கல்லிடைகுறிச்சி ஆ. முகமது முகைதீன்- தொழிலையும், தொண்டையும் கண்களாக பாவிக்கும் வளைகுடா தமிழர் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கல்லிடைகுறிச்சி ஆ. முகமது முகைதீன்- தொழிலையும், தொண்டையும் கண்களாக பாவிக்கும் வளைகுடா தமிழர்

ஜூன் 29,2020 

Comments

 கல்லிடைகுறிச்சி முனைவர். ஆ. முகமது முகைதீன் தொழிலையும், தொண்டையும் இரு கண்களாக பாவிக்கும் வளைகுடா தமிழர். இங்கே நாம் எதையும் கொண்டு வரவில்லை - கொண்டு போகப் போவதுமில்லை. இதை உணர்ந்து உண்மை - நேர்மை - திறமை - வாய்மை - தூய்மை சேவை - மனிதாபிமானம் இவற்றுடன் செம்மையாக செயல்பட்டு வருபவர் துபாய் தொழிலதிபரான முனைவர் திரு. கல்லிடைக்குறிச்சி ஆ. முகமது முகைதீன். இவர் UAE-ல் Power Flow Middle East LLCயின் நிதி இயக்குநர் மற்றும் பார்ட்னர். 

இளம் வயதில் தான் பட்ட கஷ்டங்களை அனுபவ பாடங்களாக கொண்டு, கற்களையும் - முட்களையும் படிகளாக அமைத்து முன்னேறியவர் அந்தக் கஷ்டங்கள் பிறருக்கும் வந்துவிடக்கூடாது என முடிந்த வகைகளில் பிறருக்கு உதவி வருபவர். இவரது அப்பா திரு S. ஆசாத் முகைதீன் பரோபகாரி. அன்றைய சுதந்திர காங்கிரஸ் இயக்கத்தில் சேவை செய்து மக்கள் சேவையில் தன் சொத்துக்களை செலவழித்து நொடிந்துப் போனவர். அம்மா திருமதி முகைதீன் பீவியும் - சகோதர சகோதரிகளும் பாய் நெசவு செய்து இவரை படிக்கவைத்தார்கள். 


சிறு வயதில் அனுபவித்த சிரமங்கள்


திருநெல்வேலி மாவட்டத்தில் செழிப்பான மணிமுத்தாறு - பாபநாசம் இடையே தாமிரபரணி நதி பாயும் கல்லிடைக்குறிச்சி இவரது சொந்த ஊர். விவசாயம் குன்றிவிட, அப்பா - சின்னதாய் உணவு விடுதி நடத்தி உடல் நலம் காரணமாய் அதையும் மூட வேண்டியதாயிற்று. முகைதீன், சரஸ்வதி துவக்க பள்ளியிலும், திலகர் வித்யாலயா மேனிலைப் பள்ளியிலும் படிக்கும் போது வீட்டில் பண கஷ்டம். அந்த நாட்களில், பள்ளி முடித்ததும் வீட்டினர் பசங்களை, வெளி மாநிலம் அல்லது வெளிநாட்டுக்கு அனுப்பி வேலை பார்க்க வைப்பது வழக்கம். மேற்படிப்பு பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. 

முகைதீனையும் அப்படி அனுப்ப வேண்டும் என்கிற முயற்சிக்கிடையில் இவரை படிக்க வைக்க வேண்டும் என்பதில் தாய் தீவிரமாயிருந்தார். அந்த ஊக்கத்தில் தினம் 4 கி.மீ நடந்து போய் அம்பாசமுத்திரம் அம்பை கலைக்கல்லூரியில் பி.காம் முடித்தார். வீட்டில் தனக்காக தாய் - சகோதர சகோதரிகள் முகம் சுளிக்காமல் பாய் நெசவு செய்கிற கஷ்டம் உணர்ந்து முகைதீனும் படிப்பு நேரம் போக அவர்களுக்கு ஒத்தாசையாக இருப்பார். அப்பாவின் புரோட்டா கடை அனுபவத்தால் - நண்பரின் கடையில் மாலை நேரத்தில் புரோட்டா அடிக்க செல்வார். 

