வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க 2021 செயற்குழு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க 2021 செயற்குழு

ஜூலை 16,2021 

Comments

  தலைவர்:ஹேமப்பிரியா பொன்னுவேல்; துணைத்தலைவர்: அறிவுமணி ராமலிங்கம்; செயலாளர்: விஜயகுமார் சத்தியமூர்த்தி; இணைச் செயலாளர்: சுவாமிநாதன் நித்யானந்தம்; பொருளாளர்: கவிதா சுப்ரமணியம்


இயக்குநர் குழு: தீபா செந்தில்நாதன், குழந்தைவேல் ராமசாமி, ஸ்ரீநிவாசன் சண்முகம், நிதிலா செல்வன் முத்துசாமி, நாகராஜன் பட்டாபிராமன், முத்துகுமார் பிச்சை, ராதாகிருஷ்ணன் சந்திரகுமார், பிரேம்குமார் திருநாவுக்கரசு


வாசிங்டன் தமிழ்ச்சங்கம் உருவாகி வளர்ந்த வரலாறு
இது நம் தமிழ் சங்கத்தின் சரித்திரம். நம் சங்கம் உருவாகி வளம் பெற்ற சரித்திரம். வாசிங்டன் வட்டாரத் தமிழ் அன்பர்களுக்கு 1970-களில் உள்ள ஆண்டுகள் ஓர் வரப்பிரசாதம். வருங்கால வரலாற்றின் வரைபடமாகவும் எதிர்கால தமிழ் செல்வங்களுக்கு மொழி, இன, கலை மற்றும் பண்பாட்டின் அடிப்படையாகவும் அமைந்தது. அது கணினி, செல்பேசி(அலைபேசி), மின்னஞ்சல் இல்லாத கற்காலம். இந்தியர்கள், பொதுவாக தமிழர்கள் அமெரிக்க மண்ணில் அதிகமாக வந்து சேர்ந்து கொண்டிருந்த காலம். சாலைகளிலும் வேலைகளிலும் தமிழ் /இந்திய முகங்களை பார்ப்பது அரிதான காலம். தமிழ்க்கடைகள் இல்லாத ஒரு நிலை. ஒரே ஒரு தமிழ்க் கடை வாசிங்டன் ப்ளோரிடா சாலையில் இருந்தது. இதுபோக யாராவது குமுதம் அல்லது ஆனந்த விகடன் கொண்டுவந்தால் அது பலபேர் கைப்பட்டு மடங்கி சுருண்டு மடலாகிவிடும்.

தமிழ் சினிமா பற்றி கேட்கவே வேண்டாம். எப்போது தமிழ் சினிமா பார்க்க முடியும் என்று இருந்தவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்தார் திரு. ப. சின்னராஜ் அவர்கள். அவர் அமெரிக்கத் தமிழ் வானொலியில் அறிவிப்பாளராக இருந்தார். அவர் தமிழ் படவுலகைத் தொடர்பு கொண்டு 16-மில்லி மீட்டர் படங்களை வரவழைத்து திரையிட்டார். கல்லூரி அறைகளில் திரையிட்டுக் கிடைத்த பணத்தை தபால் செலவுக்கு மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற லாபம் ஏதுமின்றி பார்த்துக்கொண்டார். வருடத்திற்கு நான்கு முறை திரைப்படம் என்ற நிலை மாறி, மாதம் ஒருமுறை என்று நிலை வளர்ந்தது. நியூயார்க்கில் டாக்டர் குமரேசன் மூலம் பட விநியோகம் நடந்தது.

தமிழ் முகங்கள் அறிமுகங்களாகத் தமிழ் மனங்கள் ஒன்று சேர்ந்தன. திரைப்படத்தின் அமைப்பு திரு சின்னராஜ் அவர்களின் அமைப்பின் கீழ் “தமிழ் வட்டம்” என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தது. இந்த அமைப்பு முறைப்படி பதிவு செய்யப்படவில்லை. இதே காலக்கட்டத்தில் பால்டிமோரில் டாக்டர் கோபால்சாமி அவர்களின் முனைப்பில் “தமிழ்க் கலாச்சாரக் கழகம்” என்ற அமைப்பு தோன்றியது. இரண்டும் கருவாக இருந்ததே தவிர உருவாகவில்லை.

