சிங்கப்பூரில் இந்து சமய தமிழ்ப் பேருரை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் இந்து சமய தமிழ்ப் பேருரை

ஜனவரி 21,2020  IST

Comments

 அறுபத்தைந்தாண்டுத் தொன்மையும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க சிங்கப்பூர் இந்து சபை தனது 2020 ஆவது ஆண்டின் தொடக்க நிகழ்ச்சியாக ஜனவரி 18 ஆம் தேதி சிராங்கூன் சாலை வள்ளல் பி.கோவிந்தசாமி திருமண மண்டபத்தில் சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியத்தின் பேராதரவோடு இந்து சமயத் தமிழ்ப் பேருரை நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்தியது. 

மேலைச் சிதம்பரம் எனும் மிக்கப் புகழ் கொண்ட கோவையை அடுத்த பேரூரில் கி.பி.பதினாறாம் நூற்றாண்டில் அருட்குரு சாந்தலிங்கப் பெருமான் தோற்றுவித்த திருமடத்தின் இருபத்தைந்தாவது குருமகா சந்நிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், இந்து அறக்கட்டளை வாரியத் துணைத் தலைவர் இரா.தினகரன், இந்து அறக்கட்டளை வாரியத் தலைமைச் செயல் அதிகாரி ராஜசேகரன், சபைத் தலைவர் தி.ஜோதிநாதன், பேராசிரியர் அ.இரா.சிவகுமாரன் திருவிளக்கேற்ற நிகழ்வு தொடங்கியது. 

யஜீர் வேதம் - பிருகுதாரண்யக உபநிஷத்தில் திருவிளக்கேற்றல் பற்றிய ' இறைவா ! எங்களை அஞ்ஞானத்திலிருந்து மெய் ஞானத்திற்கு அழைத்துச் செல். இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல் . மரணத்திலிருந்து முக்தி நிலைக்கு அழைத்துச் செல் ' என்ற விளக்கத்தை நெறியாளர் எடுத்துரைத்தார். இந்து சபை மரபுப்படி நிகழ்வுக்கு ஞானசபைத் தலைவர் நடராஜரையே தலைவராகக் கொள்வதுதான் வழக்கம். அதன்படி நடராஜர் பூஜையை அருள்மிகு வீரமாகாளியம்மன் ஆலய ஓதுவா மூர்த்தி சுந்தரமூர்த்தி பூஜை செய்து தேவாரப் பாடல் பாடியது அடுத்த நிகழ்வாகத் தொடர்ந்தது. 

நடராஜர் பூஜை நிறைவு பெற்றதும் சிங்கப்பூர் பிரபல சக்தி பைன் ஆர்ட்ஸ் - தேவி வீரப்பன் மாணவியர் சுஜாதா பாஸ்கரன், ரஞ்சனா பாஸ்கரன் 'ஆடிக்கொண்டார் அந்த ஆனந்தக் காட்சியைக் காணக் கண் ஆயிரம் வேண்டாமோ' என்ற முத்துத் தாண்டவர் பாடலுக்கு பரதமாடி பார்வையாளர்களின் பலத்த கரவொலி பெற்றனர். இந்து சபைத் தலைவர் தி.ஜோதிநாதன் சபை நிகழ்ச்சிகள் பற்றியும் எதிர் காலத் திட்டங்கள் பற்றியும் விளக்கி வரவேற்புரை ஆற்றினார். இந்து அறக்கட்டளை வாரியத் துணைத் தலைவரும் மேனாள் நாடாளு மன்ற உறுப்பினருமான இரா. தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குருமகா சந்நிதானம் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தித் தனதுரையை நிகழ்த்தினார்.

முத்தாய்ப்பு நிகழ்வாக குருமகா சந்நிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் ' ஆன்மிகமே வாழ்வியலுக்கு அடிப்படை ' என்ற தலைப்பில் சிறப்புப் பேருரை நிகழ்த்தினார். அவர் தமதுரையில் மக்கள் இன்று மேற்கொண்டுள்ள வாழ்க்கை கல்வியால், பொருளாதாரத்தால், இதர வசதிகளால் கால் கிணறு, அரைக் கிணறு, முக்கால் கிணறு தாண்டுவதாக உள்ளதே தவிர முழுமையான வாழ்க்கையாக இல்லை என்பதைப் பல்வேறு உதாரணங்களால் சுட்டிக் காட்டி ஆன்மிகம் மட்டுமே நிறைவான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என்றார். 

அவர் மேலும் பேசுகையில், 'உலகியல் போக்கில் சொல்லப்படும் நான்கு பேர் போனவழி போக வேண்டும்' என்பது சைவ சமய ஞானிகளான அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞான சம்பந்தரது வழிகாட்டுதலே என்பதை அவர்தம் பாடல்களோடு விளக்கிய பாங்கு பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தது. 2017 ஆண்டில் ஐ.நா.சபையில் உலக அமைதி தின உரையாற்றித் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த அடிகளார் தமது அறுபத்தைந்து நிமிட உரையில் எது ஆன்மிகம், வாழ்வியலுக்கு அடிப்படை எது, வாழ்வு மேம்பட ஞானியர் காட்டிய படிநிலைகள், நால் வகைக் கல்வி, சரியை - கிரியை, யோகம், ஞானம் பற்றி எளிய நடையில் அரிய கருத்துக்களை எடுத்துரைத்துப் பார்வையாளர்களைத் தம்வசம் ஈர்த்தது அருமையிலும் அருமை. 

நன்யாங் பல்கலைக்கழக ( ஓய்வு ) தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அ.இரா.சிவகுமாரன் நிறைவுரை ஆற்றினார். அரங்கம் நிறைந்த பார்வையாளர்களைக் கொண்ட இந்த ஆன்மிக நிகழ்வை மூத்த பத்திரிகையாளர் வெ.புருஷோத்தமன் நெறிப்படுத்தினார். சிவபுத்திரி தமிழ்ச்செல்வி நன்றி நவில நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது. பங்கேற்ற அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us