஞ்சய் மறைவுக்குப் பின், ஜனதா கட்சியில் இணைந்தார். பின் பா.ஜ.,வுக்கு மாறினார். தற்போது உ.பி.,யின் பிலிபட் தொகுதியில், சமாஜ்வாடி வேட்பாளர் புத்சென் வர்மாவை, 3,07,052 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


அனந்த குமார்: ரசாயனம் மற்றும் உரத்துறை: வயது, 54. கர்நாடகாவை சேர்ந்தவர். 1999ல் வாஜ்பாய் அமைச்சரவையில், விமான போக்குவரத்து அமைச்சராக இருந்தார். தெற்கு பெங்களூரு லோக்சபா தொகுதியில் இருந்து தொடர்ந்து 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பா.ஜ., தேசிய பொதுச் செயலராக 2004ல் நியமிக்கப்பட்டார். இம்முறை தெற்கு பெங்களூரு தொகுதியில், காங்கிரசின் நந்தன் நிலேகனியை, 2,28,575 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.


ரவி சங்கர் பிரசாத்: தொலைத்தொடர்பு மற்றும் சட்டம்: வயது, 59. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். ராஜ்யசபா துணைத் தலைவராக இருந்தார். 2001ல் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் நிலக்கரி சுரங்கத்துறை அமைச்சர், 2002ல் கூடுதல் பொறுப்பாக நீதி துறை வழங்கப்பட்டது. அப்போது, மக்கள் பிரதிநித்துவ சட்டத்தில் பல திருத்தங்களை கொண்டு வந்தார். தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சராக இருந்தார். பா.ஜ. தேசிய தலைமை செய்தி தொடர்பாளராக உள்ளார்.


ஸ்மிருதி இரானி: மனிதவள மேம்பாடு: வயது, 38. 2003ல் பா.ஜ.,வில் சேர்ந்தார். 2004ல் மகாராஷ்டிரா இளைஞர் அமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இம்முறை அமேதி தொகுதியில் போட்டியிட்ட இவர், காங்., கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் 1,079,03 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார்.


அசோக் கஜபதி ராஜு: விமான போக்குவரத்து: வயது, 62. ஆந்திராவைச் சேர்ந்தவர். 1978ல், ஜனதா கட்சி எம்.எல்.ஏ.,வானார். பின் தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். 1983 முதல் தொடர்ந்து, 36 ஆண்டுகள், எம்.எல்.ஏ., பதவி வகித்தவர். இம்முறை ஒய்.எஸ்.ஆர்., காங்., வேட்பாளர் குமார கிருஷ்ண ரங்கராவை, 90,488 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வென்று, முதன் முறையாக எம்.பி.,யாகி உள்ளார்.


பொன். ராதாகிருஷ்ணன்: கப்பல் துறை: வயது 62. தமிழகத்தை சேர்ந்தவர். திருமணம் செய்யவில்லை. 1999ல், வாஜ்பாய் அமைச்சரவையில் சாலை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். 2014 தேர்தலில் காங்., வேட்பாளர் வசந்தகுமாரை, 1,28,662 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.


நிர்மலா சீதாராமன்: வர்த்தகத்துறை: வயது, 54. தமிழகத்தில், திருச்சியைச் சேர்ந்த இவர், பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளராக உள்ளார். 1980ல் திருச்சி, சீதாலக்ஷமி ராமசாமி கல்லூரியில் இளங்கலை, டில்லி ஜவர்கலால் பல்கலை.,யில் எம்.பில் பட்டம் பெற்றார். லண்டன் பி.பி.சி.,யில் சிறிது காலம் பணியாற்றினார். தேசிய பெண்கள் கமிஷன் உறுப்பினராக இருந்தார்.


ராதா மோகன் சிங்: விவசாயம்: வயது, 64. பீகாரைச் சேர்ந்தவர். 2006 - 2009ல், மாநில பா.ஜ., தலைவராக இருந்தார். 11, 13, 15வது லோக்சபா உறுப்பினர். இத்தேர்தலில் பீகாரின் சம்பரண் தொகுதியில், ராஸ்ட்டிரிய ஜனதா தள வேட்பாளர் பினோத் குமார் ஸ்ரீவஸ்தவாவை, 1,92,163 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.


