சென்னை:''சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள், மீண்டும் கூட்டுக் குடும்ப முறைக்கு மாறுவதே, எதிர்கால சமுதாயம் சிறக்க நல்ல வழி,'' என, முதியோர் வன்கொடுமை எதிர்ப்பு நாளில், மூத்த குடிமக்கள் சங்க பொதுச்செயலர், சுப்புராஜ் தெரிவித்தார்.முதியோருக்கு எதிரான வன்கொடுமைகள் எதிர்ப்பு தினமான, ஜூன் 15ம் நாளை ஒட்டி, 'ஹெல்ப்ஏஜ் இந்தியா' சார்பில், சென்னையில், விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. போலீஸ் இணை கமிஷனர் சங்கர், ஆய்வு நுாலை வெளியிட, மாவட்ட சமூகநல அலுவலர், ரேவதி பெற்றுக் கொண்டார்.
இந்திய மூத்த குடிமக்கள் சங்கங்களின், தேசிய கூட்டமைப்பு பொதுச் செயலர் சுப்புராஜ் பேசியதாவது: கூட்டுக் குடும்ப நிலை மாறியதால், முதியோர் புறக்கணிப்பு நடக்கிறது. பெற்ற குழந்தைகளே கைவிட்டு விட்டனரே என்ற வருத்தம், நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சராசரி வாழ்க்கை வயதும், 65க்கு கீழ் குறைந்து விட்டது. கணவன், மனைவி இருவரும் சம்பாதித்தால் தான், குடும்பம் நடத்த முடியும்; குழந்தைகளை கவனிக்க ஆட்கள் இல்லை. ஐந்து வயது வரை, குழந்தைகளுக்கு நல்ல கதைகள், பாரம்பரியத்தை சொல்லித் தந்து, அன்பும், ஆதரவும் காட்ட, முதியோர் அவசியம்.அதற்கு, மீண்டும் கூட்டுக் குடும்ப நிலை உருவாக வேண்டும். சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள், கூட்டுக் குடும்பங்களாக வாழ தங்களை மாற்றிக் கொண்டால், எதிர்கால சமுதாயம் சிறப்பானதாக மாறும்.இவ்வாறு, அவர் பேசினார்.
கொடுமையில் மிஞ்சும் மருமகள்?முதியோர் வன்கொடுமை ஆய்வு குறித்து, 'ஹெல்ப் ஏஜ் இந்தியா' அமைப்பின், இணை இயக்குனர் சிவகுமார் கூறியதாவது:நாடு முழுவதும், 23 சதவீதமாக இருந்த முதியோருக்கு எதிரான கொடுமைகள், தற்போது, 50 சதவீதமாக அதிகரித்து விட்டது.டில்லியில், 22 சதவீதம் என, குறைவாகவும், பெங்களூருவில், 75 சதவீதம் என, அதிகமாகவும் கொடுமைகள் நடக்கின்றன. சென்னையில், 53 சதவீதமாக உள்ளது.சென்னையில், மருமகளால், 37 சதவீதமும், மகன்களால், 56 சதவீதமும் கொடுமைகள் நடந்ததாக பதிவுகள் இருந்தன. தற்போது, மகன்களைக் காட்டிலும், மருமகள்கள் மிஞ்சிவிட்டனர். மருமகள்களால் ஏற்படும் கொடுமை, 53 சதவீதமாக உயர்ந்ததோடு, மகன்களால் ஏற்படும் கொடுமைகள், 38 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.