“கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே,
கண்மணி கேளடா நீ என்றன் சொல்லையே!”
இளமை கழிந்திடில் ஏறுமோ கல்விதான்?
இப்பொழுதே உண் இனித்திடும் தேன்”
என்ற பாரதிதாசனின் பாடலுக்கேற்ப அட்லாண்டாவில் வசிக்கும் தமிழர்களில் பலர், தம் குழந்தைச்செல்வங்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களை வார விடுமுறையில் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள்.
இப்பள்ளிகளில் தன்னார்வத் தொண்டாற்றும் ஆசிரியர்களுக்குப் பெரிதும் உதவும் வகையிலான, முனைவர் திரு, அமிர்தகணேசன் (அகன்) அவர்களின் “கொஞ்சம் கதை கொஞ்சம் இலக்கணம்” என்ற கலந்துரையாடலை, அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கம், அக்டோபர் 13, 2019 அன்று ஆல்ஃபெரட்டா நகரில் ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்ச்சியைச் சங்கத் தலைவர் திரு. குமரேஷும், செயற்குழுவைச் சேர்ந்த திரு. சங்கரும் துவக்கி வைத்தனர்.
முதலில் திரு, அமிர்தகணேசன், இங்குள்ள தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களில் பலர், முறையான ஆசிரியர் பயிற்சியும், முறையான தமிழ்க்கல்வியும் பெற்றுள்ளாத போதும், நம் தாய்மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில், களமிறங்கி இருப்பது குறித்துப் பாராட்டிப் பேசினார்.
உலகிலுள்ள ஆயிரக்கணக்கான மொழிகளுக்குள் செம்மொழி அந்தஸ்தைப் பெற்றிருக்கும் ஆறு மொழிகளில் ஒன்றான தமிழின் சிறப்பைக் குறிப்பிட்டார். நன்னூலில் சொல்லப்பட்டிருக்கும், இன்றும் பொருந்தக் கூடிய ஆசிரியர் மற்றும் மாணவருக்கான விதிகள் பற்றி எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கினார்.
பல்வேறு சமயங்களைப் பரப்ப வந்தவர்கள், தமிழைக் கையில் எடுத்துக் கொண்டு, நமக்கு விட்டுச் சென்ற இலக்கியப் பெட்டகங்களை நாம் திறந்து பார்த்து உணர வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
அவர், கற்பித்தலை மேம்படுத்த ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்ட பயனுள்ள தகவல்களும், உத்திகளும் -
மகாகவி பாரதி தமிழ்க்கவிதையில் புதிய வடிவத்தைச் சொல்லிலும், சுவையிலும், பொருளிலும் அளித்து வசன கவிதை வகைமையையும் அறிமுகப்படுத்தினார். அவர் வழித்தோன்றலென பாரதிதாசன் தமிழ்க்கவிதைக்கு அரும் பணியாற்றினார். மரபு நடையை மாற்றி, புதுக்கவிதை வகைமையை வானம்பாடி இயக்கக் கவிஞர்கள் தமிழுக்கு அளித்தனர். ஆனாலும் வானம்பாடி இயக்கத்தின் கவிஞர்கள் மரபு நெறி இலக்கணம் நன்கு அறிந்திருந்தனர். எனவேதான் அவர்களின் புதுக்கவிதைகள் இன்றும் தமிழில் உணர்வுடன் ஒளி வீசி வருகின்றன.
கவிதைக்காக யாப்பிலக்கணம் மீறப்படலாம். கற்று மீறுவது சுவை தர வல்லது. இலக்கண விதிகள்தாம் மொழியின் மாண்புக்கான உயிர்நாடி. இவற்றை ஆசிரியர்கள் முதலில் புரிந்து கொண்டு, குழந்தைகளுக்கு எளிய எடுத்துக்காட்டுகள், உரையாடல்கள், பாட்டுகள், கதைகள் மூலம் கற்பிக்கலாம்.
பொருள் தரக் கூடிய ஓரெழுத்துச் சொற்கள் தமிழில் மிகுதி. இவற்றைச் சுலபமாகத் தெரிந்து கொள்ள வைக்கலாம். “ஓர்/ஒரு” பயன்பாடு, ஒருமை/பன்மை, உயர்திணை/அஃறிணை, சொற்களில் இடைவெளி மாறினால் வெளிப்படும் வேறு பொருள், ஒற்று மிகும்/மிகா இடங்கள் என்று படிப்படியாகக் கற்பிக்கலாம்.
