ஜெர்மனியை சுற்றிப் பார்க்கலாம் வாங்க! வாங்க!!-2 | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஜெர்மனியை சுற்றிப் பார்க்கலாம் வாங்க! வாங்க!!-2

ஜூன் 24,2020 

Comments

'Dark' - இது ஜெர்மனியில் மிகவும் பிரபலமான சயின்ஸ் பிக்ஷன் திரில்லர் வெப் சீரிஸ். டைம் டிராவலை அடிப்படையாக வைத்து நான்கு குடும்ப உறுப்பினர்களை கொண்டு பின்னப்பட்ட விறுவிறுப்பான திரில்லர். விண்டலூன் கிராமத்தில், குழந்தைகள் காணாமல் போவதில் ஆரம்பிக்கிறது இந்த சீரீஸ். இதன் முதல் சீசன் 2017 டிசம்பர் 1 ம் தேதியும், இரண்டாம் சீசன் 2019 ஜூன் 21 ம் தேதியும் நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பானது. மூன்றாம் சீசன் விரைவில் ஜூன் 27ம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது. பெரும்பாலும் பெர்லின் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.படத்தில் அடிக்கடி காட்டப்படும் ட்ரெயின் ட்ராக்கும் பாலமும் எங்கிருக்கிறது தெரியுமா? விடை கடைசியில்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் ஸ்ரீபிரியா நடித்த ரத்தபாசம் திரைப்படத்தில் இடம் பெற்ற 'பூ மணக்கும் பூங்குழலி' பாடல் படமாக்கப்பட்ட, இரண்டாம் லூட்விக் மன்னரால் கட்டப்பட்ட அரண்மனையைப் பற்றிய விபரங்களைத்தான் இந்தத் தொடரில் பார்க்கப்போகிறோம்.

ஜெர்மன் மொழியில் 'see' என்றால் ஏரி என்று அர்த்தம். ஜெர்மனியின் தென் பகுதியில் உள்ள பவேரியா மாநிலத்தில் கிம்சீ(Chiemsee) என்ற மிகப்பெரிய ஏரி உள்ளது. ஏரி என்றால் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். இந்த ஏரியின் பரப்பளவு எவ்வளவு தெரியுமா? 79.9 சதுர கிலோமீட்டர்(7990 ஹெக்டேர்). அதாவது சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி மாதிரி 5 மடங்கு பெரிது. இயந்திர படகு மூலமாகத் தான் இதில் உள்ள தீவுகளுக்குப் போக முடியும். இதில் ஆண் தீவு, பெண் தீவு என இரண்டு பெரிய தீவுகளும் முட்டைக்கோஸ் தீவு என்ற ஒரு குட்டித் தீவும் உண்டு. இந்த ஆண் தீவில் தான் அந்த அரண்மனை உள்ளது. அதன் முன்னால் உள்ள பூந்தோட்டத்திலும், தடாகத்தின் முன்னாலும் தான் சிவாஜியும் ஸ்ரீபிரியாவும் ஆடிப் பாடினார்கள்.

அதெலாம் சரி! இந்த தீவுக்கு எப்படி செல்வது என்று கேட்கிறீர்களா? இதோ அதற்கான வழி! பவேரிய மாநிலத்தின் தலைநகர் முனிச் நகரிலிருந்து ரயில் மூலம் ப்ரெய்ன் ஸ்டேஷனுக்கு ஒரு மணி நேரத்தில் செல்லலாம். அங்கிருந்து கிம்சீ ஸ்பெஷல் ட்ரெயின் மூலம் படகுத்துறைக்கு செல்ல முடியும். ட்ரெயின் இல்லாத நாட்களில் படகுத்துறைக்கு அரை மணி நேரம் நடக்கவேண்டியிருக்கும். அதனால், கையில் கூகுளை எடுத்துச்செல்வது நல்லது. டைம் டேபிளை பார்க்க அது உதவும். அதன் பின் படகில் ஏறவேண்டியது தான்.

ஆண் தீவின் ஏரியா சுமார் 238 ஹெக்டேர். இரண்டாம் லூட்விக் மன்னர் இந்த அரண்மனையை இங்கு கட்டியதற்கு பிரான்ஸ் ஒரு முக்கிய காரணம். அதாவது, பாரிஸிலிருந்து 20 கிலோமீட்டர் தென் மேற்கே 'வெர்சைலஸ்' என்ற மிகப்பெரிய அரண்மனை உள்ளது. 16ம் நூறாண்டில் அதாவது பிரென்ச் புரட்சிக்கு 100 வருடங்களுக்கு முன்னதாக 1789ல் 14ம் லூயிஸ் மன்னரால் இந்த அரண்மனை கட்டப்பட்டது. இந்த வெர்சைலஸ் அரண்மனை பற்றி கேள்வி பட்டு அதை பார்க்கவிரும்பினார் ஜெர்மனியின் இரண்டாம் லூட்விக் மன்னர்.

அதனால் 1867ல் பிரான்சுக்கு சென்றார். ஆனால் அப்போது அவருடைய மாமா 'ஓட்டோ' இறந்த செய்தி கிடைக்கவே, 

வெர்சைலஸ் அரண்மனை பார்க்காமலேயே மீண்டும் ஜெர்மனிக்கு திரும்ப நேர்ந்தது. அதன் பின் ஏழு வருடங்களுக்குப் பிறகு, பிரெஞ்ச் அரசாங்கம் லூட்விக் மன்னரை கவுரவிக்கும் பொருட்டு அவரின் பிறந்தநாளான 1874 ம் ஆண்டு ஆகஸ்ட் 25 ம் தேதி, அவரை பிரான்சுக்கு அழைத்தது. அப்போது தான் அவரின் கனவான வெர்சைலஸ் அரண்மனையைப் பார்த்தார். பார்த்ததும் பிரமித்துப்போனார்.

