கசாப் கும்பல் நடத்திய 3 மணி நேர பேயாட்டம்| Dinamalar

கசாப் கும்பல் நடத்திய 3 மணி நேர பேயாட்டம்

Added : ஜூன் 01, 2014 | கருத்துகள் (5)
Advertisement
கசாப் கும்பல் நடத்திய 3 மணி நேர பேயாட்டம்

க்வாலிஸ் வண்டி நின்றவுடன் அதிலிருந்து இருவர் இறங்கி இவர்கள் காரை நோக்கி வந்தனர். அதில் ஒருவன் குள்ளன், மற்றவன் உயரமானவன். தங்களது காரை நோக்கி வந்த மனுதாரனை (கசாப்) குள்ளமானவன் என்றும் அவர் அடையாளம் காட்டினார். உடன் வந்தவன் உயரமானவன். உயரமானவன் அரசாவை நோக்கி வந்தான். கசாப் காரின் முன்னால் நின்றான். வண்டியை விட்டு வெளியே வாருங்கள் (காடி ஸே பஹார் ஆவோ) என்று கட்டளையிட்டான். உயரமானவன் அரசாவைக் காலரைப் பிடித்து இருந்தான். அதேசமயம் அனுகோன்கார், அவரது மனைவி இருவரும் காரை விட்டிறங்கி இடதுபுற நடைபாதைக்குச் சென்றனர். உயரமானவன் டிரைவர் இருக்கையில் அமர்ந்தான். ஆனால் காரின் சாவி இல்லை. காரின் இடது முன்சீட்டில் உட்கார்ந்திருந்த மனுதாரன் இறங்கி வந்து காரின் சாவியைக் கேட்டான். காரின் அருகில் வீசியெறிந்த சாவியை அரசா எடுத்துக்கொடுத்தார். உடனே இருவரும் ஸ்கோடா வண்டியை ஓட்டிக் கொண்டு இனாக்ஸ் திரையரங்கை நோக்கிச் சென்றனர்.குண்டு துளைத்த கார்

: 120. 2008 நவம்பர் 27 சுமார் பிற்பகல் 3.00 மணிக்குத் தனக்கு மேரின் டிரைவ் காவல் நிலையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெண்டே (பி.டபிள்யூ 148) இடமிருந்து உடனே அங்கு வருமாறு அழைப்பு வந்ததாக அரசா நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவரும் அங்கு சுமார் பிற்பகல் 3.45 மணிக்கு சென்றார். எந்த இடத்திலிருந்து அவரிடமிருந்து கார் பறிக்கப்பட்டதோ, அங்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அந்த இடத்தில் போலீஸ் பஞ்ச நாமா தயாரிக்கப்பட்டது.


121. இறுதியாக அவரது கார் 2008 டிசம்பர் 25ம் தேதி டிசிபிசிஐடி அலுவலகத்தில் காட்டப்பட்டது. அதில் வலது முன்கதவை ஒரு குண்டு துளைத்திருந்தது. காரின் வலப்பக்கம் மிகவும் பழுதாகியிருந்தது. தன்னிடமிருந்து காரைப் பறித்துச் சென்ற போது, அது மிகவும் நல்ல நிலையில் இருந்ததென்று அரசா கோர்ட்டில் கூறினார்.
122. அரசா மற்றும் அனுகோங்கர் இருவருமே மனுதாரனை (கசாப்) நீதிமன்றத்தில் அடையாளம் காட்டியுள்ளனர். 2008 டிசம்பர் 28 அடையாள அணிவகுப்பில் அரசா, 2009 ஜனவரி 14 அணிவகுப்பில் அனுகோங்கர் மனுதாரனை அடையாளம் காட்டியுள்ளனர். ஒரே உயரம், ஒரே மாதிரியான உடற்கட்டு உள்ள 7 பேர் கொண்ட வரிசையில் இவர்கள் மனுதாரனை அடையாளம் காட்டியுள்ளனர். ஒரு மூத்த அதிகாரியும், இரண்டு துணை அதிகாரிகளும் இந்த அணிவகுப்பை நடத்தினார்கள்.


