அட்லாண்டா வாழ் தமிழர்களின் முதல்நூல் வெளியீட்டு விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அட்லாண்டா வாழ் தமிழர்களின் முதல்நூல் வெளியீட்டு விழா

நவம்பர் 28,2019  IST

Comments

நவம்பர் 17, 2019 அன்று ஆல்ஃபெரட்டாவில் நிகழ்ந்தேறிய அட்லாண்டா வாழ் தமிழர்கள் மற்றும் உறவினர்களின் முதல்நூல் வெளியீட்டு விழாவில், பல கண்டங்களைத் தாண்டித் தன் சுவை மாறாது ஓங்கி ஒலித்தது தமிழ். அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் முழு ஆதரவுடன் மூன்று நூல்களும், இரண்டு கையேடுகளும் ஒரே சமயத்தில் இவ்விழாவில் அரங்கேறியது பெருமைக்குரியது.

முதல் நாள் நடைபெற்ற தமிழ்ச்சங்க தீபாவளி விழாவில், திருமதி. ஜெயா மாறன் நூலாசிரியர்களை அறிமுகப்படுத்தி, நூல்களைப் பற்றிய முன்னோட்டத்தை அழகுற அளித்தார். அவர் பேசுகையில், “இளைய சமுதாயத்தினரிடம் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் தற்போது மிகவும் குறைந்து வருகிறது. இப்பழக்கத்தை வளர்த்துக் கொள்ள நினைப்பவர்கள், முதலில் இவை போன்ற முதல்நூல்களைப் படிக்க வேண்டும். ஏனெனில் இவற்றில்தான் நமக்குப் புரியும் எளிய நடையில் நமக்குள் நடக்கும் விடயங்கள் பற்றி எழுதப்பட்டிருக்கும்” என்பதைச் சுட்டிக் காட்டினார். சங்கத்தின் வசந்தமலர்க் குழுவினர், நூல்களை அன்றைய சிறப்பு விருந்தினர் முனைவர் திரு. கு. ஞானசம்பந்தன் அவர்களிடம் அளித்து அவரது வாழ்த்துகளைப் பெற்றனர்.

நவம்பர் 17 அன்று திருமதி. பிரதீபா பிரேம், திரு. சங்கர் தங்கவேலு, திருமதி. ராஜி ராமச்சந்திரன், திருமதி. பிரபா அனந்த், திரு. அனந்தசுப்ரமணியன் ஆகிய ஐவரது முதல்நூல்களும் வெளியிடப்பட்டன. தமது சொற்சுவையும் நகைச்சுவையும் செறிந்த அழகான தமிழில் திருமதி. ஜெயா மாறன் வரவேற்புரை வழங்க, நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.

விழாவின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் திரு. அமிர்தகணேசன் தமிழில் பல கதை மற்றும் கவிதை நூல்கள் எழுதியவர். தமிழார்வம் மிக்கவர். தமது 'ஒருதுளிக்கவிதை' என்ற அமைப்பின் மூலம் பல புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்து, சிறந்த படைப்புகளை உருவாக்கி நூலாக்கம் செய்வதில் உறுதுணையாய் இருப்பவர். இவருக்கும் உடனிருந்து சிறப்பித்த தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. குமரேஷ் மற்றும் லில்பர்ன் தமிழ்ப்பள்ளி முதல்வர் திரு. இரவி பழனியப்பனுக்கும் நூலாசிரியர்கள் மலர்ச்செண்டு வழங்கினர்.

நூல்களின் முதல் பிரதிகளைத் திரு. இரவி பழனியப்பன் வெளியிட்டார். வசந்தமலர்க் குழுவைச் சார்ந்த திருமதி. பிரதீபாவின் 'ஆழியில் அமிழ்ந்த என் அழகிய மரப்பாச்சி' என்ற கவிதை நூலின் முதல் பிரதியை வசந்தமலர் ஆசிரியர் திரு. ஆதிமுத்து அவர்களும், தமிழ்ச்சங்கச் செயற்குழு உறுப்பினரான திரு. சங்கரின் 'பெயல் நீர் சாரல்' என்ற கவிதை நூலைத் திரு. இரவி பழனியப்பன் அவர்களும், லட்சுமி தமிழ்ப்பள்ளியின் துணை முதல்வர் திருமதி. ராஜியின் 'அம்மா வருவாயா?' என்ற கட்டுரை நூலை, லட்சுமி தமிழ்ப்பள்ளியின் முதல்வர் திருமதி. லட்சுமி சங்கர் அவர்களும், திருமதி. பிரபா அனந்தின் 'நல்லெண்ணங்கள் நாற்பது' என்ற கையேட்டு நூலை அவரது சகோதரி திருமதி. லலிதா சுவாமிநாதன் அவர்களும், திரு. அனந்தசுப்ரமணியனின் 'நான் கேட்டறிந்த பாரதி' என்ற கையேட்டு நூலைத் திரு. குமார் சுவாமிநாதன் அவர்களும் பெற்றுக்கொண்டு, நூல்களைப் பற்றியும் நூலாசிரியர்களைப் பற்றியும் புகழ்ந்து பேசினார்கள். நூல்களில் தாங்கள் ரசித்துப் படித்த பகுதிகளையும் சுவைபடப் பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் பேசிய திரு. இரவி பழனியப்பன், 34 ஆண்டுகளாக இயங்கி வரும் லட்சுமி தமிழ்ப்பள்ளியையும், 25 வருடங்களாக இயங்கி வரும் லில்பர்ன் தமிழ்ப்பள்ளியையும் பாராட்டினார். மேலும் எவரும் பரிந்துரை செய்யாத காரணத்தினாலேயே கவிஞர் பாரதியார் 'நோபல் பரிசு' பெறவில்லை என்றார். அது போன்ற ஒரு தவறு இனி நடவாதிருக்க இது போன்ற நிகழ்ச்சிகள் பேருதவியாய் இருக்கும் என்றார்.

