ஹாங்காங்கில் முருக வழிபாடும், கந்த சஷ்டி விழாவும் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹாங்காங்கில் முருக வழிபாடும், கந்த சஷ்டி விழாவும்

நவம்பர் 24,2020 

Comments

  சீனாவின் ஒரு பகுதியான ஹாங்காங்கில் சுமார் 120,000 இந்து மக்கள் வசிக்கின்றனர். இது ஹாங்கங்கின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 1.6% ஆகும். இதில், சுமார் 3,000 தமிழ் இந்துக்களும் அடக்கம்.


ஹாங்காங்கில் பல இந்துக்கோயில்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றுள் ஆகப் பெரியதும், பழமையானதும் ‘ஹாப்பிவேலி’ என்னும் இடத்தில் அமைந்துள்ள இந்துத் திருக்கோயிலாகும். இது 1955-ஆம் ஆண்டுமுதல் இயங்கி வருகின்றது. இது ஒரு வடஇந்தியப் பாணியில் அமைந்தக் கோயிலாகும். 


இந்தக் கோயிலில், திருப்புகழ் வழிபாடு 1972-ஆம் ஆண்டு இங்குள்ளத் தமிழர்களால் தொடங்கப்பட்டது. ஆனாலும், முருக வழிபாடு முறையாகத் தொடங்கப்பட்டது 1978-ஆம் ஆண்டுதான். சுவாமிமலையிலிருந்துச் சுவாமிநாதசுவாமியின் ஐம்பொன்னாலானத் திருவுருவம் தருவிக்கப்பட்டு, இந்தக் கோயிலில் பதிட்டையிடப்பட்டு, அதற்குப் பூசனைகள் செய்யப்பட்டு வருகின்றது. மாதம் ஒருமுறை திருப்புகழ் வழிபாடு, ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா, தைப்பூசத் திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழா, வைகாசி விசாகத் திருவிழா முதலியவை மிகச் சிறப்பாக நடத்தப்பட்டுவருகின்றன. 2015-ஆம் ஆண்டு, ஐம்பொன்னாலான‌ வள்ளி, தெய்வயானை உடனிருக்கும் கல்யாண சிவ‌சுப்ரமண்யசுவாமி திருவுருவச் சிலைகளும் கொண்டுவரப்பட்டு, முறையாகப் பதிட்டைச்செய்யப்பட்டு, வழிபாடும் செய்யப்பட்டுவருகின்றது. தைப்பூசத்தின்போது காவடி எடுத்தல், பங்குனியில் வள்ளி கல்யாணம், கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரம், தேவயானைத் திருமணம் போன்ற விழாக்களும் முறையாக நடத்தப்பட்டு வருகின்றன.


இந்த ஆண்டு, கோவிட்-19 பாதிப்பால், ஹாங்காங்கில் கந்த சஷ்டி விழா சற்றே சிறிய அளவில் நடத்தப்பட்டது. இருப்பினும், இந்த ஆண்டு, ஹாங்காங்கில் முதன்முறையாக ஒரு தேர்த்திருவிழா கடந்த‌ நவம்பர் 21-ஆம் தேதி மாலை வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இந்தத் தேர் அருணகிரிப்பெருமானின் திருஎழுகூற்றிருக்கை என்னும் தனிப் பனுவலின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.‘திருஎழுகூற்றிருக்கை’ என்பது அருணகிரிநாதசுவாமிகளின் திருப்புகழ் மதாணியில் ஒன்பதாவது மணியாகத் திகழ்வது. ‘சித்திரகவி’ என்னும் கவிவகையில், ‘ரதபந்தம்’ என்னும் அமைப்பில், சுவாமிமலை சுவாமிநாதசுவாமியின்மீதுப் பாடப்பெற்றது ‘திருஎழுகூற்றிருக்கை’ என்னும் இப்பனுவல்.


