சிங்கப்பூரில் பாவேந்தர் 129 – இலக்கிய நிகழ்வு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் பாவேந்தர் 129 – இலக்கிய நிகழ்வு

ஏப்ரல் 23,2019  IST

Comments

சிங்கப்பூர் தமிழ் மொழி விழாவின் ஒரு அங்கமாக சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் பாவேந்தர் 129 என்ற இலக்கிய நிகழ்வினைக் கோலாகலமாக நடத்தியது. இலக்கியக் களத்திற்கு இது ஒரு குறிஞ்சி ஆண்டு. ஆம். சிங்கப்பூர் இலக்கிய வானில் 12 ஆம் ஆண்டாக இவ்விலக்கிய நிகழ்வினைக் களம் காணுகிறது. பாவேந்தர் பாரதிதாசனார் விழா மலரஞ்சலி – நாட்டியாஞ்சலி – உரையாஞ்சலி என தேசிய நூலக வாரிய வளாகத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஜோஸ்கோ பயண முகவாண்மை நிர்வாக இயக்குநர் போப்ராஜ் எனும் நாகை தங்கராசு விழாவுக்குத் தலைமை ஏற்றார். செல்வி சுருதிலயா அழகுசுந்தரம் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் விழா தொடங்கியது. செல்வி ஆ.மீனலோச்சனி – செல்வி ஆஷ்ருதா சேகர் ஆகியோர் பாவேந்தரின் தமிழுக்கு அமுதென்று பேர் – சங்கே முழங்கு பாடலுக்கு பரத நாட்டியம் ஆடி விழாவுக்குச் சுவையூட்டினர். சிங்கப்பூர் இந்திய வர்த்தக சபைத் தலைவரும் கல்வியாளருமான டாக்டர் டி.சந்துரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கவுரவித்தார். வளர் தமிழ் இயக்கத் தலைவர் ரா.ராஜாராம் முன்னிலை வகித்தார்.

ஆண்டுதோறும் வழங்கப்படும் பாவேந்தர் விருதாளரை முனைவர் கவிஞர் உஷா அறிமுகப்படுத்தினார். இவ்வாண்டுக்கான பாவேந்தர் விருது மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு அளிக்கப்பட்டது. அவருக்குப் பொற்பதக்கம் – மாலை – விருதளித்து சிறப்பு விருந்தினர் கவுரவித்தார். ஏற்புரை நல்கி உரையாற்றிய பன்னீர் செல்வம் சிங்கப்பூரில் பாவேந்தர் செயற்பாடுகள் – வரலாறு பற்றி விவரித்தார். சிங்கப்பூரில் பாவேந்தர் பெயரில் பள்ளி – வானொலியில் பாவேந்தர் ஆத்திசூடி ஒலி பரப்பு போன்றவற்றை உருக்கத்தோடு பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

முத்தாய்ப்பு நிகழ்வாக “ பாவேந்தர் படைப்புகளில் விஞ்சி நின்று நெஞ்சை ஈர்ப்பது கவிதைச் சிறப்பே – கருத்து வளமே – உணர்ச்சிப் பெருக்கே என மூன்று இலக்கியவாதிகள் தனித்தனியே வாதிட்டனர். புதுச்சேரி தாகூர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ இந்நிகழ்ச்சியின் நெறியாளுகையாளராகச் செயல்பட்டார். இலக்கியக் களம் ஆண்டு தோறும் இந்நிகழ்ச்சியைச் ‘ சுழலும் சொற்போர் “ எனும் புதுமை நிகழ்வாகப் படைத்து வருவது குறிப்பிடத் தகுந்ததாகும் சிங்கப்பூரில் இந்நிகழ்ச்சிக்கென்றே திரளான சுவைஞர்கள் உண்டு. கவிதைச் சிறப்பே விஞ்சி நிற்கிறது எனப் பேராசிரியர் இரத்தின வேங்கடேசனும் – கருத்து வளமே என புலவர் வீர.விஜயபாரதியும் – உணர்ச்சிப் பெருக்கே என ஆசிரியர் ஸ்டாலின் போசும் பாவேந்தரின் பாடல்களிலிருந்து மேற்கோள் காட்டி வாதிட்டனர். ஒவ்வொருவர் வாதத்திற்குப் பின்னரும் நடுவர் இளங்கோ தலைப்பு தொடர்பான பாவேந்தர் பாடல்களை எடுத்துக்காட்டி முழுமைப்படுத்திய பாங்கு அனைவரின் வரவேற்பைப் பெற்றது. நிகழ்வை நிறைவு செய்த பேராசிரியர் முனைவர் இளங்கோ மோது போர் – சூது போர் – வாது போர் நடந்த காலத்தையும் சம்பவத்தையும் எடுத்துக் காட்டி வள்ளற்பெருமான் ராமலிங்க அடிகளாருக்கும் அன்றைய சங்கராச்சாரியாருக்கும் நடந்த வாது போரில் தமிழ் தந்தைமொழி என ராமலிங்கப் பெருமான் - ஆண் தன்மையுடைய எழுத்துக்கள் த்+அ ம் + இ ழ் == தமிழ் என்பதை நிரூபித்துக் காட்டியதை விளக்கியதோடு பாவேந்தரின் பல்வேறு பாடல்களை ஆற்றொழுக்காக அடுக்கி பாவேந்தரின் படைப்புக்களில் விஞ்சி நின்று நெஞ்சை ஈர்ப்பது உணர்ச்சிப் பெருக்கே என பலத்த கரவொலிக்கிடையே தீர்ப்பளித்தார். மற்றும் பாரதிதாசன் பாடலான “ வாழ்வினில் செம்மை “ என்ற பாவேந்தரின் பாடல் புதுச்சேரி அரசின் தமிழ் வாழ்த்துப் பாடலாக உள்ளதையும் எடுத்துரைத்தார். சுருங்கக் கூறின் பாவேந்தரைப் பற்றிய ஒரு முழுமையான – நிறைவான சித்தரமாகவும் சிங்கப்பூர்த் தமிழர்களுக்குப் பெரு விருந்தாகவும் இந்நிகழ்வு அமைந்தது எனலாம்.

முன்னதாக திருவாட்டி சரளா தேவி தங்கதுரை வரவேற்புரை ஆற்றினார் . மாணவி செல்வி க.வைஷ்ணவி லெட்சுமி எழிலுரை படைத்தார். பாவேந்தர் பற்றி கட்டுரைத் தொகுப்பு நூலை போப்ராஜ் வெளியிட முதற்படியை பெரியார் சமூக சேவை மன்றத் தலைவர் வீ.கலைச் செல்வம் பெற்றுக் கொண்டார். நிகழ்வினை ந.வீ.விசயபாரதி நெறிப்படுத்தினார் செயற்குழு உறுப்பினர் கண்ணன் சேஷாத்திரி நன்றி நவில விழா இனிதே நிறைவு பெற்றது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மே 17 ல் ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா- 126 வது ஜெயந்தி விழா

மே 17 ல் ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா- 126 வது ஜெயந்தி விழா...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு...

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)