பிரமிக்க வைக்கும் அமெரிக்க ஹாஸ்பிஸ் சேவை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரமிக்க வைக்கும் அமெரிக்க ஹாஸ்பிஸ் சேவை

செப்டம்பர் 11,2019  IST

Comments (3)

வருடம் 2005 - அப்பா திரு. என். எஸ். இராமச்சந்திரனுக்கு வயது 88. அம்மா திருமதி. ஸ்வர்ணலஷ்மிக்கு 80. அவர்கள் தம் வயதைப் பொருட்படுத்தாமல், சொந்த ஊரான மானாமதுரையில் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு, மகிழ்ச்சியுடன் சுதந்திர வாழ்க்கை வாழ்ந்த தருணம்.
குழந்தைகள் ஒன்பதில் நாங்கள் ஐவர் அட்லாண்டாவில். “இவ்வளவு காலம் நீங்கள் தனியே இருந்தது போதும், அமெரிக்கா வந்து எங்களுடன் மாறி மாறி இருங்கள்” என்ற எங்கள் அன்பு வற்புறுத்தலுக்கு இணங்கி, அவர்கள் இங்கு வந்ததில் எங்களுக்குப் பரம சந்தோஷம்.
நாளடைவில் அவர்களுக்குப் பச்சை அட்டை, மெடிகெய்ட் (Medicaid) போன்றவை வந்து விட்டன. ஊர் நண்பர்கள், உறவினர்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு, அவர்களுடன் தொலைபேசியில் பேசி வருவார்களே தவிர, “ஏன் வந்தோம், இங்கு ஒத்து வரவில்லை, திரும்ப வேண்டும்” என்ற அங்கலாய்ப்பே இல்லை. இங்குள்ள பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொண்டு, இங்கும் தமக்கான நண்பர்களை (முகநூல் உட்பட!) ஏற்படுத்திக் கொண்டு, 12 வருடங்களை ஓட்டி விட்டார்கள்.

அம்மாவிற்கு ஒரு வயிறு அறுவை சிகிச்சைக்குப் பின், கடைசியில் சில வருடங்களுக்கு அதிகம் நடமாட முடியவில்லை. கண் பார்வையும் மங்கி வந்தது. நாங்கள் அவரவர் வேலையில் ஓடிக் கொண்டிருக்க, கிட்டத்தட்ட தம் 100வது வயது வரை அவருக்கு ஊன்றுகோலாக இருந்தவர் அப்பா தான்.
அப்பாவிற்குப் பல வருடங்களாகக் குடல் இறக்கம். அவர் வயது காரணமாக அறுவை சிகிச்சை செய்வது உசிதம் இல்லை என்பதால், அவரும் சமாளித்து வந்தார். ஆனால் இந்த உபாதை அதிகரிக்கவே, வேறு வழியில்லாமல் மார்ச் 2017 இறுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
குடல் பிரச்சனை தீர்ந்தது. ஆனால் அறுவை சிகிச்சையின் பின்விளைவுகள் தலை தூக்கின. நிமோனியா, இதய இயக்கக் குறைவு, உடல் வீக்கம், வலி, இருமல், வயிற்றுக் கோளாறு என்று தொடர்ந்து ஒரு மாதம் அவதிப்பட்டார். அவர் வியாதி பாராட்டி நாங்கள் பார்த்ததே இல்லை. எதையும் தம் மனத்திண்மை, நகைச்சுவையான பேச்சு இவற்றால் எதிர்கொண்டு விடுவார். ஆனால் இம்முறை எல்லாம் கைமீறிப் போயின. அவர் பட்ட வேதனை மனதைப் பிழிந்தது.
அம்மாவிற்கு, அப்பாவுடன் 81 வருட வாழ்க்கை. அம்மாவின் உடல்நிலையை முன்னிட்டு, அவரை ஒரு முறைதான் மருத்துவமனைக்குக் கூட்டிப் போய்க் காண்பித்தோம். நடைமுறைச் சிரமங்களைப் புரிந்து கொண்டு, அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று சொல்லாமலே இருந்து விட்டார்.