முருகப்பெருமானின் தோற்றம், முருகதத்துவம், கந்தபுராணத்தின் முதன்மை நிகழ்வுகள், முருகப்பெருமானே திருஞானசம்பந்தராக அவதரித்தார் என்ற அருணகிரிநாதரின் கோட்பாடு போன்றவை ஏழு கூற்றுகளாக இந்தப் பனுவலில் பாடப்பட்டுள்ளன‌. அந்த ஏழு கூற்றுக்களே தேரின் ஏழு நிலைகளாக அல்லது கட்டுகளாக‌ மேலும், கீழுமாக‌ அமைந்துள்ளன. தேரின் நடுப்பகுதில் இறைவன் சுவாமிநாதசுவாமியாக எழுந்தருளி வீற்றிருக்கும் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. எண்களையும் அதே நேரத்தில் வேறொன்றையும் குறிக்கும் சொற்களைக்கொண்டு (பல்பொருள் ஒருமொழிச் சொற்கள்) இந்தப் பனுவலில் ஏழு அடுக்குகள் அல்லது கூற்றுகள் கட்டப்பட்டுள்ளன. 'எழு' என்றால் அது எண் ஏழையும், 'எழுதல்' என்பதையும் குறிக்கும் சொல்லாகும். ஆதலால், திருஎழுகூற்றிருக்கை என்பதற்கு ஏழு கூற்றுகளாலான இருக்கை என்றும், இறைவன் எழுந்தருளி அருளாட்சி செய்யும் திருவாசனம் என்றும் பொருள்கொள்ளலாம்.


இந்தப் பனுவலில் இருக்கும் எண்களைக் குறிக்கும் சொற்களைக் கீழ்க்கண்டவாறு அடுக்கினால், தேரின் மேற்பகுதி ஒரு கூம்புபோல அமைந்துவிடும்:


1


121


12321


123421


123454321


12345654321


123456754321


அதனுடையத் தலைகீழ் வடிவம் தேரின் கீழ்ப்பகுதியாக அமையும். மேற்பகுதிக்கும், கீழ்ப்பகுதிக்கும் இடைப்பட்ட வெளியில் இறைவன் எழுந்தருளி வீற்றிருக்கும் இருக்கை அமைந்திருக்கும்.


மேலிருந்தும், கீழிருந்தும் இரண்டாவது நிலைமுதல், ஒவ்வொரு நிலையிலும் எண்களின் வரிசை ஒன்றில் துவங்கி ஒன்றில் முடியும். மேல்நிலையில் ஒன்றில் துவங்கி, கீழ்நிலையில் ஒன்றில் முடியும். இதில் Binomial Theorem என்னும் இயற்கணித அல்லது அட்சரக்கணித விதியின் அடிப்படைக் கூறுகள் பயிலுவதைக் காணலாம். மேலும், தேரின் மொத்தம் பதினான்கு நிலைகளிலும் இருக்கும் எண்களின் கூட்டுத்தொகை 280 ஆகும்; அதைக் கணிதமுறையில் சுருக்கிக்கொண்டே சென்றால், முடிவில் எஞ்சி நிற்பது 'ஒன்று' என்னும் எண் மட்டும்தான். இது தெய்வம் ஒன்றே என்பதையும், அதுவே முதலாவதும், முழுமையானதும், முடிவற்றதும் என்பதையும், எல்லாம் பிரமத்தில் தொடங்கி, விரிந்து, வியாபித்து, இருந்து, இயங்கி, முடிவில் அதிலேயே அடங்குகின்றன‌ என்பதையும், அனைத்தும் பிரம்மமே, அனைத்திலும் பிரம்மமே, அனைத்தும் பிரம்மத்தில் அடக்கம் என்பதையும் குறிப்பதாக அமைந்துள்ளது. 


  ஹாங்காங்கில், இந்த ஆண்டு கந்த‌ சஷ்டி விழாவின்போது இந்தத் திருஎழுகூற்றிருக்கைத் தேரை உண்மையிலேயே உருவாக்கி, அதைப் பக்தர்களைக்கொண்டு இழுக்கச் செய்யலாம் என்ற எண்ணம் திருவருளால் இங்குள்ளச் சில அன்பர்கள் சிந்தையில் உதித்தது. அந்த எண்ணத்திற்கு உடனடியாகச் செயல்வடிவம் தந்து, இங்குள்ளக் கலைஞர் சுந்தர் ராஜனும், அவர் குழுவினரும், மிகக் கடுமையாக உழைத்து, ஒரு அழகானத் திருஎழுகூற்றிருக்கைத் தேரை உருவாக்கித் தந்தனர். நம் தாய்நாட்டைப் போன்று இங்கே தேரை உருவாக்கும் பொருள்கள் சரியாகக் கிடைப்பதில்லை; தேரை உருவாக்கும் திறமைவாய்ந்தத் தொழில்முறைச் சிற்பிகளோ, தச்சர்களோ இங்கில்லை. இருப்பினும், இறையருளாலும், இங்குள்ள அமெச்சூர் கலைஞர்களின் அசாத்தியத் திறமையினாலும், கிடைக்கும் பொருள்களைக்கொண்டு அமைக்கப்பட்ட‌ ஒரு அழகானத் தேர் உருவாகியது!


