அரசியல் செய்தி

தமிழ்நாடு

கழிவறை இல்லாததால் பெண் வன்கொடுமை அதிகரிக்கிறதா?

Added : ஜூன் 07, 2014 | கருத்துகள் (1)
Share
Advertisement
உத்தர பிரதேசத்தில் இரண்டு இளம்பெண்கள், திறந்த வெளி கழிவறைக்கு சென்றபோது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்டது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில், வளர்ந்த மாநிலங்களில் ஒன்றான, தமிழகத்தில் கூட, நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும், கழிவறைகள் இல்லாமல், பெண்கள் பாதிப்புக்கு உள்ளாவது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து, சமூக

உத்தர பிரதேசத்தில் இரண்டு இளம்பெண்கள், திறந்த வெளி கழிவறைக்கு சென்றபோது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்டது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில், வளர்ந்த மாநிலங்களில் ஒன்றான, தமிழகத்தில் கூட, நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும், கழிவறைகள் இல்லாமல், பெண்கள் பாதிப்புக்கு உள்ளாவது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் முன் வைக்கும் கருத்துக்கள் இதோ:

பொது இடங்களை கழிவறையாகப் பயன்படுத்தும்போது, பெண்கள் மீது பாலியல் வன்முறை நிகழ்வதோடு, சுகாதார ரீதியான பல்வேறு நெருக்கடிக்கும் அவர்கள் உள்ளாகின்றனர். வீடுகளில் கழிவறை இல்லாதபோது, பொது இடங்களுக்கு, சூரியன் உதிப்பதற்கு முன்போ, அஸ்தமனம் ஆன பின்போ தான், பெண்கள் செல்ல முடியும். இருட்டிய இந்த வேளையில், விஷப் பூச்சிகளின் கடிக்கு ஆளாகுதல், பள்ளம் என தெரியாமல், உள்ளே விழுந்து விடுவது போன்றவற்றால், உடனடியாக உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதுதவிர, ஏற்கனவே கழிவுகள் சேர்ந்து உள்ள இடத்தைப் பயன்படுத்துதல், சுகாதாரமற்ற இடங்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றால், பெண்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. இதனால், அவர்களது தாய்மை பாதிக்கும்; அவர்களின் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. வீடுகளில், கழிவறை கட்ட முடியாமல் இருப்பதற்கு, முதலில் இடம் பற்றாக்குறையாக இருப்பதும், பொருளாதார நெருக்கடியும் காரணங்களாக உள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களின் காலனிகளுக்காக, பொது கழிவறைகள் கட்டப்பட்டு இருந்தாலும், தண்ணீர் பற்றாக்குறை, பராமரிப்பு குறைவு, எளிதில் சென்று வர முடியாத தூரம் ஆகியவற்றால், அவையும் முழு பயன்பாட்டில் இல்லாமல் உள்ளன. தமிழகத்தில், நிலவும் தண்ணீர் பற்றாக்குறை தான், பெரும்பாலான பொது கழிப்பிடங்கள் பயன்படுத்த முடியாமல் இருக்கின்றன.

பாடம் நாராயணன், சமூக ஆர்வலர்

வீடுகளில் உலர் கழிவறைகள் இருந்தபோது, அவற்றை சுத்தம் செய்யும் வேலையை தாழ்த்தப்பட்ட மக்கள் தான் செய்து வந்தனர். மனிதக் கழிவுகளை மனிதனே சுமந்து அப்புறப்படுத்தக் கூடாது என்பதற்காக, மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதையடுத்து, உலர் கழிவறைகள் தடை செய்யப்பட்டு, தண்ணீர் மூலம் சுத்தம் செய்யும், கழிவறைகள் கட்டப்பட்டன. மேலும், கிராமங்களில் உள்ள வீடுகளில் கழிவறைகள் மற்றும் பொது கழிவறைகள் திட்டமும் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில், போதிய நீர் ஆதாரம் இல்லாததால், பெரும்பாலான கழிவறைகள் பயன்படுத்தப்படுவதில்லை. கழிவறைகளுக்காக போராடும் நிலையில் இருப்பவர்கள், பெரும்பாலும், தாழ்த்தப்பட்ட மக்களாகவே உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் பல்வேறு இலவசத் திட்டங்களை அளிக்கின்றன. இதனால், தற்காலிகமாக வயிற்றுப் பசியைப் போக்க முடிகிறதே தவிர, நிரந்தமான தீர்வு ஏற்படுவதில்லை. வறுமை என்பதை வெறும் வயிற்றுப் பசியோடு மட்டும் ஒப்பிடுகின்றனர். வீடு, நிலம் போன்ற வாழ்வாதார தேவையோடு, கல்வி, வேலைவாய்ப்பை அளிக்கும்போது, தாழ்த்தப்பட்ட மக்கள், தங்களை முன்னேற்றிக் கொள்ள முடியும். கழிவறை மட்டுமல்ல போதிய மருத்துவ வசதியையும், அவர்கள் ஏற்படுத்திக் கொள்வர். இந்நிலையில், பொது இடங்களுக்கு கழிவறைக்காக பெண்கள் செல்லும்போது மட்டும் பாலியல் வன்முறை ஏற்படுவதில்லை. ஆனால், பாலியல் வன்முறைக்கு, வீடுகளில் கழிவறை இல்லாததும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.

