“த ஹம்பிள் லேடி':- ஜெர்மனியில் இந்தியத் துணை தூதரக அதிகாரி பிரதிபா பார்க்கருக்கு புகழாரம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

“த ஹம்பிள் லேடி':- ஜெர்மனியில் இந்தியத் துணை தூதரக அதிகாரி பிரதிபா பார்க்கருக்கு புகழாரம்

செப்டம்பர் 05,2019  IST

Comments

திருவிழா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே கொண்டாட்டம் தான்! நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் ஒரே இடத்தில் பார்க்கலாம் என்ற சந்தோஷம் தான்! ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 'Indian Fest' திருவிழா அதற்கு வழி செய்து கொடுத்தது. எங்கு நோக்கினும் இந்திய முகங்கள்! கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம், இந்தி என வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் இந்திய மொழிகளின் சங்கீத ஓசைகள், காதுகளில் இனிய கானங்கள் இசைத்தன. ஜெர்மானியர்கள் மற்றும் பிராங்க்பர்ட்ல் வசிக்கும் இன்ன பிற நாட்டவர்கள் நிறைய பேர் வந்திருந்தது இந்திய கலைநிகழ்ச்சியின்பால் அவர்களுக்கு இருந்த ஆர்வத்தைப் பிரதிபலித்தது.

வாட்ஸ்ஆப், முகநூல் போன்ற சோசியல் மீடியாக்கள் மூலம் கடந்த சில வாரங்களாகவே இந்தியத் திருவிழா பற்றியும் அதில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் பற்றியும் செய்திகள் வெளியிட்ட வண்ணம் இருந்தனர். கூடுதலாக ஜெர்மன் மொழியில், வானொலியில் விளம்பரம் செய்திருந்தனர். அதனால் கடந்த வருடத்தை விட இந்த வருடம் மக்கள் கூட்டம் அதிகம்.ஏறத்தாழ 20,000 பேர்! நிறைய மக்கள் வருவார்கள் என்று முன்னமே அறிந்திருப்பார்கள் போலும்! Food Stalls அனைத்தையுமே நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு அருகில் உள்ள மைதானத்திற்கு இடமாற்றம் செய்திருந்தனர்.

நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டது போல மதியம் 12 மணிக்கு பிராங்பேர்ட் நகரின் ரோஸ்மார்க்கெட் பகுதியில் உள்ள திறந்த வெளி மைதானத்தில் பிரமாண்ட மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. மைதானத்தின் நுழைவு வாயிலில் விநாயகர் விக்கிரகம் அமைந்திருக்க, அதன் அருகிலேயே இரண்டு இந்திய பெண்கள் கையில் பூ மற்றும் குங்குமம் ஏந்தி, ஜெர்மன் மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு நெற்றியில் திலகம் இட்டு இந்திய இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

Friends of India அமைப்பின் பிரதிநிதி திரு. கமல் அவர்கள் வரவேற்புரை வழங்க, விழா ஆரம்பமானது. ஒவ்வொரு மாநில அமைப்புகளிலும் இருந்து இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மகிழ்வித்தன. நிகழ்ச்சியின் இடையே, இந்திய தூதரக அதிகாரி பிரதீபா பார்கர், பிராங்பேர்ட் நகர சேர்மேன் திரு. ஸ்டெபான் சீக்லர் திரு. கெரி ரெடிங்டன் மற்றும் திரு. கமல் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

இந்தியத் துணை தூதரக அதிகாரி பிரதீபா பார்கர் அவர்கள் பேசும் போது, 'வேற்றுமையில் ஒற்றுமை என்னும் தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்ட இந்தியா இன்று வெகு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. மிக குறைந்த பொருட்ச்செலவில் உருவாக்கப்படட செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான், கூடிய விரைவில் சந்திரனில் தரையிறங்கவிருக்கும் சந்திராயன் 2 என்று அறிவியல் வளர்ச்சியில் இந்தியா வெற்றிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்தது. இங்கு நிறைய மக்கள் குழுமியிருக்கிறார்கள் என்றால் அதற்கு தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களின் வரவும் முக்கிய காரணம்' என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ஜெர்மனியின் வெளியுறவு ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு. கெரி ரெடிங்டன், 'ஒற்றுமை தான் இந்தியாவின் பலம், நிறைய பயிற்சிகள் எடுத்து இங்கு நீங்கள் நடத்திக் காட்டிய அனைத்து நிகழ்ச்சிகளும் அருமை' என்றவர் இதை வழிநடத்திக்கொண்டிருக்கும் பிராங்பேர்ட் நகர இந்திய தூதரக அதிகாரி திருமதி. பிரதீபா பார்கர் உண்மையிலேயே “ ஹம்பிள் லேடி“ என்று குறிப்பிட்டார்.

