ஜெர்மனியை சுற்றிப் பார்க்கலாம் வாங்க! வாங்க!! -3 | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஜெர்மனியை சுற்றிப் பார்க்கலாம் வாங்க! வாங்க!! -3

ஜூன் 30,2020 

Comments

நம் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்களில் ஒருவர் ஏறத்தாழ இரண்டு வருடங்கள் (ஏப்ரல்'1941 முதல் பிப்ரவரி'1943) ஜெர்மனியில் வசித்துவந்தார் என்றால் நம்ப முடிகிறதா?. இதற்கு முன் அவர் 1934 ல் ஜெர்மனி வந்த போது தான் அவரின் மனைவி எமிலி ஷென்கலை சந்தித்தார். அந்த சந்திப்புதான் பின்னாளில் திருமணத்தில் முடிந்தது. ஜெர்மனியில் வாழ்ந்தாலும் அவரின் முக்கியநோக்கம் பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவிலிருந்து அகற்ற வேண்டும் என்பதே. அதற்காகத்தான் அவர் ஜெர்மனி வந்திருந்தார். அப்போது ஜெர்மனியில் கோலோச்சிய அடோல்ஃப் ஹிட்லருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உலக பிரசித்தம். அவர் யார் தெரியுமா? விடை கடைசியில்.

80 மற்றும் 90களில் பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் கெமிஸ்ட்ரி படித்தவர்களுக்கு திரு.நரசிம்மன் ஆசிரியரைப் பற்றி நன்கு தெரிந்திருக்கும். நான் 90-ல் படிக்கும் போது துணைப்பாடமாக கெமிஸ்ட்ரி இருந்ததால் அவரிடம் படிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவர் சொல்லிக்கொடுக்கும் விதமே அலாதியானது. கெமிஸ்ட்ரி மேல் வெறுப்பு இருப்பவர்கள் கூட, அவர் எடுக்கும் வகுப்பில் இருந்தால், ' H2O குடிச்சிட்டு வரட்டுமா சார்' என்று கேட்கும் அளவுக்கு அவர்களுக்குள் தன் விளக்கங்களால் நுழைந்து விடுவார். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. பொறுமையின் சிகரம் அவர். இங்கே ஜெர்மனியில் போக்குவரத்து தகவல் மையத்தில் உள்ள ஆட்களைப் பார்க்கும் போது எனக்கு நரசிம்மன் ஆசிரியர் ஞாபகம் தான் வரும். பயணிகள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக அழகாக இன்னும் சொல்லப்போனால் கையில் வரைபடத்தையும் கொடுத்து விளக்குவார்கள்.

ஜெர்மனியில் போக்குவரத்துக்காக பேருந்து, டிராம் மட்டுமன்றி தொங்கும் ரயில், பாதாள இரயில் (U-பான்), S-பான், RE (ரீஜினல் எக்ஸ்பிரஸ்), IC மற்றும் ICE என வேகத்தையும் அது நிற்கும் இடங்களின் எண்ணிக்கையையும் பொறுத்து பல நிலைகளில் இரயில் வண்டிகள் இயக்கப்படுகின்றன.அது மட்டுமன்றி ஹம்பர்க் நகரில் கப்பல் துறைமுகம் மூலம் கப்பல் போக்குவரத்து, ரைன் நதியில் படகுத்துறை மற்றும் விமானபோக்குவரத்து என ஜெர்மனியில் போக்குவரத்துக்காக நிறைய வழிகள் பயன்பாட்டில் உள்ளன.

அது மட்டுமல்லாமல் லிலியம் கம்பனியின் தயாரிப்பான 'பறக்கும் கார்' மூனிச் நகரில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. முட்டை வடிவ மையப்பகுதி, இரண்டு பக்கங்களிலும் இறக்கை போன்ற அமைப்பு - ஆனால், ஹெலிகாப்ட்டர் போன்ற வால் இல்லை. பேட்டரியில் இயங்கும் இந்த கார் ஜெர்மனியின் முனிச் நகரில் உள்ள லிலியம் (Lilium) கம்பெனியின் தயாரிப்பு.நின்ற இடத்திலிருந்தே பறக்கும் வசதிகொண்ட இந்த கார், கால் டாக்ஸிக்கு மாற்றாக களமிறக்கப்படுகிறது. அதனால் வாடகையும் மிகவும் குறைவாகவே இருக்கும். இது 5 நபர்கள் மற்றும் அவர்களின் உடைமைகள், ஒரு பைலட் எனப் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 300 கிமீ ஆக இருக்கும்.