திரு. குமரேஷ் அவர்கள் பேசுகையில் இந்நிகழ்ச்சி, அட்லாண்டா தமிழ்ச்சங்கத்திற்கு ஒரு “மைல் கல்” என்றார். அனைவரும் தமிழ் நூல்கள் எழுத வேண்டும் என்று வலியுறுத்திய அவர் வசந்தமலர்க் குழுவிற்குத் தனது பாராட்டைத் தெரிவித்தார்.

பின்னர் வசந்தமலர்க் குழுவின் ஆசிரியரும் தமிழ் ஆர்வலரும் ஆன திரு. குமரேசன் அவர்கள் உரையாற்றுகையில் மொழிப்பற்றையும் பண்பாட்டின் மீதுள்ள மரியாதையையும் இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்வது மிக அவசியம் என்றார். நூல்களையும், நூலாசிரியர்களையும் பாராட்டிப் பேசிய அவர் நூல்களின் சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்தார்.

அதன் பின் நூலாசிரியர்கள் தங்கள் நன்றியுரையை வழங்கினர். தங்களுக்கு எழுத்தார்வம் தோன்றக் காரணமாயிருந்த நிகழ்ச்சிகள் மற்றும் எழுதுவதற்கு ஊக்கமும் உறுதுணையுமாய் இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தனர். தங்களது படைப்புகளுக்கு நூல் வடிவம் கொடுத்த திரு. அமிர்தகணேசன் அவர்களுக்குத் தமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.

பின்னர் திரு. அமிர்தகணேசன், நூலாசிரியர்களுக்குப் பொன்னாடை அணிவித்துப் பின் சிறப்புரையாற்றினார். எழுத்தாளர் என்பவர் எழுத்தை ஆள்பவராக இருத்தல் வேண்டும் என்றார். தமது முதல்நூலை வெளியிடத் தாம் கடந்து வந்த தடைகளைப் பகிர்ந்து கொண்ட அவர், அத்தகைய தடைகளைப் போக்கத் தன்னாலான முயற்சியாகவே தமது 'ஒரு துளிக் கவிதை' என்ற அமைப்பின் மூலம் முதல் வெளியீட்டாளர்களை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தார்.

திருமதி. ராஜியின் 'அம்மா வருவாயா?' என்ற நூலைப் பற்றிப் பேசுகையில், மிகவும் அருமையான பயனுள்ள கட்டுரைகளும், அனுபவத் துணுக்குகளும் நிறைந்த நூல் என்றார். திரு சங்கரின் 'பெயல் நீர் சாரல்', காதலும் வீரமும் கரம் கோர்த்த கவிதைகள் நிறைந்த நூல் என்றார். திருமதி. பிரதீபாவின் 'ஆழியிலே அமிழ்ந்த என் அழகிய மரப்பாச்சி' என்ற நூலுக்கு அதன் தலைப்பே முத்தாய்ப்பு என்றார்.

தமது அமைப்பின் மூலம் வெளியிடப்பட்ட இரண்டு புத்தகங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்குப் பரிந்துரைக்கப் பட்டிருப்பதைத் தெரிவித்தார். பலவித வண்ணங்களாய் மின்னும் தமிழ்ச் சங்கங்கள் அனைத்தும் வானவில்லாய் ஒன்றிணைந்து, வரவிருக்கும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையில் கூட்டாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பன்னாட்டு எழுத்தாளர் பேரவை அமைக்க வேண்டும் என்ற தமது ஆவலையும் வெளியிட்டார்.

மேலும் அனைவரும் நிறைய தமிழ்ப் புத்தகங்கள் வாசிக்க வேண்டும், நிறைய புத்தகங்கள் எழுதவேண்டும் என்று கூறினார். குழந்தைகளுக்குத் தமிழ் வாசிப்பைப் பழக்கப்படுத்த எளிமையான பல வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்தார். இளைய தலைமுறையினர் பலர் எழுத்தாளர்களாக உருவாக வேண்டும் என்றும் மூத்த தலைமுறையினர் அவர்களுக்கு வழிகாட்டியாய் இருந்து ஊக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார். திருமதி. ஜெயா மாறன் நன்றியுரை வழங்க விழா இனிதே முற்றுப் பெற்றது.

இதோ, தமிழ்த்தாயின் இலக்கியப் பொன்னாடையில் ஐந்து புது நூல்கள். 'திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்' என்ற பாரதியின் கனவு நனவாகும் நாள் தொலைவில் இல்லை.

தமிழ் வளர்ப்போம்! வளம் பெறுவோம்!

- தினமலர் வாசகி கிருத்திகா நடராஜன்Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)