சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புக்களில் பிரதானமாகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகவும் விளங்குவது சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம். ஆண்டுதோறும் முத்தமிழ் விழா – கண்ணதாசன் விழா – கம்பன் விழா என முத்திரைத் திருவிழாக்களை நடத்திப் புகழ் பெற்ற அமைப்பு. உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை சிங்கப்பூரில் முதன் முறையாக நடத்தி உலகத் தமிழ் எழுத்தாளர்களிடை ஒருங்கிணைப்பை ஏற்படுத்திய பெருமை சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தனியுரிமை.
இரண்டாவது மாநாட்டைத் தமிழகத் தலைநகராம் சென்னையில் – வி.ஐ.டி.பல்கலைக் கழக ஒத்துழைப்போடு மூன்று நாட்கள் நடத்தப் பலரின் பாராட்டைப் பெற்றது. அதில் கலந்து கொண்டு நிறைவுரையாற்றிய அன்றைய மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன் “ அரசியல்வாதிகள் தலைமை தாங்கும் காலம் மறைந்து விட்டது – இனி எழுத்தாளர்களே தலைமை ஏற்கும் சூழலை இம்மாநாடு உருவாக்கியுள்ளது “ எனக் குறிப்பிட்டமை பரபரப்பாகப் பேசப்பட்டது. பல நாட்டுப் பேராளர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டுச் செய்திகளை தினமலர் நாளிதழ் நேரலை போல உடனுக்குடன் செய்திகளைப் படங்களுடன் வெளியிட்டு ஆதரவளித்தது..
தனது நாற்பதாவது ஆண்டு விழாவில் சிங்கப்பூர்த் துணைப் பிரதமரைப் பங்கேற்கச் செய்து பத்திரிகையாளர்களையும் பாராட்டி விருதளித்துப் பெருமைப்படுத்தியது. தமிழக அரசு கழகத் தலைவர் நா.ஆண்டியப்பனுக்கு “ அயலகத் தமிழறிஞர் “ விருதளித்து கௌரவித்தது. இத்தகு சிறப்புமிகு அமைப்பின் அடுத்த தலைமையை உருவாக்கும் பொறுப்பையும் மேற்கொண்ட நா.ஆண்டியப்பன் சேவை போற்றற்குரியது.
அமைப்பின் புதிய தலைவராக முந்தைய செயலாளர் சுப.அருணாசலம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னைய துணைச் செயலாளர் கிருத்திகா செயலாளராகிறார். புதிய பொருளாளராக கண.மாணிக்கமும் துணைச் செயலாளராக கவிஞர். கோ.இளங்கோவனும் பொறுப்பேற்கவுள்ளனர். முத்து மாணிக்கம் – மலையரசி – பிரேமா மகாலிங்கம் – மில்லத் ஆகிய பழைய செயற்குழு உறுப்பினர்களோடு ராஜா சண்முகசுந்தரம் மற்றும் மணிமாலா மதியழகனும் செயலவை உறுப்பினர்களாகத் தொடருகின்றனர்.
கடந்த 30.06.2019 – இல் சிண்டா சிற்றரங்கில் நடைபெற்ற கழக 21 ஆவது பொதுக் குழுவில் இந்நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு பெற்றனர். தலைமைப் பொறுப்பிலிருந்து விடைபெறுகின்ற நா.ஆண்டியப்பன் உரையாற்றுகையில் கழகத்தின் வளர்ச்சி பற்றியும் அரசு மற்றும் அரசு சாரா அமைப்புக்களுடன் அணுக்கமாகப் பணியாற்றி மேற்கொண்ட செயற்பாடுகள் பற்றியும் விளக்கியதோடு புதிய நிர்வாகிகளுக்குத் தமது வாழ்த்தையும் தெரிவித்து தொடர்ந்து அமைப்பின் ஆலோசகராகவும் துணைத் தலைவராகவுமிருந்து ஒத்துழைப்பதாகத் தெரிவித்தார். 2016 – 2017 ஆம் ஆண்டுகளில் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் தனி அரங்கம் அமைத்ததையும் 2017 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் சிங்கப்பூர்ப் படைப்பிலக்கியக் கருத்தரங்கு நடத்தியதையும் ஆண்டியப்பன் தமதுரையில் குறிப்பிட்டார். 41 ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகப் புதிய நிர்வாகிகளை தினமலர் நெஞ்சார வாழ்த்தி வரவேற்கிறது.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் நடத்திய 25-வது இரத்ததான முகாம்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.