ஜெர்மனியை சுற்றிப் பார்க்கலாம் வாங்க! வாங்க!!-4 | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஜெர்மனியை சுற்றிப் பார்க்கலாம் வாங்க! வாங்க!!-4

ஜூலை 09,2020 

Comments

வைகைப்புயல் வடிவேலு மாடிப்படிகளில் தன்னந்தனியாக புலம்புகிற "மாப்பு வச்சிடாண்டா ஆப்பு" டயலாக்கை ஜெர்மன் மொழியில் சமீபத்தில் பார்த்தேன். என்ன ஒரு வேகம்! அப்பப்பா!!. வடிவேலுவின் ஜெர்மன் பாஷையில் அப்படி ஒரு ஸ்பீடு.என்ன! வடிவேலு ஜெர்மன் மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டாரா என்று தானே யோசிக்கிறீர்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெற்றிநடை போட்ட சந்திரமுகி படத்தைத் தான் சொல்கிறேன். ஜெர்மன் மொழியில் இந்த படம் யூடிடூப்பில் கிடைக்கிறது. வடிவேலுவுக்காக அந்த டயலாக்கை டப்பிங் பண்ணும்போது நிறைய வார்த்தைகள் அதிகப்படியாக வருவதனால் டப்பிங் கொடுத்தவர், விருந்தில் பரிமாற ஷாம்பைன் பாட்டிலைத் திறக்கும் போது அதன் மூடி பறக்குமே! அந்த மாதிரியான அசுர வேகத்தில் பேசுகிறார். தமிழில் கிடைத்த பீல் இல்லாவிட்டாலும் திரைப் படத்தையும் மக்களின் கலாச்சாரத்தையும் புரிந்துகொள்ள மொழி தடையில்லை என்பதற்கான ஒரு சிறந்த உதாரணம் இந்த திரைப்படம். ஜெர்மன் மொழியில் இந்த படத்தின் பெயர் என்ன தெரியுமா? விடை கடைசியில்.

இத்தாலியின் கான்ஸ்டான்டைன் (வீரமாமுனிவர்), போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த ஹென்ரிக் ஹென்ரிக்கெஸ் போன்றவர்கள் இந்தியா வந்து தமிழ் படித்து தேம்பாவணி, தம்பிரான் வணக்கம் என நூல்கள் எழுதியிருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதுபோல ஜெர்மனியின் பர்த்தலோமேயு சீகன்பால்க்கும் 17ம் நூறாண்டில் ஜெர்மனியிலிருந்து தமிழகம் வந்து தமிழ் பயின்றார். தமிழின் இனிமை அப்போதே உலகுக்கு தெரிந்திருக்கிறதென்றால், இன்றைய இணைய உலகில் அதன் வீச்சு எப்படி இருக்கும், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! அதற்கான சாம்பிள் ஒன்று இங்கே. ஜெர்மனியின் ஃபிரைபெர்க் நகர பள்ளிக்குழந்தைகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தமிழ் மொழி, கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை பயிற்றுவிக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? இதோ அதில் ஒருவரான ஜெஃரி ஹட்ஸன் நம்மிடம் பேசுகிறார்.
"ஃபிரைபெர்க்கில் உள்ள 'டியு பெர்க் அகாடமி' யூனிவெர்சிட்டியில் 'இன்டர்நேஷனல் யூனிவர்சிட்டி சென்டர்' என்ற ஒரு அமைப்பு உள்ளது. இங்கு நான் மாஸ்டர் டிகிரி படித்தபோது கிறிஸ்துமஸ் பார்ட்டியில் கிட்டார் வாசிக்கப் போயிருந்தேன். அதில் எனக்கு ஒரு ஜெர்மன் நண்பர் பழக்கமானார். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் சொன்ன ஒரு விஷயம் ரொம்பப் பிடித்திருந்தது. அதாவது ஃபிரைபெர்க் நகர பள்ளி குழந்தைகளுக்கு இந்திய மற்றும் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை கற்றுக்கொடுக்கவேண்டும் என்பது தான் அது. கரும்பு தின்ன கூலியா? என்ற சந்தோஷத்துடன் உடனே ஒத்துக்கொண்டேன். அடுத்தடுத்த வருடங்களில் இங்கு மாஸ்டர் படிக்கவந்த ரகுநாத் மற்றும் மணிகண்டன் என்னுடன் இணைந்துகொண்டனர்" என்றார். இவர் வாராவாரம், இந்தியாவில் இருக்கும் மாணவமனைவிகளுக்கு ஆன்லைனில், 'ஜெர்மனியில் மேற்படிப்பில் சேர விரும்புபவர்கள் என்னென்ன செய்யவேண்டும்?' என்று வகுப்பு எடுக்கிறார்.
மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் வள்ளியப்பன் பேசும்போது, "ஒவ்வொரு செமஸ்டரின் போதும் சில பள்ளிகளில் 90 நிமிடங்கள் நமக்காக ஒதுக்கித் தருவார்கள். அப்போது, நம் பாரம்பரிய உடையில் அங்கு சென்று தமிழ் மொழியை பயிற்றுவிப்பேன். நான் மதுரைக்காரன் என்பதால் மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் நம் திருவிழா போன்ற நிகழ்வுகளை அவர்களுக்கு விளக்கினேன். தமிழை மிகவும் ஆர்வமுடன் படிப்பதை பார்க்கும் போது மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்" என்றார். உடன் இருந்த திருச்சியை சேர்ந்த ரகுநாத் மாரிமுத்து, "இது வரையிலும் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவ மாணவிகளுக்கு தமிழ் மொழியையும், நம் கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளை விளக்கி சொல்லியிருக்கிறோம். தொடர்ந்து பல பள்ளிகளுக்கு விஜயம் செய்து எங்களின் சேவையை தொடருவோம்" என்று சொல்லும்போதே அவர் குரலில் அவ்வளவு உற்சாகம். தமிழ்நாடு என்று சொல்லும்போதே இனிக்கிறது என்ற முண்டாசு கவிஞர் இன்று இருந்திருந்தால் வெளிநாட்டினர் தமிழ் பேசும் போதும் இனிக்கத்தான் செய்கிறது என்று பாடியிருப்பார்.

