ஹாங்காங்கில் கொரோனா தந்த புதுமையான தீபாவளி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹாங்காங்கில் கொரோனா தந்த புதுமையான தீபாவளி

நவம்பர் 16,2020 

Comments

தீபாவளி என்பது தமிழர் பண்டிகையா என்ற கேள்வியுடன் ஆரம்பித்தது இந்த வருட தீபாவளி. இளந்தமிழர் குழுவைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவரின் காணொளி, தீபாவளி தமிழர் பண்டிகை என்பதையும், சங்க நூல்களில் தீபாவளி என்ற சொல் இல்லை என்ற போதும், நரகாசுரனைக் கொன்றதற்காக இல்லாமல், ஐப்பசியில் வரும் அமாவாசையில் தீப விழாவினைக் கொண்டாடினர் என்ற விளக்கம் பயனுள்ளதாக அமைந்தது. அகநானூறு என்ற சங்க இலக்கியத்தில் வரும் 141வது பாடல்


உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி, 5மழை கால் நீங்கிய மாக விசும்பில்குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து,அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்;மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய 10விழவு உடன் அயர, வருகதில் அம்ம!


மூலம் தன் தோழியிடம் பேசும் தலைவி ஐப்பசி மாதம் வரும் விழாவும் வந்து விட்டது. தலைவன் அடுத்து வரும் கார்த்திகைத் திருநாளின் போதாவது வருவாரா என்று காத்திருப்பதைக் குறிக்கும் பாடல், நமக்கு தீப விழாவைப் பற்றிக் கூறுவதாக எடுத்துக் சொல்லப்பட்டது.


புலனக்குழு செய்தி ஒன்றில், இராசேந்திரச் சோழன் 1023ஆம் ஆண்டு வட இந்திய போர் வெற்றியைப் பற்றிய கும்பகோணம் அருகெ திருலோக்கி கிராமத்தில் கிடைத்த கல்வெட்டு, வெற்றி வரவேற்பைப் பற்றி குறிப்பிட்டுள்ளதை எடுத்துக் கூறினார். ஊரில் மக்கள் விளக்குகளை ஏற்றி மன்னனின் வெற்றியைப் போற்றியதாகக் அச்செய்தி கூறியது, மற்றொரு தகவல்.


தீப அவுளி என்பது தான் தீபாவளியானது என்பதை நான் இந்த வருட தீபாவளியின் போது தான் தெரிந்து கொண்டேன். முன்னோரைப் போற்றும் தமிழர்கள், தீ வரிசை, தீப வரிசையை இட்டு, அவர்களுக்கு மரியாதை செய்ததாகக் கூறும் கூற்றும், தீபாவளி மருந்து, பல்வேறு பலகாரங்களை உண்ணும்போது ஏற்படும் உபாதைகளைத் தடுக்கும் என்பதும், வேட்டுக்கள் செய்து, அதை பதினேழாம் நூற்றாண்டிலேயே வெடித்தனர் என்பதும், கறி மீன் சமைத்து முன்னோருக்கு படைத்து வழிப்பட்டனர் என்பதையும் ஒரிசா பாலு ஐயாவின் காணொளி மூலமாக தெரிந்து கொண்ட தீபாவளி இது.


கல்லூரிப் படிப்பை முடித்து, மேற்படிப்பிற்காக முயன்று கொண்டிருக்கும் என் மகளின் நன்விமர்சனத்தின் பேரில், வியாழனன்று அமெசான் பிரைமில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தொடங்கி எங்கள் தீபாவளி விழா தொடங்கியது என்றே சொல்லலாம். ஒரு படத்தில் ஒரு மனிதனின் சாதனை (சற்றே கூடுதல் திரைத்தனத்துடன் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும்) பார்ப்போரை வெறி கொண்டு ஊக்கப்படுத்தும் திரைக் காவியமாக இருந்தது என்று நான் நினைத்தேன். நிச்சயம் இளையோரின் மனத்தைக் கவர்வதுடன், அவர்களை தங்கள் இலக்கை நோக்கிச் செல்லத் தூண்டும் படம் என்றே சொல்லலாம்.


தீபாவளிக் கொண்டாட்டம் என்பது ஹாங்காங்கில் பல விதமான விருந்துகளுடன் கூடல்களாக தான் இது வரை நடந்து வந்துள்ளன. நண்பர்கள் கூடி மகிழும் ஒரு விழா இது. ஆனால் இம்முறை கொரோனா அதையெல்லாம் இல்லாமல் செய்து விட்டது. கொரோனாவில் தவித்த, தவித்துக் கொண்டிருக்கும் மக்களை எண்ணினால், தீபாவளியைக் கொண்டாடுவது அவசியமா என்றே எண்ணத் தோன்றும். ஆயினும், பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்கள் (முதன்முறையாக ஹாங்காங் தலைவர் உட்பட) தந்த தீபாவளிச் செய்திகளில் கூறியது போல, இந்த தீபாவளி, இன்னமும் உலகோரை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா என்ற அரக்கனை அழித்து, நம் மக்களை உடல் நலம் பெறச் செய்து, வரும் வருடம் அனைவருக்கும் புத்துயிர் தரும் வருடமாக அமைய வேண்டும் என்று அனைவரையும் எண்ணச் செய்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.