அதன் கட்டடக்கலை லூட்விக் மன்னருக்கு மிகவும் பிடித்துப்போனது.அது மாதிரியே ஒரு அரண்மனையை ஜெர்மனியில் 

கட்ட விரும்பினார். அரண்மனையைக் கட்ட பல இடங்களை தேர்வு செய்தும் திருப்தி ஏற்படாத நிலையில் 1873ல் அகுஸ்தினார் மடாதிபதிகளிடமிருந்து வாங்கியிருந்த ஆண் தீவில் இந்த அரண்மனை கட்ட முடிவு செய்தார். இந்த அரண்மனையை வடிவமைத்தவர்கள் கட்டிடக் கலைஞர்களான ஜார்ஜ் வான் டால்மேன், கிறிஸ்டியன் ஜாங்க் மற்றும் ஃபிரான்ஸ் வான் சீட்ஸ்.

1878 மே 21 ல் கட்டடம் முளைக்க ஆரம்பித்தது. ஆர்வமிகுதியால் மன்னரே அடிக்கடி வந்து பார்வையிட்டார்.1885 செப்டெம்பரில் சில நாட்கள் இந்த அரண்மனையில் தங்கியும் இருந்தார். அதுவே அவரின் இறுதி நாட்களாகிப் போனது அவரின் துரதிஷ்டம். அவரின் இறப்புக்குப் பின் கட்டிட வேலை நின்றுபோனது. அதுநாள் வரையிலும் இந்த அரண்மனைக்காக செலவழித்த தொகை, ஜெர்மனியில் ஏற்கெனவே கட்டியிருந்த லிண்டர்ஹோஃப் மற்றும் நியூஷ்வான்ஸ்டீன் கோட்டைகள் கட்டிய செலவை விட அதிகம். அவரின் இறப்புக்கு சில வாரங்களுக்குப் பிறகு மக்களின் பார்வைக்கு அரண்மனை திறக்கப்பட்டது. இன்று வரையிலும் மக்களின் வருகையால் இந்த அரண்மனை நிரம்பி வழிகிறது.
இந்த அரண்மனை ஆங்கில எழுத்தான 'W' வடிவில் அமைந்துள்ளது. அரண்மனையின் மையப்பகுதி மன்னரின் இறப்புக்கு முன்னரே முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. 70 அறைகளில் 16 அறைகள் தரை தளத்தில் அமைந்துள்ளன. 50 அறைகள் முழுவதுமாக கட்டிமுடிக்கப்படவில்லை. இருந்த போதிலும் ஒரு சில விஷயங்களில் இது பிரெஞ்சு அரண்மனையை மிஞ்சிவிட்டது. அதாவது, கழிவறைகள், சென்ட்ரலைஸ்டு ஹீட்டர்( குளிர் காலங்களில் பயன்படுத்த), மிகப்பெரிய வெந்நீர் குளியல் தொட்டி என்று இதில் இருக்கும் விஷயங்கள் அதிகம்.

ஆண் தீவிலிருந்து இயந்திரப்படகில் ஏறினால் பெண் தீவில் கொண்டுபோய் இறக்குவார்கள். 15.5 ஹெக்டேர் கொண்ட பெண் தீவில் 300 குடியிருப்புகளும் புனித ஆசீர்வாதப்பர் மடமும் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் Kloster Liqueur என்ற மதுபானம் மிகவும் பிரபலம். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இதை வாங்காமல் திரும்புவதில்லை. இவை தவிர இங்கு வசிப்பவர்களின் குழந்தைகள் படிக்க ஒரு பள்ளிக்கூடமும் உண்டு.இந்த இரண்டு தீவுகளிலும் ஜெர்மனிய படங்கள் மற்றும் ஆங்கில படங்கள் மட்டுமல்லாமல் பல நாட்டினரும் வந்து இதன் அழகை படம் பிடித்துச் செல்கின்றனர்.

மௌனத்தால் கூடி கும்மாளமிட்ட உதடுகள், புன்னகையால் பிரியும் போது, உள்ளுக்குள் புழுங்கினாலும் எதிராளியின் மனம் சந்தோஷப்படுமே என்று நினைப்பது போல, ஜெர்மனியின் அழகை யார், எப்படி படமெடுத்தாலும் அந்த அழகு கோபப்படாமல் இன்னும் இன்னும் கூடிக்கொண்டே போகிறது.

அடுத்தவாரம் சந்திப்போம்.

முதல் பாராவில் கேட்கப்பட்ட கேள்விக்கான விடை: ஜெர்மனியின் டியூப்ளர் காட்டின் நடுவே உள்ள வான்சீ என்னும் ஏரிக்கரை அருகில்.

- நமது செய்தியாளர் ஜேசு ஞானராஜ்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூலை 3ல் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு நடத்தும் உளவியல் நிகழ்ச்சி

ஜூலை 3ல் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு நடத்தும் உளவியல் நிகழ்ச்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

இன்று மாலை முதல் அயர்லாந்து தமிழ்ச் சங்கத்தின் *கோடை விழா 2020*

இன்று மாலை முதல் அயர்லாந்து தமிழ்ச் சங்கத்தின் *கோடை விழா 2020*...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us