பிராங்க்பர்ட் தமிழ்ச் சங்கம் சார்பாக முதலில் ஆதேஷ் - சிரேஷ் ஞானசேகரன், பிரணவ் பிரபுராம், கிரித்திக் பாஸ்கர், ரயான் ஆன்டனி, விஷால் - கிஷோர் சக்திவேல், மிருதுன் மாணிக்கவாசகம் மற்றும் சந்தோஷ்குமார் பழனிவெற்றிவேலன் குழுவினரின் நடனம் இடம் பெற்றது. பாரதியார், அப்துல்கலாம், விவேகானந்தர் ஆகியோரின் பொன்மொழிகள் பின்பக்க திரையில் மின்ன, நம் சிறுவர்களின் நடனம் பார்வையாளர்கள் அனைவரையும் ஆர்வமிகுதியால் எழுந்து நின்றுப் பார்க்க வைத்து கைத்தட்டல்களை அள்ளியது.

அடுத்ததாக பல பாடல்களின் தொகுப்பில், ஸ்ரேயா முத்துராஜ், ஹர்ஷிதா பிரியா ஆன்டனி, அனிஷா ராஜேந்திரகுமார், பிரீத்தா ராஜா, தாரிணி பழனிவெற்றிவேலன், ப்ரெரானா பாலுபாலாஜி மற்றும் சஹானா ராஜ்குமார் ஆகியோரின் நடனம் . ' எங்கே என் புன்னகை' என்ற தாளம் திரைப்படத்தின் பாடலில் ஆரம்பித்து ஒவ்வொரு பாடலுக்கும் நம் சிறுமிகளின் நடனத்தில் வேகம் கூடிக்கொண்டே போனது. 'ஆணழகே, சொக்கும் பேரழகே' பாடலுக்கு எழுந்த கரகோஷம் அடங்க வெகுநேரமானது. 'இன்னும் கொஞ்ச நேரம் கூடுதலாக நடனம் இருந்திருக்கலாமே!' என்று பின்னாலிருந்து ஒலித்த குரல், நடனங்கள் பயிற்றுவித்த நாககுமார் - ஜெயசந்தர் ஆகியோருக்கு கிடைத்த பாராட்டுக்கள்!

தமிழ் சங்க செயற்குழு உறுப்பினர் திரு. கோமதி சங்கர் அருணாசலம் அவர்கள் நம்மிடம் , 'இது போன்ற விழாக்கள், மனதுக்கு மகிழ்ச்சி தருவதுடன் நம் குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணர உந்துதலாக இருக்கிறது' என்றவர், மேலும் 'தமிழ்ச் சங்கத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு முறையும் வெவ்வேறு குழந்தைகளுக்கு இது போன்ற நிகழ்ச்சிகளில் வாய்ப்பளித்து அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஊக்கப்படுத்துகிறோம்' என்றார்.உடன் இருந்த மற்றொரு உறுப்பினர் திரு.பிரெஷ்னவ் ஜீவானந்தம் அவர்கள் 'பிராங்க்பர்ட் தமிழ்ச் சங்கம் சார்பாக இளைய தலைமுறையினருக்கு சிலம்பாட்டம்,பறை போன்ற நம் ஊர் பாரம்பரிய கலைகளைப் பயிற்றுவிக்கிறோம்' என்றார். இவர், தமிழ் குழந்தைகளுக்கு எவ்வித கட்டணமும் இன்றி வாராவாரம் யோகாசனம் கற்றுக் கொடுக்கிறார்.

விழா நடைபெற்ற மைதானத்தின் ஒரு புறத்தில் நம் தேசப்பிதா காந்தியடிகள் ராட்டை சுற்றுவது போன்று வடிவமைத்திருந்தனர். பல ஜெர்மானியர்கள் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதுபோல பல்வேறு இந்திய உடைகளில் ஆளுயரப் புகைப்படங்கள் முகம் மட்டும் இல்லாமல் இருக்க, பார்வையாளர்கள் தங்கள் முகத்தை அதில் பொருத்தி போட்டோக்கள் 'க்ளிக்'கிக் கொண்டனர்.