இந்தத் தேர் அழகும், தெய்வீகமும் நிறைந்த ஒரு தேர்மட்டுமன்று. அருணகிரிப்பெருமானின் தனித்துவமும், மகத்துவமும் மிக்க ஒரு இறைக்கவிதையின் வரிகளை, தத்துவத்தை, கவித்துவத்தை, கருத்துச்செறிவைத் தாங்கி நிற்கும் கலைவடிவமும் ஆகும். இந்தக் கலைவடிவத்தால் அருணகிரிப்பெருமானின் இறைக்கவிதையின் தனித்துவமும், மகத்துவமும், புனிதமும் கூடியிருக்கின்றது என்று கூறினால் அது மிகையில்லை. 


முருகப்பெருமானின் திருவருளும், அருணகிரிப்பெருமானின் கவிதையும், சுந்தர் ராஜன் குழுவினரின் அசாத்தியத் திறமையும், கைவண்ணமும் ஒன்றுகூடியதால் உருவானது இந்தத் தேர் எனலாம். இந்தத் தேர் அருணகிரிப்பெருமானின் இறைக்கவிதையின் கலைவடிவமாக அமைந்துள்ளது. இன்று நம்மிடையே அருணகிரிப்பெருமான் இருந்திருந்தால், இந்தத் தேரைக் கண்டு அவர் உவகைகொண்டிருப்பார் என்றே நினைக்கத் தோன்றுகின்றது! எனினும், அவருடைய அங்கீகாரமும், ஆசியும் நமக்குண்டு என்பது தேரின் அழகினாலும், தெய்வீகத் தன்மையாலும், அதன் பொலிவாலும் தெள்ளத்தெளிவாக நமக்கு விளங்குகின்றது! 


இதுபோன்ற அளவில், பக்தர்கள் ஒன்றுகூடி இழுக்கக்கூடிய வகையில், ஒரு திருஎழுகூற்றிருக்கைத் தேரை இதுவரை வேறு யாரும், வேறெங்கும் இதுவரை உருவாக்கவில்லை. அந்தப் பெருமை ஹாங்காங் முருகபக்தர்களுக்கே வாய்த்திருக்கின்றது. இறையருளும், இறைச்சித்தமும் பரிபூரணமாக இருந்தால்தான், ஒருவாரால் இதுபோன்ற ஒரு திருஎழுகூற்றிருக்கைத் தேரை உருவாக்க இயலும். ஆதலால், ஹாங்காங் முருகனடியார்கள் இறையருள் முழுமையாக வாய்க்கப்பெற்றவர்கள் என்றும் சொல்லலாம்!


இங்குள்ள ஹாப்பிவேலி இந்துத் திருக்கோயிலின் உள்வளாகத்தில் இந்தத் தேர் கடந்த நவம்பர் மாதம் 21- ஆம் தேதி, சனிக்கிழமையன்று முருகனடியார்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. ஒரு 600 சதுர அடிக்கும் குறைவான உள்வளாகத்தில், சுவாமிமலை சுவாமிநாத‌சுவாமியின் திருவுருவம் நடுவிருக்க, அப்பெருமானே தேரிலும் ஆரோகனித்திருக்க, திருஎழுகூற்றிருக்கைத் தேர் முருகவேள் அன்பர்களால் இழுக்கப்பட்டது என்பதே ஒரு பெரிய அதிசயம்தான்! இதுபோல், ஒரு நிகழ்வு இங்கே இதற்கு முன்னால் நிகழ்ந்ததில்லை; வேறு எங்கும் நிகழ்ந்ததாகவும் நமக்குச் செய்தியில்லை!


உலகம் கோவிட்-19 வைரஸ் கொடுமையிலிருந்து விரைவில் விடுபட்டு, சகஜநிலைக்குத் திரும்பி, அனைவரும் என்றும் இன்புற்று வாழ‌வேண்டும் என்பதே இங்கே, இந்த ஆண்டு சஷ்டிவிழாவில், அன்பர்களின் ஒன்றுபட்ட,‌ ஒருமுகப் பிரார்த்தனையாக இருந்தது. சுமார் 150 பக்தர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் கோவிட் –19 கட்டுப்பாடுகள் காரணமாக மிகக் குறைவான அன்பர்கள் மட்டுமே தேரை வடம் பிடித்து இழுக்க அனுமதிக்கப்பட்டனர்.


– தினமலர் வாசகர் குருநாதன்Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us