ஹர்ஷவர்தன்: சுகாதாரம்: வயது 59. டில்லியைச் சேர்ந்தவர். டாக்டர் பட்டம் பெற்றவர். நான்கு முறை எம்.எல்.ஏ., பதவி வகித்துள்ளார். 2013 சட்டசபை தேர்தலில், பா.ஜ., முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இத்தேர்தலில் டில்லி, சாந்தினி சவுக் தொகுதியில், ஆம் ஆத்மியின் அஷுதோஷை, 1,36,320 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.


வி.கே.சிங்: வடகிழக்கு பிராந்திய மேம்பாடு மற்றும் வெளியுறவுத்துறை: முன்னாள் ராணுவ தளபதியான வி.கே.சிங்., 1970ல் ராணுவத்தில் சேர்ந்தார். 2012 மே 31ல் ராணுவ தலைமை தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். 2014 மார்ச் 1ல் பா.ஜ.,வில் சேர்ந்தார். 2014 தேர்தலில் உ.பி.,யின் காசியாபாத் தொகுதியில் காங்., வேட்பாளர் ராஜ் பப்பாரை 5,67,260 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


கல்ராஜ் மிஸ்ரா: வயது, 73. உ.பி.,யைச் சேர்ந்தவர். 1997 முதல் 2000 வரை, மாநில பொதுப்பணித்துறை, கல்வி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக செயல்பட்டார். தற்போது லக்னோ கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். தவிர, ராஜ்ய சபா உறுப்பினராகவும் உள்ளார்.


நரேந்திர சிங் தோமர்: வயது, 56. ம.பி.,யைச் சேர்ந்தவர். செல்லமாக 'முன்னா பையா' என்றழைக்கப்படும் இவர், குவாலியர் தொகுதியில், காங்., வேட்பாளர் அசோக் சிங்கை 29,699 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.


ஜுவல் ஓரம்: வயது, 53. ஒடிசாவைச் சேர்ந்தவர். கடந்த, 12, 13, 14வது லோக்சபா தேர்தலில் சுந்தர்கார் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். ஒடிசாவின் மூத்த தலைவரான இவர், மாநில தலைவராக நான்கு ஆண்டுகள் இருந்தார். தற்போது பா.ஜ., துணைத் தலைவராக உள்ளார். இத்தேர்தலில் பிஜு ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட ஹாக்கி வீரர் திலீப் குமார் டிர்கியை 18,829 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.


ஹர்சிம்ரத் கவுர் பாதல்: வயது, 47. டில்லியைச் சேர்ந்தவர். பஞ்சாப் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதலின் மனைவி. இந்த தேர்தலில் காங்., வேட்பாளர் ரனிந்தர் சிங்கை, 1,20,960 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.


தவார் சந்த் கேலாட்: வயது, 66. ம.பி.,யில் பிறந்தவர். 2004ல், ஷாஜபுர் தொகுதியில் பா.ஜ., சார்பில் வெற்றி பெற்றிருந்தார். தற்போதைய நிலையில், கட்சியின் நிர்வாக பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.


சர்பானந்தா: வயது 51. அசாமை சேர்ந்தவர். 2011ம் ஆண்டு வரை அசாம் கன பரிஷத் கட்சியில் இருந்தார். இத்தேர்தலில் அசாமில் உள்ள லட்சுமிபூர் தொகுதியில் போட்டியிட்டு, காங்., கட்சியை சேர்ந்த ராணீ நரக்கை 2,92,138 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.


ஜிதேந்திரா சிங்: இவர் 1956, நவ.6ல் பிறந்தார். பா.ஜ.,வின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், காஷ்மீர் மாநிலத்தின் தலைமை செய்தித்தொடர்பாளராகவும் இருக்கிறார். இத்தேர்தலில் காஷ்மீரில் உள்ள உதம்பூர் தொகுதியில் போட்டியிட்டு, காங்.,கின் குலாம் நபி ஆசாத்தை 60,976 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.


சித்தேஸ்வரா: வயது 61. 2004லிருந்து மூன்று முறை லோக்சபா எம்.பி.,யாக தேர்வாகியுள்ளார். கர்நாடக பா.ஜ., துணைத் தலைவராக பதவி வகிக்கிறார்.இத்தேர்தலில் கர்நாடகாவில் உள்ள தேவாங்கரி தொகுதியில் போட்டியிட்டு, காங்., கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜூனை 17,607 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.


பியுஷ் கோயல்: மும்பையில் 1964, ஜூன் 13ல் பிறந்தார். வயது 49. நிதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பார்லிமெண்ட் நிலைக்குழு உறுப்பினராக இருந்தார். 27 ஆண்டு அரசியல் வாழ்வில், பா.ஜ.,வில் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார். தேசிய பா.ஜ., பொருளாளராக உள்ள பியுஷ் கோயல், ராஜ்ய சபா உறுப்பினராக உள்ளார்.


