மத்திய அரசில், மீனவர்கள் நலனுக்காக, புதிய அமைச்சகம் துவக்கப்பட உள்ளது. இந்த துறையின் அமைச்சராக, தமிழகத்தைச் சேர்ந்த, இல.கணேசன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழக மீனவர்கள் பிரச்னை உட்பட, நாட்டின் கடலோர பகுதிகளில் வாழும், மீனவர்கள் பிரச்னை மத்திய அரசுக்கு, கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக, கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும், தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு ஆளாகாமல் திரும்பி வந்தாலே, அது பெரிய அதிர்ஷ்டமாகவே கருதப்படுகிறது.இப்படி தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை ராணுவத்தினரின் கொடூரங்களைச் சந்திப்பதால், இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை குறித்து, லோக்சபா தேர்தலுக்கு முன்னரே, நரேந்திர மோடியிடம், தமிழக பா.ஜ., தலைவர்கள் எடுத்துரைத்தனர்.அதனால், 'பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், தமிழக மீனவர்கள் பிரச்னை உட்பட, நாட்டின் ஒட்டுமொத்த மீனவர்கள் பிரச்னையையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரச்னை காரணமாகவே, தனது பிரதமர் பதவியேற்கும் விழாவுக்கு வரும்படி, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு, மோடி அழைப்பு விடுத்தார். குறிப்பாக, இலங்கை அதிபர் ராஜபக் ஷேக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.
அந்த அழைப்பை ஏற்று, பதவியேற்பு விழாவில் பங்கேற்ற, ராஜ்பக் ஷேயிடம், பேச்சுவார்த்தை நடத்திய மோடி, 'தமிழக மீனவர்கள் பிரச்னையை தீர்க்க வேண்டும். அதற்கு, இலங்கை அரசு பல விஷயங்களில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்' என, தெள்ளத்தெளிவாக தெரிவித்தார்.இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின், ஒரு சில நாட்கள் மட்டுமே, இலங்கை ராணுவம் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டது. அதன்பின், தன் அத்துமீறலை துவக்கி உள்ளது. இதனால், தமிழகத்தில் மீண்டும் கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.இப்படி மீனவர்கள் பிரச்னை தொடர் கதையாகி வருவதால், மத்திய அமைச்சரவையில் மீனவர் நலனுக்காக, புதிய துறை ஒன்றை ஏற்படுத்தி, அதற்கு அமைச்சர் ஒருவரை நியமிக்க, பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து, மத்திய அரசு வட்டாரங்களில் கூறியதாவது:
நாட்டின் சில மாநில மீனவர்கள் அடிக்கடி, அண்டை நாட்டு கடற்படையினரால் தாக்குதலுக்கு ஆளாகின்றனர் அல்லது சிறை பிடிக்கப்படுகின்றனர்.இது, பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. குறிப்பாக, இலங்கை ராணுவத்தால், தமிழக மீனவர்களுக்கு தினமும் பிரச்னைகள் உருவாகிறது. இந்தப் பிரச்னையை வெளியுறவு அமைச்சகம் கவனித்தாலும், அதனால், நிரந்தர தீர்வு காண முடியவில்லை.எனவே, மீனவர்கள் பிரச்னையை தீர்த்து, அவர்களின் நலன்காக்க தனியாக ஒரு துறையை ஏற்படுத்தவும், அதற்காக அமைச்சர் ஒருவரை நியமிக்கவும், பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.இப்படி உருவாக்கப்படும் துறைக்கும், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார். அனேகமாக, தமிழக பா.ஜ., மூத்த தலைவரான, இல.கணேசனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம். அப்படி நடக்காத பட்சத்தில், மோடியின் நேரடி அபிமானம் பெற்ற வானதி சீனிவாசன், அந்த பொறுப்பில் நியமிக்கப்படலாம்.இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது சிறப்பு நிருபர்-