வெள்ளியன்று, வழக்கம் போல் என் கணவரின் (வட நாட்டினரால் நடத்தப்படும்) அலுவலகத்தில் புது வருடப் பூசை செய்யப்பட்டது. இந்த வருடம் கொரோனா ஒழிய வேண்டும் என்ற வேண்டுதலுடன் நடத்தப்பட்டது. அலுவலகத்தில் இருந்த அனைத்துச் சீனர்களும் எங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். அப்போது, புத்த மதத்தைப் பின்பற்றும் ஒரு சீனப் பெண்மணி, தீபாவளி நாளன்றும் அதற்கு அடுத்த நாளும் புத்தர், சுகாதார புத்தராகக் கருதப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படும் என்பதைக் கூறினார். அப்போது தான் புத்த மதத்திலும் இந்த நாளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பது தெரிந்தது. மேலும் மற்றொரு குறுஞ்செய்தி மூலம் ஜைன மதத்தினர், அவர்களது 24வது மற்றும் கடைசி குரு, இறைவனடி சேர்ந்த தினத்தை, நம்முடைய தீபாவளி தினத்தன்றே கொண்டாடுவதையும் அறிந்து கொள்ள முடிந்தது. மக்கள் பலரும் இந்த விழாவினை பல்வேறு காரணங்களுக்காகக் கொண்டாடினாலும், அனைவரும் ஒன்று கூடி மகிழும் நாளாகவே இந்த விழா கருதப்பட்டு வருகிறது.


அடுத்த நாள், சனிக்கிழமை, தீபாவளி விழா நாள். மிகவும் மனநிறைவான நாளாக அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் இணையம் என்றே சொல்ல வேண்டும். காலை முதலே, வீட்டில் செய்யப்பட்ட பலகாரங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. வாழ்த்துச் செய்திகள் புலனம் மூலமாக பகிரப்பட்டன. வரும் வருடம் எல்லோருடைய துன்பமும் நீங்கி, இன்பம் கூட வேண்டும் என்ற ஆவலுடன் தான் அவை செய்யப்பட்டன என்றே நான் எண்ணுகிறேன். மதியம், எங்கள் குடும்பத்தினருடன் கூகுள் மீட்டின் மூலமாக, அனைவரையும் சந்திக்கும் நிகழ்வு. கொரோனா காலத்தின் நன்கொடை இந்த இணைய வழிச் சந்திப்பு என்றால் அது மிகையாகாது. சாதாரணமாக கணிணி வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் கூடி மகிழும் வண்ணம் இந்தச் செயலி அமைக்கப்பட்டுள்ளது அதன் சிறப்பு.

எங்கள் குடும்பத்தினர், மற்ற உறவினர்கள், ஹாங்காங், இந்தியாவில் பல மாநிலங்கள் மற்றும் ஆப்பிரிக்காவின் டான்சானியா நாடு என்று பல்வேறு இடங்களில் வசிப்பவர்கள், இணைந்த இணையக் கூடல். தீபாவளி வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், பெரியவர்களையும் குழந்தைகளையும் சந்திக்கும் வாய்ப்பாக இது அமைந்தது. இது ஒரு வாழ்த்துச் செய்தியை மட்டும் பகிரும் நிகழிடமாக மட்டுமில்லாமல், நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமென்பதால், எங்கள் குடும்பத்தில் இருக்கும் வரைகலைத் திறனை வெளிப்படுத்தும் வகையில், நாங்கள் மின் வரை கண்காட்சியை வெளியிட்டோம். ஐம்பது படங்கள், பல்வேறு வகையான படங்கள், கொரோனா விழிப்புணர்வு படங்கள் என்று அனைத்தும் அதில் இருந்தன. நான்கு 13 வயதுக் குழந்தைகள் அவர்களாக படங்களை சேகரித்து, அதை இரு மின் காணொளிகளாக (13 வயதுக்கு மேற்பட்ட ஒன்று, 10 வயதுக்கு முற்பட்ட ஒன்று) அமைதத்து, இன்றைய தலைமுறையின் அறிவுத்திறனை காட்டும் வண்ணம் அமைந்தது. பின்னர், சிறியவர் பெரியவர் சில பாடல்களைப் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தோம்.ஞாயிற்றுக்கிழமை ஹாங்காங்கில் எங்கள் குடும்ப விழா. எங்கள் குடும்பம், என் தங்கையின் குடும்பம் மற்றும் கடந்த வருடம் திருமணமான மகன் குடும்பம் என்று நாங்கள் கூடிய நாள் அது. ஹாங்காங்கில் வெடி வெடிப்பது தடை செய்யப்பட்ட ஒன்று. அரசாங்கம் மட்டும் முக்கிய நாட்களில் வான வேடிக்கையாகச் செய்யும் நிகழ்வாக மட்டுமே உண்டு. வீடுகளில் வெடிப்பது எங்களால் இயலாத ஒன்று.


