பொது செய்தி

தமிழ்நாடு

இலக்கிய உலகில் புது சர்ச்சை: இரண்டு தரப்பும் சொல்வது என்ன?

Added : ஜூன் 12, 2014 | கருத்துகள் (1)
Share
Advertisement
'பெண் படைப்பாளிகளை, எழுத்தாளர் ஜெயமோகன் கொச்சைப்படுத்தி விட்டார்' என, குற்றம்சாட்டி, அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட போவதாக, பெண் படைப்பாளிகள் அறிவித்துள்ளனர். இதனால், தமிழ் எழுத்துலகில், பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது.மூத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன், வாரப்பத்திரிகை ஒன்றில், பிரபல எழுத்தாளர்கள் என, 27 பேரை வரிசைப்படுத்தினார்.

'பெண் படைப்பாளிகளை, எழுத்தாளர் ஜெயமோகன் கொச்சைப்படுத்தி விட்டார்' என, குற்றம்சாட்டி, அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட போவதாக, பெண் படைப்பாளிகள் அறிவித்துள்ளனர். இதனால், தமிழ் எழுத்துலகில், பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது.
மூத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன், வாரப்பத்திரிகை ஒன்றில், பிரபல எழுத்தாளர்கள் என, 27 பேரை வரிசைப்படுத்தினார். அவர்களில், 11 பேர் பெண் எழுத்தாளர்கள். நாஞ்சில் நாடனின் பட்டியல் குறித்து, எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பூவில், எழுதியிருப்பதாவது: இதுபோன்ற பட்டியல்கள், தமிழ் எழுத்துலகில் ஒவ்வொரு கால கட்டத்திலும் வெளியிடப்பட்டு உள்ளன. அதை, பலர் ஏற்றுள்ளனர்; ஏற்று கொள்ளாமலும் உள்ளனர். பட்டியலில் உள்ள ஆண் படைப்பாளர்கள், சிறப்பாக எழுதக் கூடியவர்கள் தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன். ஆனால், பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல், பலவகை உத்திகள் மூலம், ஊடக பிம்பங்களாக ஆனவர்கள். பலரை ஏன், எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என, நாஞ்சில் சொல்கிறார் என்றே புரியவில்லை. இது ஒரு முக்கியமான அம்சம். ஆண்கள் எழுதித் தான் நிற்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு, பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது.


'ஜகா' வாங்கி விடுவர்:

கொஞ்சம் பெண்ணியம் பீறிட்டால், பெரும்பாலானவர்கள், 'எதுக்கு வம்பு, காலம் கெட்ட காலத்திலே?' என்று 'ஜகா' வாங்கி விடுவர். இவர்களை சேர்த்த அடிப்படையில், பாவம், தமிழச்சி தங்கபாண்டியனையும், கனிமொழியையும் சேர்த்து இருக்கலாம். இப்போது தேர்தலில் தோற்றிருந்தாலும், அடுத்த ஐந்தாண்டில், தமிழ்ச் சிற்றிதழ்களில் அவர்கள் முக்கியமான கவிஞர்களாக இருப்பார்கள் தானே? இவ்வாறு, ஜெயமோகன் கூறிஉள்ளார்.

அவரது இந்த கருத்துக்கு, பெண் படைப்பாளிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜெயமோகனை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, எழுத்தாளர் குட்டி ரேவதி கூறியதாவது: பெண்களை ஒழுக்கமில்லாதவர்கள் என, சித்தரிப்பதே ஜெயமோகனின் வேலை. தொடர்ந்து இதை செய்து வருகிறார். தற்போது, பெண் எழுத்தாளர்கள் குறித்து அவர் கூறிய கருத்துகளுக்கு, ஆண் எழுத்தாளர்கள் எவரும் கண்டனம் தெரிவிக்காமல் உள்ளது, வருந்தத்தக்கது. ஆண் எழுத்தாளர்கள் அனைவரும், பெண்களை இழிவுபடுத்துகின்றனர் என, நாங்கள் எண்ணவில்லை. ஆனால், ஜெயமோகன் போன்றோருக்கு, ஆதரவாக இருக்கின்றனரே என்ற, கோபம் உள்ளது. எழுதுவதற்கு தேவையான கரு, ஒரு எழுத்தாளருக்கு இல்லாதபோது, அவர் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தி, தன்னை எழுத்துலகில் தக்க வைத்து கொள்ள முயற்சிப்பார். அதுபோன்ற நிலையை தான், ஜெயமோகன் எடுத்து உள்ளார். குடிபோதையில் உள்ளவர்கள், பெண்களை கேவலமாக பேசுவதைப் போல, ஜெயமோகனின் எழுத்துக்கள், பெண்களை கொச்சைப்படுத்துகின்றன. கடந்த, 25 ஆண்டுகளாக அவர் இதைத் தான் செய்து வருகிறார்.