3 மணி நேர பேயாட்டம்:

123. கசாப் மற்றும் அவனது தோழன் அபு இஸ்மாயில் மற்றும் இவர்களுடன் வந்த எட்டு பயங்கரவாதிகளும் (இவர்கள் இறந்து விட்டவர்கள்) மும்பை கடற்கரையில் 2008 நவம்பர் 26ம் தேதி இரவு சுமார் 9.15 - 9.30 வந்திறங்கினார்கள். அதே இரவு சுமார் 12.15 மணிக்கு (இரவு 12.00 மணி தாண்டி விட்டதால் தேதி 27.11.2008) கசாப், அபு இஸ்மாயில் இருவரும் விதான் சபா அருகே ஸ்கோடா காரைப் பறித்துச் சென்றனர். தேவையான ஆயுத பலத்தோடு இவர்கள் மும்பையை அடைந்துள்ளனர். எல்லாமே அவர்கள் ஆச்சரியப்படுமளவுக்கு மிக அனுகூலமாகவும், அதிர்ஷ்டத்தின் துணையோடும் அமைந்தது. இந்த அனுகூலமான நிலையில் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக, அப்பாவி மக்களையும், போலீசாரையும் கொன்று குவித்துப் பேயாட்டம் ஆடினார்கள். ஆனால் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வந்தது. அவர்களுக்காக, அவர்களைத் தடுத்து நிறுத்தியே தீருவதென்ற உறுதியுடன் ஒரு போலீஸ் குழு தயாராக இருந்தது. தங்கள் உயிரைப் பற்றிப் போலீசார் கடுகளவும் கவலைப்படவில்லை. இந்தச் சண்டையில் அபு இஸ்மாயில் கொல்லப்பட்டான். கசாப் உயிரோடு பிடிபட்டான்.
124. திருட்டு ஸ்கோடா வண்டியில் வந்த கசாப், அபு இஸ்மாயில் இருவரையும் தடுத்து நிறுத்தி, அவர்களைப் பிடித்த போலீஸ் குழுவைச் சேர்ந்த மூன்று சாட்சிகளிடம் மேற்கொண்ட விசாரணை முக்கியமானது. (இவர்களை விசாரிக்க விரும்புவதாக நீதிபதிகள் குறிப்பிடுகிறார்கள்)


சாலையில் தடைகள்:

125. டி.பி. சாலை காவல் நிலையத்தில் பணியாற்றுபவன் பாஸ்கர் தத்தாத்ரே காடம் (பி.ட்பிள்யூ.01). 2008 நவம்பர் 26ம் தேதி இரவு சுமார் 10.00 மணிக்கு மூத்த போலீஸ் அதிகாரி நாகப்ப மாலியிடமிருந்து இவருக்கு ஒரு உத்தரவு வந்தது. தெற்கு மும்பையில் சில இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்துள்ளதாகவும், உடனே கிர்கான் (வினோலி) சௌபாத்திக்கு குற்றவியல் உளவுப் பிரிவிலிருந்து (கிரைம் டிரெக்ஷன் பிரான்ச்) சிலரை அழைத்துக் கொண்டு சென்று, தடைகளைச் சாலையில் ஏற்படுத்தி நாகபந்தி செய்ய வேண்டுமென்பதே அந்த உத்தரவு. தனது மேலதிகாரி மாரியின் உத்தரவுப்படி காடம், க்ரைம் டிடெக்ஷன் ப்ரான்ச்சில் இருந்து 6 போலீசாருடன் வினோலி சௌபாத்தி நோக்கிக் கிளம்பினார். துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமந்த் பவன்கார் (பி.ட்பிள்யூ.3), பீடர் மொபைல் ஆபரேடர் சஞ்சய் பாட்டீல், பீடர் மொபைல் டிரைவர் சந்திரகாந்த் காம்ப்ளே, கிர்கான் சௌபாத்தி பீட் பொறுப்பாளர் துணை சப் இன்ஸ்பெக்டர் பவார், துணை சப் இன்ஸ்பெக்டர் கோசாலே, தலைமை கான்ஸ்டபிள் சவான், பி.என். நாயக் மற்றும் பல போலீசார் ஏற்கெனவே அங்கு வந்திருந்து நாகபந்தி ஏற்பாடுகளும் செய்து விட்டிருந்தனர். காடம் மற்றும் துப்பறியும் பிரிவுப் போலீசாருடன் சென்று அவர்களுடன் சேர்ந்து கொண்டார். சற்று நேரம் கழித்து துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒம்பாலே (கொல்லப்பட்டவர்) மற்றும் சில போலீசாருடன் நாகபந்தி இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.


