ஒரு கவிதை கூட எழுதியதில்லை: பாரதி பாஸ்கர்| Dinamalar

ஒரு கவிதை கூட எழுதியதில்லை: பாரதி பாஸ்கர்

Updated : ஜூன் 05, 2014 | Added : ஜூன் 05, 2014 | கருத்துகள் (26) | |
தமிழில் எவர் எப்படி பேசினாலும் அது சுவை. மொழியில், உச்சரிப்புகளில் பிசுறு பிழை இல்லாமல் பேசுவது என்பது ஒரு கலை. இக்கலையில் வெற்றி வாகை சூடுபவர்கள் தான் மக்கள் மனங்களில் இடம் பெற்ற பேச்சாளர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். நாலு ஜோக், நாகரிகம் தெரியாத பேச்சு என சிலர் பட்டிமன்ற மேடைகளை, தங்கள் தகுதி குறைவுகளால் தகர்த்து வரும் சூழல், மொழிப் பற்றாளர்களை கவலை கொள்ளச்
ஒரு கவிதை கூட எழுதியதில்லை: பாரதி பாஸ்கர்

தமிழில் எவர் எப்படி பேசினாலும் அது சுவை. மொழியில், உச்சரிப்புகளில் பிசுறு பிழை இல்லாமல் பேசுவது என்பது ஒரு கலை. இக்கலையில் வெற்றி வாகை சூடுபவர்கள் தான் மக்கள் மனங்களில் இடம் பெற்ற பேச்சாளர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். நாலு ஜோக், நாகரிகம் தெரியாத பேச்சு என சிலர் பட்டிமன்ற மேடைகளை, தங்கள் தகுதி குறைவுகளால் தகர்த்து வரும் சூழல், மொழிப் பற்றாளர்களை கவலை கொள்ளச் செய்கிறது.


பாமரத் தமிழும், பண்டிதத் தமிழும் தான் மக்களின் மனங்களை என்றும் ஆட்கொள்கின்றன. இந்த நுட்பத்தை புரிந்து கொண்டவர்கள் தான், பன்னாட்டு மேடைகளையும், தமிழன்னையால் அலங்கரித்து வருகின்றனர். அவர்களில் ஒருவராய் வலம் வந்து கொண்டிருப்பவர் பாரதி பாஸ்கர். அருந்தமிழ், இன்றமிழ், ஒண்டமிழ், கலைத் தமிழ், கவின் தமிழ், கன்னித் தமிழ், செந்தமிழ், செழுந்தமிழ், தண்டமிழ், திருத்தமிழ், தீந்தமிழ், தேன் தமிழ், நற்றமிழ், நறுந்தமிழ், பழந்தமிழ், பைந்தமிழ், முத்தமிழ் என்று நூற்றுக்கணக்கான அடைமொழிகள் தந்து, தாய் தன் குழந்தைகளை கொஞ்சுவது போல், மேடைக்கு மேடை இவரது மொழியின் அழகை ரசிக்கலாம்.


ஒரு சிறு நேர்காணல்...:

ஓய்வில்லாத வங்கிப் பணியிலும், இலக்கிய சினேகத்தால் ஒரு நதிபோல் ஓடிக் கொண்டிருக்கும் இவர், சில நாட்களுக்கு முன் மதுரையில் கம்பன் கழகத்தில் நடந்த விழாவில், இரண்டு தலைப்புகளில் பேசினார். இதை கேட்ட தமிழறிஞர் சாலமன்பாப்பையா, ''பாரதி பாஸ்கர் பேச்சை பல முறை கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் இங்கு பேசியது ஒரு காவியம்'' என பாராட்டு மழை பொழிந்தார். அந்த மகிழ்ச்சியில் மேடையில் இருந்து வெளியே வந்த அவருடன் ஒரு சிறு நேர்காணல்...
இலக்கிய மேடைகளை எப்படி உணர்கிறீர்கள்?
இலக்கிய மேடைகள் கிடைப்பதே அரிது. ஒரு ஆண்டில் 3 அல்லது 4 இலக்கிய மேடைகள் மட்டுமே கிடைக்கின்றன. மதுரையில் கம்பன் கழகம் ஒவ்வொரு ஆண்டும் இலக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இது போல் ஒரு சில அமைப்புகள் உள்ளன. அதில் பங்கேற்கும் வாய்ப்பு மனநிறைவைத் தருகிறது.