ஆர்ப்பாட்டம்:

ஜெயமோகனின் இந்த கருத்தை கண்டித்து, பெண் படைப்பாளர்களை இணைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதற்கான, அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


எழுத்தாளர் மாலதி மைத்ரி கூறியதாவது:

ஆணாதிக்க சிந்தனை உள்ளவர் ஜெயமோகன். பெண் எழுத்தாளர்கள், கமலா பாஸ்கர், அருந்ததி ராய் போன்றோரை, ஏற்கனவே கொச்சைப்படுத்தியவர். இப்போது, ஒட்டுமொத்த பெண் எழுத்தாளர்களை அசிங்கமாக சித்தரிக்கிறார். ஜெயமோகனின் எழுத்தை காதலித்து, அவரை திருமணம் செய்து கொண்டவர் அவர் மனைவி. அவரும் ஒரு சிந்தனையாளர். பல விமர்சன கட்டுரைகளை எழுதி வந்தார். அவரது பெயரில், ஜெயமோகன் எழுதிய விமர்சன கட்டுரையால், கடும் விமர்சனங்களுக்கு, ஆளானார். இதன்பின் அவர் எழுதுவதில்லை.


கொச்சைப்படுத்துகிறார் :

தன் மனைவி, பிரபல எழுத்தாளராக இருப்பதையே ஏற்றுக்கொள்ளாத, ஜெயமோகன், பிற பெண் எழுத்தாளர்களை எப்படி ஏற்றுக் கொள்வார்? அதனால், அவர் எங்களைப் போன்ற எழுத்தாளர்களை கொச்சைப்படுத்துகிறார். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து, ஜெயமோகன் கூறியதாவது: பிரபல பெண் எழுத்தாளர்கள் என்ன சாதித்துள்ளனர், பிரபலமாக அவர்கள் இருப்பதற்கு, அப்படி என்ன எழுதி சாதித்துவிட்டனர் என, கேள்வி எழுப்புவதற்கு, வாசகனாக எனக்கு உரிமை உள்ளது. ஆண் எழுத்தாளர்கள் பலர், பல சாதனைகளை செய்துள்ளனர். அதுபோன்ற சாதனைகளை, பிரபலமாக உள்ள பெண் எழுத்தாளர்கள் செய்யவில்லை என்பதே என் குற்றச்சாட்டு. அதேநேரத்தில், சாதனை படைத்த பல பெண் எழுத்தாளர்களை வானளாவ புகழ்ந்தும் எழுதியுள்ளேன். எனவே, என் கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பது, தர்ணா நடத்துவது போன்றவற்றை ஆபாசமாகவே கருதுகிறேன். இவ்வாறு, ஜெயமோகன் கூறினார். இவ்வாறாக, தமிழ் இலக்கிய உலகில், புதிய சர்ச்சை தோன்றி பரபரப்பிற்கு வித்திட்டுள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
13-ஜூன்-201401:02:37 IST Report Abuse
spr திரு ஜெய மோஹன் பொதுவாகக் கூறிய கருத்துக்கள் ஒருவகையில் சரியே பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல், பலவகை உத்திகள் மூலம், ஊடக பிம்பங்களாக ஆனவர்கள். பலரை ஏன், எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் எனச் சொல்கிறார்கள் என்றே புரியவில்லை.எழுத்துலகில் மட்டுமல்ல, எந்தத் துறையிலுமே, ஆண்கள் சாதித்தபின்னரும் கூட புகழடைய முடியவில்லை. பெண்களுக்கு, எதிலுமே தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது இது உலக இயல்பு. அவர்களுக்கு பல ஆண்களே அங்கீகாரம் தந்துவிடுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X