இந்த சூழ்நிலையில் தமிழ்ச்சங்கம் ஒன்று உருவாக வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆங்கில நாட்டில் தமிழ் சங்கம் எதற்கு என்ற கேள்வி கூட எழுந்தது. அதற்குத், தமிழ்ச்சங்கம் உங்களுக்கு அல்ல; உங்கள் வருங்கால சந்ததியினருக்கு தமிழையும் தமிழ் வாழ்வியலையும் வழங்குவதற்கு என்ற பதிலும் கிடைத்தது. இரண்டு அமைப்புகள் இருந்து வந்த சூழ் நிலையில் மறைமுகமான ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை இருந்தது.

இந்நிலையில் பால்டிமோர் அமைப்புத் தங்கள் தமிழ் அமைப்பை “தமிழ்க் கலாசாரக் கழகம்” என்று பதிவு செய்தது. பின்னர் வாசிங்டன் வட்டார அமைப்பு, “தமிழ் சங்கம்” என்று பதிவு செய்தது. வாசிங்டன் வட்டாரத் தமிழ்சங்கம் மிக சிறப்பாக வளர்ந்தது. தேர்தல்கள் நாகரிகமான முறையில் நடந்தது. சங்க விதிகள், திட்டங்கள் சீரிய முறையில் எழுதப்பட்டன. முதல் தலைவர் திருமதி சரஸ்வதி அரங்கநாதன் ஆவார் . அவர் நாமக்கல் புலவரின் அருமை புதல்வி ஆவார். நமது சங்கத்தின் வளர்ச்சி கண்ட மற்ற தென் இந்திய ( தெலுங்கு, மலையாளம் ) அன்பர்கள் நமது சங்கத்திற்கு வந்து பங்கு பெற்று பின்னர் நமது சங்கவிதிகளை அவர்கள் அமைப்பிற்கும் பின்பற்றினர்.

தமிழ் சங்கம் சார்பில் “சங்க இதழ்” என்ற கையெழுத்துப் பிரதி உருவாக்கப்பட்டது. திருமதி ராஜகுமாரி ஐசக் அவர்களின் முத்தான கையெழுத்தில் பிரதி உருவானது. 50 பிரதிகள் எடுக்கப்பட்டு பின் 150 பிரதிகளுக்கு வளர்ந்தது. இதற்கு முன் “மன்ற மடல்” என்ற இதழ் சிலமாதம் வெளிவந்தது. பின்னர் அது சங்க இதழாய் மாறியது இதே காலக் கட்டத்தில் நியுயார்க்கிலும், கலிபோர்னியாவிலும், சிக்காகோவிலும் மற்றும் சில இடங்களிலும் தமிழ் அமைப்புகள் உருவாகின.

வாசிங்டன் தமிழ் சங்கம், ஜாதி மத இன வேறுபாடின்றி அனைவரையும் அனைத்து நின்றது. முதல் முறையாக இந்த வட்டாரத்தில் நடன நிகழ்ச்சி, சிறுவர் நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி, கவியரங்கம் முதலியன நடைபெற்றன. சங்க இதழ் பக்கங்கள் பெருகிக் கதைகளும் கவிதைகளும் வர ஆரம்பித்தன. நிகழ்சிகளுக்கு மக்கள் கூட்டம் அதிகம் வந்தது. ஓரு நிகழ்ச்சிக்கு 120 மைல் தூரத்தில் இருந்து சிறுவர்கள் வந்து பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது. முதன் முதலாக நாடகம் ஒன்று உருவானது.