இலக்கிய பேச்சுக்கு வரவேற்பு கிடைப்பதில்லையா?

இலக்கிய தலைப்புகளை பெருவாரியான மக்கள் விரும்பவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் எல்லோரும் நகைச்சுவையாக பேசவேண்டும், நிகழ்ச்சி சிரிப்பலையாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இதையும் மீறி குறைவான எண்ணிக்கையில் இலக்கிய நிகழ்ச்சிகள் சுவையாக நடந்து வருகின்றன.
மக்கள் மனங்களில் இலக்கிய தாகத்தை ஏற்படுத்த முடியுமா?
திடீர் என மாற்றங்கள் வந்துவிடாது. புத்தக வாசிப்பு மக்களிடம் குறைந்து கொண்டே போகிறது. கண்ணும், காதும் படிக்க வேண்டும். புத்தக படிப்பினால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இலக்கியத்திற்கு கல்வி நிலையங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறதா?

தமிழாசிரியர்கள், பேராசிரியர்கள் செய்ய வேண்டிய பணி அதிகம். இதில் தொய்வு உள்ளது. சங்க கால இலக்கியம் கற்றுக் கொடுக்காவிட்டாலும், அண்மைக்கால இலக்கியமாவது கற்றுக் கொடுக்க வேண்டும். பாரதிதாசன், பாரதிக்கு பின் இலக்கிய நிலை என்ன என்பதை மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். கல்வி நிலையங்களும் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.


பட்டிமன்றங்கள் இப்போது ரசிக்கும்படி இல்லையே?

புத்தக வாசிப்புகள் இல்லாமல் மேடை ஏறுகிறார்கள். கத்தி கத்தி பேசுகிறார்கள். அடக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். அர்த்தம் இல்லாமல் பேசுகிறார்கள். இதற்கு காரணம் இவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை என்பது தான். இதே நேரத்தில் நல்ல திறமையுள்ள இளைய தலைமுறையினரும் மேடைக்கு வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
கவிதை, நாவல் எழுதி வருகிறீர்களா? படித்து வரும் புத்தகம்?
சோர்வாக இருக்கும் போது தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்கள் படிப்பேன். மேடைகளுக்கு தயாராகும் வகையில் பல தலைப்புகளில் புத்தகங்களை தேர்வு செய்து படிப்பேன். ஏற்கனவே சிறு தலைப்புகளில் எழுதியவை புத்தக வடிவில் வந்துள்ளன. நாவல் எழுதவில்லை. அதே நேரத்தில் நான் ஒரு கவிதை கூட இன்றுவரை எழுதியதே இல்லை.
பேச்சுக்கு யாரை பின்பற்றுகிறீர்கள்? இளைய தலைமுறைக்கு சொல்வது என்ன?

கண்பார்வை இல்லாத நிலையிலும் மேடைகளில் பேசிய, தமிழறிஞர் ஆ.சா.ஞானசம்பந்தன் பேச்சு மனதில் இப்போதும் நிற்கிறது. பார்வையில்லாத அவர் பேசும் போது கூட்டத்தில் யார் எழுந்து சென்றாலும் அதை உணர்ந்து கொள்ளும் அளவிற்கு கூட்டத்தினருக்கும், அவருக்குமான தொடர்பு உணர்வில் இருந்தது. இளைய தலைமுறையினர் புத்தகங்களை படிக்க வேண்டும். படித்தால் பேசலாம், எழுதலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X