ஜெர்மனியில் போக்குவரத்து எப்படி இருக்கிறது என்று கடந்தவாரத் தொடரில் குறிப்பிட்டிருந்தேன். இதோ அதன் தொடர்ச்சி தான் இந்த வாரமும்.
ஜெர்மனியில் ரைட் சைடு டிரைவிங் தான். அதனால் நம்மூரில் வண்டி ஓடியவர்களுக்கு முதலில் சற்று சிரமமாகத்தான் இருக்கும். ரோடுகளில் குண்டு குழி என்பதை நான் இதுவரை பார்த்ததில்லை. அப்படியே இருந்தாலும் உடனடியாக அதை சரிசெய்துவிடுகிறார்கள். அதுபோல சாலை ஓரங்களில் இரும்பு கம்பி வளைவுகள் வைத்து கூடுதல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் செய்திருக்கிறார்கள்.டிரெயின் மற்றும் பேருந்துகளில் சைக்கிளையும் கொண்டு செல்லலாம். சைக்கிளை வைக்க தனியிடமும் உண்டு. கொஞ்ச தூரம் சைக்கிளில் சென்று பின் பேருந்தில் ஏறியும் பயணம் செய்யலாம்.
ICE டிரெயினைப் பொறுத்தவரையில் 300 கி மீ வேகம் வரையிலும் செல்லும். அதனால் பிளாட்பாரங்களில் தண்டவாளங்களின் அருகே நிற்கக்கூடாது என எழுத்திலும், புகைப்பட வடிவிலும் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். ஏனென்றால் அந்த வேகம், உங்களைத் தண்டவாளத்திற்குள் இழுத்துவிடும். இந்த வேகத்தில் சென்றால், கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இரண்டேகால் மணி நேரத்தில் சென்று விடலாம். கனவு மெய்ப்படவேண்டும்! வருடத்தின் முக்கால்வாசி நாட்கள், காலநிலை குளிர்ச்சியாக இருப்பதினால், கார், டிராம் மற்றும் டிரெயின் என எல்லா வாகனங்களிலும் 'ஹீட்டர்' வசதி செய்யப்பட்டிருக்கும். வெயில் காலத்தில் குளிர்சாதன வசதியும் உண்டு.
அண்டர் கிரவுண்ட் என்று சொல்லக்கூடிய பாதாள இரயில், ஜெர்மனியின் அனைத்து பெரிய நகரங்களிலும் உண்டு. நிலப்பரப்பின் கீழே பூமியை குடைந்து பிளாட்பார்ம்கள் அமைத்திருக்கிறார்கள். பெர்லினில் முதன் முதலாக பாதாள இரயில் சேவை மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது எப்போது தெரியுமா? 1902 ம் ஆண்டு . அதன் பின் ஒவ்வொன்றாக ஒவொரு நகரங்களிலும் இந்த அண்டர் கிரவுண்ட் டிரெயின் ஸ்டேஷன்கள் உருவாக்கப்பட்டது.
மூனிச் நகரில் உள்ள கார்ல்பிளாட்ஸ் ஸ்டாப்பில் பூமிக்கு கீழே ஐந்து தளங்கள் இருக்கின்றன. என்ன! ஆச்சரியத்தில் வாயடைத்துவிட்டதா? முதல் லெவலில் பெரிய ஷாப்பிங் மால். இரண்டாவது லெவலில் ஸ்பார்கஸ்ஸ வங்கி, டிக்கெட் கவுண்டர் மற்றும் ஸ்னாக்ஸ் விற்கும் கடைகள். மூண்டாவது ஃப்ளோரில் S-பான் என்று சொல்லக்கூடிய டிரெயின் பிளாட்பார்ம். நான்காவது ஃப்ளோரில் S-பான் டிரெயின் மற்றும் U-பான் டிரெயினுக்கு மாறி செல்ல இடவசதி. கடைசியாக ஐந்தாவது தளத்தில் U-பான் என்று சொல்லக்கூடிய டிரெயின் பிளாட் பார்ம். பூமிக்கு மேலே கட்டப்படும் பில்டிங்குகளில் பல ஃப்ளோர்களைப் பார்த்து பழகிய நமக்கு, தலைகீழாக