புதுடில்லி: 'அவதூறு வழக்கில், மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவுப்படி, உரிய பிணைத்தொகையை செலுத்தி, அரவிந்த் கெஜ்ரிவால், சிறையை விட்டு வெளியே வர வேண்டும். பிணைத்தொகை செலுத்துவதை, கவுரவ பிரச்னையாக்கக் கூடாது' என, டில்லி உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது. இந்த ஆலோசனையை ஏற்ற கெஜ்ரிவால், பிணைத்தொகைக்கான பத்திரத்தில் கையெழுத்திட்டு, அது, டில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், சமர்ப்பிக்கப்பட்டதால், திகார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
பா.ஜ., முன்னாள் தலைவரும், தற்போதைய மத்திய அமைச்சருமான நிதின் கட்காரி மீது, சில மாதங்களுக்கு முன், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் குற்றச்சாட்டு கூறினார். அதனால், கோபமடைந்த கட்காரி, டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். 'இந்த வழக்கில் ஜாமின் பெற வேண்டும் எனில், 10 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை செலுத்த வேண்டும்' என, கெஜ்ரிவாலுக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
திகார் சிறை:
அந்த உத்தரவை ஏற்க மறுத்ததால், கெஜ்ரிவாலை, வரும், 6ம் தேதி வரை சிறையில் அடைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். உடன், டில்லி திகார் சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டார். இதையடுத்து, 'கெஜ்ரிவாலை உடனே விடுவிக்கும்படி உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இதற்கிடையில், கெஜ்ரிவாலும் தன் வழக்கறிஞர் ரோகித் குமார் மூலமாக, மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், 'என்னை சிறையில் அடைக்கும்படி, மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது. இதன்மூலம், சட்ட விதிகளுக்கு தவறான விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது' என, தெரிவித்தார். இந்த மனுக்களை, நீதிபதிகள் கைலாஷ் கம்பீர் மற்றும் சுனிதா குப்தா அடங்கிய, டில்லி உயர்நீதிமன்ற, 'பெஞ்ச்' நேற்று விசாரித்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பெருநகர மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவுப்படி, 10 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை செலுத்தி, முதலில் கெஜ்ரிவால் சிறையை விட்டு வெளியே வரவேண்டும். அதன்பின், அவர் என்ன சட்ட பிரச்னைகளை எழுப்ப விரும்பினாலும், அதை நீதிமன்றத்தில் எழுப்பலாம். அதை விடுத்து, பிணைத்தொகை செலுத்துவதை, கெஜ்ரிவால் கவுரவ பிரச்னையாக்கக் கூடாது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷனும், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும், நேற்று மதியம் திகார் சிறையில், கெஜ்ரிவாலை சந்தித்தனர். அப்போது, நீதிபதிகள் தெரிவித்த ஆலோசனைகள் குறித்து கூறினர். அதை ஏற்ற கெஜ்ரிவால், 10 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை செலுத்த சம்மதித்ததோடு, அதற்கான பிணைப்பத்திரத்திலும் கையெழுத்திட்டார். அந்தப் பிணைப்பத்திரத்தை, டில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உடனே சமர்ப்பிக்க, கெஜ்ரிவால் வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இறுதிக்கட்ட விசாரணை:
அத்துடன், கெஜ்ரிவால் மனு தொடர்பாக, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் டில்லி அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையை வரும், 31ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதற்கிடையில், கெஜ்ரிவால் கையெழுத்திட்ட பிணைத்தொகைக்கான பத்திரம், டில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால், அவரை திகார் சிறையிலிருந்து விடுவிக்க உத்தரவிடப்பட்டது.