நோய் முற்றி விட்டது, மருத்துவம் பலனளிக்காது, மீதமிருக்கும் வாழ்நாள் விரல் விட்டு எண்ணப்படுகிறது அல்லது ஆறு மாதத்துக்குள் முடிந்து விடும் என்ற நிலைமை உருவானால், ஹாஸ்பிஸ் (Hospice - இறுதிக்கட்டப் பிணியாளர்கள் பேணகம்) என்ற வசதியை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள், இதற்கான செலவை, அநேகமாக முழுவதையும், மருத்துவக் காப்பீடு பார்த்துக் கொள்ளும். இவ்வசதியை இதற்கான மருத்துவமனையிலோ, நம் வீட்டிலேயோ எடுத்துக் கொள்ளலாம்.
ஹாஸ்பிஸின் நோக்கம், முற்றிய நோயைக் குணப்படுத்துவது அல்ல. மாறாக, நோயாளிகளின் உடல் உபாதையைத் தணித்து, இயற்கையின் நியதியான வாழ்வின் முடிவை, அவர்களை எவ்வாறு அதிக மன அழுத்தம் இல்லாமல் ஏற்றுக் கொள்ளச் செய்யலாம், அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஆன்மீகச் சேவைக்கு ஏற்பாடு செய்யலாம், குடும்பத்தாருக்கு ஆறுதல் வார்த்தை கூறலாம் என்பதே ஆகும்.
நாங்கள் வீட்டு ஹாஸ்பிஸுக்கு விருப்பம் தெரிவித்தோம். அப்பா, வீட்டுச் சூழ்நிலையில் இருப்பது அவருக்கு நிம்மதியைத் தரும். அம்மா கூட இருப்பார். உறவினர்கள், நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம். நமக்கும் வீட்டிலேயே பார்த்துக் கொள்வது வசதி.
அப்பாவிற்கு மருத்துவமனை விடுவிப்பு (discharge) கிடைத்து, வீட்டுக்கு வருவதற்குள், ஏற்றி இறக்க வசதியான மருத்துவமனைக் கட்டில், மெத்தை, விரிப்புகள், நடைவண்டி, சக்கர நாற்காலி, ஆக்ஸிஜன் உபகரணம், வடிகுழல் (catheter), மருந்து மாத்திரைகள், இடையாடை (diaper), சுத்தம் செய்யும் துகில்கள், பசைகள் என ஏகப்பட்ட சாமான்கள் சகிதம் பணியாளர்களும், தாதியும் வந்து விட்டனர்.

சத்தமில்லாமல், நாம் சொல்லும் இடத்தில் எல்லாவற்றையும் நேர்த்தியாக வைத்தார்கள். தாதி, பொறுமையுடன் நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். வெகு நேரம் கூட இருந்து விட்டுப் போனார்.

தினமும் காலையில் ஒரு பணியாளர் வந்து, அப்பாவிற்குத் துடைத்து விட்டு, விரிப்புகளை மாற்றிச் செல்வார். தாதி ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருவார். தேவைப்பட்டால் நாம் தினமும் வரச் சொல்லலாம். தொலைபேசியில் எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

ஓர் இரவு, அப்பாவிற்குத் தொந்தரவாக இருந்ததால், பொருத்தப்பட்ட வடிகுழலை நீக்க வேண்டி இருந்தது. நான் தாதியைக் கூப்பிட்ட போது பின்னிரவு ஒரு மணி. மழை வேறு. அப்படி இருப்பினும், முகம் சுளிக்காமல் மூன்று மணிக்கு வந்து விட்டார் தாதி. ஹாஸ்பிஸ் வேலையை எடுத்துக் கொள்ள, உண்மையான சேவை மனப்பான்மையும், மனித நேயமும் உள்ளவர்களால் மட்டுமே முடியும்.

இவ்வாறாக, ஒன்பது நாட்கள் ஓடின. மே 4, 2017 - அப்பா, அம்மாவின் 81வது திருமண நாள். அன்று அப்பாவின் வாழ்வு நிறைவுற்றது. அவரது 100வது வயது பூர்த்தியடைய 100 நாட்களே பாக்கி இருந்தன. அதற்கு அவர் இல்லையே என்று மனம் சற்று ஏங்கினாலும், இவ்வளவு வயது வரை அவர் எங்களுடன் இருந்ததே கிடைத்தற்கரிய பெரும் பேறு என்று சமாதானம் செய்து கொண்டோம்.