பூமிக்குள்ளே 5 தளங்களைப் பார்க்கும் போது மனிதன் தன் கனவை நனவாக்க அறிவியலை பயன்படுத்தும் விதம் அவன் மூளையின் திறமைக்கு ஒரு சான்று. ஐம்பது வருடங்களுக்கு முன்னமே அதாவது 1972 லேயே இந்த பாதாள இரயில் நிலையம் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஏறத்தாழ 87,700 பேர் தினமும் இந்த இரயில் நிலையத்தை உபயோகிக்கிறார்கள். அப்படியானால் எவ்வளவு ரயில்கள் தினமும் இந்த அண்டர் கிரவுண்ட் ரயில்நிலையத்தை கடந்து செல்லும் என்று யோசித்துப் பாருங்கள்!
இவை எல்லாவற்றிற்கும் மேலாக தொங்கு ரயில் பயணம், ஜெர்மனி வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். வௌவால்கள் தலைகீழாக தொங்குவதைப் பார்த்திருப்போம். இங்கு தலைகீழாக ஓடும் இரயிலை பார்ப்பவர்கள் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப்போவார்கள்.இதை பார்க்கவேண்டும் என்றால் நீங்கள் வுப்பர்த்தால் நகருக்கு செல்லவேண்டும். இங்கு உள்ள வுப்பர் ஆற்றின் மேலே 12 மீ உயரத்தில் தண்டவாளம் அமைக்கப்படுள்ளது. 13.3 கி மீ தூரம் இந்த தலைகீழாக தொங்கும் டிரெயின், 20 ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது. 'நீ, தலை கீழா நின்னாலும் என் மகளை உனக்கு கட்டித் தர மாட்டேன்' என்று எந்த மாமனார் சொன்னாரோ! 1901 ல் முதல் இன்று வரையிலும் தலைகீழாகவே ஓடிக் கொண்டு இருக்கிறது இந்த ட்ரெயின். 'சின்னவனா இருந்தாலும் காரியத்தில் சுள்ளான்' னு சொல்வாங்களே அது மாதிரி 30 நிமிடங்களிலேயே (நிறுத்தத்தில் நிற்கும் நேரத்தையும் சேர்த்து) இந்த தூரத்தை ரயில் கடந்துவிடுகிறது.
வார நாட்களில், ஒரு நாளைக்கு 80,000 மக்கள் இதில் பயணம் செய்கிறார்கள். 1976 ம் ஆண்டு, இதனுடைய 75 ஆண்டு விழாவையொட்டி ஜெர்மனி அரசங்கம் இந்த தொங்கு ரயிலுக்கு தபால் தலை வெளியிட்டு சிறப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் உலகப்போரில் கொஞ்சம் உடைந்தபோதிலும் 1901 முதல் இன்றுவரை பல சமயங்களில் புதுப்பிக்கப்பட்டு தற்போதும் புதுப்பொலிவுடன் மக்களுக்கு சேவையாற்றிவருகிறது. இதையெல்லாம் படிக்கும் போது ஜெர்மனிக்கு வரணும்னு ஆசையா இருக்கா? இன்னும் நிறைய இருக்கு.
கடந்த வார தொடரில் நாம் கேட்டிருந்த கேள்விக்கான விடை : பாளையங்கோட்டை. இனி இந்த வாரக் கேள்வி:
நீங்கள் டிராஃபிக்கில் அதிக நேரம் மாட்டிக்கொண்ட அனுபவம். எங்கே? எப்போது?"பதிலை கமெண்ட் பகுதியில் போஸ்ட் செய்யுங்கள்.
முதல் பாராவில் கேட்கப்பட்ட கேள்விக்கான சரியான விடை : பேய் வேடைக்காரன் என்று பொருள்படக்கூடிய " டெர் கீஸ்டெர்யாகெர்".
மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போம்.
- நமது செய்தியாளர் ஜேசு ஞானராஜ்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us