இந்த வாசிங்டன் வட்டாரச் சங்கத்தின் வளர்ச்சி பால்டிமோர் அமைப்பைக் கவர்ந்தது. இரண்டு அமைப்புகள் ஒன்றாகி ஒருஅமைப்பாக செயல்படவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. பெயர் தெரிவு மற்றும் செயற்குழுத் தெரிவு குழப்பத்திற்குப் பிறகு, வெகு சிறப்பாகச் செயல்பட்டது. சங்க இதழ் பிரதிகள் அதிகம் பரவ ஆரம்பித்தது. மூன்று பேர் செயல்பட்ட சங்க இதழ், பின்னர் எழு பேர் கொண்ட குழுவாக வளர்ந்தது. தமிழ் அன்பர்கள் தங்கள் அவசர அலுவல்கள் மத்தியிலும் தமிழுக்கென்று தங்கள் பொன்னான நேரத்தை தந்தது பாராட்டத்தக்கது. காலையில் வேலைக்குப் போய் மாலையில் சிலமணி நேரங்கள் தூங்கிப் பின் இரவு இரண்டாவது வேலைக்கு போவது இயல்பு. அந்த மாலை நேர உறங்கும் நேரத்தையும் தமிழுக்கென்று செலவிட்டவர்களும் உண்டு. குறிப்பாக டாக்டர் எஸ். ஜி. ராமசாமி என்பவர் தனது பச்சிளம் குழந்தை மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருந்த நேரத்திலும் தமிழ் சங்கத்திற்குத் தன் நேரத்தை செலவிட்ட தியாகம் இங்கு பதிவு செய்யப்படவேண்டிய ஒன்று.

இந்த இடத்தில் வரலாறு படைத்த வீரபாண்டிய கட்டப்பொம்மனின் நாடகத்தை குறிப்பிடுவது மிகவும் அவசியம். திரு குமரி ராஜு தலைவராக இருந்தபோது இந்த நாடகம் நடைபெற்றது. அதில் கட்டபொம்மனாக திரு ராஜு அவர்கள் நடிக்க, ஒரு பெரிய நாடகக் குழுவே உருவாகிப் பங்கு பெற்றது. கோடம்பாக்கத்தில் இருந்து திரைப்பட சீன் செட்டிங் கொண்டு வரப்பட்டது. அமெரிக்காவில் நடத்திய முதல், முழு நீள சரித்திர நாடகம் இது எனலாம்!

பொதுவாக பெண்மணிகள் இந்தியா சென்றால் பட்டுப்புடவையும் நகையும் ஊறுகாயும் கொண்டு வருவது மரபு. திருமதி. சரஸ்வதி அரங்கநாதன் அவர்கள் தமிழ் சங்கத்திற்கு சங்க இதழ் பரவ தமிழ் தட்டெழுத்து கொண்டுவந்தார். இதன் பயன் சில காலமே இருந்தாலும் அவர்தம் தமிழ் உணர்வு சரித்திரம் படைத்தது. அதேபோல, முனைவர் அந்தோணி சாமி அவர்கள் தமிழ் பித்தர்; தமிழ் சித்தர்; தமிழ் கவிஞர். பேச்சிலும் மூச்சிலும் எழுத்திலும் கவிதை தரக்கூடியவர். சங்க இதழ் ஆசிரிய குழுவில் சேர்ந்தார். அவர் பணியில் சங்க இதழ் “தென்றலாக” பெயர் அடைந்தது. இன்றும் பல குழப்பங்களுக்குப் பிறகு தென்றல் என்ற பெயரிருப்பது யாவரும் அறிந்ததே. நிகழ்சிகளின் புகைப்படங்களும் வண்ண எழுத்துக்களும் இடம் பெற்றன. தென்றல் பிரதியின் அங்கத்தினர்களுள் டாக்டர் அந்தோணி சாமி எழுதிய கவிதைத் தென்றல் என்ற கவிதைத் தொகுப்பு நூலும், டாக்டர் எஸ். ஸ்ரீதர் எழுதிய இதயச் சிறகுகள் என்ற சிறுகதை நூலும் வெளியிடப்பட்டது.

கவிஞர் கண்ணதாசன் கலை மன்றம் உருவாகியது. திரு. வல்லபாய் ஐசக் அவர்களின் படைப்பில் பல நகைச்சுவை நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் 15-க்கும் மேற்பட்ட தமிழ் சங்கத் தலைவர்கள் நடித்தது மிகவும் குறிபிடத்தக்கது. இது உலகத்தில் பிறநாடுகளில் வசிக்கும் எந்த அமைப்புக்கும் இல்லாத சிறப்பு எனலாம். குறிப்பாக கலாட்டா கனகம் என்ற நாடகம் பிட்ஸ்பர்க் ஆலயத்திலும் மற்ற வட்டார சங்கங்களிலும் மேடை ஏறியது சிறப்பாகும். இதன் மூலமாக சங்கத்திற்கு நிதியும் புகழும் கிட்டியது குறிப்பிடத்தக்கது. இதில் நடித்த அனைவரும் குறிப்பாக ஸ்ரீதர், ராஜி, மனோகர் முதலியோர் மிக நன்றாக நடித்தனர். அதனைத் தொடர்ந்து காசி யாத்திரை, காசா கடவுளா போன்ற வெற்றி நாடகங்கள் வெளிவந்தன.

