பாலக்காடு: குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து, கேரள அரசுக்கு, அம்மாநில உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில், கடந்த, 24, 25 ஆகிய தேதிகளில், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த, 600க்கும் மேற்பட்ட, கடத்தப்பட்ட குழந்தைகள் வந்திறங்கினர். இது தொடர்பாக, எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
தரமான உணவு:
இதற்கு, அம்மாநில சிறுபான்மை நல கமிஷன் தலைவர் வீரான் குட்டி, ''இது, மனித கடத்தல் அல்ல; ஆதரவற்றோர் விடுதியில், தரமான உணவு, தங்குமிடம், நல்ல கல்வி போதிக்கப்படுகிறது,'' எனக் கூறினார். இச்சம்பவம், கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தைகள் கடத்தல் சம்பவம் தொடர்பாக, பொது அமைப்பு ஒன்று, கொச்சி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதற்கு, கேரள அரசு, கோர்ட்டில் விளக்கம் அளித்தது. தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், நீதிபதி ராமசந்திர மேனன் ஆகியோர், அம்மாநில அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். கேரள மாநிலத்தில், ஆதரவற்றோர் இல்லத்திற்கு குழந்தைகள் அழைத்து வந்ததாக கூறப்படும் நிலையில், அக்குழந்தைகளுக்கு தாய், தந்தை உள்ள நிலையில், எப்படி ஆதரவற்றவர்களாக கூற முடியும். படிக்க வைப்பதற்காக, எதற்காக, ஆதரவற்றோர் விடுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இக்குழந்தைகளை ரயிலில் அழைத்து வருவதற்கு டிக்கெட் தேவையில்லையா? விடுமுறையை கொண்டாட, சொந்த ஊருக்கு சென்ற குழந்தைகளுடன் சேர்ந்து, பிற குழந்தைகள் வந்திருப்பதாக, கேரள அரசு கூறும் கருத்தை ஏற்கமுடியாது. இவ்வாறு, நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
19ம் தேதிக்குள் அறிக்கை:
மேலும், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய, மாநிலங்களைச் சேர்ந்த, ரயில்வே நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் வரும், 19ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். மே 24ல், குழந்தைகள் யாருடைய பாதுகாப்பில் இருந்தனர்; குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் நடத்திய ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என, தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், நீதிபதி ராமசந்திரன் மேனன் ஆகியோர், உத்தரவிட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து, கடத்தி வரப்பட்ட, 123 குழந்தைகளை, வரும், 9ம் தேதி, திருப்பி அனுப்ப, கேரள அரசு முடிவு செய்துள்ளது.