ஒரேயொரு முறை என் கணவர் தவறுதலாகக் கொண்டு வந்த, மத்தாப்பை இருபது வருடங்களுக்கு முன்பு நாங்கள், பல பாதுகாப்பு ஆயத்தங்களுக்குப் பின், மிகவும் பாதுகாப்பாக 18ஆம் மாடியில் இருந்த எங்கள் வீட்டிற்குள் மத்தாப்புகளை கொளுத்தியது இன்றும் நினைவில் நிற்கும் ஒன்று. பிறகு இந்த முறை தான், இந்தியக் கடைகளில் மத்தாப்புகள் விற்றதன் காரணமாக, நாங்கள் அனைவரும் மத்தாப்புகளை மட்டும் விட்டு இந்த தீபாவளியைக் கொண்டாடினோம். இந்த நாள் மனதில் நிச்சயம் நீங்காமல் நிற்கும். ஆனால் திங்கள் காலை நேபாள் தேசத்தவர், இரவு நடந்த ஏதோ தீ விபத்தில் சிக்கி, பலர் உயிரிழந்து, பலர் காயமுற்றதை அறிந்த போது, மிகவும் வேதனையைத் தந்தது.


இரவு, பல நாட்டினர் கலந்து கொண்ட இணையவழிக் கூடல். இது தமிழ் மேதைகள் என்ற புலனக்குழுவின் வழக்கமான கூடல்தான் என்றாலும், தீபாவளியைப் பற்றிய கண்ணோட்ட உரையுடன், இது துவங்கியது. என்ன தான் நாம் நரகாசுரன் வதத்தை முன்னிட்டு, தீபாவளியைக் கொண்டாடினாலும், அதில் லட்சுமியின் அம்சமான சத்தியபாமா என்ற பெண் எப்படி வீறு கொண்டு போரிலே சூரனை வதைத்தாள் என்பது பெண்ணின் பெருமையை பறைசாற்றுவதாக அமைத்தது என்பதை தோழி ஒருவர் எடுத்துக் கூறியது சிறப்பாக இருந்தது. அத்துடன் நான் அறியாத மற்றொரு செய்தியும் தரப்பட்டது. கந்த புராணத்தில் குறிப்பிட்டுள்ள சிவன் தன் பாதியை பார்வதிக்குக் கொடுத்து, அர்த்தநாரியான நாளும் இதுவென்பது.


வியாழனன்று பேசி, உலகளாவிய தீபாவளிப் பட்டிமன்றம் ஒன்றை வலைதமிழ் நிறுவனர் திரு. பார்த்தசாரதி ஏற்பாடு செய்துள்ளதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அந்த ஏற்பாட்டின் படி எங்கள் குழு ஹாங்காங், சுவிட்சர்லாந்து மற்றும் கதார் நாட்டினர் மூவரும் (வெவ்வேறு நேரத்தைச் சார்ந்திருந்தாலும்) ஞாயிறன்று கூடிப் பேசினோம். ஒருவர் மற்றொருவரை அறியாதிருந்த போதும், இந்த தீபாவளி எங்களை சந்திக்க வைத்தது, மகிழ்ச்சியைத் தந்தது. 21ஆம் தேதி நடக்கவிருக்கும் தீபாவளிச் சிறப்புப் பட்டிமன்றத்தில் கலந்து கொள்ள எங்களைத் தயார்படுத்திக் கொள்ள இது உதவியது.


அடுத்து திங்களன்று இன்னுமொரு சிறப்பான இணையக்கூடல். திரு. ஒரிசா பாலு ஐயாவின் வழி நடத்தலில் இயங்கும் இளந்தமிழர் புலனக்குழு 30 நாட்டு குழந்தைகளைக் கொண்ட 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் குழுவின் கூடல். விசேடமாக, தீபாவளி மற்றும் குழந்தைகள் தினத்தையொட்டி, அவர்களது மூன்றாம் ‘இளந்தமிழர் இதழ்’இ உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. கட்டுரை, கவிதை, களப்பணி விவரங்கள், குழந்தைகளின் வரைபடங்கள் என்று பல அங்கங்களை உள்ளடக்கிய இதழாக மலர்ந்தது. மூன்றாம் ஆண்டு சிற்பக்கலை பயிலும் அசோக் அவர்கள் (குங்கலியம் மற்றும் தேன் கலந்த) மெழுகால், தமிழர் பாரம்பரியச் சிற்பம் செய்து காட்டியது அனைத்து குழுவினரையும் வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா என்று பல்வேறு நாட்டுக் குழந்தைகளின் திறன்கள் எடுத்துக் காட்டப்பட்டன.


இந்தத் தீபாவளி எனக்கு பல வகைப்பட்ட புதிய அரிய செய்திகளை கற்றுத் தந்தது என்றே சொல்ல வேண்டும். பலருடைய திறன்களை வெளிப்படுத்திய தீபாவளியும் கூட. துணை நின்ற இணையத்திற்கு நன்றியை தெரிவிக்க விரும்புகின்றேன்.

– தினமலர் வாசகி முனவைர் சித்ரா

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us