அத்துடன் லெண்டிங் லைப்ரரி, சிறுவர்களுக்கு டியூசன்.... என இவர் செய்த சிறு தொழில்கள் ஏராளம். அதுமட்டுமின்றி - வெளியே மொத்த விற்பனையில் தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, மிட்டாய் போன்ற பொருட்கள் வாங்கி வந்து வீட்டிலேயே வைத்து விற்பார். கைத்தறி துணிகள், கைலிகள் வாங்கி அவற்றை சலவை செய்து அழகாக பிளாஸ்டிக்கில் பொதிந்து விற்பார். கடைகளை விட அங்கு விலை குறைவு என்பதால் விற்பனை அமோகமாக இருக்கும்.தீபாவளிக்கு துணிகள், பொங்கலுக்கு கரும்பு என தெருமுனையில் லோடு இறக்கி விநியோகிப்பார். வீடுவீடாக சென்று சிறுசேமிப்பு சீட்டு நடத்துவார். 


பட்டம் பெற்றபின் 10 ரூபாய் தினக்கூலி


1982ல் டிகிரி முடித்ததும் ஊரில் தினசரி ஊதியனாக (தினசரி 10 ரூபாய்) திருமறை நெசவாளர் சங்கத்தில் அக்கவுண்டன்ட்டாக வேலை கிடைத்தது. அப்போதெல்லாம் வருடந்தோறும் கைத்தறி கண்காட்சி நடக்கும். அந்த பொருட்கள் விற்பனை இல்லாமல் தேங்கலில் இருக்கும்.இவர்அதை வாங்கி விற்பனை செய்வார். சென்னை கண்காட்சியில் ஸ்டால் போடலாம் என முகைதீன் முயல, கதைக்கு ஆகாது என கிளம்பின எதிர்ப்பையும் மீறி நண்பர்களுடன் களத்தில் இறங்கி வெற்றி கண்டார். அதே மாதிரி - டையுடன் - ஸ்மார்ட்டாய் டிரஸ் பண்ணி, தம்பு செட்டி தெருவுக்குப் போக அங்கு இவர் மேல் மதிப்பும் நம்பிக்கையும் ஏற்படுத்தி மொத்த விற்பனையும் செய்திருக்கிறார். 


பெங்களூரில் கம்பூட்டர் கற்ற பின் பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் ராஜரத்னம் ஸ்பின்னிங் மில்லில், அழைப்பு! அங்கு வேலைக்கான நேர்முகத் தேர்வில் மாதச் சம்பளமாக ரூபாய் 450 மட்டுமே தர முடியும் என்றனர். அனால் இவரது பேச்சு - செயல் திறன் அறிந்து அப்படியே இரட்டிப்பு சம்பளத்தில் சேர்ந்தார். இருந்தாலும்கூட வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக செலவுகளை குறைத்து மதிய உணவை தவிர்த்து மிச்சம் பண்ணுவார். இவருக்குக் கீழ் அசிஸ்டன்ட் கேஷியராக பணிபுரிந்த பழனியப்பன், அதை அறிந்து, அவருடைய வீட்டிலிருந்து இவருக்கும் சாப்பாடு கொண்டு வர ஆரம்பித்தார். அதை ஏற்க மனம் இல்லாவிட்டாலும் கூட அவரது தாயின் அன்பு அரவணைப்பால் மறுக்க முடியவில்லை. அதன் பிறகு அவர்கள் முகைதீனை தங்கள் வீட்டிலேயே தங்க வைத்து சொந்த மகனைப் போல பார்த்துக் கொண்டதை இப்போதும் நன்றியுடன் நினைவு கூர்கிறார். அதற்கு கைமாறாக நண்பரின் குழந்தைகளுக்கு இவர் டியூஷன் சொல்லிக் கொடுக்க முடிந்ததை பெருமையாக கருதுகிறார். 


சவூதி அழைத்தது


அந்த உத்யோகத்தில் நல்ல பதவி - சம்பளம் என்றாலும் கூட - திருமணம் - குழந்தை என்ற பின் அங்கு மிச்சம் இல்லாமல் போக, மனைவிதில்சாத் நிலைமையை அறிந்து முகைதீனை வெளிநாட்டு வேலைக்குச் செல்ல தூண்டினார். முகைதீனுக்கு வெளிநாட்டு மோகம் இல்லை. திருமணத்தின் போது – மனைவியின் தந்தை 'வெளிநாட்டு வேலைக்குப் போகக்கூடாது உள்ளூர் மாப்பிள்ளைக்கு தான் என் மகளை தருவேன்' என்கிற நிபந்தனையுடன் திருமணம் முடித்து வைத்திருந்தார். 

