சான் ஓசே நகரில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இன்னிசை திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சான் ஓசே நகரில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இன்னிசை திருவிழா

ஏப்ரல் 03,2019  IST

Comments

 

சான்ஓசே: சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் “தமிழ்ப் பண்பாட்டு மையம்” அமைக்கும் பொருட்டு தொகை திரட்டுவதற்காக, சான்ஓசே நகரில் வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்திய எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இன்னிசை திருவிழா, லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவினர் இசையுடன், தமிழ் மன்றத்தின் சூப்பர் சிங்கர் நடுவர்கள்-வெற்றியாளர்களும் கோலாகலமாக நடைபெற்றது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மக்கள் அனைவருடன் சேர்ந்து லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவினர் தமிழ்த் தாய் வாழ்த்து பாட, விழா இனிதே தொடங்கியது. விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தமிழ் மன்றத்தின் செயலாளர் ராஜா அழகர்சாமி வரவேற்றுப் பேசினார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இறந்த அப்பாவி மக்களுக்கும் மற்றும் தாய்த்திருநாட்டில் இறந்த போர்வீர்களுக்கும் எல்லோரும் எழுந்து ஒரு நிமிடம் அமைதி காத்தனர். தமிழ் மன்றத்தின் தலைவர் அண்ணாமலை முத்துக்கருப்பன் தலைமை உரையாற்றி லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவினரை மேடையில் அறிமுகப்படுத்தினார்.

விழாவின் அறிமுக பாடலாக 'அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே' என லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவினர் பாடும்போது 'தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே, ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும் ' என்ற பாடல் வரிகளைக் கேட்டு அரங்கத்தில் இருந்த எல்லோரும் பலத்த கரவொலி எழுப்பியது, 'நம் மனம் மெழுகாய் உருகும் கரையும்' என்பதை உண்மையாக்கியது.

இந்த பாடலைத் தொடர்ந்து “பேட்ட” படத்தின் தலைப்பு இசையினை இசைக்குழுவினர் இசைக்க அரங்கம் அதிரும் கரவொலியுடன் அட்டகாசமாக அனைவர் முன்னும் தோன்றினார் கலைமாமணி 'பாடும் நிலா' டாக்டர் பாலசுப்ரமணியம். இந்நிகழ்ச்சியின் தனது முதல் பாடலாக, இசைஞானி இளையராஜா இசையமைத்து பெரும் வெற்றி பெற்ற பாடலான 'இளையநிலா பொழிகிறதே' எனும் பாடலை பாட ஆரம்பிக்கும் போது ரசிகர்கள் அனைவரும் குதூகலம் அடைந்து கரவொலி செய்து, அதன் பின் அவர் பாடும் போது ரசிகர்கள் மிக அமைதியாக அமர்ந்து பாடலை கேட்டதிலிருந்து அனைவருடைய இதயங்களும் நனைந்ததை உணர முடிந்தது.

அடுத்து பாடப்பட்ட பாடல் இசைஞானி இளையராஜாவின் 'பனிவிழும் மலர்வனம்'. இது எஸ்.பி.பியின் மிகவும் புகழ் பெற்ற பாடல்களுள் ஒன்று என்பதால் மிக எளிமையாகப் பாடி முடித்தார். இப்பாடலின் போது இசைக்கருவிகளின் இனிமையான இசை மற்றும் 'காலை எழுந்தால் பரிகாசம் ' என்ற வரியின் ஊடே தனக்கே உரித்தான நடையில் 'ஹ ஹா' என நகைத்தது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

இசைஞானி இளையராஜா தனது இசை நிகழ்ச்சிகளில் அடிக்கடி குறிப்பிடும் பாடலான கவிஞர் வாலி இயற்றி இசைஞானி இசை அமைத்து எஸ்.பி.பி., யும் லதா மங்கேஸ்கரும் இணைந்து பாடிப் புகழ்பெற்ற 'வலையோசை கலகலவென கவிதைகள் படிக்குது' பாடலைப் பாட, ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர்.

'நிழல் நிஜமாகிறது' படத்திற்காகக் கவியரசர் கண்ணதாசன் இயற்றி, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்து இவர் பாடிய 'கம்பன் ஏமார்ந்தான்' எனும் அழகான பாடலே அடுத்த பாடலாக அமைந்தது மிகவும் அருமை.

பின்னர் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகிப் புகழ் பெற்ற 'காதலின் தீபமொன்று' மற்றும் 'அந்திமழை பொழிகிறது' பாடல்களை பாடினார்.

கே.வி. மகாதேவனின் இசையில் பாடி முதலில் வெளியான 'ஆயிரம் நிலவே வா' பாடலை பாடியது பார்வையாளர்களின் நினைவலைகளைப் பல ஆண்டுகளுக்குப் பின்னால் இழுத்துச் சென்றதை யாராலும் மறுக்க முடியாது! இந்தப் பாடலின் முடிவில் தமிழ் எழுத்துக்களின் தனித்துவத்தை லகர, ழகர, ளகர, ணகர, னகர, நகர,றகர போன்ற எழுத்துக்களின் ஒலி வேறுபாட்டை சிறப்பாக எடுத்துரைத்தது தமிழ் மன்ற நிகழ்வுக்கு மிகப் பொருத்தமாய் இருந்தது.

