சிங்கப்பூரில் “ பாரதி யார் “ | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் “ பாரதி யார் “

ஏப்ரல் 15,2019  IST

Comments

“ தெய்வமே இங்கு நேரில் வந்ததைப் போல கலையிலும் காவியத்திலும் நான் மூழ்கினேன். கருத்துக்கள் ஒவ்வொன்றும் நாடி நரம்புகளிளெல்லாம் ஆழ்ந்து பதிந்தது போல் உணர்ந்தேன். ஒவ்வொருவரின் சஞ்சலங்கள் – கேள்விகள் அனைத்திற்கும் இங்கே பதில் கிடைத்திருக்கும். இது தெய்வத்தின் செயல் “ என சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் சண்முகம் மனமுருகிப் பாராட்டிய நாடகம் “ எஸ்.பி.கிரியேஷன்ஸாரின் “ பாரதி யார் ? “.

லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைச் சங்கம் ஏற்பாட்டில் ஏப்ரல் 13 ஆம் தேதி சிராங்கூன் சாலை பி.ஜி.பி.திருமண மண்டப அரங்கில் நடைபெற்ற சித்திரைத் திருவிழா தமிழ்மொழி விழாவின் முத்திரைத் திருவிழாவாக கோலாகலமாக நடைபெற்றது. பிரபல வீணை இசைக் கலைஞரும் திரையுலகில் புதுமைகள் பலவற்றை அறிமுகப்படுத்தியவருமான எஸ். பாலச்சந்தரின் 21 ஆவது நினைவு நாளில் அரங்கேறிய இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நாடகக் கலைஞர்களுக்கும் திருவாட்டி பாலச்சந்தருக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவித்தபோது அமைச்சர் சண்முகம் நெகிழ்ந்துருகிப் பாராட்டினார்.

இசைக்கவி ரமணன் மகாகவி பாரதியாராக வேடமிட்டார் என்பதை விட பாரதியாராகவே உலாவினார் எனில் அது உண்மை வெறும் புகழ்ச்சியன்று. இரண்டரை மணி நேரம் பார்வையாளர்களை தேசபக்திக் கனலில் கட்டிப் போட்டார். இந்த வரலாற்று நாடகம் பார்வையாளர்களையும் அக்காலத்திற்கே அழைத்துச் சென்றதற்குப் பரத்வாஜின் இசையும் பின்னணிக் காட்சிகளும் முக்கியக் காரணமாக இருந்தன. அனல் தெறிக்கும் வசனங்கள். “ பிரம்மனுக்கும் சரி – பாரதிக்கும் சரி சாதிகள் கிடையாது. நெருப்பைக் கரையான் அழித்திடுமோ? எம்மை அடிக்கலாம் – ஆனால் அழிக்க முடியாது கடற்கரை உரையில் மக்களைப் பார்த்து எம் குடும்பம் பெரிது – பிரளய காலத்திலும் அழியாது போன்ற வசனங்கள் பார்வையாளர்களின் கரவொலியால் அதிர்ந்தன.

பாரதியாரும் பாரதிதாசனும் சந்தித்த போது சுப்பு ரத்தினமாக வந்தேன் – பாரதிதாசனாகத் திரும்புகிறேன் என வரும் வசனமும் வெஞ்சிறையில் வ.உ.சியையும் சுப்பிரமணிய சிவாவையும் சந்தித்து உரையாடும் போது தெறிக்கும் வசனமும் நெஞ்சுருக வைத்தன. கனகலிங்கத்திற்குப் பூணூலிட்டு பிரம்மோபதேசம் செய்யும் காட்சி அருமை. பாட்டுப் போட்டிக்கு அனுப்பிய “ செந்தமிழ் நாடெனும் போதினிலே பாடல் மூன்றாவது பரிசு பெற்றதைக் குறிப்பிடுகிறாரே அதில் காட்டிய நையாண்டித் தனம் ரசிக்க வைத்தது.

உப்புக்கும் பருப்புக்கும் பாடுபட்டுக் கொண்டிருந்தால் எப்படி உன்னைப் பாடுவது எனப் பராசக்தியை அதட்டுகிறாரே – அதற்கு ஒரு சபாஷ் ! “ காலா என் அருகில் வாடா – உன்னைக் காலால் உதைக்கிறேன் “ என்ற போது பாரதியாராகத் தோன்றிய இசைக்கவி ரமணனின் கண்களில் தோன்றிய ஒளி பார்வையாளர்களிடமிருந்து எளிதில் மறையாது. ‘ தண்ணீர் விட்டோ வளர்த்தோம் – இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம் ‘ என்ற வசனம் கண்ணீரை வரவழைத்தது. ‘ அமிழ்தத்தின் பிள்ளைகள் அழலாமா – உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் “ என்று சமாதானம் செய்தார் பாரதியார். இப்படிப் பலவற்றைப் பதிவிடலாம்.

சுருங்கக் கூறின் எஸ்.பி.எஸ். ராமனின் “ பாரதி யார் ? வெறும் நாடகமல்ல – உயிரோட்டமுள்ள தேசபக்திக் கனல் பரப்பும் காவியம். சிங்கப்பூரில் முதல் முறை அரங்கேறியது – மென்மேலும் தொடர வாய்ப்பளிக்கும். தமிழகக் கரைஞர்களோடு உள்ளூர்க் கலைஞர்களும் பங்கேற்றமை பாராட்டுக்குரியது. தீப்பெட்டியின் விலையை விடக் குறைவான விலையில் என் பாடல்கள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என பாரதியார் விரும்பினார். இன்று சிங்கைத் தமிழரிடை எழுச்சியூட்டும் நாடகத்தைப் படைக்க முன்வந்த “ லிஷா “ வுக்கு வாழ்த்துகள்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

ஏப்ரல் 28ல் நிழல்- நடன அரங்கம்

ஏப்ரல் 28ல் நிழல்- நடன அரங்கம்...

ஏப்ரல் 20, 21ல் திருமுறை இசை

ஏப்ரல் 20, 21ல் திருமுறை இசை...

ஏப்ரல் 21ல் சுழலும் சொற்போர் இலக்கிய விழா

ஏப்ரல் 21ல் சுழலும் சொற்போர் இலக்கிய விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)