ராவ் இந்தர்ஜித் சிங்: வயது, 64. அரியானாவைச் சேர்ந்தவர். 1977ல் காங்., கட்சி சார்பில் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை எம்.பி.,ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013ல், பா.ஜ.,வில் சேர்ந்தார். தற்போது, குர்கான் தொகுதியில் இந்திய தேசிய லோக் தள கட்சியின் வேட்பாளர் ஜாகிர் உசேனை, 2,74,722 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.


சந்தோஷ் கேங்வார்: வயது, 66. உ.பி.,யைச் சேர்ந்தவர். பா.ஜ., சார்பில், 1989ம் ஆண்டில் இருந்து தற்போது வரை பரேலி தொகுதி எம்.பி., ஆக இருக்கிறார். தற்போதைய தேர்தலில் உ.பி.,யின் பரேலி தொகுதியில், சமாஜ்வாடி வேட்பாளர் ஆயிஷா இஸ்லாமை, 2,40,685 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்து எம்.பி., ஆனார்.


மன்சுக்பாய் வாசவா: இவர், குஜராத்தில் உள்ள நர்மதா பகுதியில் 1957, ஜூன் 1ல் பிறந்தார். வயது 57. கடந்த, 1998ல், நடந்த லோக்சபா இடைத்தேர்தலில், முதன்முதலில் வெற்றி பெற்றார். பின், 1999, 2004, 2009 லோக்சபா தேர்தல்களில் பாருச் தொகுதியில் தொடர்ந்து வென்றார். இத்தேர்தலில் குஜராத்தில் உள்ள பாருச் தொகுதியில் போட்டியிட்டு, காங்., கட்சியின் ஜேசுபாய் அம்லாபாய் படேலை 1,53,273 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.


தாதாராவ் தான்வே: வயது 59. மகாராஷ்ட்ராவை சேர்ந்தவர். எம்.எல்.ஏ.,வாக இருமுறை தேர்வாகியுள்ளார். நான்குமுறை லோக்சபா எம்.பி.,யாக ஒரே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள ஜால்னா தொகுதியில் போட்டியிட்டு, காங்., கட்சியை சேர்ந்த கேசவ்ராவ் விலாசை 2,06,798 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.


சுதர்சன் பகத்: ஜார்க்கண்டில் உள்ள கும்லா மாவட்டத்தில், 1969, அக்.20ல் பிறந்தார். வயது 45. ஜார்க்கண்ட் மாநில எம்.எல்.ஏ.,வாகவும், அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2009ல் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றார். இத்தேர்தலில், ஜார்க்கண்டில் உள்ள லோகர்டகா தொகுதியில் போட்டியிட்டு, காங்., கட்சியை சேர்ந்த ரமேஷ்வர் ஓரனை 6,489 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.


உபேந்திர குஷ்வாஹா: 1994 - 2002 வரை, பீகார் சட்டசபையில் எம்.எல்.ஏ., வாக இருந்தார். 2013ல் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியை நிறுவினார். 2014ல் இவரது கட்சி, தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றது. 3 தொகுதியில் போட்டியிட்ட இக்கட்சி, மூன்றிலுமே வெற்றி பெற்றது. கராகட் தொகுதியில் எதிர்த்து போட்டியிட்ட ஆர்.ஜே.டி., வேட்பாளர் காந்திசிங்கை 1,05,241 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


கிரண் ரிஜ்ஜு: இவர் அருணாச்சல பிரதேசத்தில் 1971 நவ., 19ல் பிறந்தார். 2004 தேர்தலில் வெற்றி பெற்று, முதன் முறை எம்.பி., ஆனார். தற்போதைய 2014 தேர்தலில் காங்., வேட்பாளர் தக்கம் சஞ்சோயை 47,424 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். புத்த மதத்தை சேர்ந்தவர்.


மனோஜ் சின்ஹா: இவர் உ.பி.,யில் உள்ள காஷிபூர் மாவட்டத்தில், 1959, ஜூலை 1ல் பிறந்தார். 1996, 99ம் ஆண்டுகளில் லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.இத்தேர்தலில் உ.பி.,யில் உள்ள காஷிபூர் தொகுதியில் போட்டியிட்டு, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த சிவகன்யா குஷ்வாகாவை 32,452 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X