ஆனாலும்கூட மனைவியின் மைத்துனர் நல்ல மீரான் அவர்கள் மூலம் விசா பெற்று 1993ல் சவுதி! பழனி கம்பெனி முதலாளி - அதற்காக கோபப்படவில்லை. நல்ல சம்பளம்- நல்ல எதிர்காலம் வருகிறதென்றால் அவசியம் போய் வா--என்று சவுதிக்கு அவரே டிக்கெட் எடுத்துக் கொடுத்தது விசேஷம். அது முகைதீனின் உழைப்பு - ஆத்மார்த்தம் - அணுகுமுறைக்கு கிடைத்த பரிசு!
சவுதியில் AL SAIF Trd.Co வில் முகைதீனுக்கு எதிர்ப்பார்த்த அளவிற்கு சம்பளம் கிடைக்காவிட்டாலும் கூட தன் திறமையால் முதலாளியின் நன்மதிப்பைப் பெற்று - வேறு வேலைக்கு ப் போக அனுமதி கிடைத்தது. அந்த சமயம் பழனி கம்பெனியில் வேலை பார்த்த நண்பர் ராஐகோபால் - பிரிட்டிஷ் கம்பெனி ஒன்றில் பணியாற்ற, அவர் மூலம் முகைதீன் அக்கம்பெனியில் சேர்ந்தார். முகைதீன் எந்த நிறுவனத்திற்கு சென்றாலும் அங்கு சம்பளம் எப்படியிருந்தாலும் - அந்த நிறுவனத்திற்கு தன்னால் முடிந்த அளவில் லாபம் உண்டாக்கி தரதவறுவதில்லை. முகைதீன் வளைகுடாவில் பல நிறுவனங்களுக்கும் ஆடிட் செய்து கொடுத்திருக்கிறார். திறமை அறிந்து பல கம்பெனிகளும் இவருக்கு நல்ல offer கள் வழங்க தயாராக இருந்த சமயம்-- வேலை பார்த்த கம்பெனியிலேயே இவரை துபாய் பிரிவை பார்த்துக்கொள்ள அனுப்பினர். 2008 இல் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அக்கம்பெனி மூடப்பட - அங்கு பணிபுரிந்த மேனேஜர் ஒருவருடன் சேர்ந்து முகைதீன் அக்கம்பெனியை வாங்கி இப்போதுள்ள இந்த நிறுவனத்தை ஆரம்பித்து --அன்றுமுதல் அவரது பார்ட்ணர் மூலமாக வெற்றிகரமாய் செயல்பட்டு வருகிறது.


முனைவரானார்


இதற்கிடையில் அவர் அழகப்பா யுனிவர்சிடியில் கரெஸ்பாண்ட்டில் நிதித்துறையில் MBA முடித்தார். இவரது பேச்சுத் திறமை - மாணவர்களுக்கு வழிகாட்டும் திறமை அறிந்து கல்லூரியில் புரபசர்களாக இருந்த நண்பர் முனைவர் ராஜூ முகைதீனை PhD செய்யத் தூண்டினார். PhD என்பது வெறும் பெருமைக்காக இல்லாமல் இவர் தனது நிதி துறையிலேயே ஆராய்ச்சி செய்து PhD பெற்றார்.முகைதீனின் பலம் - தன்னம்பிக்கை! விடாமுயற்சி. ஒன்றை தொட்டு விட்டால் அதில் வெற்றி காணும் வரை செலுத்தும் கவனம்! கடுமையான உழைப்பு! இலட்சியத்தை அடையும்வரை காக்கும் பொறுமை! எளிமை! அகமும் முகமும் எப்போதும் இன்புற வைத்திருப்பது. அடுத்தது நேர்மறை சிந்தனை. நல்லதை நினைத்து - நல்லதையே செய்வதால் எப்பபோதும் மனநிறைவு. பிறர் பொருள் மேல் ஆசைப்படுவதில்லை. பேராசையில்லாததால் நிராசை இல்லை. இறை நம்பிக்கையும, தர்மம் தலைகாக்கும் என்பதும் இவரது அனுபவ பூர்வ உண்மை.பெண்கள் தன் நலம் - குடும்பம் - பிள்ளைகள் எனக் குறுகிய வட்டத்துக்குள் சிந்தித்து செயல்படுவதுண்டு. இவரது மனைவி முகைதீனின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாகயிருப்பதுடன், இவரது தரும காரியங்களுக்கும் ஊக்கம் தந்து வருகிறார்.
மகன் ஷான்சா ஷமீம், அண்ணாயுனிவர்சிட்டியில் பொறியியலும் துபாயில் கன்ஸ்ட்ரக்ஷன் மேனேஜ்மென்ட்டில் MSம் முடித்தவர். முகைதீன் அவரது மகனுக்கு Golden Globe டெக்னிகல் சர்வீஸ் என தனியாய் கம்பெனி ஆரம்பித்துக் கொடுத்து - அதை நிர்வகித்து வருகிறார். 