அப்பாவின் முடிவு, தாதி வந்திருந்த சமயம் நிகழ்ந்தது. அவர் தேவையான ஆவணங்களை நிறைவு செய்து, மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலைகளுக்கான வழிமுறைகளை விளக்கினார். பிறர் சாப்பிட்டால் ஆபத்து விளைவிக்கக் கூடிய எல்லா மருந்து மாத்திரைகளையும் உடனடியாக அப்புறப் படுத்தினார். வேறு பணியாளர்கள் ஒவ்வொருவராக வந்து கவலை தெரிவித்து விட்டுச் சென்றார்கள். இரண்டு நாட்கள் கழித்து, ஹாஸ்பிஸ் சாமான்களை எடுத்துச் சென்றார்கள்.

அம்மாவிற்கு, அப்பாவை வீட்டுக்கு அழைத்து வந்து கவனித்ததில் மிகவும் திருப்தி. அந்தத் திருப்தியுடன், எதிர்பாரா விதமாக அடுத்த மூன்றே மாதத்தில் அப்பாவுடன் சேர்ந்து விட்டார்.

ஹாஸ்பிஸ் நிறுவனத்திலிருந்து சில விசாரிப்புத் தொலைபேசிகளும், கடிதங்களும் ஒரு வருடம் வரை வந்து கொண்டிருந்தன. நிறுவன அதிகாரிகள், இத்தகைய இழப்பிலிருந்து, குடும்பத்தார் மனரீதியாக மீண்டு வர உதவி வேண்டுமானால், ஏற்பாடு செய்வதாகவும் அறிவித்தார்கள்.

நமக்கு அமெரிக்காவில் ஏற்படும் அனுபவங்கள் பற்பல. அவற்றுள் என்னைப் பிரமிக்க வைத்தது, தரமான, மகத்தான இந்த ஹாஸ்பிஸ் சேவை!

- தினமலர் வாசகி ராஜி ராமச்சந்திரன், அட்லாண்டா, ஜார்ஜியா

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ., 11ல் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ஞான உதய தினம்

நவ., 11ல் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ஞான உதய தினம்...

நவ., 11ல் உலக அமைதி தினம்

நவ., 11ல் உலக அமைதி தினம்...

நவ., 16ல் டனீடீன் தமிழ்ச்சங்கம் தீபாவளிவிழா

நவ., 16ல் டனீடீன் தமிழ்ச்சங்கம் தீபாவளிவிழா...