சரண் அடைவது போல் பாசாங்கு:

126. பீடர் மொபைல் வண்டியில் இருந்து போலீஸ் குழுவுக்குத் தொடர்ந்து ஒயர்லென்ஸ் மூலம் செய்திகள் வந்து கொண்டிருந்தன. விதான் பவனில் இருந்து இரண்டு பயங்கரவாதிகள் மேரின் டிரைவ் வழியாக சௌபாத்தியை நோக்கி ஒரு ஸ்கோடா காரில் வந்து கொண்டிருப்பதாக அவர்களுக்குச் செய்தி வந்தது. இரவு சுமார் 0.30 மணிக்கு (அதாவது 12.30 மணிக்கு) தெற்கு மும்பையில் இருந்து சௌபாத்தியை நோக்கி மேரின் டிரைவ் வழியாக ஒரு ஸ்கோடா வருவதை இவர்கள் கண்டனர். ஸ்கோடாவைப் பற்றி ஏற்கெனவே எச்சரிக்கப் பட்டிருந்த போலீசார் - காடம் உட்பட - காரை நிறுத்துமாறு சைகை காட்டினார். தடைகளுக்குச் சுமார் 50 அடி தூரத்தில் ஸ்கோடா நின்றது. நாகபந்தி நடப்பதால் காரைச் சோதனை செய்ய வேண்டுமென்று போலீசார் கத்தினார்கள். காரின் முன் விளக்குகளை அணைக்குமாறும், உள் விளக்குகளை அணைக்குமாறும் ஸ்கோடா டிரைவரிடம் கூறினார்கள். ஆனால் டிரைவர் அவர்கள் சொல்லியதற்கு நேர் மாறாகச் செய்தான். முன் விளக்குகளை அணைக்காதது மட்டுமில்லாது வாடர் ஸ்ப்ரே மற்றும் வைபர்களையும் ஓடவிட்டான். காரில் உளளே இருப்பவர்களைப் பார்ப்பது போலீசுக்குக் கஷ்டமாகிவிட்டது. அடுத்து, தப்பிக்கும் முயற்சியில் ஸ்கோடா டிரைவர் காரை யூ திருப்பம் செய்ய முயற்சித் தான். தடைகளைத் தாண்ட முடியவில்லை. சாலையின் பிரிவுச் சுவரைத் தாண்ட முடியாது, கார் இடிபட்டு நின்றுவிட்டது. உடனே காடம் மற்றும் 6 போலீசார் விரைந்த காரைச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். உடனே டிரைவரும் அவனுக்கு இடப்புறம் அமர்ந்திருந்தவனும், சரணடைவது போலப் பாசாங்கு செய்து கைகளை உயர்த்தினார்கள். காடம் அவர்களை நெருங்கியவுடன், ஜன்னல் வழியாக அவரைச் சுடத் தொடங்கினான். தனது சர்வீஸ் ரிவால்வரிலிருந்து காடம் திருப்பிச் சுட்டார். அப்போது டிரைவருக்கும் காடமுக்கும் இடையே 10-20 அடி இடைவெளி இருக்கும். ஸ்கோடா டிரைவரைச் சுட்டு அவனைக் காயப்படுத்தியதாக காடம் நீதிமன்றத்தில் கூறினார்.


சாலையில் விழுந்த பயங்கரவாதி:

127. ஸ்கோடாவில் இருந்த இன்னொருவன், டிரைவருக்கு இடப்புறம் இருந்தவன் காரைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். வெளியில் வரும்போது வேண்டுமென்றே சாலையில்விழுந்தான். துணை சப் இன்ஸ்பெக்டர் துகாராம் ஓம்பாலே மற்றும் துணை இன்ஸ்பெக்டர் சஞ்சய் கோவில்கார் இருவரும் காரின் இடது முன் கதவை நோக்கிச் சென்றனர். துகாராம் ஓம்பாலேயிடம் ஏ.கே. 47 இருந்தது. அவரை நோக்கிச் சுடும்போது ஓம்பாலே தன்னைத் தாக்கியவன் மீது வேகமாகத் தாக்கிக் கொண்டு விழுந்தார். அவரது குழு, கோவில்கார் குழு இருவரும் அவனை லத்தியால் தாக்கினார்கள். அவனது ஏ.கே. 47 பறிக்கப்பட்டது. அவனும் காவலில் சிக்கினான் - கைதானான்.
128. சம்பவம் நடந்து 10 நிமிஷங்களுக்குள் சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவந்த் (பி.ட்பிள்யூ.31), போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரூல்கார், துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் யாதவ், துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் காவாடே (பி.ட்பிள்யூ.4), சப் இன்ஸ்பெக்டர் கெய்க்வாட் (பி.ட்பிள்யூ.24), மற்றும் சப் இன்ஸ்பெக்டர் வாரங்க் (பி.ட்பிள்யூ.27) சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தனர். இரண்டு ஆம்புலன்ஸ் வண்டிகளும் அதே சமயம் வந்து சேர்ந்தன.