அடுத்துப் பாடிய 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலில் தாரை எனத் தமிழில் அழைக்கப்படும் “டிரம்ப்பெட்” கருவியினை பயன்படுத்தும் புதுமையான சிந்தனை இசைஞானி ஒருவரால் மட்டுமே முடியும் என்பதைச் சொல்லி இசையானியை பெருமைப்படுத்தினார்.

அடுத்து வைரமுத்துவின் வரிகளில் இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையில் வெளியான 'மலரே மௌனமா' பாடலை அருமையாகப் பாடி முடித்தனர். இந்தப் பாடலின் இடையிடையே வரும் 'ஜீன்ஸ்' ஸ்ரீநிவாஸின் குரலினை மறக்காமல் குறிப்பிட்டார்.

தெலுங்கில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் புகழடைந்த 'சங்கரா நாத சரீர பாரா' எனும் பாடலை அவர் அடுத்து பாடும்பொழுது கேட்ட அனைவரின் உள்ளமும் கு.க.ஆ இப்படி நீண்ட காலம் பாடிக்கொண்டே இருக்க வேண்டும் என அவரை வாழ்த்தி இருப்பார்கள் என்பதில் ஐயமே இல்லை.

அடுத்து அவர் பாடிய பாடல் கவிஞர் வாலி இயற்றி இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி ' பாடல்..

வைரமுத்துவின் வரிகளை எஸ்.பி.பி., அவர்களே இசையமைத்து அவரே பாடிய 'வண்ணம் கொண்ட வெண்ணிலவே' என்ற பாடல் அனைவரின் மனதையும் மீண்டும் வென்றது!

இந்நிகழ்ச்சியில் தனது இறுதிப் பாடலாக 'முத்து' படத்தில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் மிகவும் புகழ் பெற்ற 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாடலைப் பாடினார். இந்தப் பாடலின் துவக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லை எனலாம்!

இந்நிகழ்ச்சியில், அவரின் பாடல்களுக்கு இடையிடையே லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவைச் சேர்ந்த பாடகர்கள் பாடியது மிகவும் அருமை. 'ஆண்டிபட்டி கனவா காத்து ஆலத் தூக்குதே', 'செந்தூரா சேர்ந்தே செல்வோம் செந்தூரா', 'நெஞ்சம் மறப்பதில்லை', 'கண்ணான கண்ணா', 'பாடவா உன் பாடலை' பாடல்களும் மிக அருமையாக இருந்தது சிறப்பு.

உணவு இடைவேளைக்குப் பின் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற பொருளுதவியை வாரி வழங்கிய தொழில் நிறுவனங்களுக்கும், தன்னாரவுத் தொண்டர்களுக்கும் நன்றியினையும் பாராட்டுதல்களையும் வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தினர் தெரிவித்துக் கொண்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியின் 'விழா மலரை” பாலசுப்ரமணியம் வெளியிட்டு மன்றத்தின் நிர்வாகிகளுக்கு வழங்கி வாழ்த்தினார்!

எஸ்பிபி., மற்றும் இந்த விழாவிற்கு ஆதரவளித்த நிறுவனங்களுக்கு தமிழ் மன்றத்தின் நிர்வாகிகளால் பொன்னாடை போர்த்தப்பட்டு பட்டயமும் வழங்கப்பட்டது. தன்னார்வுத் தொண்டர்கள் இசைக்குழுவினருக்கு பொன்னாடையும், பட்டயமும் வழங்கினார்கள்.

உள்ளே நுழைந்ததும் எஸ்பிபி., பாடுவது போன்ற முழு உருவம் வைக்கப்பட்ட புகைப்படத்திடலில் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். தெய்வேந்திரன் மற்றும் மருதுவின் கைவண்ணத்தில் புகைப்படத்திடலும், மேடை அலங்காரமும் அற்புதமாக இருந்தது.

அண்ணாச்சிக்கடை உணவகத்தின் நொறுக்குத் தீனிகளும், இரவு உணவும் மிகவும் சுவையாக இருந்தன.

வந்திருந்த அனைவருக்கும் தமிழ் மன்றத்தினால் விழா மலர் உள்ள பை வழங்கப்பட்டது. இந்தப் பையுக்குள் ஆனந்தபவன் உணவகத்தால் கொடுக்கப்பட்ட மைசூர் பாக்கும் மிக்சரும் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்ச்சியின் இறுதிப் பாடலாக 'ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே' பாடலை லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவைச்சேர்ந்த பாடகர்கள் பாடி இந்நிகழ்ச்சியினை இனிதே நிறைவு செய்தனர்!

இறுதியாக, லக்ஷ்மன் ஸ்ருதி சார்பாக லட்சுமண், தமிழ் மன்றத்தின் சார்பாக அதன் நிர்வாகிகள், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேராதரவு தந்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதின் பின், 'தமிழுக்கும் அமுதென்று பேர்' பாடலுடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்ததது.

- தினமலர் வாசகர் திருஞான சம்பந்தம்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

பாரதீய மந்திர், ஆக்லாந்து

பாரதீய மந்திர், ஆக்லாந்து...

மல்லிகை மலர்- 3

மல்லிகை மலர்- 3...

Advertisement
Advertisement
Advertisement

புதிய நேரடி வரி 2 மாதத்திற்கு நீட்டிப்பு

புதுடில்லி: மத்திய அரசின் புதிய நேரடிவரி நடவடிக்கை 2 மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் செயலாளர்கள் கூட்டம் அமைச்சர் அருண் ...

மே 24,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us