டென்மார்க்கில் இந்திய சமையல் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

டென்மார்க்கில் இந்திய சமையல்

ஆகஸ்ட் 20,2019  IST

Comments (1)

என் பெயர் ஹேமா இராமச்சந்திரன். நான் டென்மார்க் நாட்டிற்குக் குடிபெயர்ந்து சுமார் 25 ஆண்டுகள் ஆகி விட்டன. தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணி புரிகிறேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், என் அலுவலகத்தில் மதிய உணவு நேரம், நண்பர்களுடன் உரையாடிய வண்ணம் நான் கொண்டு வந்திருந்த சில இந்திய உணவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். அப்போது, ஒரு நண்பர் கூறினார் - 'ஆரோக்கியமான உணவு சுவையாக இருக்க முடியாது, சுவையான உணவு ஆரோக்கியமாக இருக்க முடியாது. உங்கள் நாட்டு உணவு வகைகள் மிகவும் சுவையுடன் இருக்கின்றன. ஆனால் ஆரோக்கியம் தரக்கூடியவையா?'


அன்றுதான் எனக்குத் தோன்றியது - 'இந்திய சமையல்கலைக்கு ஈடு, உலகில் எங்கும் கிடையாது. இதில் உடல் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்ப்பதற்கும் ஏற்ற உணவு வகைகள் பல உள்ளன. இந்தக் கலையை டேனிஷ் மக்களுடன் பகிர்ந்து கொள்வது மட்டுமல்ல, அதன் நலங்களையும் புரிய வைக்க வேண்டும்' என்று.

நான் வசிக்கும் ஸ்கிவ் என்ற நகரத்தில் அமைந்துள்ள மாநகராட்சிப் பள்ளியை அணுகினேன். அங்கு சமையல், ஓவியம், இசை, உடல் மற்றும் மனப் பயிற்சிக்கான வகுப்புகள் வருடம் முழுவதும் நடைபெறும். இவை பெரும்பாலும் மாலை நேர வகுப்புகள். அதனால் பலரும் இவற்றில் பயின்று, தங்கள் தன்னார்வத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். அங்கு எனக்கும் இந்திய சமையல் வகுப்புகள் நடத்தும் வாய்ப்புக் கிடைத்தது. வருடத்திற்கு 6 வீதம் இதுவரை 18 பயிற்சி வகுப்புகள் நடத்தியிருக்கிறேன். ஒரு வகுப்பில் 10 முதல் 12 பேர் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். அவர்கள் 20 முதல் 80 வயதிற்குள்ளானோர்!

மாறிவரும் வாழ்க்கைச்சூழலில், அசைவ உணவைக் கொஞ்சம் ஒதுக்கி வைப்பதே நல்லது என்ற கருத்து பரவலாக டென்மார்க்கில் உள்ளது. மேலும் சைவ உணவுகள் எளிதில் சீரணமாகி விடுவதால் அவற்றின் அவசியமும் உணரப்பட்டு வருகிறது. நானும் சிறு வயது முதல் சைவ உணவுப் பழக்கம் கொண்டிருப்பதால் அவர்களுக்குச் சைவ உணவுகள் மட்டும் கற்றுத் தருகிறேன். சைவ உணவு என்றால் சாலட் மட்டுமே என்று நினைத்திருந்த அவர்கள், நமது பல வகையான சைவ சமையல் வகைகளைக் கண்டு மிகவும் ஆச்சரியப்படுகின்றனர்.

பொதுவாக டேனிஷ் மக்கள் சமையல் அறையில் ஓரிரு பதார்த்தங்கள் செய்யக் குறைந்தது 2 மணி நேரமாவது செலவிட வேண்டும். நம் சமையலோ ஒரு மணி நேரத்தில் முடிக்கக்கூடியது மட்டுமல்ல, அதற்குள் அதிகப்படியான பதார்த்தங்களையும் செய்து விடலாம். அத்தோடு நம் உணவுப் பொருட்களின் விலையோ அவர்கள் பொருட்களோடு ஒப்பிடுகையில் மிகவும் மலிவு. காய்கறிகள், மூலிகைகள் மற்றும் மசாலா வகைகளை உபயோகித்து, விரைவாகவும் எளிதாகவும் சமைத்து விடலாம்.

சிலருக்குப் பசைய ஒவ்வாமையும் இருக்கின்றது. அவர்களும், கொழுப்புச்சத்து குறைவான உணவுகள் விரும்புவோரும் நமது சமையல் நல்லதொரு மாற்று என்று கருதுகின்றனர்.

பங்கேற்பாளர்கள் உணவைத் தயாரிக்கும்போது கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம், மஞ்சள் போன்ற சில பொருட்களை உபயோகிக்கையில், அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். அவற்றின் மருத்துவ குணங்கள் அறிந்து மலைத்துப் போகின்றனர்.

ஒரு வகுப்பு 3 மணி நேரம். அதில் அற்புதமான சுவையும், நறுமணமும் கூடிய ஒரு முன்உணவு, பிரதான உணவுகள் மற்றும் இனிப்பு செய்து, அனைவரும் ஒன்றாக அமர்ந்து அவற்றை ரசித்து உண்பது வழக்கம்.

வகுப்புகளில் பஜ்ஜி, பக்கோடா, சப்பாத்தி, தேங்காய் சாதம் போன்ற வித விதமான கலந்த சாதங்கள், உப்புமா, தோசை, அடை, கீரை, பொரியல், பச்சடி, பாயசம் மற்றும் பலதரப்பட்ட சுவையான உணவு வகைகள் கற்றுத் தருகிறேன். அவற்றுள் பக்கோடா, வெண்டைக்காய் பொரியல், தேங்காய் சாதம், கீரை, பச்சடி மிகவும் பிரபலமாகி விட்டன. மேலும் கற்றுக் கொண்டதைத் தம் வீடுகளிலும் செய்து பார்த்து, அதைப் பற்றி சுவாரசியமான விடயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்கின்றனர்.

இந்த வகுப்புகளின் மூலம் டேனிஷ் நாட்டினருக்கு நம் இந்திய உணவுகளின் பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தி, அவற்றின் பெருமையை மென்மேலும் வளர்க்க எனக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பைப் பெரும் பேறாக எண்ணுகிறேன்.

- தினமலர் வாசகி ஹேமா ராமச்சந்திரன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 21ல் காப்பிய விழா

செப்., 21ல் காப்பிய விழா...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு...

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

முன்ஜாமின் கேட்டு உதித்சூர்யா மனு

மதுரை: 'நீட்' தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., சேர்ந்த மாணவர் உதித்சூர்யா முன்ஜாமின் கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ...

செப்டம்பர் 20,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us