129. ஓம்பாலே, கோவில்கார் இருவரும் இந்தப் போராட்டத்தில் காயமடைந்துவிட்டனர். பீடர் மொபைல் வேன் மூலம் அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று விட்டனர். போலீஸ் அதிகாரிகள் சுரூல்கார், காவாடே இருவரும் பயங்கரவாதிகளில் ஒருவனை - அபு இஸ்மாயில் - ஒரு ஆம்புலன்சில் எடுத்துச் சென்றார்கள். மற்றவன் (கசாப்) இன்னொரு வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டான். அதிகாரி வாரங் (பி.ட்பிள்யூ.27) மற்றும் சில போலீசார் இவனை எடுத்துச் சென்றனர்.


வழியிலேயே இறந்த பயங்கரவாதி:

130. பி.பி. சாலை காவல் நிலையத்தை காடம் சென்றடைந்தவுடன், பயங்கரவாதி அபு இஸ்மாயில் மருத்துவமனை வரும் வழியிலேயே இறந்து விட்டதாகவும், மற்றவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரத சகாகவேடா நாயர் மருத்துவமனையில் இருந்து செய்தி கூறியதாக, நீதிமன்றத்தில் (காடம்) கூறினார். மேலும் உயிரோடு இருக்கும் குற்றவாளி தனது பெயர் முகவரியை அஜ்மல் அமீர் கசாப், வயது 21, பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலம், உகாத் மாவட்டம், ஜிபால்புரா தாலுகா, பரீத்கோட் என்றும் இறந்து விட்ட பயங்கரவாதியின் பெயர் முகவரியை அபு இஸ்மாயில், வயது 25, பாகிஸ்தான், பஞ்சாப் மாநிலம், ஊர் தேரா இஸ்மாயில் கான் என்று கூறியதாக காவடே காடம் - க்குத் தெரிவித்தார். இந்த விபரங்கள் காவல் நிலைய நாட் குறிப்பில் காவாடே தெரிவித்த படி பதிவு செய்யப்பட்டது. சற்று நேரம் கழித்து ஹர்கிஷன்தாஸ் மருத்துவமனையில் இருந்து காயங்களின் கடுமையால் துணை சப் இன்ஸ்பெக்டர் ஒம்பாலே இறந்து விட்டதாகச் செய்தி வந்தது. இந்தச் செய்தியும் காவல் நிலைய நாட்குறிப்பில் பதிவு செய்யப்பட்டது.வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanasami Natarajan - chennai,இந்தியா
07-ஜூன்-201403:06:32 IST Report Abuse
Narayanasami Natarajan தயவு செய்து இதனை மறப்பதற்கு இச்செய்தினை நீக்கிவிடுங்கள்
Rate this:
Share this comment
Cancel
nimalan - bangalore,இந்தியா
02-ஜூன்-201416:13:13 IST Report Abuse
nimalan இந்தப் பதிவை ஏற்றியதற்கு தினமலருக்கு நன்றி. காவல்துறையினர் எவ்வாறு தன் உயிரையும் விட பிறரை பாதுகாத்தனர் என்ற தகவல்கள் நான் தெரிந்திராதது. ஒவ்வொரு சாட்சியும் நீதிமன்றத்தில் சாட்சி கூறுவதற்கு முன் எப்படிப்பட்ட மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார்கள் என்பதை நினைத்தாலே கண்ணில் நீர் வருகிறது. அவர்கள் வாழ்வில் இது மறக்கமுடியாத ஒரு அத்தியாயம். இதைக் எங்களுக்கு விரிவாக எடுத்துரைத்ததற்கு "தினமலர்" இணையதளத்திற்கு மீண்டும் மனமார்ந்த நன்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X