டிரெயினில் நீங்கள் பிராங்பேர்ட் நகரின் 'கான்ஸ்டாபிளர்வாக' என்ற இடத்திலிருந்து பிராங்பேர்ட் மெயின் ஸ்டேஷனுக்குப் போகவேண்டுமென்று வைத்துக்கொள்வோம். அருகில் உள்ள படத்தில் காட்டியுள்ளதைப் போன்று 8:11 க்கு டிரெயின் சரியாக கிளம்பி 8:15 க்கு பிராங்பேர்ட் மெயின் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் சேர்ந்துவிடும். உதாரணமாக, நீங்கள் உங்களின் பேமிலி டாக்டரிடம் காலை 10 மணிக்கு அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கிறீர்கள் என்றால் அதற்கேற்றார்போல பேருந்து நேரத்தை கணக்கிட்டு வீட்டிலிருந்து கிளம்பி மருத்துவமனைக்கு சென்று விடலாம். அரசு அலுவலகத்தில் ஏதாவது சான்றிதழ் வாங்க வேண்டுமென்றாலும் அப்பாயின்மென்ட் வாங்கிவிட்டால் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று வருவது மிகவும் எளிது. 'வேலை நிறுத்தம்' என்பது இங்கே அத்தி பூத்த மாதிரி தான். அந்த சமயத்திலும் ஒரு சில பேருந்துகளும், ரயில்களும் கண்டிப்பாக இயங்கும். அதனால் பயப்படத் தேவையில்லை.
ஜெர்மனியைப் பொறுத்தவரையில் போக்குவரத்து உட்கட்டமைப்புகள் பலமாக அதேசமயம் மக்களுக்கு எளிதில் பயன்படும் வகையில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன. ஒரு பிளாட்பார்மிலிருந்து இன்னொன்றுக்கு செல்ல லிப்ட் வசதி கண்டிப்பாக இருக்கும். ஏனென்றால், வீல் சேரில் வருபவர்கள், குழந்தைகளை வண்டியில் வைத்து கொண்டு வருபவர்கள் என தினசரி வாழ்க்கையில் எல்லோருமே லிப்ட் பயன்படுத்துகிறார்கள். அதுபோல, அடுத்து வரும் ட்ரெயின் அதிக பெட்டிகள் கொண்டதா அல்லது குறைவான பெட்டிகள் உள்ளவையா என்று டிஸ்பிளே போர்டில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம் நாம் ஏறும் பெட்டி வரும் இடத்தில் போய் நின்று கொள்ளலாம். அதிக பெட்டிகள் என்றால், 3 பெட்டிகள் அடங்கிய சிம்பலும், மீடியம் என்றால் 2 பெட்டிகள் அடங்கிய சிம்பலும் ஒரு பெட்டி என்றால் 1 பெட்டி அடங்கிய சிம்பலும் டிஸ்பிளே போர்டில் மிளிரும். அதுபோல, பில்டபாரத்தில் அந்த இடங்கள் வரை ஸ்டிக்கரும் ஒட்டி இருப்பார்கள். ட்ரெயின் வரும் போது பிளாட்பார டிவியில் எல்லா கதவுகளையும் உபயோகிக்கலாம் என்ற மெசேஜ் டிஸ்பிளே செய்வார்கள். சில சமயங்களில் ஒரு சில கதவுகள் உபயோகிக்கமுடியாதிருக்கும் பட்ச்சத்தில் அந்த கதவில் 'மற்ற கதவுகளை உபயோகிக்கவும்' என்று ஸ்டிக்கர் ஒட்டியிருப்பார்கள்.

பேருந்தின் ஒவ்வொரு இருக்கையின் முன்னும் ஒரு பட்டன் இருக்கும். நீங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வருமுன் நீங்கள் அந்த பட்டனை அழுத்தவேண்டும். அப்போது டிரைவருக்கு நீங்கள் இறங்க விருப்பப்படுகிறீர்கள் என்று தெரியவரும். அதற்கேற்றார்போல் பேருந்து அந்த நிறுத்தத்தில் நிற்கும். அதுமட்டுமல்லாமல், ஷாக்அப்சர்வர் உதவியுடன் இறங்கும் பக்கம் சற்று கீழே சாயும். அதனால், சக்கர நாற்காலியில் இருப்பவர்கள், குழந்தை வண்டி வைத்திருப்பவர்கள் எளிதாக ஏறி இறங்க இந்த ஷாக்அப்சர்வர் உதவியாக இருக்கும்.

பேருந்து மற்றும் டிரெயினின் உள்ளே LED டிவியில் இந்த வண்டி செல்லும் தடங்கள் மற்றும் அந்த இடத்திலிருந்து புறப்படும் டிரெயின் மற்றும் பேருந்துகளின் நேர அட்டவணைகள் காண்பிக்கப்படும். அதனால், நாம் அடுத்து ஏற இருக்கும் வண்டி இன்னும் எத்தனை நிமிடத்தில் எந்த பிளாட்பாரத்தில் வரும் என்று பேருந்துக்குள் இருந்தபடியே டிவியில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். தலைகீழாக தொங்கிக்கொண்டு செல்லும் டிரெயின் பற்றி அடுத்தவாரம் பார்ப்போமா!

இதோ உங்களுக்கான இந்த வாரக் கேள்வி:
தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்று அழைக்கப்படும் நகரம் எது?
பதிலை கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்.

முதல் பாராவில் கேட்கப்பட்ட கேள்விக்கான விடை : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போம்!

-நமது செய்தியாளர் ஜேசு ஞானராஜ்Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement

தற்போதைய செய்தி

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us