உதவும் குணம்:


ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, நன்றாக படிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை, ஊரிலும் சுற்றுப்புறங்களிலும் பொது காரியங்கள்,மரம் வளர்ப்பு ; பள்ளி - கல்லூரிகளுக்கு உதவி; மாணவர்களுக்கு உறுப்பினர் கட்டணம் கட்டி - நூல்களை வாசிக்க உதவி; கொரனா முதல் எந்தப் பேரிடர் என்றாலும் முன்னின்று நிவாரணப் பணிகள்! 


வகிக்கும் பொறுப்புகள்:


கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவனர்;கல்லிடைமுஸ்லீம் நலச்சங்கம் (KMWA) நிறுவனர் மற்றும் தலைவர்; திருநெல்வேலி TIME மெட்ரிகுலேஷன் பள்ளி அறங்காவலர்; வள்ளியூர் PET பொறியியல் கல்லூரி புரவலர் உறுப்பினர்-மதிப்பீட்டாளர்;சமூக ஆர்வலர் ; கவிஞர்;தமிழ்மொழி பற்றாளர்; தன்னம்பிக்கை தரும்ஊக்க பேச்சாளர் என பல பொறுப்புக்களை ஏற்று செயல்பட்டுவருகிறார். 


விருதுகள்:


 Dubai Iman Culturel Center சார்பில் சமூக பங்களிப்புக்காக வழங்கிய விருது மற்றும் Year of Zayed, Year of Tolerance நினைவுப்பரிசு ;Health Medical Centre – Ajman வழங்கிய நீண்ட கால சாதனைக்கான சிறப்பு விருது ;.சித்திரை மற்றும் ASPA நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட சிறந்த சமூக ஆர்வலருக்கான விருது;.கல்லிடைக்குறிச்சி முஸ்லிம் ஜமாத்திடமிருந்து வாழ்நாள் சாதனை விருது ;.UAE COTOPIA அமைப்பின் சார்பாக உணவு சேமிப்பு விருது; சித்திரைஅமைப்பின் திருவள்ளுவர் விருது; ; .இனிய நந்தவனம் இதழின் மாண்புறு தமிழர் விருது;சித்திரை அமைப்பின் சிகரம் தொட்ட தமிழர் விருது ;அமீரகத்தில் -சிறந்த சமூக சேவைக்காக தாமிரபரணி விருது;பாரதியார் இலக்கிய மன்றத்தின் சிறந்த பண்பாளர் விருது;பிரபா இலக்கிய பதிப்பகத்தின் சிறந்த கல்வியாளர் விருது ;பாண்டிச்சேரி கவிதை வானில் கவி மன்றத்தின் சாதனை செம்மல் விருது ;.தமிழ் 2020 உலக சாதனை நிகழ்ச்சி யை செய்ததற்காக கவிதை வானில் கவிமன்றத்தின்சரித்திர நாயகன் விருது.


பெற்றுள்ளஅங்கீகாரம் மற்றும் சான்றிதழ்கள் :


இந்திய தேசிய பெண்கள் ஆணையம்;இந்திய தேசிய மனித உரிமை ஆணையம் ; இந்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் ;இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ;துபாயில் Brain O Brain சர்வதேச அபாகஸ் பாடத்தில் பங்கேற்றதற்காக கின்னஸ் உலக சாதனை சான்றிதழ்;என. ...நிறைவாய் நிறைய..நிறைய! 


தன்னடக்கம்: 'நான் பெரிதாய் எதுவும் செய்துவிடவில்லை. இறைவன் கொடுப்பதில் ஒரு பகுதியை தானமாக தருகிறேன். அவ்வளவே நாம் கொடுக்க கொடுக்க - இறைவன் மேன்மேலும் நமக்கு தந்து கொண்டிருக்கிறான்' என்று தன்னடக்கத்துடன் சொல்கிறார் முகைதீன் .
இறுதியாய் சுடச் சுட ஒரு தகவல்:ஜூன் 28 அன்று முகைதீன் அவர்களுக்கு World Humanitarian Drive - UKயிலிருந்து - உல அளவில் சிறந்த மனிதாபிமானி எனும் விருது வழங்கி கவுரவித்துள்ளது .


-NCM with Hari
Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us