நவ., 3ல் கதைக்களம்

நவ., 3ல் கதைக்களம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
Muraleedharan.M - Chennai,India
13-செப்-201906:12:24 IST Report Abuse
Muraleedharan.M நம் நாட்டில் இன்சூரன்ஸ் முறை சரியில்லை. ஏமாற்றுகிறார்கள்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
raman - Madurai,India
12-செப்-201906:05:18 IST Report Abuse
raman இவ்வாறு அமெரிக்காவில் நடந்தது,அவர்களின் கொடுப்பினை. அமெரிக்காவில் இது போன்ற ஹஸ்பீஸ் கிடைக்க, எடுத்துக்கொண்ட இன்ஷுரன்ஸ் தான் காரணம். இவர்கள் கட்டும் பிரீமியம், மற்றும் இன்ஷுரன்ஸ் கம்பணியைப் பொறுத்தது. அது சரியாக இருந்தால், இவ்வாறு நடக்கும். மேலும் இவர்கள் வேலை செய்யும் கம்பணியையும் பொறுத்தது. பொதுவாக காசுக்கேத்த பணியாரம்தான். அமெரிக்கா முழுவதும் இவ்வாறு தான் நடக்கிறது என்று நம்பிவிட வேண்டாம். சரியான இன்ஷுரன்ஸ் இல்லையென்றால் நரகம்தான். அதனால் ஏழைகள் படு திண்டாட்டம், அமெரிக்கர் ஆனாலும் கூட. .இதற்காகத்தான் ஓபாமா திட்டம் வந்தது. அதையும் சரியாக நடத்தவில்லை. நம் ஊர் போன்று தர்ம ஆஸ்பத்திரிகள் இல்லை. பொதுவாக இந்தியர்கள் நல்ல வேலையில் இருப்பதால் , தங்களுக்குள்ளேயே நட்பு வைத்துள்ளதால் மற்றவற்றை கவனிப்பதில்லை. பொது வாக, கண்,மற்றும் பல்வைத்தியத்துக்கு இந்தியர்களே அமெரிக்கா விலிருந்து இந்தியா வந்து வைத்தியம் செய்து கொள்கிறார்கள். காரணம் அவர்கள் இன்ஷுரன்ஸ் இருந்தாலும் அதிக பணம் செலவாகும். அதனால் அமெரிக்கா வில் எல்லோருக்கும் இப்படித்தான் வசதி கிடைக்கும் என்று கண்மூடித்தனமாக நம்பவேண்டாம்.
Rate this:
0 members
2 members
18 members
Share this comment
Raji Ramachandran - Atlanta,
15-????-201913:53:23 IST Report Abuse
Raji Ramachandranஉ ங்கள் கருத்துகளுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டது போல், பொதுவாக அமெரிக்காவில் மருத்துவக் காப்பீட்டுத் தொகையும், மருத்துவச் செலவுகளும் அதிகம் என்பது சரியே. பல் வைத்தியம், அறுவை சிகிச்சை, மருத்துவமனையில் சேர்த்தல் போன்றவை மிகுந்த செலவை இழுத்துவிடக் கூடியவை. ஆனால் பெரும்பான்மையான காப்பீடுகள் ஹாஸ்பிஸ் சேவையை உள்ளடக்கியவை. இதற்காக அதிகப் பணம் வசூலிப்பது இல்லை. தனிப்பட்ட வருமானம் இல்லாதோர் அல்லது குறிப்பிட்ட எல்லைக் கோட்டுக்குக் கீழ் சம்பளம் பெறுவோருக்குப் பல மாநிலங்களில் அரசாங்கம் மெடிகெய்ட் என்ற காப்பீட்டைத் தருகிறது. அறுபத்தைந்து வயதுக்கு மேற்பட்டோருக்குக் குறைந்த பிரீமியத்தில் மெடிகேர் என்ற காப்பீட்டைத் தருகிறது. இக்காப்பீடுகள் அத்தியாவசிய, அவசர மருத்துவம் மற்றும் ஹாஸ்பிஸுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. இங்கும் மாவட்டப் பொது மருத்துவமனைகள் உள்ளன. காப்பீடு எதிர்பார்க்கப்பட்ட போதும், அவசர சிகிச்சைகள் எவருக்கும் மறுக்கப்படுவதில்லை. முதலில் பணம் கட்டினால் தான் வைத்தியத்தைத் தொடர்வோம் என்பதும் இல்லை. சமூக சேவை அமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள், இம் மருத்துவமனைகளோடு இணைந்து செயல்படுவார்கள். அவர்கள், செலவை ஏற்க இயலாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கு உதவி கிடைக்க வழி செய்வார்கள். எது எப்படி இருப்பினும், இந்தியாவில் கிடைக்கும் உடனடி மருத்துவ வசதி வேறு எங்கும் கிடைக்காது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ்நாட்டில் சில இடங்களில் ஹாஸ்பிஸ் வசதி வர ஆரம்பித்துள்ளதாகக் கேள்விப்பட்டேன். இச்சேவை நன்கு வளர விழைகிறேன். எனது கட்டுரையின் நோக்கம், அமெரிக்க ஹாஸ்பிஸ் வசதி எவ்வளவு தூரம் என் தந்தையாருக்கு உதவியது என்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும், ஊழியர்களின் முகம் சுளிக்காத நற்சேவையைப் பாராட்டி நன்றி தெரிவிக்கவும் மட்டும் தானே தவிர, கண்மூடித்தனமான எண்ணங்களைத் திணிப்பதற்கல்ல நன்றி ராஜி ராமச்சந்திரன்...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us