நிகழ்ச்சியின் இடையே Bonn நகர மேயர் திரு. அசோக் ஸ்ரீதரன் பேசினார். இவர்தான், ஜெர்மனி நாட்டில் பதவியேற்ற முதல் இந்திய வம்சாவளி வந்த மேயர். அதை அவர் சந்தோஷமாய் கூற, அந்த உற்சாகம் பார்வையாளர்களையும் தொற்றிக்கொண்டு கைதட்டல் அடங்க வெகு நேரமானது.

கேரளா சங்கத்தினரின் நடனத்தில் குலேபகாவலி படத்தின் பாடல் இடம் பெற்றிருந்தது. அதுபோல கொங்கணி அமைப்பின் சார்பாக திருமதி. ஷெர்லி பிரின்ஸ் அவர்கள் தமிழ் பாடலான சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் இடம் பெற்ற 'கண்கள் இரண்டால் ....' பாடலுக்கு பரதநாட்டியம் ஆடியது தமிழ் மொழியின்பால் வேற்றுமொழியினர் காட்டும் ஆர்வத்திற்கு சான்றாக அமைந்தது. இவர்களின் Food Stallல் 3 ஈரோவுக்கு வழங்கப்படட மசாலா டீயும் தேங்காய் கேக்கும் சூப்பர்.

விழாவில் சில ஹைலைட்ஸ்:

* Food Stall ளில், நம்மூர் இட்லி, தோசை, சாம்பார் வடையில் ஆரம்பித்து கொல்கொத்தாவின் ரசகுல்லா, சமோசா வடைபாவு என்று பலவித உணவு வகைகள் இடம் பிடித்தன.பிரியாணியின் வகைகளோ எண்ணிலடங்கா!

*மிகப்பெரிய LEDஸ்கிரீனில், சாப்பிடும் இடத்திலும் நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.

*பேஷன் ஷோ வில் பங்கேற்ற 25-க்கும் மேற்பட்ட பெண்கள், புடவையை பலவிதங்களில் உடுத்தி வந்து 'சேலை கட்டுவதில் இத்தனை வகைகளா?' என்று புருவம் உயர்த்த வைத்தனர்.

*ராஜஸ்தான் பாலைவன கிராம மக்கள் மழைக்காக ஏங்குவதை, லேடீஸ் கிளப் உறுப்பினர்கள் தங்கள் நடனத்தின் மூலம் அழகாக பதிவு செய்து மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தினர்.

*மராட்டிய சங்கத்தின் 'சத்ரபதி சிவாஜி' பற்றிய நாட்டிய நாடகம் அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

*அனைத்து நிகழ்ச்சிகளும் 'India in German ' என்ற முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

*காலநிலை நன்றாக இருந்ததால் ராட்டினம், பாஸ்கட் பால், துள்ளிகுதிக்கும் மேடை என்று பல விதமான விளையாட்டுகள் பக்கத்திலேயே கடை பரப்ப, குழந்தைகளின் கூட்டம் அங்கும் களை கட்டியது.

*அருகிலேயே 'சீனத் திருவிழா' நடைபெற்றது. சீனர்களின் உணவு வகைகளுடன் கூடிய பல்வேறு கடைகள், பார்ப்பதற்கு மழைக்காளான்கள் போல அழகாக இருந்தது! கடந்த வாரம் தாய்லாந்து திருவிழா இதே இடத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் மாலை 7 மணிவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சந்தோஷ நாளாக அமைந்தது.

- நமது செய்தியாளர் ஜேசு ஞானராஜ்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 21ல் காப்பிய விழா

செப்., 21ல் காப்பிய விழா...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு...

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

எல்லைப் பகுதிகள் குறித்த வரலாறு

புதுடில்லி: நாட்டின் எல்லை பகுதிகள், அப்பகுதியில் உள்ள மக்களின் கலாசாரம், பாதுகாப்பு படைகளின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்த வரலாற்றை தொகுக்க ராணுவ அமைச்சர் ராஜ்நாத் ...

செப்டம்பர் 19,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us