இலண்டனில் வெம்புலி என்ற இடத்தில் அமைந்துள்ள ஈழபதீஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயம் ஆகும். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வியாபார ஸ்தலமாகிய கடைகள் நிறைந்த இடம். இத்திருத்தலத்தின் அருகில் தென்னிந்திய சைவ உணவுக்கூடமான சரவணபவன் உணவுக்கூடம் அமைந்துள்ளது தமிழ் வாழ் இங்கிலாந்து மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஆகும். இத்தலத்தின் அருகில் ஸ்ரீசனாத்தன இந்து ஆலயம் அமைந்துள்ளது. கடை வீதி வழியாக நடந்தே சென்று, குஜராத் பாரம்பரியத்துடன் கட்டப்பட்ட ஸ்ரீசனாத்தன இந்து ஆலயத்திற்கும் சென்று அங்கு இறைவனைத் தரிசித்து வரலாம். இத்தலத்தின் அருகில் பூஜைப் பொருட்கள் வாங்குவதற்குரிய அனைத்து வசதிகளும் உள்ளன.
இத்திருத்;தலத்தில் உள் நுழைந்ததும் நாம் அருள்மிகு வினாயகரை வழிபடலாம். முக்கிய மூலவரான எம்பெருமான் ஈழபதிஸ்வரரை நாம் வணங்கி விட்டு அவரது வலப்புறத்தில் தனியொரு சன்னதியில் அருள்பாலிக்கும் பர்வதவர்த்தினியை நாம் வழிபடலாம். எம்பெருமானை வலம் வரும் போது நாம் வணங்க இருக்கும் அருள் மிகு தெய்வங்கள் அருள்மிகு நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் ஆவர். இதற்கு அடுத்து மேலும் நாம் வணங்க இருப்பது சிவன் பார்வதியின் தெய்வீக காட்சியாகும். இத்தலத்தில் நவகிரகத்திற்கு என்று தனி சன்னதி அமைந்திருப்பதைக் காணலாம்.
மேலும் கோஷ்ட தெய்வங்களான கணபதி,தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், துர்க்கை ஆகிய அருள்மிகு தெய்வங்களை வணங்கிச் செல்ல இத்தலத்தில் மூர்த்திகள் உள்ளன. இத்தலத்தில் எம்பெருமான், பால்வண்ண நாதர் என்ற பெயரிலும் தனி சன்னதியில் இருந்து பக்தர்களை அருள்பாலிக்கின்றார். இவருக்கு அருகில் உள்ள தனிதனி சன்னதிகளில் நாம் பாலசுப்பிரமணியுர், அய்யப்பன் வெங்கடாசலபதி,பத்மாவதி தாயார்,ஹனுமார் சொர்ண கர்ஷண பைரவர் ஆகிய அருள்மிகு தெய்வங்களை வணங்கிச் செல்லலாம். இத்திருத்தலத்தில் நாகர் வழிபாடு சிறப்பாக நடைபெறுகின்றது. இத்திருத்தலம் செல்வதற்கு வசதியாக இருக்கும் பொருட்டு, வாசகர்களின் நலன் கருதி விலாசத்தை குறிப்பிடுகிறேன். ஈழபதீஸ்வரர் சிவா ஆலயம்,பவிட் ஹால்,யூனியன் சாலை,வெம்புலி,இலண்டன். மேலும் விவரங்களுக்கு அணுக வேண்டிய கையகப்பேசி எண் 020 8902 3238
இத்திருத்தலம் சென்று வந்தால், நமக்கு இந்தியாவிற்கே சென்று வந்தது போன்ற உணர்வுகள் நிச்சயம் ஏற்படும். பொதுவாக ஈஸ்ட்ஹாம் என்ற இடத்தில் இந்தியர்கள் அதிகம் இருப்பதை நாம் அனைவரும் பார்த்தது உண்டு. இப்போது இங்கும் எங்கும் இந்திய மக்களின் நடமாட்டத்தையே காண முடிந்தது. நமது நாட்டுக் கலாச்சாரம் பண்பாடு போன்றவைகள் வேறூன்றி இருக்கின்றது என்பதற்கு இலண்டனில் உள்ள வெம்புலி வந்து பார்த்தாலே நன்கு புரிந்து கொள்ளலாம்.
- லண்டனிலிருந்து ச.பொன்ராஜ்
துபாய் நூலகத்துக்கு வழங்கப்பட்ட முதல் தமிழ் நூல்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.