ஆசியாவின் இதயம் என்று சொல்லக்கூடிய எழில்மிகு நாடு தைவான். சுமார் 2.3 கோடி மக்கள்தொகை கொண்ட இந்த தீவு, சீனாவிலிருந்து கூப்பிட்டால் கேட்கக்கூடிய தூரத்தில் அமைந்துள்ளது. சீனாவின் ஷியாமென் மாநிலத்தில் இருந்து 300 கிமீ தூரத்தில் மட்டுமே உள்ள தைவான், சீனாவில் கொரனா நுண்கிருமி பரவல் ஆரம்பித்தவுடன் வெளிநாட்டில் இருந்து உள்ளே வருபவர்களை சோதித்து, எந்த வித நோய் தொற்று அறிகுறியும் இல்லாதவர்கள் மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார்கள். நோய் தொற்று ஏற்பட்டவர்கள், மற்றும் சந்தேகத்திற்கிடமானவர்கள் அனைவரும் 14 நாட்கள்
மருத்துவ தடுப்பு முகாமிற்கு விமானநிலையத்தில் இருந்து நேரடியாக அனுப்பப்பட்டார்கள்.
அதே நேரத்தில் உள்நாட்டில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் முகக்கவசம் மற்றும் 70% ஆல்கஹால் கலந்த கிருமிநாசினிகள் கிடைக்கும் வகையில் முதலில் பொது வெளியில் அதன் விற்பனைகளை தடைசெய்தது. மேலும் மருந்தகம் மூலமாக குடியுரிமை அட்டைவைத்திருக்கும் சிறியவர் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் பொது விநியோக முறையில் ஒரு நபருக்கு ஒரு வாரத்திற்கு இத்தனை என்று நியாயமான விலையிலே விற்பனை செய்தது. அதன் மூலம் யாருக்கும் முகக்கவசம் கிடைக்கவில்லை என்ற நிலை ஏற்படவே இல்லை. சொந்த குடிமக்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து வந்து வேலை பார்ப்பவர்களுக்கும் இதன் மூலம் முகக்கவசங்கள் கிடைத்தன.
படிப்படியாக கொரானா நுண்தொற்றை கட்டுப்படுத்தி, சுமார் 60 நாட்களுக்கும் மேலாக உள்நாட்டில் புதியதாக யாருக்கும் நோய்த்தொற்று பரவவில்லை என்ற நிலையை கொண்டுவந்து கொரானாவை முற்றாக கட்டுப்படுத்தி இருக்கிறார்கள். தைவான் அரசாங்கமானது அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மன், இந்தியா மற்றும் உலகத்தின் பல நாடுகளுக்கும் முகக்கவசங்கள், மருத்துவ உபகரணங்கள், சோதனை கருவிகளை நன்கொடையாகக் கொடுத்து உதவிக்கரம் நீட்டியுள்ளது. இதுவரை 2 கோடியே 70 லட்சம் முகக்கவசங்கள் நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார்கள்.
குறிப்பாக, இந்தியாவிற்கு சுமார் 10 லட்சம் முகக்கவசங்களை நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார்கள். அதில் 45 ஆயிரத்தினை, சென்னையில் இருக்கும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார அமைப்பின் இயக்குனர் நம்முடைய தமிழக அரசாங்கத்திடம் பிரத்யேகமாக ஒப்படைத்திருக்கிறார். தைவான் அரசாங்கம் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தியதையும், மற்ற நாடுகளுக்கு உதவும் உயர்ந்த எண்ணத்தையும் பாராட்டி நன்றி தெரிவிக்கும் வண்ணம் தைவான் தமிழ்சங்கமும் மற்றும் தைவானில் வசிக்கும் அனைத்து இந்திய சமுதாய மக்களும் ஒருசேர இருசக்கர வாகனம் மற்றும் மகிழுந்து பேரணியை நடத்தி தங்களுடைய வாழ்த்துக்களை தைவான் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
சுமார் 130 கி.மீ. தூரம் நடைபெற்ற இந்த பேரணியில் 150 இந்திய சமுதாயத்தினர் கலந்து கொண்டார்கள். பேரணியின் முடிவில் பறக்கும் பெரிய விளக்குகளில் தைவானுக்கு நன்றி!, தைவான் வாழ்க! என்று எழுதி பறக்கவிட்டு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- நமது செய்தியாள்ர் இரமேசு பரமசிவம் (துணைத் தலைவர், தைவான் தமிழ் சங்கம்)
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.