சிங்கப்பூரில் கவியரசு கண்ணதாசன் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் கவியரசு கண்ணதாசன் விழா

நவம்பர் 18,2019  IST

Comments

நாற்பத்தோராண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் இருபத்தோராம் ஆண்டாகக் கவியரசு கண்ணதாசன் விழாவை நவம்பர் 16 ஆம் தேதி மிகச்சிறப்பாக நடத்தியது. அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத் திருமண மண்டபத்தில் கண்கவர் பரத நாட்டியம் – கண்ணதாசன் விருது வழங்கும் நிகழ்வு – பாட்டுத் திறன் போட்டிகளில் இறுதிச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பாட்டு – பார்வையாளர்கள் பங்கேற்ற புதிர்ப் போட்டி – சிறப்புரை என்ற பல்சுவை அங்கங்களுடன் கோலாகலமாக நடைபெற்றது.

சாந்தி ராமச்சந்திரனின் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் விழா தொடங்கியது. சக்தி நுண்கலை நாட்டிய மன்ற நடனமணிகளின் கண்ணதாசனின் பாடலுக்கான பரதம் அடுத்த நிகழ்வாக இடம் பெற்றது. அடுத்த அங்கமாக அண்மையில் தனியார் தொலைக் காட்சி நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பாகப் பாடிப் பரிசு பெற்ற சிங்கப்பூர் மாணவன் சூர்யா பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார். வாழ்நாள் சாதனையாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால் மற்றும் தமிழ் எழுத்தாளர் கழக மேனாள் தலைவர் நா. ஆண்டியப்பன் ஆகியோருக்கு ஊடகவியலாளர் குணாளன் மாலை – பொன்னாடை அணிவித்துப் பெருமைப்படுத்தினார்.

சிங்கப்பூரின் ஆட்சி மொழியான தமிழ் இடம் பெறாத நிறுவனங்களில் தமிழைச் செயலுக்குக் கொண்டு வந்தும் அறிவிப்புப் பலகைகளில் தமிழ்ப் பிழை கண்டவிடத்துத் திருத்தியும் சேவை செய்து வரும் பன்மொழி ஆற்றல் பெற்ற முத்தழகு மெய்யப்பன் பொன்னாடை போர்த்திச் சிறப்பிக்கப்பட்டார். கண்ணதாசன் பாட்டுப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 வயதுக்குக் கீழ் உள்ளவர்களும் மேல் உள்ளவர்களும் மேடையில் பாடித் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இவர்களில் பரிசு பெற்றவர்களை முனைவர் மன்னை ராஜகோபாலன் குழுவினர் நீதிபதிகளாகச் செயல்பட்டுத் தேர்ந்தெடுத்தனர்.

பதினான்கு வயதுக்குட்பட்டவர்களில் கனிஷ்கா முதற் பரிசும் ரோஷன் பரத்வாஜ் இரண்டாவது பரிசும் கிருஷ்ண ஸ்வரூப் பேகன் மூன்றாவது பரிசும் பெற்றனர். பதினான்கு வயதுக்கு மேற்பட்டவர்களில் சொக்கலிங்கம் அரவிந்த் – மணிமாறன் முதற் பரிசும் லட்சுமி அய்யர் – மிர்ணாள் இரண்டாவது பரிசும் வெங்கடசாமி அப்பாசாமி மூன்றாவது பரிசும் பெற்றனர். இவர்களுக்குச் சிறப்பு விருந்தினர் ரொக்கப் பரிசளித்துச் சிறப்பித்தார். கவிஞர் சேவகன் கவிதாஞ்சலி படைத்தார். விழாவின் முத்தாய்ப்பு நிகழ்வாக இவ்வாண்டுக்கான கண்ணதாசன் விருது அறிவிக்கப்பட்டது. 36 வயதுடைய பல்லூடக வித்தகர் – குறும்படத் தயாரிப்பாளர் – இயக்குநர் முகம்மது யாசிர் இவ்வாண்டுக்கான கண்ணதாசன் விருதாளர் என பலத்த கரவொலிக்கிடையே அறிவிக்கப்பட்டார். இவருக்குப் பொன்னாடை போர்த்தி தங்கப் பதக்கம் அணிவித்து விருதுப் பட்டயத்தையும் வழங்கி சிறப்பு விருந்தினர் பாண்டியன் கவுரவித்தார்.

தமிழர் பேரவைத் தலைவர் வெ.பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கவுரவித்தார். தலைமை உரையாற்றிய நா.ஆண்டியப்பன் அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளி விவரப்படி சிங்கப்பூரில் தமிழ் பேசும் குடும்பங்களும் தமிழ் மொழி கற்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவது எதிர் காலத்தில் தமிழ் ஆட்சி மொழி என்ற அந்தஸ்தைப் பாதித்து விடுமோ என அஞ்சுவதாகவும் இக்கருத்தை அனைத்துத் தமிழ் அமைப்புக்களும் குறிப்பாகத் தமிழர் பேரவையும் கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

நிறைவாகத் தமிழகப் பிரபல சொற்பொழிவாளர் புலவர் மா. ராமலிங்கம் கவியரசு கண்ணதாசனின் பன்முகத் திறமைகள் பற்றியும் தத்துவங்களைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் பாடிய திறன் பற்றியும் சொற்பெருக்காற்றினார். நிகழ்வினை எஸ்.என்.வி.நாராயணன் – பிரேமா மகாலிங்கம் – மணிமாலா ஆகியோர் நெறிப்படுத்தினர் .முன்னதாக கவிஞர் கோ.இளங்கோவன் வரவேற்புரை ஆற்றினார். கண்ணன் மாணிக்கம் நன்றி நவில விழா இனிதே நிறைவேறியது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us