சிங்கப்பூரில் பிரதமர் பங்கேற்ற பொங்கல் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் பிரதமர் பங்கேற்ற பொங்கல் விழா

ஜனவரி 27,2020  IST

Comments

'பொங்கலோ ... பொங்கல் ' எனத் தமிழில் கூறி புக்கித் பாஞ்சாங் பதின்மூன்றாவது பொங்கல் விழாவில் தமதுரையைத் துவக்கிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் - பல இன - சமய - மொழியைச் சேர்ந்த மக்கள் ஒன்றினைந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடும் இத்தகைய விழாவை சிங்கப்பூரைத் தவிர வேறெங்கும் காண முடியாது எனப் பெருமிதத்தோடு கூறினார். பாரம்பரிய அறுவடைத் திருவிழாவான இப்பொங்கல் மகிழ்ச்சிக்கும் நன்றியறிவிப்புக்கும் எடுத்துக் காட்டாக விளங்கும் ஒரு எழுச்சித் திருவிழா ' என ஜனவரி 19 ஆம் தேதி ஆயிரக் கணக்கான பல இன மக்கள் கலந்து கொண்ட புக்கித் பாஞ்சாங் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார். 

முன்னதாக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த திறந்த வெளி அரங்கிற்கு மயிலாட்டம் - பொய்க்கால் மாடாட்டம் - கரகாட்டம் - காவடியாட்டம் எனத் தமிழர்தம் நாட்டுப் புறக் கலைஞர்கள் புடைசூழ - உறுமி மேளம் முழங்க அழைத்து வரப்பட்ட பிரதமர் அரங்க வாயிலில் அழகுற அமைக்கப்பட்டிருந்த திருவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் வடமேற்கு மாவட்ட மேயரும் புக்கித் பாஞ்சாங் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினருமான டாக்டர் டியோ ஹோ பின் ஆகியோரும் திருவிளக்கேற்றி மகிழ்ந்தனர். 

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற பல சாதனைப் படங்கள் அடங்கிய புகைப்படக் கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். பல இன மக்கள் பொங்கலிடுவதையும் கண்ட பிரதமர் - திருமதி டியோ முறத்தில் நெல் இட உலக்கை எடுத்து நெல் குத்தவும் முயன்றார். பசுமை நிறைந்த முளைப் பாரியைப் பற்றியும் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விழாக்களின் சிறப்புகள் பற்றியும் ஏற்பாட்டுக் குழுத்தலைவர் மூர்த்தி பிரதமருக்கு விளக்கினார். பின்னர் மக்களோடு மக்களாகக் கலந்து கொண்ட பிரதமர் எல்லோரோடும் கரம் குலுக்கி மகிழ்ந்தார். 

அருள்மிகு அரசகேசரி ஆலயம் சார்பில் ஆண்டுதோறும் விழா அரங்கிலேயே அடுப்பமைத்து சுடச்சுடப் பார்வையாளர்களுக்கு வடை வழங்குவது வழக்கம். பிரதமர் அப்பகுதிக்கே சென்று ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் கருணாகரனிடம் வடை பெற்று ருசித்தது கண்கொள்ளாக் காட்சியாகும். ஆண்டுதோறும் ஒவ்வொரு சாதனை படைத்து வரும் புக்கித் பாஞ்சாங் விழாவின் இந்த ஆண்டுச் சாதனை சீன இனத்தவரில் பலரைப் பட்டு வேட்டி - பட்டுச் சட்டை அணியச் செய்து விழாவில் பங்கேற்க வைத்ததாகும். வழக்கம் போல பட்டுச்சட்டை வேட்டி அணிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டியோ - பட்டுப் புடவை அணிந்து வந்த திருமதி டியோ - வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் அரங்கிலுள்ளவர்களுக்கு கரம் குலுக்கி பொங்கல் வாழ்த்தைத் தெரிவித்துக் கொண்டனர். டாக்டர் டியோ தமது பிறந்த நாளை அரங்கில் உள்ள ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி மேடையில் கொண்டாடினார். 

விழாவில் நாட்டுப் புறப் பாடல்களுக்கான கரகாட்டம் - மயிலாட்டம் - சீன - மலாய் நடனங்கள் இடம் பெற்று பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மூர்த்தி வரவேற்புரை ஆற்றி பிரதமருக்குப் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து பசுவும் கன்றும் சிலை நினைவுப் பரிசளித்து கவுரவித்தார். பிரபல திரைப்பட நடிகர் ரஜினி போல உடையணிந்து அவருடைய திரைப்படப் பாடலைப் பாடிய ரஜினி சான் ( சீனர் ) பலத்த கரவொலி பெற்றார். விழா மலரும் மேடையில் வெளியீடு கண்டது. விழா அரங்கைச் சுற்றிலும் பொங்கல் விழாவின் சிறப்புக்களை விளக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. சுருங்கக் கூறின் தமிழகத்தில் பொங்கல் கொண்டாடுவதைப் போன்றே ஒரு பிரமிப்பை இந்த புக்கித் பாஞ்சாங் முத்திரைத் திருவிழா உண்டாக்கியது எனலாம்.


- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)