தமிழ் சங்கத்தின் இந்த ஆரம்ப காலத்தின் அசூர வளர்ச்சிக்குக் காரணம் அதன் தலைவர்கள். ஆர்வம் உள்ளவர்களை அரவணைத்து, ஊக்குவித்து சாதனை படைக்க முன் நிறுத்தியதே எனலாம். திரு கஃபூர் கோசி அவர்கள் தலைமைப் பணி புரிந்த காலத்தில் முத்தமிழ் விழா உருவெடுத்தது. மூன்று தமிழுக்கும் சரி அளவு நேரம் அமைத்து விழா எடுத்தது குறிப்பிடத்தக்கது. பக்கத்து மாநிலங்களிலிருந்து வந்து பார்த்தவர்கள், பங்கு பெற்றவர்கள் பலர்!. இதில் பங்கு பெற்றவர்கள் வருங்காலத்தில் அமெரிக்கவாழ் தமிழ் அன்பர்கள் வருடத்திற்கு ஒரு முறை கூடி நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற கனாக் கண்டனர். இன்று அது நனவானதை நாம் அறிகிறோம்.

சிறு குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க பள்ளிகள் நிறுவப்பட்டன. இதில் திருமதி. சரஸ்வதி அரங்கநாதன், மஞ்சுளா கோபாலகிருஷ்ணன், முத்துக்கண்ணு குருசாமி மற்றும் திருமதி நடராஜன் முதலியோர் திறம்பட செயலாற்றினார்கள். இதன் வளர்ச்சியின் பயனாக வர்ஜினியாவிலும் தமிழ்க் கல்வி வளர்ந்தது. திரு விக்ன ராஜா தம்பதியினர் இருவரும் தமிழ்ச்சங்கத்தின் தலைமை பதவியில் இருந்தார்கள். அவர்கள் பதவிகாலத்தில் குழந்தைகள் நிகழ்ச்சி மிக சிறப்பாக இருந்தது. அவர்களின் அயராத உழைப்பு பின் ஆண்டுகளில் பல நடன அரங்கேற்றங்களுக்கு அடிகோலியது. அதே காலகட்டத்தில் பல நடன அமைப்புகள் தோன்ற ஆரம்பித்தன.

தமிழ் சங்க தலைவர்கள் அனைவரும் திறம்பட பணி புரிந்தனர். ஒவ்வொருவரின் பணியும் அந்தந்தக் காலக்கட்டத்திற்கு பெரிதும் பயன்பட்டது. இதைத் தொடர்ந்து, பின் வந்த தலைவர்களும், சங்க உறுப்பினர்களும் தங்கள் இலட்சியத்தை முறையே செய்து நம் தமிழ் சங்கத்தை சிறப்பித்து வருகிறார்கள் . இந்த கட்டுரையின் நோக்கம் வருங்கால தலைமுறையினர் கடந்த கால சங்கத்தைப் பற்றிய செய்தியை அறிய வேண்டும் என்பதே.
Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆக., 6 ல் அபுதாபி அய்மான் சங்கம் நடத்தும் இலவச மருத்துவ முகாம்

ஆக., 6 ல் அபுதாபி அய்மான் சங்கம் நடத்தும் இலவச மருத்துவ முகாம்...

சிங்கப்பூரில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சிறப்பு அபிஷேகம்

சிங்கப்பூரில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சிறப்பு அபிஷேகம்...

அமீரக அரசின் கோல்டன் விசா பெற்ற தமிழக மருத்துவர்

அமீரக அரசின் கோல்டன் விசா பெற்ற தமிழக மருத்துவர்...

திருகோணமலை றோட்டரிக் கழகத்தின் 43 ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வு

திருகோணமலை றோட்டரிக் கழகத்தின் 43 ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வு...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us