குழந்தைகளுக்கு ஆர்வமூட்டும் வகையில் விளையாட்டு கலந்த கல்விமுறையை அறிமுகம் செய்யலாம். எடுத்துக்காட்டாக, திருக்குறள் அதிகாரத்தின் பெயரையும், ஏழு சீர்கள் கொண்ட குறளையும், எட்டு அசைவுகள் கொண்ட உடற்பயிற்சியோடு கற்றுத் தரலாம். இதை அனைத்து வகுப்பு மாணவர்களையும் பேரவையில் ஒருங்கிணைத்துச் செய்ய வைப்பது, அவர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும்.
விபரம் தெரிந்த மாணவர்களுக்கு, உயர்நிலைப் பள்ளியில் அந்நிய மொழிப்பாடத்துக்கான மதிப்பீடு கிடைக்க வாய்ப்பிருப்பதைத் தெரிவித்து ஆர்வத்தைத் தூண்டலாம்.
மேலும் அவர், “ஒலி தான் மொழியை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்களிக்கிறது. ஆசிரியர்கள் உச்சரிப்பைச் சரியாகச் சொல்லிக் கொடுத்து, பிற மொழிகளின் தாக்கம்/கலப்பு இல்லாமல் பாடம் நடத்துவது, பேச வைப்பது, மொழியின் சிதைவைத் தவிர்க்கப் பெரிதும் உதவும்” என்று குறிப்பிட்டார்.
“கொஞ்சம் கதை” பகுதியில் சுலபமான தலைப்பைக் கொடுத்து, ஆசிரியர்களை எட்டு வரிகளில் குழத்தைகளுக்குப் புரியும் வகையில் கதை அல்லது பாட்டு எழுதச் சொன்னார். இது போன்ற பயிற்சிகளைக் குழந்தைகளுக்கு அளித்து, அவர்களின் கற்பனை வளம், புத்தாக்கத் திறன் ஆகியவற்றை வெளிக் கொணரலாம். ஆசிரியர்களுக்கும் இவை உதவும்.
நிகழ்ச்சிக்கிடையில், பேராசிரியர் மருத்துவர் ச. இளங்கோவன் படைத்த “இதயச் சாரல்” என்ற நூல் வெளியிடப்பட்டது. முனைவர் திரு. உதயகுமார், முதல் இரண்டு பிரதிகளை சங்கத் தலைவர் திரு. குமரேஷிற்கும், லில்பர்ன் தமிழ்ப்பள்ளி முதல்வர் திரு. ரவி பழனியப்பனுக்கும் வழங்கினார், புத்தக ஆசிரியர் பற்றியும், சிலப்பதிகாரச் சிறப்புகள் பற்றியும் உரையாற்றினார்.
அறிவியலாளர், தமிழ்க்கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர் என்பதையும் தாண்டி, புதுச்சேரியில் “இணையதளப் பேரவை” என்ற அமைப்பின் மூலம் மகாகவி தமிழன்பன் பெயரில், பல இளம் கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் விருதுகளை வழங்கி ஊக்குவிக்கும் முனைவர் திரு, அமிர்தகணேசனின் தொண்டு போற்றுதலுக்குரியது.
நிகழ்ச்சியின் நிறைவாக, அவர் பயிற்சியின் போது பங்கேற்ற அனைவருக்கும் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதிய நூல்கள் வழங்கினார்.
பயிற்சியில் உருவான கதையைப் படநூலாகக் கொண்டுவர உதவிட முன்வந்த அவரை வாழ்த்தி எல்லோரும் விடைபெற்றனர்.
இத்தகைய பேரறிஞரின் உரையாடலை ஏற்பாடு செய்த அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கச் செயற்குழுவிற்கு நம் நன்றி.
- தினமலர் வாசகர் ராஜி ராமச்சந்திரன்
ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...
டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...
கொடைக்கானல்: 30 ஆண்டுகளுக்கு பிறகு, டிச., 26 ல் வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது. காலை 8.36 மணிக்கு துவங்கும் சூரிய கிரகணம், காலை 10.30 மணிக்கு முழுமை பெறும். ...
டிசம்பர் 05,2019 IST
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.