உயிர்காக்கும் இரத்ததான தேவையை பூர்த்தி செய்ய கிங் அப்துல் அஸீஸ் மருத்துவமனையின் வேண்டுகோளுக்கிணங்க இரத்ததான முகாம் நடைபெற்றது. ஜித்தாவிலுள்ள கிங் அப்துல் அஸீஸ் மருத்துவமனையில் 06-11-2020 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 65 பேர் கலந்து கொண்டனர். அதில் 44 பேரிடமிருந்து இரத்ததானம் பெறப்பட்டது. தனது குடும்பத்துக்காக உழைப்பதுடன் சவூதி அரேபியாவின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் நம் நாட்டு மக்கள், அந்நாட்டு மக்களின் உயிர்காக்கும் இரத்ததானத்தையும் பெருமளவில் செய்து வருகின்றனர். பெரும்பான்மையாக தமிழ் பேசும் சகோதரர்கள் இருந்தாலும் அவர்களுடன் இந்தியாவின் பிற மாநில சகோதரர்களும் கலந்து கொண்டனர். ஒரு சவுதி பெண்மணியும் இரத்ததானம் செய்தார். ஆர்வத்துடன் பெண்களும் அடிக்கடி முகாம்களில் கலந்து கொள்வதுண்டு. ஆனால் இயல்பாகவே அவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைவு காரணமாக இரத்ததானம் செய்ய வாய்ப்பில்லாமல் திரும்ப செல்வார்கள். இம்முகாம் பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தின் இரத்ததான ஒருங்கிணைப்பாளர் சலாஹூதீன் பேசும் போது, கோவிட் 19 காரணமாக வியாபாரம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்பு போல நடைபெறுவதில்லை யென்றாலும் குருதிக்கொடை செய்ய மக்கள் ஆர்வமாகவே இருக்கின்றனர். கொரோனா மற்றும் பாதுகாப்பு காரணமாக முந்தைய முகாம்களை விட இம்முகாமில் பரிசோதனை அதிகமாக்கபட்டிருந்தது. அதன் காரணமாக அதிகமானோரால் இரத்ததானம் செய்ய இயலவில்லை. கூட்டம் அதிகமாகவதை கட்டுப்படுத்தும் விதமாக குறைந்த அளவிலான கொடையாளிகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. முகக்கவசம், சமூக இடைவெளி, சேனிடைசர் போன்ற முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இரத்ததானம் செய்த கொடையாளிகள் உடனுக்குடன் அனுப்பப்பட்டனர். இந்நேரத்தில் இது போன்ற நடவடிக்கைகள் தவிர்க்கமுடியாதது, கொடையாளிகளின் நலனையும் கவனத்தில் கொண்டு இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றார். கிங் அப்துல் அஸீஸ் மருத்துவமனையின் இரத்தவங்கி குழுவில் ஆதில் மற்றும் ஹூஸைன் வழிகாட்டலில் குழுவினர் முகாமை சிறப்புடன் நடத்தினர். பிளட் பிரஷர் சோதனையுடன் ஆரம்ப கட்ட சோதனை நடத்தப்பட்டு பின்னர் கொடையாளிகள் இரத்ததானம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல தலைவர் முஹம்மது முனாஃப் பேசும் போது, வேலை செய்ய வந்து இந்நாட்டிலேயே இறந்துவிடுபவர்களை அடக்கம் செய்யவும் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஊருக்கு அனுப்பவும் டாக்குமெண்ட்ஸ் உதவிகளையும் நாங்கள் பல வருடங்களாக செய்து வருகின்றோம். அவசர இரத்தான சேவையை தேவைப்படும் நேரங்களிலெல்லாம் செய்து வருகின்றோம். வருடத்தில் இது போன்று நான்கைந்து முகாம்களையும் நடத்தி வருகின்றோம். இது ஜித்தா மண்டல தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் 22 வது இரத்ததான முகாமாகும் என்று குறிப்பிட்டார்.– தினமலர் வாசகி எம்.சிராஜ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.