சிவகாமி, சமூக சமத்துவ படை

கழிவறை இல்லாத வீடுகள், கிராமப்புறத்தில் மட்டுமல்ல, நகர்ப் பகுதிகளிலும் மிக அதிகமாக உள்ளன. இதனால், பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவது, நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. ஒரு குடும்பம் தங்குவதற்கே போதிய இடவசதி இல்லாத வீடுகளில், கழிவறைகள் கட்ட முக்கியத்துவம் அளிக்க முடியாத நிலையில், மக்கள் உள்ளனர். இவர்களுக்காக, பொது கழிவறைகள் கட்டப்பட வேண்டும். பொதுவாக, வீட்டுக்குள் கழிவறை அமைப்பதை, கிராமப்பகுதி மக்கள் விரும்புவதில்லை. அவர்கள், திறந்த வெளிக்கு செல்வதையே ஒரு கலாசாரமாகக் கொண்டுள்ளனர். இந்த பழக்கத்தை மாற்ற வேண்டும். திறந்த வெளியில் செல்வதால், பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகள் மற்றும் சுகாதாரக் கேடு பற்றி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கழிவறை அவசியம் என்பதை, அரசும் கட்டாயமாக்க வேண்டும். பொது கழிவறைகளை தூய்மையாகப் பயன்படுத்துவதையும், அவற்றை முறையாகப் பராமரிப்பதையும், அரசு உறுதி செய்ய வேண்டும். கழிவறைகளை, காசு கொடுத்து பயன்படுத்தும் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும். பெண் குழந்தைகள் பயிலும் அரசு பள்ளி கள் பெரும்பாலானவற்றில், கழிவறைகள் இல்லை. சில பள்ளிகளில் கழிவறை இருந்தாலும், தண்ணீர் இல்லாமல் பயன்படுத்த முடியவில்லை. இதனால், பள்ளிக்கு வெளியே செல்லும்போது, பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகின்றனர். எனவே, பள்ளிகளில் கழிவறைகள் கட்ட முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

சுகந்தி, பொதுச்செயலர், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம்

வீடுதோறும் கழிவறைகள் வேண்டும், மக்கள் கூடும் இடங்களில் கழிவறை கட்ட வேண்டும் என, நாடு சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால், இதுவரை அத்திட்டம் பூர்த்தியாகவில்லை. கழிவறைகள் அமைத்தால், கழிவுகளை வெளியேற்றுவதிலும் சிக்கல் நிலவுகிறது. வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு, வீட்டைச் சுற்றி நின்றுவிடும் என்பதாலும், கழிவறைகளை அமைக்க பலர் முன் வருவதில்லை. நகர்ப்புறங்களில், இப்போது தான் பாதாள சாக்கடைத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. கழிவறையின் முக்கியத்துவத்தை அரசு மட்டும் எடுத்துச் சொன்னால் போதுமானது அல்ல; கிராம சபைகளில் விவாதத்துக்கு விட வேண்டும். யாருக்கு திட்டம் பலன் அளிக்கிறதோ, அவர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு, திட்டத்துக்கு வடிவம் கொடுக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்த விவாதம் இன்னும் துவங்கப்படாமலே உள்ளது. தங்கவும், தூங்கவும், சாப்பிடவும் போதிய இடம் இல்லாதபோது, கழிவறை கட்ட எங்கே செல்வது என்ற கேள்வியே, இது நாள் வரை மிஞ்சியுள்ளது. அதே போல், மக்கள் அன்றாடும் கூடும் இடங்களான, பஸ் நிலையம், வணிக வளாகம், பள்ளிகள் போன்றவற்றில் கூட, தேவைக்கு ஏற்ப கழிவறைகள் கட்டப்படவில்லை. இதனால், கழிவறைகளுக்குள் செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர். பொது இடங்களில் கழிவறைக்கு செல்லும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கும், சுகாதாரக்கேடுக்கும் ஆளாகின்றனர். கழிவறை என்பது அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவை என்பதை உணர்ந்து, அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

நாகசைலா, மக்கள் சிவில் உரிமை கழகம்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sutha - Chennai,இந்தியா
08-ஜூன்-201406:35:07 IST Report Abuse
Sutha கல்வி, வேலைவாய்ப்பை அளிக்கும்போது, தாழ்த்தப்பட்ட மக்கள், தங்களை முன்னேற்றிக் கொள்ள முடியும். கழிவறை மட்டுமல்ல போதிய மருத்துவ வசதியையும், அவர்கள் ஏற்படுத்திக் கொள்வர்.இதன் மூலம்தான் சமுதாயத்தில் இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X